அடிமைத்தனத்திலிருந்து மீளும் வழிமுறை

You are currently viewing அடிமைத்தனத்திலிருந்து மீளும் வழிமுறை

ஒரு மனிதன் தொடர்ந்து தவறுகளில், பிறழ்வுகளில் ஈடுபடும்போது ஒரு கட்டத்தில் அவற்றுக்கு அடிமையாக மாறி விடுகிறான். அவை அவனுடைய இயல்பான, அன்றாட செயல்பாடுகளாக மாறிவிடுகின்றன. அவை தன் வாழ்க்கையை அழிக்கும் தவறான செயல்பாடுகள், பிறழ்வுகள் என்பதை அவனால் உணர முடியுமா? நிச்சயம் உணர முடியும். அவ்வாறு உணர முடியாதவர்கள் மிகவும் குறைவுதான். அவர்களும் இயல்பு சிதைந்தவர்கள். சரியை சரியென, தவறை தவறென உணர்ந்து கொள்ளும் பக்குவத்தை இழந்தவர்கள். அவர்கள் விதிவிலக்கானவர்கள்.

தவறான செயல்பாடுகளுக்கு பிறழ்வுகளுக்கு அடிமையான மனிதன் அடிமையாக இருப்பதால் தன் விசயத்தில் முடிவு செய்யும் உரிமையை இழக்கிறான். ஆகவே அவன் அந்த அடிமைத்தனத்திலிருந்து மீளும்வரை ஒரு தேர்ந்த வழிகாட்டியின், ஒரு பயிற்றுவிப்பாளரின் சொல்லுக்கு கட்டுப்பட வேண்டிய அவசியம். அவரது அறிவுரைகள் அவனுக்குப் பிடிக்காவிட்டாலும் அவன் அவருக்குக் கட்டுப்பட வேண்டும். அவன் மீள்வதற்கான வழி இதுதான். ஆரம்பத்தில் கட்டுப்படுவது, மனம் விரும்பும் செயல்பாட்டுக்கு எதிராகச் செயல்படுவது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் போகப் போக தன்னுள் மாற்றம் நிகழ்வதை, தான் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவதை அவன் உணர்வான். இயல்பையும் பிறழ்வையும் பிரித்து அறியும் பக்குவத்தை அடைந்து விட்டால், இயல்பான செயல்பாடுகளின் பக்கம் திரும்பி விட்டால் தன் விசயத்தில் அவனே முடிவு செய்து கொள்ளலாம்.

சிலரிடம் அகங்காரச் சிக்கல் காணப்படும். அவர்களால் தம்மை ஒரு வழிகாட்டியிடம் ஒப்புக் கொடுக்க முடியாது. தன் தவறுகளையும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆகவே அவர்கள் அவற்றை நியாயப்படுத்துவார்கள். மற்றவர்களைக் குறைகூறுவார்கள். உலகமே மாறிவிட்டது என்று தங்களின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவார்கள். இந்த அகங்காரச் சிக்கல் அவர்களின் நோயை இன்னும் அதிகப்படுத்தும். அது மீள முடியாத சிக்கலான தொலைவில் அவர்களை விட்டுவிடும்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply