நிராகரிப்பாளர்களின், நயவஞ்சர்களின் கேலியைப் பொருட்படுத்தாதீர்கள். அவர்கள் முரண்பாட்டில் சிக்கிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் உண்மையை அறிந்துகொள்வதற்கான உரைகல் எதுவும் இல்லை. அவர்கள் நேர்வழியில் செல்லாமல் பல்வேறு வழிகளில் தடுமாறிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் தன் அருளால் உங்களுக்கு நேரான வழியைக் காட்டியிருக்கிறான். எவ்விதத் தயக்கமும் தடுமாற்றமும் இன்றி அந்தப் பாதையில் செல்லுங்கள். அதுதான் மனிதர்கள் செல்ல வேண்டிய ஒரே பாதை. தூதர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் சென்ற அந்தப் பாதையில் நீங்களும் செல்லுங்கள். அந்தப் பாதையில் ஏற்படும் சிரமங்களை, துன்பங்களை பொறுமையுடன் சகித்துக் கொள்ளுங்கள்.
كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنْذِرِينَ وَأَنْزَلَ مَعَهُمُ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِهِ وَاللهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
2:213. “மனிதர்கள் ஒரே சமூகத்தினராக இருந்தார்கள். அவர்கள் கருத்து முரண்பட்டதனால் அல்லாஹ் தூதர்களை நற்செய்தி கூறுபவர்களாகவும் எச்சரிக்கை செய்பவர்களாகவும் அனுப்பி வைத்தான். அவர்களுடன் சத்தியத்தைக் கொண்டுள்ள வேதத்தையும் அருளினான், அவர்கள் கருத்து முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பளிக்க வேண்டும் என்பதற்காக. வேதம் வழங்கப்பட்டவர்கள் தங்களிடம் தெளிவான வழிகாட்டுதல் வந்த பின்னரும் தங்களுக்கிடையேயுள்ள பிடிவாதத்தினால்தான் முரண்பட்டுக் கொண்டார்கள். ஆயினும் சத்தியத்தைக் குறித்து அவர்கள் முரண்பட்டுக் கொண்டவற்றில் தன் அருளினால் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டினான். தான் நாடியோருக்கு அல்லாஹ் நேரான வழியைக் காட்டுகிறான்.”
இந்த வசனம் மனித சமூகத்தின் ஒட்டுமொத்த வரலாற்றையும் சுருக்கமான வரிகளில் எடுத்துரைத்து விடுகிறது. மனித சமூகம் அறியாமையிலிருந்து கொஞ்சம் கொஞ்சம் அறிவை நோக்கி வரவில்லை. மாறாக மனிதர்கள் படைக்கப்பட்டு இந்த பூமிக்கு வந்த நாளிலிருந்தே தெளிவான அறிவுடனும் சரியான இயல்புடனும்தான் வந்தார்கள். அவர்கள் சரியான வழிகாட்டலைக் கொண்டே இந்த பூமிக்கு அனுப்பப்பட்டார்கள். அவர்கள் ஒரே மார்க்கத்தைப் பின்பற்றும் சமூகத்தினராக இருந்தார்கள். அவர்களுக்கு மத்தியில் இஸ்லாத்தைத் தவிர வேறு எந்த மார்க்கமும் இருக்கவில்லை. அவர்கள் இயல்பு நிலையில் இருந்தார்கள். ஆதமுக்குப் பிறகு பல தலைமுறைகள்வரை அவர்கள் இப்படித்தான் இருந்தார்கள்.
