தலாக்கும் அநியாயமும்

You are currently viewing தலாக்கும் அநியாயமும்

அடுத்து வரும் வசனங்கள் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் மீது இழைக்கப்படும் இரண்டு வகையான அநீதியைக் குறித்துப் பேசுகின்றன. உண்மையில் அது ஆண்கள் தங்களுக்கு எதிராகவே செய்து கொள்ளும் அநீதி. அல்லாஹ் வழங்கிய அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துபவர்கள் நிச்சயம் அதற்கான விளைவை அனுபவிப்பார்கள்.  

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ سَرِّحُوهُنَّ بِمَعْرُوفٍ وَلا تُمْسِكُوهُنَّ ضِرَارًا لِتَعْتَدُوا وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَقَدْ ظَلَمَ نَفْسَهُ وَلا تَتَّخِذُوا آيَاتِ اللَّهِ هُزُوًا وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنْزَلَ عَلَيْكُمْ مِنَ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ

2:23. “நீங்கள் பெண்களை தலாக் சொல்லி அவர்கள் தங்களுக்குரிய தவணையை அடைந்துவிட்டால் அவர்களை முறைப்படி வைத்துக் கொள்ளுங்கள் அல்லது முறைப்படி விடுவித்து விடுங்கள். தீங்கிழைப்பதற்காகவும் வரம்பு மீறுவதற்காவும் நீங்கள் அவர்களை தடுத்து வைக்காதீர்கள். அவ்வாறு செய்பவர் தமக்குத் தாமே அநியாயம் இழைத்தவர் ஆவார். அல்லாஹ்வின் வசனங்களைப் பரிகாசமாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அல்லாஹ் உங்கள்மீது பொழிந்துள்ள அருட்கொடைகளையும் அவன் உங்களுக்கு அறிவுரையாக அருளிய அவனது வேதத்தையும் ஞானத்தையும் நினைவுகூருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். அவன் ஒவ்வொன்றையும் குறித்து நன்கறிந்தவன் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் மனைவியை தலாக் சொல்லி அந்தப் பெண் தம்முடைய காத்திருப்பு காலத்தை நிறைவு செய்து விட்டால் ஒன்று, நல்ல முறையில் அவளை வைத்துக் கொள்ளுங்கள். இல்லையெனில் நல்ல முறையில் அவளை விட்டு விடுங்கள். அவளைத் துன்புறுத்த வேண்டும் என்பதற்காக, அவள் மீது அநீதி இழைக்க வேண்டும் என்பதற்காக நீங்கள் அவளை திரும்ப அழைக்கக் கூடாது. உங்களுக்கு தலாக் சொல்லும் அதிகாரத்தையும் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையையும் அவன் வழங்கியுள்ளான். அந்த அதிகாரத்தை தவறான வழியில் பயன்படுத்தாதீர்கள். அது நன்றிகெட்டத்தனம் ஆகும். நன்றிகெட்டத்தனம் அழிவைக் கொண்டு வந்து சேர்க்கும். அல்லாஹ் உங்களுக்கு அளித்த சட்டங்களை விளையாட்டாக, கேலியாக எடுத்துக் கொள்ளாதீர்கள். அவை உங்களுக்கு வழங்கப்பட்ட அருட்கொடைகள்.

அவன் உங்களுக்கு அளித்த அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு மத்தியில் ஒரு தூதரை அனுப்பி அவர் வழியாக இந்த வேதத்தை இறக்கி மகத்தான இந்த வழிகாட்டலை அவன் உங்களுக்கு வழங்கியுள்ளான். அவனுடைய வழிகாட்டலைப் பின்பற்றுங்கள். அதற்கு மாறாகச் செயல்படாதீர்கள். அவனுடைய தண்டனைக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் ஒவ்வொன்றையும் குறித்து நன்கறிந்தவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

அவன் வழங்கிய ஒவ்வொரு வழிகாட்டலும் நோக்கம் கொண்டது. தலாக் சொல்லும் உரிமை, திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை, காத்திருத்தல்… இவையனைத்தும் அவன் உங்களுக்காக, உங்களின் நலன்களுக்காக வழங்கிய வழிகாட்டல்கள். இவற்றை நீங்கள் தவறாகப் பயன்படுத்தும்போது உங்களுக்கான நலன்களையே இழக்கிறீர்கள். உங்களுக்கு நீங்களே தீங்கிழைக்கிறீர்கள்.

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا تَعْضُلُوهُنَّ أَنْ يَنْكِحْنَ أَزْوَاجَهُنَّ إِذَا تَرَاضَوْا بَيْنَهُمْ بِالْمَعْرُوفِ ذَلِكَ يُوعَظُ بِهِ مَنْ كَانَ مِنْكُمْ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكُمْ أَزْكَى لَكُمْ وَأَطْهَرُ وَاللهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

2:232. “நீங்கள் உங்கள் மனைவியரை தலாக் சொல்லி அவர்கள் தங்களின் தவணையை பூர்த்தி செய்த பிறகு முறைப்படி தங்களுக்குள் மனம்விரும்பி தங்களின் கணவர்களை மணந்துகொள்வதைத் தடுக்காதீர்கள். உங்களில் அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொண்டவர்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்கு மிகத் தூய்மையானதும் பரிசுத்தமானதுமாகும். அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.”

நீங்கள் உங்கள் மனைவியரை தலாக் சொல்லி விட்டால் அவர்கள் தங்களுக்கான காத்திருப்பு காலத்தை நிறைவு செய்து விட்டால் பிறகு அவர்கள் தாங்கள் விரும்பிய ஆண்களை திருமணம் செய்து கொள்ளலாம். அது அவர்களின் உரிமை. அவர்கள் அவ்வாறு திருமணம் செய்து கொள்வதை நீங்கள் தடுக்காதீர்கள். அவர்களின் பாதையில் எந்த தடையையும் ஏற்படுத்தாதீர்கள்.  

இதுவும் அன்றைய அறபுக்களிடம் இருந்த தவறான ஒரு வழிமுறை. தங்கள் மனைவியரை விவாகரத்து செய்த பின்னரும் அவர்கள் வேறு ஆண்களை மணமுடிக்கக்கூடாது என்று தடுப்பவர்களாக சிலர் இருந்தார்கள். இதற்குப் பின்னால் தேவையற்ற ரோஷமும் அவர்கள் மீதான வெறுப்பும் அவர்களுக்குத் தீங்கிழைக்க வேண்டும் என்ற எண்ணமும் காரணமாக இருக்கலாம். இப்படியான மனநிலை அன்றைய அறபுக்களிடம் மட்டுமல்ல இன்றைய மனிதர்களிடமும் காணப்படத்தான் செய்கிறது. விவாகரத்து செய்த தங்களின் மனைவியரை அல்லது தங்களின் கணவர்களை வேறு யாரும் மணமுடிக்கக் கூடாது என்பதற்காக அவர்களுக்கு எதிராக அவதூறு பரப்புவர்கள் நமக்கு மத்தியிலும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்த வசனம் அப்படிப்பட்டவர்களையும் குறிக்கிறது.

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்த அறிவுரை வழங்கப்படுகிறது. அவர்கள் தங்களின் கீழ்மைகளை விட்டு, தீய உணர்வுகளைவிட்டு விலகியிருப்பார்கள். இதுதான் தூய்மையான வழிமுறை. இதுதான் மனதை கசடுகளிலிருந்து, தேவையற்ற வெறுப்பிலிருந்தும் குரோதத்திலிருந்தும் தூய்மைப்படுத்துவதற்கான வழிமுறை. இதுதான் ஒவ்வொன்றையும் குறித்து நன்கறிந்த அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய வழிகாட்டல். எந்தவொரு விசயத்தையும் முழுமையான அளவில் அவனே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

இந்த வசனத்தில் கணவர்கள் என்ற வார்த்தை அவர்கள் மணமுடிக்க விரும்பும் கணவர்களைக் குறிக்கிறது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். இல்லை, அது அவர்களின் முந்தைய கணவர்களைக் குறிக்கிறது என்று வேறு சில அறிஞர்கள் கூறுகிறார்கள். பேரறிஞர் முஹம்மது அப்துஹு அது இரு தரப்பினரையும் குறிக்கலாம் என்கிறார். அதாவது அவர்கள் மணமுடித்துக் கொள்ள விரும்பும் கணவர்கள். அவர்கள் விவாகரத்து செய்த முந்தைய கணவர்களாகவும் இருக்கலாம் அல்லது அவர்கள் மணமுடிக்க விரும்பும் புதிய கணவர்களாகவும் இருக்கலாம். முதல் கருத்தை அடிப்படையாகக் கொண்டே நான் விளக்கம் அளித்துள்ளேன். முன்பின் வசனங்களைக் கவனித்துப் பார்க்கும்போது அதுதான் சரியான கருத்தென எனக்குத் தெரிகிறது.

وَالْوَالِدَاتُ يُرْضِعْنَ أَوْلَادَهُنَّ حَوْلَيْنِ كَامِلَيْنِ لِمَنْ أَرَادَ أَنْ يُتِمَّ الرَّضَاعَةَ وَعَلَى الْمَوْلُودِ لَهُ رِزْقُهُنَّ وَكِسْوَتُهُنَّ بِالْمَعْرُوفِ لَا تُكَلَّفُ نَفْسٌ إِلَّا وُسْعَهَا لَا تُضَارَّ وَالِدَةٌ بِوَلَدِهَا وَلَا مَوْلُودٌ لَهُ بِوَلَدِهِ وَعَلَى الْوَارِثِ مِثْلُ ذَلِكَ فَإِنْ أَرَادَا فِصَالًا عَنْ تَرَاضٍ مِنْهُمَا وَتَشَاوُرٍ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا وَإِنْ أَرَدْتُمْ أَنْ تَسْتَرْضِعُوا أَوْلَادَكُمْ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ إِذَا سَلَّمْتُمْ مَا آتَيْتُمْ بِالْمَعْرُوفِ وَاتَّقُوا اللهَ وَاعْلَمُوا أَنَّ اللهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ  

2:233. “தந்தையர் விரும்பினால் (தலாக் சொல்லப்பட்ட) தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். தாய்மார்களுக்குரிய உணவையும் உடையையும் முறைப்படி தர வேண்டியது குழந்தையின் தந்தை மீதுள்ள பொறுப்பாகும். யார் மீதும் அவரது சக்திக்கு உட்பட்டே தவிர பொறுப்பு சுமத்தப்படாது. தாயும் தன் குழந்தையினால் சிரமத்திற்குள்ளாக்கப்பட மாட்டாள். தந்தையும் தன் குழந்தையினால் சிரமத்திற்குள்ளாக்கப்பட மாட்டான். அவ்வாறே இது அவனது வாரிசின் மீதும் பொறுப்பாகும். அவர்கள் இருவரும் தங்களுக்குள் ஆலோசித்து  விருப்பத்தோடு பாலூட்டுவதை நிறுத்த விரும்பினால் இருவரின் மீதும் எந்தக் குற்றமும் இல்லை. உங்கள் குழந்தைகளுக்கு செவிலித் தாய்மார்கள்மூலம் பாலூட்ட விரும்பினால் அப்போதும் உங்கள்மீது எந்தக் குற்றமும் இல்லை. ஆனால் அவர்களுக்கு நீங்கள் நிர்ணயித்ததை முறைப்படி கொடுத்துவிட வேண்டும். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.”

கணவன் மனைவி இருவருக்கும் மத்தியிலான விவாகரத்து அவர்கள் இருவரோடு மட்டும் முடிந்து விடுவதில்லை. அது பிள்ளைகளையும் பாதிக்கும். பிள்ளைகளைப் பாதுகாப்பது கணவனின் பொறுப்புதான் என்றாலும் பால்குடி மறவாத பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்ட வேண்டியது தாயின் மீதுள்ள பொறுப்பாகும். பச்சிளம் பருவத்தில் தாயின் அரவணைப்பு குழந்தைக்கு மிக அவசியம். அவள் முழுமையாக இரண்டு ஆண்டுகள்வரை குழந்தைக்குப் பாலூட்ட வேண்டும், கணவன் அவ்வாறு பாலூட்ட வேண்டும் என்று விரும்பினால்.

இந்த வசனம் பொதுவான தாய்மார்களைப் பற்றிப் பேசவில்லை. தலாக் சொல்லப்பட்ட தாய்மார்களையே பேசுகிறது. முன்பின் வசனங்களும் இந்த வசனத்தில் வந்துள்ள விசயங்களும் இதையே நமக்கு உணர்த்துகின்றன. இந்த வசனம் பாலூட்டுதல் தொடர்பான சில சட்டங்களைத் தெளிவுபடுத்துகிறது. அவற்றை வரிசையாகக் குறிப்பிடுகின்றேன்:

1. தம்முடைய பச்சிளம் குழந்தைகளுக்குப் பாலூட்டுவது தலாக் சொல்லப்பட்ட பெண்களின் பொறுப்பாகும். தந்தையர் விரும்பினால் முழுமையாக இரண்டு ஆண்டுகள்வரை அவர்கள் பாலூட்ட வேண்டும். கணவன் தலாக் சொல்லி விட்டான் என்பதற்காக தாய் தன் குழந்தையை கவனிக்காமல் விட்டுவிடக்கூடாது.

2. அவர்களுக்கான உணவையும் உடையையும் முறைப்படி வழங்க வேண்டியது தந்தையர் மீதுள்ள பொறுப்பாகும்.

3. குழந்தையைக் கொண்டு தாய்க்கும் தீங்களிக்கப்படக்கூடாது, தந்தைக்கும் தீங்களிக்கப்படக்கூடாது. விவாகரத்து பெற்ற தம்பதியினர் கவனிக்க வேண்டிய முக்கியமான விசயம் இது. குழந்தைகளைப் பயன்படுத்தி ஒருவர் மற்றவருக்குத் தீங்கிழைப்பது இன்று சர்வ சாதாரண ஒன்றாகி விட்டது.

4. தந்தையர் இல்லையெனில் அவர்களின் வாரிசுதாரர்கள் மீது இது கடமையாகிவிடும்.

5. தந்தை, தாய் இருவரும் தங்களுக்குள் ஆலோசனை செய்து விருப்பத்தோடு பாலூட்டுவதை நிறுத்தலாம்.

6. தந்தையர் விரும்பினால் செவிலித் தாய்மார்கள் வைத்து தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டலாம். அவர்களுக்கான ஊதியத்தை முறைப்படி வழங்கிவிட வேண்டும்.  

அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள். அவன் உங்களின் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை நினைவில் வையுங்கள்.  

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply