உலகியல்வாதிகள் அவ்வளவு எளிதாக தங்களின் செல்வங்களை மற்றவர்களுக்காக செலவு செய்ய மாட்டார்கள். அவர்கள் செல்வங்களை சேகரித்துக் கொண்டே செல்வார்கள். இதுதான் சமூகத்தைவிட்டு அவர்களை துண்டிக்கிறது. அவர்கள் சமூகத்தை ஒரு குடும்பமாக எண்ண மாட்டார்கள். தங்களின் நலன்களைத் தவிர மற்றவர்களின் நலன்களை பொருட்படுத்த மாட்டார்கள். நம்பிக்கையாளர்கள் அப்படி இருக்க மாட்டார்கள். அவர்கள் தங்களின் உயிரையும் பொருளையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள். தங்களுக்குப் போக எஞ்சியுள்ள செல்வத்தை அவர்கள் அவன் கூறிய வழியில் செலவு செய்கிறார்கள். அடுத்து வரும் வசனங்கள் உயிரையும் பொருளையும் அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணிப்பது தொடர்பாகப் பேசுகின்றன.
يَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلْ مَا أَنْفَقْتُمْ مِنْ خَيْرٍ فَلِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ وَمَا تَفْعَلُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللهَ بِهِ عَلِيمٌ
2:215. “தாங்கள் என்ன செலவு செய்ய வேண்டும்” என்று அவர்கள் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “எந்தப் பொருளை நீங்கள் செலவு செய்தாலும் அதிலிருந்து உங்கள் தாய்தந்தையருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் எந்த நன்மை செய்தாலும் அதனை அல்லாஹ் நன்கறிவான்.”
செலவு செய்வது தொடர்பான அவர்களின் இந்தக் கேள்வி அது தொடர்பாக அவர்களுக்கு இருந்த தயக்கத்தையே உணர்த்துகிறது. மனித மனதில் இந்த தயக்கம் இருக்கவே செய்யும். அது சுயநலம் கொண்டதுதான். தன் நலனைத் தவிர மற்றவர்களின் நலன்களைக் குறித்து அது பெரிதும் அலட்டிக் கொள்ளாது. அதற்கு மீண்டும் மீண்டும் வலியுறுத்த வேண்டிய, அவ்வாறு செலவு செய்வதனால் அது பெறக்கூடிய நன்மைகளை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது. அல்லாஹ்வின் பாதையில், அவன் சொன்ன வழியில் நீங்கள் எதைச் செலவு செய்தாலும் அது எந்த வகையிலும் ஒருபோதும் வீணாகாது. அதற்குரிய பலன்களை நீங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அனுபவிப்பீர்கள்.
உங்கள் செல்வங்களில் எதை வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள். உங்கள் செல்வத்திலிருந்து தாய்தந்தையருக்கும் உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுங்கள். நீங்கள் எந்த நன்மை செய்தாலும், எந்தப் பொருளை செலவு செய்தாலும் அதைக் குறித்து அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். உங்களின் நற்செயல்களை அவன் வீணாக்கி விட மாட்டான்.
மற்றவர்களுக்காக செலவு செய்வதன் வழியாகவே மனதின் கஞ்சத்தனத்திலிருந்து, உலகியல்வாத மாயையிலிருந்து விடுபட முடியும். செலவு செய்வது மனதைத் தூய்மைப்படுத்துவதற்கான ஒரு வழிமுறை. அதுதான் சமூகத்தை ஒரு குடும்பமாக மாற்றுகிறது. ஒரு சமூகம் என்றால் அங்கு ஒருவர் மற்றவருக்கு உதவி செய்யக்கூடியவர்களாக, இருப்பவர்கள் இல்லாதவர்களுக்காக, பலமானவர்கள் பலவீனமானவர்களுக்காக பொறுப்பெடுப்பவர்களாக இருக்க வேண்டும்.
كُتِبَ عَلَيْكُمُ الْقِتَالُ وَهُوَ كُرْهٌ لَكُمْ وَعَسَى أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ وَعَسَى أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ وَاللهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
2:216. “போர் புரிவது உங்களுக்கு வெறுப்பாக இருப்பினும் அது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒரு பொருள் நன்மையாக இருக்க நீங்கள் அதனை வெறுக்கக்கூடும். ஒரு பொருள் தீமையாக இருக்க நீங்கள் அதனை விரும்பக்கூடும். அல்லாஹ்வே நன்கறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.”
மனித மனம் சிரமங்களை, கடினமான காரியங்களை விரும்பாது. அது சிரமங்கள் அற்ற அமைதியான சூழலில் இருக்க விரும்பும். அது அதற்காக அடிமைத்தனத்தைக்கூட சகித்துக் கொள்ளும். தங்களின் அமைதியான வாழ்வுக்கு இடைஞ்சல் ஏற்பட்டு விடும் என்பதற்காக தொடர் அநியாயங்களைக் கூட கண்டு கொள்ளாமல் இருக்கும் மனிதர்களை நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். இன்னும் சிலர் ஒருபடி மேலே சென்று அந்த அநியாயங்களைக்கூட நியாயப்படுத்துகிறார்கள்.
இஸ்லாம் அநியாயத்தை சகித்துக் கொள்ளாது. ஆகவே அது அநியாயத்திற்கு எதிரான போரை நம்பிக்கையாளர்களின் மீது கடமையாக்குகிறது. போர் புரிவது கடினமான, சிரமமான ஒன்றுதான் என்பதை ஏற்றுக்கொண்ட பிறகுதான் அது நம்பிக்கையாளர்களின் மீது போரை கடமையாக்குகிறது. அது மனம்விரும்பக்கூடிய ஒன்றல்ல. ஆனால் மனம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தக் கடமையை அது நிறைவேற்றியே ஆக வேண்டும். அதில்தான் தனிமனிதனுக்கும் சமூகத்திற்கும் மனித சமூகத்தில் உள்ள அனைவருக்கும் நன்மை உள்ளது.
அமைதியான சூழல் என்பது நியாயத்தின் வழியாக உருவாகி வர வேண்டும். அநியாயத்தின் அடக்குமுறையினால் உருவாகும் அமைதி உண்மையான அமைதி அல்ல. அது மனிதத்தன்மையை சிதைக்கும், பயத்தையும் பீதியையும் மனித மனதில் குடியேற வைக்கும் தீங்களிக்கும் அமைதி.
மனம் அதன் போக்கில் விட்டுவிடப்படக்கூடாது. அதற்கு சரியையும் தவறையும் அறிந்து கொள்ளும் பக்குவம் வழங்கப்பட்டுள்ளது என்றாலும் அது இலகுவான, பாவமான விசயங்களின் பக்கம் சாயக்கூடியது. அது தன் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு ஆயிரம் சாக்குப்போக்குகளை முன்வைக்கும். அதற்கான வழிகாட்டல்கள் அவசியம். அது விரும்பினாலும் வெறுத்தாலும் அந்த வழிகாட்டல்களை பின்பற்றியே தீர வேண்டும்.
“ஒரு பொருள் நன்மையாக இருக்க நீங்கள் அதனை வெறுக்கக்கூடும். ஒரு பொருள் தீமையாக இருக்க நீங்கள் அதனை விரும்பக்கூடும். அல்லாஹ்வே நன்கறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்”
இது மனித வாழ்க்கையில் செயல்படும் பொதுவான விதி. நம்முடைய அறிவு குறையுடையது. அது எல்லாவற்றையும் சூழ்ந்து அறியக்கூடியது அல்ல. அது சில சமயங்களில் தீமையான ஒன்றைக்கூட தற்காலிகமான அதன் நன்மைகளை கவனத்தில் கொண்டு நன்மையானதாக கருதி விடும். சோம்பலின், அலட்சியத்தின் காரணமாக தனக்கு நன்மையானதை விட்டு விடும்.
நான் இப்படிச் செய்திருக்கக் கூடாது, என் வாழ்வில் இப்படி நடந்திருக்கக் கூடாது என்று சில சமயங்களில் நாம் புலம்புவோம். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு இப்படி நடந்ததுதான் சரி, அது இப்படித்தான் ஆகியிருக்க வேண்டும் என்பதை நாம் ஒத்துக் கொள்வோம். இப்படியான அனுபவங்கள் நம் வாழ்வில் மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
ஒரு விசயத்தின் முழுமையான கோணத்தை நம்மால் அறிந்துகொள்ள முடியாது. எல்லாவற்றையும் குறித்து நன்கறிந்த அல்லாஹ்வின் மார்க்கத்தின் அடிப்படையில் நம் வாழ்வை அமைத்துக் கொள்வதே நாம் நம்மையே நொந்து கொள்ளாமல் இருப்பதற்கான பாதுகாப்பான, சிறந்த வழிமுறை. அவனுடைய மார்க்கத்தின்படி தங்களின் வாழ்க்கையை அமைத்துக்கொள்பவர்கள் ஒருபோதும் தங்களைத் தாங்களே நொந்து கொள்ளும் சூழலுக்கு ஆளாக மாட்டார்கள்.
يَسْأَلُونَكَ عَنِ الشَّهْرِ الْحَرَامِ قِتَالٍ فِيهِ قُلْ قِتَالٌ فِيهِ كَبِيرٌ وَصَدٌّ عَنْ سَبِيلِ اللهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللهِ وَالْفِتْنَةُ أَكْبَرُ مِنَ الْقَتْلِ وَلَا يَزَالُونَ يُقَاتِلُونَكُمْ حَتَّى يَرُدُّوكُمْ عَنْ دِينِكُمْ إِنِ اسْتَطَاعُوا وَمَنْ يَرْتَدِدْ مِنْكُمْ عَنْ دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ إِنَّ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ هَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللهِ أُولَئِكَ يَرْجُونَ رَحْمَةَ اللهِ وَاللهُ غَفُورٌ رَحِيمٌ
2:217.218. “புனிதமான மாதத்தில் போர்புரிவது குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அந்த மாதத்தில் போர்புரிவது பெரும் குற்றம்தான். ஆயினும் அல்லாஹ்வின் பாதையைவிட்டு மனிதர்களைத் தடுப்பதும் அவனை நிராகரிப்பதும் மஸ்ஜிதுல் ஹராம் என்னும் ஆலயத்தைவிட்டு மக்களைத் தடுப்பதும் அங்கு வசிப்பவர்களை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடத்தில் அதைவிட பெரும் குற்றமாகும். குழப்பம் விளைவிப்பது கொலையைவிடக் கொடியதாகும்.” அவர்களால் இயன்றால் உங்களை உங்களின் மார்க்கத்தைவிட்டு திருப்பும்வரை ஓயாமல் உங்களுடன் போரிட்டுக் கொண்டேயிருப்பார்கள். உங்களில் யாரேனும் தம் மார்க்கத்தைவிட்டு விலகி நிராகரித்த நிலையிலேயே இறந்தும்விட்டால் இம்மையிலும் மறுமையிலும் அவரது நற்செயல்கள் யாவும் பாழாகிவிடும். அவர்கள்தாம் நரகவாசிகள். அங்கு அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். நம்பிக்கையாளர்களும் புலம்பெயர்ந்தவர்களும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்களும் அல்லாஹ்வின் அருளையே எதிர்பார்க்கிறார்கள். அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.”
போர் புரிய தடை செய்யப்பட்டுள்ள புனிதமான மாதங்கள் குறித்து முந்தைய வசனங்களில் பேசப்பட்டுள்ளன. இந்த வசனத்தில் அந்தச் சமயத்தில் நிராகரிப்பாளர்கள் முன்வைத்த ஒரு ஆட்சேபனைக்குப் பதிலளிக்கப்படுகிறது. குறைஷிகளின் வியாபாரக் குழுவை வேவு பார்ப்பதற்காக நபியவர்கள் அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் தலைமையில் ஒரு சிறு குழுவை அனுப்பினார்கள். ஆனால் அவர்கள் வழியில் குறைஷிகளின் வேறொரு சிறு குழுவைக் கண்டார்கள். அவர்கள் அந்த குழுவைத் தாக்கி அவர்களிடம் இருந்த வியாபாரப் பொருட்களைக் கைப்பற்றிக் கொண்டார்கள். இந்தச் சம்பவம் ரஜப் மாதம் முடிந்து ஷஅபான் மாத தொடக்கத்தில் நிகழ்ந்தது. ஆனாலும் அது ரஜப் மாதத்தின் இறுதி நாளில் நிகழ்ந்ததா? அல்லது ஷஅபான் மாதத்தின் முதல் நாளில் நிகழ்ந்ததா? என்ற குழப்பம் நீடிக்கவே செய்கிறது. இணைவைப்பாளர்களும் யூதர்களும் இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு முஹம்மதின் தோழர்கள் புனித மாதத்தின் கண்ணியத்தைக் குலைத்து விட்டார்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யத் தொடங்கினார்கள். புனித மாதங்களில் போர் புரிவது பெரும் குற்றம் என்னு எண்ணிக் கொண்டிருந்த அன்றைய அறபுக்களுக்கு மத்தியில் இந்தப் பிரச்சாரம் வீரியமாக வேலை செய்யத் தொடங்கியது. இந்த வசனம் இந்தப் பின்னணி குறித்துப் பேசுகிறது.
புனித மாதங்களின் கண்ணியம் பேணப்பட வேண்டும். அவற்றில் போர் புரிவது பெரும் குற்றம்தான். ஆனால் அது குறித்து பேசுவதற்கு எந்தத் தகுதியும் அற்றவர்கள் நீங்கள். நீங்கள் அல்லாஹ்வின் பாதையைவிட்டு மக்களைத் தடுக்கிறீர்கள், அவனை நிராகரிக்கிறீர்கள், மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனித ஆலயத்திற்குச் செல்ல விடாமல் அடியார்களுக்குத் தடை ஏற்படுத்துகிறீர்கள், அங்குள்ள மக்களை அங்கிருந்து வெளியேற்றுகிறீர்கள்… இவையெல்லாம் மிகப் பெரிய குற்றங்கள், இவை நீங்கள் ஏற்படுத்தும் பெரும் குழப்பம். கொலை செய்வதைவிட கொடியவை நீங்கள் செய்யும் இந்தக் குழப்பங்கள். இவ்வளவு கொடூரமான குற்றங்களை செய்து விட்டு முஸ்லிம்கள் எங்களைத் தாக்கி விட்டார்கள் என்று கூப்பாடு போடுகிறீர்கள்.
அநியாயக்காரர்கள் கடைசியாக ஒதுங்கும் ஒதுங்குமிடம் இதுதான். அவர்கள் அடிக்கப்பட்டால்தான் அவர்களுக்கு நியாய வாதங்கள் எல்லாம் நினைவுக்கு வரும். மனித சமூகத்தின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்வார்கள் மனித குல விரோதிகள். பெண் சுதந்திரத்தில் பெரும் அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்வார்கள் பெண்களை வெறும் போகப் பொருள்களாகக் கருதும் மனித உருவத்தில் திரியும் மிருகங்கள். ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுகிறது என்ற கதைதான் இதுவும்.
இந்த வசனம் ஃபித்னா என்பதற்கான வரையறையையும் கொண்டிருக்கிறது. அது மிகப் பெரிய குற்றம். அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பின்பற்ற விடாமல் மனிதர்களைத் தடுப்பது, அந்தப் பாதையில் தடைகளை ஏற்படுத்துவது, இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக புலம்பெயர்ந்து செல்ல நம்பிக்கையாளர்களை நிர்ப்பந்திப்பது, அல்லாஹ்வை நிராகரிப்பது, நிராகரிப்பை பரப்புவது… இவைதான் ஃபித்னா. இவையெல்லாம் மிகப் பெரிய குற்றங்கள்.
அந்த நிராகரிப்பாளர்களிடமிருந்து நல்ல வார்த்தைகள், நியாய வாதங்கள் வெளிப்பட்டாலும் உண்மையில் அவர்கள் நன்னோக்கம் கொண்டவர்கள் அல்ல. அவர்கள் உங்களின் சிறிய தவறுகளை பூதாகரப்படுத்தி உங்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த விரும்புகிறார்கள். அவர்கள் உங்களை இந்த மார்க்கத்திலிருந்து திருப்ப விரும்புகிறார்கள். அவர்கள் உங்களை உங்களின் இந்த மார்க்கத்திலிருந்து திருப்புவதற்கு சாத்தியமான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அவர்கள் உங்களின் மீது, மனித சமூகத்தின் மீது எந்த அக்கறையும் கொண்டவர்கள் அல்ல. உங்களுக்குக் கிடைத்த இந்த அருட்கொடையை அவர்கள் உங்களிடமிருந்து பறிக்க விரும்புகிறார்கள். அவர்களைப்போல நீங்களும் நிராகரிப்பாளர்களாகிவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
நிராகரிப்பாளர்களின் விசயத்தில் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள். அவர்கள் பிரச்சாரங்கள் உங்களைப் பாதித்து விடக்கூடாது. அவர்களின் பிரச்சாரங்களை நீங்கள் உள்வாங்கி விட்டால், அவற்றை உண்மையென நம்பி விட்டால் இழப்பு உங்களுக்குத்தான். அவர்கள் உங்களின் மீது வெறுப்பும் காழ்ப்பும் கொண்டவர்கள். உங்களின் விசயத்தில் எந்த நன்னோக்கமும் அற்றவர்கள்.
இந்த மார்க்கத்தை நீங்கள் அறிந்து கொண்ட பின்னர் இந்த மார்க்கத்தைவிட்டு நீங்கள் விலகிச் சென்றால், இந்த மார்க்கத்தை நிராகரித்த நிலையிலேயே நீங்கள் மரணித்தும் விட்டால் நீங்கள் பயனளிக்கும் என்று கருதிக் கொண்டிருக்கிறது உங்களின் நற்செயல்கள் அனைத்தும் வீணாகி விடும். நீங்கள் இந்த உலகிலும் மறுவுலகிலும் பெரும் நஷ்டமடைந்தவர்களாக மாறி விடுவீர்கள். அவ்வாறெனில் நீங்கள்தாம் நரகவாசிகள். அந்த நரகத்தில் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பீர்கள். நிராகரிப்பாளர்கள் ஏற்படுத்தும் இந்தக் குழப்பங்கள் எல்லாவற்றையும் தாண்டி யார் ஈமானில் உறுதியாக இருக்கிறார்களோ அல்லாஹ்வின் பாதையில் தங்கள் உயிரையும் பொருளையும் இன்னபிற வசதிகளையும் இழக்கத் துணிந்தார்களோ அவர்கள் அவனுடைய அருளையே எதிர்பார்க்கிறார்கள். அவர்கள் செய்யும் இந்த தியாகங்கள் அவனுடைய திருப்தியை, அருளை எதிர்பார்த்துதான். இந்தப் பாதையில் ஏற்படும் தவறுகளை, குறைகளை அவன் மன்னித்து விடும். அவர்களின் மீது தொடர் கருணையையும் கிருபையையும் அவன் பொழிவான்.
