சமநிலை குலைவு

You are currently viewing சமநிலை குலைவு

மனப்பிறழ்வு கொண்டவர்களை பொதுவாக இரு வகையாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர், தங்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை, தாங்கள் இயல்பாக இல்லை என்பதை, தங்களுக்கு சிகிச்சை அவசியம் என்பதை உணர்பவர்கள். இன்னொரு வகையினர், தங்களுக்கு மனரீதியாக பிரச்சனைகள் இருந்தும் அவற்றில் எதையும் உணராமல் தாங்கள் இயல்பாக இருப்பதாக எண்ணிக்கொள்பவர்கள். இந்த இரண்டாவது வகையினரே கொஞ்சம் பிரச்சனைக்குரியவர்கள். பொதுவாக உடல்ரீதியான நோய்கள் அனுதாபத்துடன் அணுகப்படும் அளவுக்கு மனரீதியான நோய்கள் அனுதாபத்துடன் அணுகப்படுவதில்லை. சில சமயங்களில் அவை அவர்கள் வெறுக்கப்படுவதற்கும் ஒதுக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.

மனரீதியான நோய்கள் மனிதர்களை தனிமைப்படுத்துகின்றன. மனப்பிறழ்வு என்ற வார்த்தை ஏராளமான உள்மடிப்புகளைக் கொண்டது. அவற்றில் பெரும்பாலானவை அடையாளம் காணப்பட்டுள்ளன. உளவியலாளர்கள் அடையாளங்களைக் கொண்டு அவற்றில் அது எந்த வகை என்பதை அறிந்துகொள்கிறார்கள். சரி, இங்கு நான் பேச வருவது எனக்குச் சம்பந்தமில்லாத ஒரு துறையைக் குறித்து அல்ல. நான் சொல்ல விரும்புவது அவர்களுடன் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதைக் குறித்துதான். 

ஒருவரின் பின்புலத்தை நாம் அறிந்துகொள்வது அவரை ஓரளவு புரிந்துகொள்ள உதவும். தனிமை வாழ்க்கை உருவாக்கும் சிக்கல்கள், குழந்தையின்மை உருவாக்கும் சிக்கல்கள், வறுமை உருவாக்கும் சிக்கல்கள், கடுமையான அழுத்தங்கள் உருவாக்கும் சிக்கல்கள் என ஒவ்வொன்றும் மனிதர்களின் வாழ்க்கையில் சிக்கல்களை, பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டே செல்கின்றன. பல விசயங்கள் ஒன்றுசேர்ந்தே மனிதனின் வெறுமையைப் போக்குகின்றன. மனித வாழ்வில் ஒவ்வொன்றுக்கும் உரிய இடம் தரப்பட வேண்டும். ஏதேனும் ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டால், ஏதேனும் ஒன்று முழுவதுமாக புறக்கணிப்பட்டால் அங்கு மனப்பிறழ்வுக்கான ஆரம்ப நிலைத் தூண்டல்கள் உருவாகி விடுகின்றன.

*******************************

நாம் சின்னச் சின்ன விசயங்களால் பாதிக்கப்படுகிறோம் எனில் ஏற்கனவே ஒரு பெரிய விசயத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம் என்று பொருள். அதன் பாதிப்பினால்தான் சின்ன சின்ன விசயங்கள்கூட நமக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. உடைந்து அழ வேண்டும் என்று விரும்புபவருக்கும் ஏதேனும் ஒரு சிறிய துன்பம் போதும். அவர் உடைந்து அழுதுவிடுவார். வெளிப்படையாகப் பார்ப்பதற்கு இந்த சிறிய பிரச்சனைக்காகவா இவர் இப்படி அழுகிறார் என்று தோன்றும். அதுபோலத்தான் ஏதேனும் ஒரு பெரிய விவகாரத்தில் சிக்கி கடும் கோபத்தையும் வெறுப்பையும் சுமந்து கொண்டிருக்கும் மனிதனை சிறு சிறு தவறுகள்கூட கொந்தளிப்பவனாக ஆக்கிவிடுகிறது. அவன் ஏற்கனவே சூடாகத்தான் இருக்கிறான். பாவம், அந்தச் சமயத்தில் அவனிடம் வந்து அகப்பட்டுக் கொள்பவர். ஒட்டுமொத்தமாக தன் கோபத்தை அவரிடம் கொட்டி விடுகிறான். கணவன் மனைவியிடம் மனைவி கணவனிடம் பெற்றோர் பிள்ளைகளிடம் அதிகாரிகள் தங்களுக்குக் கீழ் பணிபுரியும் அதிகாரிகளிடம் அந்த அதிகாரிகள் பொதுமக்களிடம் இத்தகையே கோபத்தையே அடிக்கடி வெளிப்படுத்துகிறார்கள். இங்கு ஒரு சங்கிலித்தொடர்போல பல விவகாரங்கள் நீண்டுகொண்டே செல்கின்றன.

