இயக்கத்தை கட்டமைத்தல் – 1

ஒருவர் மற்றவருடன் எப்படி இணைகிறார்கள்? ஒருவர் மற்றவரைவிட்டு எப்படி விலகிச் செல்கிறார்கள்? அன்பு ஈர்க்கும். வெறுப்பு விலக்கி வைக்கும். தேவை ஈர்க்கும். தேவையின்மை விலக்கி வைக்கும். ஒத்திசைவு ஈர்க்கும். ஒத்திசைவின்மை விலக்கி வைக்கும். நிர்ப்பந்தமும் சூழலும்கூட இணைப்பையும் விலகலையும் ஏற்படுத்தும். ஆனால் அவை வலுவான, நீடிக்கக்கூடிய காரணிகள் அல்ல.

நாம் அல்லாஹ்வின் பெயரால், அவனுக்காக ஒரு இயக்கத்தை உருவாக்குகிறோம் என்றால் இந்த காரணிகள் அனைத்தையும் தாண்டி வேறு ஒரு காரணியை முதன்மையாக முன்னிறுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. அது அல்லாஹ்வை நேசிப்பது, அவன் அளித்த மார்க்கத்தைப் பின்பற்றுவது. அவனை நேசிப்பவர்களை நேசிப்பது. அவனை நேசிப்பவர்களை வெறுக்காமல் இருப்பது. அப்படியும் வெறுப்பு ஏற்படும் பட்சத்தில் அந்த வெறுப்பை நீக்கும்படி அல்லாஹ்விடம் மன்றாடுவது. இஸ்லாம் கற்றுத் தந்த பின்வரும் பிரார்த்தனைகள் இதையே நமக்கு வலியுறுத்துகின்றன:

“எங்கள் இறைவனே! எங்களையும் ஈமான் கொள்வதில் எங்களை முந்திவிட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்து விடுவாயாக. எங்கள் உள்ளத்தில் நம்பிக்கையாளர்களைக் குறித்து எந்தக் குரோதத்தையும் ஏற்படுத்தி விடாதே. எங்கள் இறைவனே! நீ மிகுந்த பரிவுடையவனாகவும் இணையிலாக் கிருபையாளனாகவும் இருக்கின்றாய்.”

“அல்லாஹ்வே! உன் நேசத்தை யாசிக்கிறேன். உன்னை நேசிப்பவர்களின் நேசத்தையும் யாசிக்கிறேன். உன் நேசத்தின் பக்கம் இட்டுச் செல்லும் செயல்பாடுகளை நேசிப்பதையும் உன்னிடம் யாசிக்கிறேன்.”

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply