இஸ்லாமிய அழைப்பியலின் பாதை எளிதானது அல்ல. மனிதர்கள் நினைத்த மாத்திரத்தில் அந்தப் பாதையில் சென்றுவிட முடியாது. மனக்கட்டுப்பாடு அற்றவர்கள் அந்தப் பாதையில் நீடிக்க முடியாது. உண்மையில் அது அல்லாஹ் அளிக்கும் பெரும் பாக்கியம். அந்த பாக்கியத்தைப் பெறுவதற்கு முன்னர் அவர்கள் சோதனைகளைக் கடக்க வேண்டும். சோதனைகளை வெற்றிகரமாக கடந்தவர்கள் மட்டுமே அந்தப் பாதையில் நீடிக்க முடியும்.
ஷைத்தான் பல்வேறு இடையூறுகளை, கவனச்சிதறல்களைக் கொண்டும் அவசியமற்ற பணிகளை அவசியமானவையாகக் காட்டுவதன்மூலமும் நம்மை அந்தப் பாதையில் இருந்து திருப்ப முயற்சித்துக் கொண்டே இருப்பான். கொஞ்சம் அசந்தால்கூட நாம் பாதையைவிட்டு விலகி வெகுதூரம் சென்று விடுவோம். எந்தவொன்றும் சிறிய அளவிலான மாற்றத்துடன்தான் தொடங்கும். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு அது பெரிய அளவிலான மாற்றமாக மாறி நிற்கும்.
நம்முடைய நோக்கத்துடன் ஒத்திசைந்து செல்பவர்களுடன் மட்டுமே நாம் இணைந்து இயங்க வேண்டும். இல்லையெனில் நாம் கொஞ்சம் கொஞ்சமாக நம் நோக்கத்தைவிட்டு விலகி விடுவோம். நாம் யாருடன் இணைந்திருக்கிறோமோ அவர்கள் நம் மீது தாக்கம் செலுத்துவார்கள். நாம் அறிந்தும் அறியாமலும் அவர்களிடமிருந்து தாக்கங்களைப் பெற்றுக் கொண்டேயிருப்போம். இறைமறுப்பாளர்களுடன் நெருங்கிய உறவு கொள்ளக்கூடாது என்று திருக்குர்ஆன் தடுப்பது இதனால்தான்.