ஒவ்வொருவரையும் நாம் பழிவாங்க நினைத்தால் அது நம்மை பெரும் சிக்கலில் ஆழ்த்திவிடும். முடிந்த மட்டும் காலம் அவர்களைப் பார்த்துக் கொள்ளும் என்று கடந்து செல்வதே சரியானது. அப்படித்தான் நிகழ்கிறது, ஒவ்வொரு அநியாயக்காரன் மீதும் அவனைவிட பலமான இன்னொரு அநியாயக்காரன் சாட்டப்பட்டு விடுகிறான். அந்தச் சமயத்தில் அநியாயக்காரன்கூட நியாயமான வாதங்களோடு தன்னைக் காத்துக்கொள்ள முனைவது புரிந்துகொள்ள முடியாத இவ்வுலகின் விசித்திரங்களுள் ஒன்றுதான். கொள்ளைக்கூட்டத்திலும் ஒரு வகையான நியாய ஒழுங்குகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்பதை நம்மால் நம்ப முடிகிறதா என்ன? இங்கு கச்சிதமாக எல்லாவற்றுக்கும் கணக்கு தீர்க்கப்பட்டு விடுகிறது. இது ஏதோ ஒரு மாறாத நியதிபோல இவ்வுலகில் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. 

மனிதர்கள் தங்களின் கோபங்களை, வெறுப்புகளை ஏதோ ஒரு வடிவில் வெளிப்படுத்துகிறார்கள். சிலர் தங்களுக்கு நெருக்கமானவர்களிடம் தங்களின் கோபத்தை, வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் தங்களுக்குக் கீழுள்ளவர்களிடம் தங்களின் கோபத்தை, வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் சம்பந்தமேயில்லாத வேற்று மனிதர்களிடம் தங்களின் கோபத்தை, அழுத்தத்தை வெளிப்படுத்துகிறார்கள். சிலர் சமூக ஊடகங்களில் தங்களின் ஒட்டுமொத்த கோபத்தையும் அழுத்தத்தையும் கொட்டித் தீர்க்கிறார்கள். தங்களுக்குச் சம்பந்தமேயில்லாத யாரோ ஒரு பிரபல்யத்தை, யாரோ ஒரு மனிதரை குதறி வைக்கிறார்கள். மிகச் சிலரே சம்பந்தப்பட்ட இடங்களில் தங்களின் கோபத்தை, வெறுப்பை வெளிப்படுத்துகிறார்கள். மனிதர்களுக்கு ஏதேனும் ஒரு வடிகால் தேவைப்படுகிறது. ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி தங்களுக்கும் மற்றவர்களுக்கும் அவர்கள் நியாயவாதம் சொல்லிக் கொள்கிறார்கள்.

சமநிலையை இழந்து நிற்கும் மனிதன் கொஞ்சம் ஆபத்தானவன்தான். அதுவும் அவனிடம் அதிகாரம் இருந்தால் ஆபத்தின் அளவு இன்னும் கொஞ்சம் அதிகம்தான். எதுவும் செய்ய இயலாத கோழைகள் சூழ்ச்சிகளின்மூலம் மறைமுகமாக தங்களின் கோபத்தை, வெறுப்பை தணித்துக் கொள்கிறார்கள். இங்கு பலவீனமானவர்களும் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைத் தவற விடுவதில்லை. ஏதோ ஒரு வகையில் அவர்கள் தங்களுக்குப் பிடிக்காதவர்களை பழிவாங்கி விடுகிறார்கள். திருடர்கள் அனைவரையும் அவர்கள் பேராசையின் காரணமாக, வறுமையின் காரணமாகத்தான் திருடுகிறார்கள் என்று கூற முடியாது. ஒடுக்கப்படுபவர்களும் திருடர்களாக, அடியாட்களாக மாறுகிறார்கள். தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற வெறியும் அதற்குப் பின்னால் ஒளிந்திருக்கலாம்.

ஒடுக்கப்படுபவர்களும் ஒரு கட்டத்தில் ஒடுக்குபவர்களாக மாறுகிறார்கள். தாங்கள் ஒடுக்கப்பட்டதுபோன்றே அவர்கள் மற்றவர்களையும் ஒடுக்குகிறார்கள். ஒடுக்கப்படுவர்கள் என்ற நிலையிலிருந்து விடுபட்டவுடன் அவர்களின் பார்வையும் மாறிவிடுகிறது. மிகக் குறைவான மனிதர்களே தங்களுக்குச் செய்யப்பட்ட அநீதி மற்றவர்களுக்கும் செய்யப்படக்கூடாது என்று எண்ணுகிறார்கள். அவர்களால் மிகச் சிறந்த மனிதர்களாக வெளிப்படுகிறார்கள். உண்மையில் அதிகாரம் இருந்தும் தங்களின் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தாத மனிதர்கள் மாமனிதர்களே. இங்கு செய்யப்பட வேண்டியது ஒரு தரப்பினருக்கு எதிராக மற்றொரு தரப்பினரை தூண்டுவது அல்ல. அதிகாரத்தில் இருப்பவர்களை அதிகாரத்துஷ்பிரயோகம் செய்ய விடாமல் தடுப்பது. அதுதான் மனித சமூகத்திற்கு நன்மைதரக்கூடியது. அதிகாரம் இடம்பெயர்ந்து கொண்டே செல்லும். அது யாருடைய கையிலும் நிரந்தரமாகத் தங்கிவிடாது.      

******************************

மனிதனின் வெறுமையைப் போக்குவதில் ஒவ்வொன்றுக்கும் ஒரு குறிப்பிட்ட அளவு பங்கு இருக்கிறது. மனிதனுக்கு வாழ்க்கைத் துணை தேவைப்படுகிறது; பிள்ளைகள் தேவைப்படுகிறார்கள்; குடும்பம் தேவைப்படுகிறது; நண்பர்கள் தேவைப்படுகிறார்கள்; செய்வதற்கு ஒரு வேலை தேவைப்படுகிறது; அவனை ஊக்குவிக்கும் அங்கீகாரமும் பாராட்டும் தேவைப்படுகின்றன. இப்படியே கூறிக் கொண்டே போகலாம். இவை சமநிலையில் இருக்கும் ஒரு மனிதனின் தேவைகள். மனிதன் சமநிலையை இழக்கும்போது ஏதேனும் ஒன்றில் அவன் மூழ்கிவிடலாம்.

ஆன்மீகமும் அவனுடைய இயல்பான தேவைகளுள் ஒன்று. மாறாக அவனுடைய வெறுமையின் பெரும் பகுதியை அதனால்தான் போக்க முடியும். ஒரு மனிதன் வாழ்க்கையின் ஆதாரமான கேள்விகளை எதிர்கொள்ளும்போது அவன் ஆன்மீகத்தின் அவசியத்தை உணரத் தொடங்குகிறான். அதுவரை கேளிக்கைகளாலும் வீண் தர்க்கங்களாலும் தன்னை நிரப்பிக் கொண்டிருந்தவன் கொஞ்சம் கொஞ்சமாக தடுமாறத் தொடங்குகிறான். இங்கிருந்துதான் அவன் தன்னிடமிருந்தே விலகி ஓடத் தொடங்குகிறான். வாழ்க்கையின் ஆதாரமான கேள்விகள் அவனை அச்சுறுத்துகின்றன. அந்த அச்சம் அல்லது அதன் காரணமாக விடை தேடி அவன் மேற்கொள்ளும் பயணம் அவனை ஆன்மீகத்தின் பக்கம் கொண்டு வருகிறது. இறைவனைக் கொண்டே தவிர வாழ்க்கையின் ஆதாரமான கேள்விகள் எதற்கும் விடையளிக்க முடியாது.

அத்தனை எதிர்ப்புப் பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் மனிதனால் இறைவனை நம்ப முடிகிறது. அவன் வாழ்க்கையில் நிகழும் ஏதேனும் ஒரு நிகழ்வு நாத்திகர்களின் ஆதாரங்கள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. ஆதாரங்கள் எதுவுமேயின்றி அவன் தன்னியல்பாக இறைவனின் பக்கம் திரும்புகிறான். ஆம், அதுவொரு அறிதல்; அதுவொரு உணர்தல். அதற்குப் பிறகு மனிதனுக்கு எந்த ஆதாரமும் அவசியமில்லை. பிறந்த கன்று எப்படி தன்னியல்பாக தன் தாயின் மடுவை அறிந்துகொள்கிறதோ அதுபோல அவன் இறைவனை நோக்கித் திரும்புகிறான்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply