தலாக் சொல்லப்பட்ட பெண்கள் தொடர்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில் அடுத்து வரும் சில வசனங்கள் கணவனை இழந்த விதவைப் பெண்களின் காத்திருப்பு காலம் குறித்தும் அவர்களின் மறுமணம் குறித்தும் அது தொடர்பாக கடைப்பிடிக்கப்பட வேண்டிய இங்கிதங்கள் குறித்தும் பேசுகின்றன. அவை குறித்து பேசப்படுவதற்கு உகந்த சூழல் இதுதான். பிறகு மீண்டும் வசனங்கள் தலாக் சொல்லப்பட்ட பெண்களைக் குறித்துப் பேசுகின்றன.
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ أَرْبَعَةَ أَشْهُرٍ وَعَشْرًا فَإِذَا بَلَغْنَ أَجَلَهُنَّ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ بِالْمَعْرُوفِ وَاللهُ بِمَا تَعْمَلُونَ خَبِيرٌ وَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِيمَا عَرَّضْتُمْ بِهِ مِنْ خِطْبَةِ النِّسَاءِ أَوْ أَكْنَنْتُمْ فِي أَنْفُسِكُمْ عَلِمَ اللهُ أَنَّكُمْ سَتَذْكُرُونَهُنَّ وَلَكِنْ لَا تُوَاعِدُوهُنَّ سِرًّا إِلَّا أَنْ تَقُولُوا قَوْلًا مَعْرُوفًا وَلَا تَعْزِمُوا عُقْدَةَ النِّكَاحِ حَتَّى يَبْلُغَ الْكِتَابُ أَجَلَهُ وَاعْلَمُوا أَنَّ اللهَ يَعْلَمُ مَا فِي أَنْفُسِكُمْ فَاحْذَرُوهُ وَاعْلَمُوا أَنَّ اللهَ غَفُورٌ حَلِيمٌ
2:234,235. “உங்களில் யாரேனும் மனைவியரைவிட்டு மரணித்துவிட்டால் அந்த மனைவியர் நான்கு மாதங்கள், பத்து நாட்கள்வரை காத்திருக்க வேண்டும். தம் தவணையை அவர்கள் நிறைவுசெய்த பிறகு தங்கள் விசயத்தில் முறைப்படி செயல்படுவதில் (பொறுப்பாளர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான். அந்தப் பெண்களை திருமணம் செய்யும் விருப்பத்தை சாடைமாடையாகச் சொல்வதிலோ உங்கள் உள்ளங்களில் மறைத்து வைப்பதிலோ உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. நிச்சயமாக நீங்கள் அவர்களை நினைப்பீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். ஆனால் இரகசியமாக அவர்களிடம் வாக்களிக்காதீர்கள். நீங்கள் அவர்களிடம் முறைப்படி ஏதேனும் விசயத்தைக் கூறலாம். நிர்ணயிக்கப்பட்ட தவணை நிறைவடையும்வரை நீங்கள் திருமண ஒப்பந்தத்தை உறுதி செய்யாதீர்கள். உங்கள் உள்ளங்களில் உள்ளவற்றையும் அல்லாஹ் அறிகிறான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான் என்பதையும் அறிந்துகொள்ளுங்கள்.”
கணவனை இழந்த விதவைப் பெண்கள் நான்கு மாதங்கள், பத்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டும். இது அவர்கள் துக்கம் அனுசரிப்பதற்கான காலம். இந்த நாட்களில் அவர்கள் தங்களை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது; தேவையின்றி வெளியில் செல்லக்கூடாது; அடுத்த திருமணத்திற்கான பேச்சுகளில் ஈடுபடக்கூடாது. இந்த தவணையை நிறைவு செய்த பின்னர் அவர்கள் புதியதொரு வாழ்க்கையை தேடிக் கொள்ளலாம். அவ்வாறு அவர்கள் புதியதொரு வாழ்க்கையை தேடிக் கொள்வதில் அவர்கள் மீதோ பொறுப்பாளர்களாகிய உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை.
இஸ்லாத்திற்கு முந்தைய காலகட்டத்தில் கணவனை இழந்த விதவைப் பெண் பலவிதமான சமூக நெருக்கடிக்கடிக்கு ஆளாக்கப்பட்டாள். கணவனின் உறவினர்களும் அவளது உறவினர்களும் அவள் புதியதொரு வாழ்க்கையை தேடிக் கொள்வதற்குத் தடைகளை ஏற்படுத்தினார்கள். இஸ்லாம் அந்த நெருக்கடிகளை, தடைகளை நீக்கியது. அதே சமயம் கணவனுடைய உறவினர்களின் உணர்வுகளுக்கும் அவளது உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவளுக்கான காத்திருப்பு காலத்தையும் ஏற்படுத்தியது. அது அவள் மீண்டு வருவதற்கான, மனதளவில் தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கான காலம்.
அடுத்த வசனம் அந்தப் பெண்களை மணமுடிக்க விரும்பும் ஆண்களுக்கு அறிவுரை கூறுகிறது. நீங்கள் அவர்களை மணமுடிக்க விரும்பினால் அந்த விருப்பத்தை நேரடியாக அவர்களிடம் கூறாதீர்கள். நீங்கள் அவர்களைக் குறித்து எண்ணுவீர்கள் என்பதை அல்லாஹ் அறிவான். அதுதான் உங்களின் இயல்பு. உங்களின் எண்ணத்தை நீங்கள் சாடைமாடையாக, மறைமுகமாகக் குறிப்பிடலாம். ஆனால் அவர்களிடம் இரகசியமாக எதையும் நீங்கள் வாக்களிக்காதீர்கள். அவர்கள் தங்களின் காத்திருப்பு காலகட்டத்தை முழுமையாக நிறைவு செய்யும்வரை திருமண ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தாதீர்கள். உங்கள் மனதின் எண்ணங்களை அல்லாஹ் நன்கறிவான். அவனுக்குத் தெரியாமல் எதையும் உங்களால் மறைத்துவிட முடியாது. அவன் உங்களின் குறைகளை, பலவீனங்களை மன்னிக்கக்கூடியவன் என்பதையும் உங்களின் விசயத்தில் அவன் மிகுந்த சகிப்புத்தன்மையுடையவன் என்பதையும் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.
சாடைமாடையாகக் கூறுவது என்றால் என்ன? அதற்கு இப்னு அப்பாஸ் இப்படி விளக்கம் அளிக்கிறார்: சாடைமாடையாகக் கூறுவதென்றால் “நான் மணமுடிக்க விரும்புகிறேன்”, “எனக்குப் பெண்கள் தேவையாக இருக்கிறார்கள்”, “எனக்கு அல்லாஹ் நல்லதொரு பெண்ணைத் தர வேண்டும் என விரும்புகிறேன்” என்பவை போன்ற வாசகங்களில் கூறுவதாகும். (புகாரீ)
لَا جُنَاحَ عَلَيْكُمْ إِنْ طَلَّقْتُمُ النِّسَاءَ مَا لَمْ تَمَسُّوهُنَّ أَوْ تَفْرِضُوا لَهُنَّ فَرِيضَةً وَمَتِّعُوهُنَّ عَلَى الْمُوسِعِ قَدَرُهُ وَعَلَى الْمُقْتِرِ قَدَرُهُ مَتَاعًا بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُحْسِنِينَ وَإِنْ طَلَّقْتُمُوهُنَّ مِنْ قَبْلِ أَنْ تَمَسُّوهُنَّ وَقَدْ فَرَضْتُمْ لَهُنَّ فَرِيضَةً فَنِصْفُ مَا فَرَضْتُمْ إِلَّا أَنْ يَعْفُونَ أَوْ يَعْفُوَ الَّذِي بِيَدِهِ عُقْدَةُ النِّكَاحِ وَأَنْ تَعْفُوا أَقْرَبُ لِلتَّقْوَى وَلَا تَنْسَوُا الْفَضْلَ بَيْنَكُمْ إِنَّ اللهَ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
2:236,237. “பெண்களைத் தீண்டாமலும் மணக்கொடையை நிர்ணயிக்காமலும் இருக்கின்ற நிலையில் நீங்கள் அவர்களை விவாகரத்து செய்துவிட்டால் உங்கள்மீது எந்தக் குற்றமுமில்லை. வசதியுள்ளவர் தம் வசதிக்கேற்பவும் வசதியற்றவர் தம் வசதிக்கேற்பவும் முறைப்படி அவர்களுக்கு ஏதேனும் கொடுத்துவிட வேண்டும். இது நற்செயல் புரிவோர் மீதுள்ள கடமையாகும். நீங்கள் அவர்களுக்குரிய மணக்கொடையை நிர்ணயித்த பிறகு அவர்களைத் தீண்டுவதற்கு முன்னர் விவாகரத்து அளித்துவிட்டால் நிர்ணயித்த மணக்கொடையில் பாதியை அவர்களுக்குக் கொடுத்துவிட வேண்டும். ஆனால் அப்பெண்கள் மன்னித்தாலோ அல்லது திருமணப் பொறுப்பு யார் கையில் உள்ளதோ அவர் மன்னித்தாலே தவிர. நீங்கள் மன்னித்துவிடுவதே இறையச்சத்திற்கு மிக நெருக்கமானது. நீங்கள் ஒருவருக்கொருவர் நன்மை செய்வதில் அலட்சியமாக இருந்து விடாதீர்கள். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”
இங்கு மறுபடியும் தலாக் தொடர்பான விவகாரங்கள் பேசப்படுகின்றன. இவை இதுவரை பேசப்படாத புதிய விசயங்களாகும். இந்த வசனங்களில் இரு நிலைகள் பேசப்படுகின்றன.
முதல் நிலை: ஒரு மனிதர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்கிறார். அந்தப் பெண்ணுக்கான மஹர் தொகை இன்னும் நிர்ணயிக்கப்படாமல் இருக்கிறது. அவர் அந்தப் பெண்ணுடன் இன்னும் உடலுறவு கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் அந்தப் பெண்ணை தலாக் கூறிவிட்டார் எனில் அவருக்கு தலாக் கூறுவதற்கான அனுமதி இருக்கிறது. அவ்வாறு கூறுவது அவர் மீது குற்றமாகாது. ஆனால் அவர் அதற்கான இழப்பீட்டை வழங்க வேண்டும். வசதியுள்ளவர் அவரது வசதிக்கேற்பவும் வசதியற்றவர் அவரது நிலைக்கேற்ப அவரால் இயன்ற அளவும் வழங்க வேண்டும். இவ்வாறு வழங்குவது நன்மை செய்யும் நல்ல மனிதர்களின் மீது கடமையான ஒன்றாகும்.
இரண்டாவது நிலை: ஒரு மனிதர் ஒரு பெண்ணை திருமணம் முடிக்கிறார். அந்தப் பெண்ணுக்கான மஹர் தொகையையும் நிர்ணயித்து விட்டார். அந்தப் பெண்ணுடன் உடலுறவு கொள்வதற்கு முன்னரே அவளை விவாகரத்து செய்கிறார் எனில் அவர் நிர்ணயித்த மஹர் தொகையில் பாதியை அவளுக்கு இழப்பீடாக வழங்கிவிட வேண்டும். அந்தப் பெண் விரும்பினால் அந்த தொகை வேண்டாம் என்று அவரை மன்னித்து விடலாம் அல்லது அவர் நிர்ணயித்த மஹர் தொகையை முழுமையாக அவளுக்கு வழங்கி விடலாம். அந்தப் பெண் மன்னித்து விடுவதும் அவர் மஹர் தொகையை முழுமையாக வழங்கி விடுவதும் தக்வாவுக்கு நெருக்கமான விசயங்களாகும். இருவரில் யார் தம் உரிமையை விட்டுக் கொடுக்கிறாரோ அவர் தக்வாவின் அடிப்படையில் சிறந்தவர் ஆவார். உங்களுக்கு மத்தியில் ஒருவருக்கொருவர் நன்மை செய்ய நீங்கள் மறந்து விடாதீர்கள். அல்லாஹ் உங்களின் செயல்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான்.
ஆணுடைய சம்மதத்தைக் கொண்டே திருமணம் தொடங்குகிறது. திருமணத்தை முடித்து வைக்கும் உரிமையும் அவனுக்கே இருக்கிறது. ஆகவே அவன்தான் விட்டுக்கொடுக்க வேண்டும். அதிகாரம் வழங்கப்பட்டவரே விட்டுக்கொடுக்க வேண்டும். அவனுடைய விருப்பமின்மை அவளை பாதிக்கிறது எனில் அவன் வழங்கும் இழப்பீடு அதற்குப் பரிகாரமாக அமையலாம் அல்லது அது அந்தப் பெண்ணின் குடும்பத்தாருடைய கோபத்தை ஓரளவு தணிக்கலாம். மனித மனம் பரிகாரத்தைக் கொண்டு அமைதியடையக்கூடியது.
திருமணம், தலாக், கணவனை இழந்த பெண்ணுக்கான காத்திருப்பு காலம் போன்ற குடும்பவியல், சமூகவியல் சட்டங்கள் தொடர்பாக பேசப்பட்டு வரும் இந்தச் சூழலில் தொழுகைகளைப் பேணுவது தொடர்பான கட்டளை இடம்பெறுவது கவனிக்கத்தக்க ஒன்றாகும். மேலோட்டமாகப் பார்க்கும்போது முன்பின் வசனங்களோடு தொடர்பான அந்நியமான ஒன்றுபோல இந்த வசனங்கள் தோன்றலாம். நம்பிக்கையாளர்களின் வாழ்க்கையில் தொழுகைக்கான முக்கியத்துவத்தையும் அது ஏற்படுத்தும் தாக்கங்களையும் வைத்துப் பார்க்கும்போது இது சரியான இடத்தில் கூறப்பட்டுள்ள நினைவூட்டல் என்பதை புரிந்து கொள்ள முடியும்.
தொழுகை நம்பிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அரணாகும். அது மானக்கேடான, தீய காரியங்களைவிட்டு அவர்களைத் தடுக்கிறது. அவர்களுக்கும் அல்லாஹ்வுக்குமான தொடர்பை பசுமையான நிலையில் வைத்திருக்கிறது. அது அவர்களைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கிறது.
தொழுபவர்களின் வாழ்க்கையும் தொழாதவர்களின் வாழ்க்கையும் சமமானது அல்ல. தொழுகையை முறையாகப் பேணித் தொழுபவர்களின் வாழ்க்கையும் மற்றவர்களின் வாழ்க்கையும் சமமானது அல்ல. தொழுகையை முறையாகப் பேணித் தொழுபவர்கள் அல்லாஹ்வின் சட்டங்களை, கட்டளைகளை தங்களின் வாழ்க்கையில் முழுமையாக செயல்படுத்த முயற்சிப்பார்கள். தொழுகை அவர்களுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு விசயத்திலும் வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும். அது உயிரோட்டமற்ற முறையில் நிறைவேற்றப்படும் சடங்கு அல்ல. வாழ்க்கையின் ஒவ்வொரு தருணத்தையும் அல்லாஹ்வுடன் இணைக்கும் உயிரோட்டமான வழிபாடு. அது அவனை நினைவுகூருவதற்கான அற்புதமான வழிமுறை. அவனை நினைவுகூருபவர்களும் அவனை நினைவுகூறாதவர்களுக்கும் சமமானவர்கள் அல்ல. அது உயிருள்ளவருக்கும் இறந்தவருக்குமான வேறுபாடு போன்றது.
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ فَإِنْ خِفْتُمْ فَرِجَالًا أَوْ رُكْبَانًا فَإِذَا أَمِنْتُمْ فَاذْكُرُوا اللهَ كَمَا عَلَّمَكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ
2:238,239. “தொழுகைகளைப் பேணி வாருங்கள். குறிப்பாக நடுத்தொழுகையைப் பேணுங்கள். அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்தவர்களாக நில்லுங்கள். உங்களுக்குப் பயம் ஏற்பட்டால் நடந்து கொண்டோ வாகனத்தின்மீது அமர்ந்த நிலையிலோ தொழுது கொள்ளுங்கள். பின்னர் அமைதிநிலை ஏற்பட்டதும் நீங்கள் அறியாதவற்றையெல்லாம் உங்களுக்குக் கற்றுத் தந்த அல்லாஹ்வை அவன் உங்களுக்குக் கற்றுத் தந்தவாறே நினைவுகூருங்கள்.”
தொழுகையைப் பேணுவது என்பது அதற்குரிய அத்தனை நிபந்தனைகளுடன் உயிரோட்டமான முறையில் அதனை நிறைவேற்றுவதும் எவ்வளவு இக்கட்டான சூழல் வந்தாலும் அதனை இடைவிடாமல் நிறைவேற்றுவதும் ஆகும். எந்தச் சமயத்திலும் தொழுகையைக் கைவிடுவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. எதிரிகள் சூழ்ந்திருக்கும் போர்ச் சமயங்களில்கூட தொழுகை அதற்குரிய முறைப்படி நிறைவேற்றப்பட்டாக வேண்டும். உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையிலும் தொழுகை நிறைவேற்றப்பட வேண்டும். நின்று தொழ முடியவில்லை எனில் அமர்ந்து தொழ வேண்டும். அமர்ந்து தொழ முடியவில்லை எனில் படுத்தவாறு தொழ வேண்டும். படுத்தவாறுகூட தொழ முடியவில்லை எனில் சைகை முறையினால் அது நிறைவேற்றப்பட்டாக வேண்டும். தொழுகை நம் வாழ்க்கையின் அத்தனை விசயங்களிலும் தாக்கம் செலுத்தக்கூடியதாகும்.
“குறிப்பாக நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள்” நடுத்தொழுகை எது என்பதில் விரிவுரையாளர்களுக்கு மத்தியில் பெரிய அளவில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது. பெரும்பாலானவர்கள் அது அஸர் தொழுகைதான் என்று கூறுகிறார்கள். பகலின் இறுதிப் பகுதியில் சூரியன் மறைவதற்கு முன்னர் இந்த தொழுகை அமைந்துள்ளதால் மக்கள் இந்த தொழுகையை அலட்சியமாகக் கடந்து விடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால் இது வலியுறுத்திக் கூறப்படுகிறது.
“அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்தவர்களாக நில்லுங்கள்” தொழுகையில் நிற்கும்போது உள்ளச்சத்துடனும் உலகத் தொடர்புகளிலிருந்து விலகி மௌனமாகவும் அவனுக்குக் கட்டுப்பட்டவாறும் நில்லுங்கள்.
போர் மேகம் உங்களைச் சூழ்ந்து நீங்கள் அச்ச நிலையில் இருந்தால் நின்றவாறு அல்லது வாகனத்தில் அமர்ந்தவாறு தொழுகையை நிறைவேற்றுங்கள். அந்தச் சமயத்தில்கூட நீங்கள் தொழுகையை தள்ளிப்போடவோ விட்டுவிடவோ கூடாது. பிறகு நீங்கள் அமைதியான, இயல்பான சூழலை அடைந்து விட்டால் அல்லாஹ் தன் தூதர் வழியாக உங்களுக்குக் கற்றுத் தந்தவாறு தொழுகையை நிறைவேற்றுங்கள்.
وَالَّذِينَ يُتَوَفَّوْنَ مِنْكُمْ وَيَذَرُونَ أَزْوَاجًا وَصِيَّةً لِأَزْوَاجِهِمْ مَتَاعًا إِلَى الْحَوْلِ غَيْرَ إِخْرَاجٍ فَإِنْ خَرَجْنَ فَلَا جُنَاحَ عَلَيْكُمْ فِي مَا فَعَلْنَ فِي أَنْفُسِهِنَّ مِنْ مَعْرُوفٍ وَاللهُ عَزِيزٌ حَكِيمٌ وَلِلْمُطَلَّقَاتِ مَتَاعٌ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ كَذَلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمْ آيَاتِهِ لَعَلَّكُمْ تَعْقِلُونَ
2:240-242. “உங்களில் மனைவியரைவிட்டு மரணமடைவோர், “ஓராண்டு காலம்வரை வீட்டிலிருந்து வெளியேற்றப்படாமல் அவர்களுக்குரிய வாழ்க்கை வசதிகள் அளிக்கப்பட வேண்டும்” என்று தங்கள் மனைவியருக்காக வஸிய்யத் செய்ய வேண்டும். ஆனால் அவர்கள் தாங்களாகவே வீட்டைவிட்டு வெளியேறி தங்கள் விசயத்தில் முறைப்படி ஏதேனும் செய்துகொண்டால் உங்கள்மீது குற்றமாகாது. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கும் முறைப்படி ஏதேனும் வழங்கிவிட வேண்டும். இது இறையச்சமுடையோர்மீது கடமையாகும். இவ்வாறு நீங்கள் புரிந்துகொள்ளும்பொருட்டு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.”
கடந்த 234 ஆவது வசனத்தில் கணவனை இழந்த விதவைப் பெண்களின் காத்திருப்பு காலம் குறித்து பேசப்பட்டுள்ளது. இந்த வசனத்தில் அது தொடர்பான கூடுதலான ஒரு விசயமும் கூறப்பட்டுள்ளது. நீங்கள் உங்களுக்கு மரணம் நெருங்கி விட்டதை உணர்ந்தால் உங்கள் மனைவியருக்காக அவர்கள் ஓராண்டுவரை உங்களின் வீட்டில் தங்கியிருக்கவும் அதற்கான செலவீனங்களை பொறுப்பெடுத்துக் கொள்ளவும் உங்களின் வாரிசுதாரர்களுக்கு வஸிய்யத் செய்யுங்கள். அந்த தவணை நிறைவடைவதற்கு முன்னால் அவர்கள் உங்களின் வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து கொண்டால் அவர்கள் மீதோ சமூகத்தினராகிய உங்கள் மீதோ எந்தக் குற்றமும் இல்லை. நான்கு மாதங்கள், பத்து நாட்கள்வரை அவர்கள் கட்டாயமாக காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகு அவர்கள் தங்களுக்கான புதிய ஒரு வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு ஒரு வருட காலம் அவகாசம் அளிக்கப்படுகிறது. இது மனைவிருக்கான சொத்துப் பங்கீடு நிர்ணயிக்கப்படுவதற்கு முன்னால் வழங்கப்பட்ட தற்காலிகமான தீர்வு. ஆனாலும் சொத்துகளை விட்டுச் செல்லாத கணவர்களின் விசயத்தில் இது நிரந்தரமான தீர்வாகவும் இருக்கின்றது.
அல்லாஹ் பேராற்றல் மிக்கவன். தகுந்த சட்டங்களை, வழிகாட்டல்களை அளித்து சமூகத்தின் நிலையை மாற்றுவதற்கான ஆற்றல் அவனுக்கு இருக்கிறது. அவனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வழிகாட்டலும் நோக்கமும் ஞானமும் நிரம்பியது. ஆகவே அவன் ஞானம் மிக்கவன்.
“விவாகரத்து செய்யப்பட்ட பெண்களுக்கு முறைப்படி ஏதேனும் வழங்கிவிட வேண்டும்” இது விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் தொடர்பாக வழங்கப்பட்ட பொதுவான வழிகாட்டல். முந்தைய வசனங்களில் குறிப்பான வழிகாட்டல்கள் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு இந்த வசனத்தில் அனைவருக்கும் உரிய பொதுவான வழிகாட்டல் முன்வைக்கப்படுகிறது. இது ஒரு நினைவூட்டலாகவும் அமைந்து விடுகிறது.
இவ்வாறு அல்லாஹ் தன் வழிகாட்டல்களை, கட்டளைகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான், நீங்கள் புரிந்துகொள்ளும் பொருட்டு, நீங்கள் சிந்திக்கும் பொருட்டு. சிந்திப்பவர்கள் அல்லாஹ் வழங்கிய வழிகாட்டல்களே மிகச் சிறந்தவை என்பதையும் அவையே தங்களின் இயல்புக்கு உகந்தவை என்பதையும் புரிந்து கொள்வார்கள்.
இந்த மார்க்கம் வெறுமனே நம்பிக்கை கொள்ளுங்கள் என்றோ கண்களை மூடிக்கொண்டு நம்புங்கள் என்றோ கூறவில்லை. அது அறிவைப் பயன்படுத்தச் சொல்கிறது; சிந்திக்கச் சொல்கிறது. சிந்தனை தெளிவாக, ஆரோக்கியமாக இருக்கும்பட்சத்தில் அது அல்லாஹ்வின் வழிகாட்டல்களுக்குப் பின்னால் இருக்கும் நன்மைகளை, நோக்கங்களை அறிந்துகொள்ளும்.
