இஸ்லாமிய அழைப்பியல் என்பது ஒரு மறைமுக அதிகாரமும்கூட. மக்கள் அழைப்பாளர்களை நோக்கி ஈர்க்கப்படுகிறார்கள். அவர்களை நம்புகிறார்கள். அவர்களிடம் இஸ்லாம் என்ற அளவுகோல் இருக்கிறது. அதன்படி அவர்கள் நடப்பார்கள் என்று அவர்கள் கருதுவதால் அவர்களை நம்புகிறார்கள். சிலர் அவர்களின் பணிக்கு நிதியுதவி செய்கிறார்கள். சிலர் அவர்களுக்குச் சேவகம் செய்கிறார்கள். சிலர் அவர்களுடன் இணைந்து ஏதோ ஒரு வகையில் அவர்களை வலுப்படுத்துகிறார்கள். அவர்களின் அழைப்பைச் செவிமடுத்து அதனால் ஈர்க்கப்படுபவர்கள் ஏதோ ஒரு வகையில் அவர்களுடன் ஒத்துழைப்பதை தங்களின் மீதான கடமையாகவே கருதுகிறார்கள்.
இந்தப் பாதையில் செல்பவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். தங்களுக்குக் கிடைக்கும் மறைமுகமான அதிகாரத்தை தங்களின் நலன்களுக்காக பயன்படுத்தக்கூடாது. அல்லாஹ்வின் மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் பணிகளில்தான் அவர்கள் அந்த அதிகாரத்தை, நெட்வொர்க்கை பயன்படுத்த வேண்டும். அந்த நெட்வொர்க்கை தங்களின் சொந்த நலன்களுக்கான நெட்வொர்க்காக அவர்கள் ஆக்கிவிடக்கூடாது. அவ்வாறு ஆக்குவது மிகப் பெரிய நன்றிகெட்டத்தனமும் நம்பிக்கைத் துரோகமும் ஆகும். அது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு சேவகம் செய்கிறேன் என்ற பெயரில் செய்யப்படும் நயவஞ்சகத்தனம் ஆகும். அது இழிவையும் அழிவையும் கொண்டு வரும் மிகப் பெரிய குற்றம்.
அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு சேவகம் செய்வது அவன் உங்களுக்கு அளிக்கும் பெரும் பாக்கியமாகும். அதன் காரணமாக எந்த வகையிலும் நீங்கள் தாழ்ந்துவிட மாட்டீர்கள். அவன் உங்களை ஒருபோதும் கைவிட மாட்டான். மறைவின் புறத்திலிருந்து அவனுடைய உதவிகள் உங்களை வந்தடைந்து கொண்டேயிருக்கும். அவன் உங்களிடம் எதிர்பார்ப்பது தக்வாதான். அதுதான் பரக்கத்தின் வாசல்களை திறந்து வைக்கும் அற்புதச் சாவி.