காலங்கள் செல்லச் செல்ல ஷைத்தான் அவர்களிடம் கொஞ்சம் கொஞ்சமாக நச்சுக் கருத்துகளை புகுத்தத் தொடங்கினான். அல்லாஹ்வுக்கு இணையாக மற்றவர்களை ஏற்படுத்துமாறும் அவனுடைய கட்டளைக்கு மாறாகச் செயல்படுமாறும் மன இச்சைப்படி செயல்படுமாறும் அவன் அவர்களைத் தூண்டிக் கொண்டே இருந்தான். விளைவாக, ஒரே மார்க்கத்தைப் பின்பற்றிக் கொண்டிருந்த அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகள் உருவாகத் தொடங்கின. அவர்களுக்கு மத்தியில் இணைப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தது அல்லாஹ்வின் வழிகாட்டல்தான். அந்த வழிகாட்டலைவிட்டு அவர்கள் விலகிச் சென்றபோதுதான் அவர்களுக்கு மத்தியில் விரிசலும் பிரச்சனைகளும் உருவாயின.
அல்லாஹ் மனிதர்கள் மீது கருணை காட்டினான். அவன் அவர்களை வழிதவறிய நிலையில் அப்படியே விட்டுவிடவில்லை. தொடர்ந்து அவர்களிடம் தூதர்களை அனுப்பினான். அவர்கள் அந்த மக்களுக்கு மத்தியில் அல்லாஹ்வின் வழிகாட்டலை நினைவூட்டினார்கள். அந்த வழிகாட்டலைப் பின்பற்றுபவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி உண்டு என்று நற்செய்தி கூறினார்கள். அந்த வழிகாட்டலைப் புறக்கணிப்பவர்களுக்கு அல்லாஹ்வின் தண்டனையைக் கொண்டு எச்சரிக்கை செய்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வேதத்தைக் கொடுத்து அனுப்பினான். அது மனிதர்களுக்கு மத்தியில் தோன்றும் முரண்பாடுகளை, பிரச்சனைகளை, சிக்கல்களை தீர்க்கும் இறுதிச் சொல்லாக, மாமருந்தாக இருந்தது. கருத்து வேறுபாடுகளைத் தீர்ப்பதற்கான ஒரே வழிமுறை அதுதான். நன்மையையும் தீமையையும் சரியையும் தவறையும் பிரித்து அறிவதற்கான ஒரே உரைகல் அதுதான். ஷைத்தான் உருவாக்கும் குழப்பங்களிலிருந்து மனிதர்களைப் பாதுகாக்கும் பாதுகாப்புக் கவசமும் அதுதான். மனிதர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடுகளும் முரண்பாடுகளும் தோன்றுவது இயல்பானதுதான். ஆனால் அவையனைத்தும் இந்த வேதத்தைக் கொண்டே தீர்க்கப்பட வேண்டும்.
வேதம் வழங்கப்பட்டவர்கள் அதனை நீதிபதியாக்கி தங்களின் கருத்து வேறுபாடுகளிலிருந்து விடுபட்டார்களா? ஒவ்வொரு வேதமும் தெளிவான சான்றுகளையும் தமக்குள் கொண்டிருக்கும். அவர்கள் தெளிவான சான்றுகளை அறிந்துகொண்ட பின்னரும் தங்களுக்கு மத்தியில் காணப்பட்ட பொறாமையினாலும் பிடிவாதத்தினாலும் கர்வத்தினாலும் வெறுப்பினாலும் முரண்பட்டார்கள். அவர்களிடம் காணப்பட்ட பிடிவாதம் சத்தியத்தை ஏற்றுக் கொள்வதற்கு மாபெரும் தடையாக வந்து நின்றது. அவர்கள் அறியாமையினால் கருத்து வேறுபடவில்லை. அவர்களின் தீய இச்சைகள் அவர்களை கருத்து வேறுபடச் செய்தன. அவர்கள் அறிந்துகொண்டே முரண்பட்டார்கள்.
அவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களுக்கு மத்தியில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டினான். அவர்கள் சத்தியத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்ற தேட்டம் கொண்டிருப்பதனாலும் சத்தியத்திற்குக் கட்டுப்பட விரும்புவதனாலும் அல்லாஹ் அவர்களுக்கு வழிகாட்டுகிறான். மற்றவர்கள் குழப்பங்களில் சிக்குண்டு கிடந்தாலும் நம்பிக்கையாளர்கள் மனத்தெளிவைக் கொண்டிருப்பார்கள். இது மனித சமூகத்தின் தொடக்கம் தொடங்கி இறுதிநாள் வரை மீண்டும் மீண்டும் நிகழக்கூடிய மனித அனுபவம்தான். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான். யார் அவன் வழிகாட்டலை விரும்புகிறார்களோ அவர்களுக்குத்தான் அவன் வழிகாட்டுகிறான்.
சத்தியத்தின் பாதை மலர்களால் தூவப்பட்ட இலகுவான பாதை அல்ல. அது முட்கள் சூழ்ந்த பாதை. சிரமங்களையும் துன்பங்களையும் கொண்டிருக்கும் பாதை. இறைத்தூதர்களும் அவர்களைப் பின்பற்றியவர்களும் அந்தப் பாதையைத்தான் கடந்து வந்திருக்கிறார்கள்.
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللهِ أَلَا إِنَّ نَصْرَ اللهِ قَرِيبٌ
2:214. “உங்களுக்கு முன்சென்றவர்களுக்கு ஏற்பட்ட நிலைமைகள் உங்களுக்கும் ஏற்படாமலேயே நீங்கள் சுவனம் சென்றுவிடலாம் என்று எண்ணிக் கொண்டீர்களா? அவர்களுக்கு சிரமங்களும் துன்பங்களும் ஏற்பட்டன. தூதரும் அவருடன் நம்பிக்கைகொண்டவர்களும் “அல்லாஹ்வின் உதவி எப்போது வரும்?” என்று கேட்கும்வரை அலைக்கழிக்கப்பட்டார்கள். அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ்வின் உதவி மிக அருகில் இருக்கிறது.”
இந்தப் பாதை துன்பங்கள் அற்ற மகிழ்ச்சியான பாதை அல்ல. அழைப்பின் களம் தடைகளாலும் சிரமங்களாலும் எதிர்ப்புகளாலும் நிரம்பியது. ஒரு புறம் நேருக்கு நேராக நின்று எதிர்க்கும் நிராகரிப்பாளர்கள், இன்னொரு புறம் நம்முடன் இருந்துகொண்டே நம்மைப் பலவீனப்படுத்த முயற்சிக்கும் நயவஞ்சகர்கள் என்று பலவாறான ஆபத்துகளால் சூழ்ந்திருக்கும் பாதைதான் இது. ஆனாலும் அல்லாஹ் நம்பிக்கையாளர்களை அப்படியே விட்டுவிடுவதில்லை. தக்க சமயத்தில் அவன் அவர்களுக்கு உதவி செய்கிறான். மகத்தான இந்தப் பணியில் உயிரையும் இழக்க நேரிடலாம். கடும் சிரமங்களையும் பேரிழப்புகளையும் சந்திக்க நேரிடலாம். ‘எங்கள் இறைவன் அல்லாஹ்’ என்று கூறியதற்காக கொல்லப்பட்ட எத்தனையோ மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சிலர் உயிருடன் இரம்பத்தால் அறுக்கப்பட்டிருக்கிறார்கள். சிலர் தீக்குண்டத்தில் உயிருடன் எரிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியுடன் நின்று அவனுக்காக மரணத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். தூதுத்துவ வரலாறு தியாகங்களால் நிரம்பியது. நீங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறீர்கள் என்ற ஒரே காரணத்தினால் அடுத்தடுத்த வெற்றியையும் துன்பங்கள் அற்ற மகிழ்ச்சியான வாழ்க்கையையும் உங்களால் பெற்றுவிட முடியாது. சில சமயங்களில் மற்றவர்களைவிட கூடுதல் துன்பங்களையும் சந்திக்க நேரிடலாம்.
