உயிருக்கும் செல்வத்திற்குமான பாதுகாப்பு

You are currently viewing உயிருக்கும் செல்வத்திற்குமான பாதுகாப்பு

அடுத்து வரும் கட்டளைகள் தனி மனித வாழ்விலும் சமூகத்திலும் தக்வாவை நிலைநிறுத்தக்கூடியவை. தக்வாவின்மூலமே மனிதர்கள் அல்லாஹ்வின் வேதனையிலிருந்தும் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளால் உருவாகும் சிக்கல்களிலிருந்தும் தப்பிக்க முடியும். ஒரு சமூகம் சிறந்த சமூகமாக இருக்க வேண்டும் எனில் அந்த சமூகத்தினருக்கு மத்தியில் அல்லாஹ்வின் மார்க்கம் முன்வைக்கும் ஒழுங்குகள் நிலைநிறுத்தப்பட வேண்டும். அந்த ஒழுங்குகளை நிலைநிறுத்துவதன்மூலமே அங்கு வாழும் மனிதர்களின் உயிருக்கும் செல்வத்திற்கும் பாதுகாப்பு வழங்க முடியும். பாதுகாப்பான சூழலில்தான் மனிதர்கள் நிம்மதியான, அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியும்.   

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الْقِصَاصُ فِي الْقَتْلَى الْحُرُّ بِالْحُرِّ وَالْعَبْدُ بِالْعَبْدِ وَالأنْثَى بِالأنْثَى فَمَنْ عُفِيَ لَهُ مِنْ أَخِيهِ شَيْءٌ فَاتِّبَاعٌ بِالْمَعْرُوفِ وَأَدَاءٌ إِلَيْهِ بِإِحْسَانٍ ذَلِكَ تَخْفِيفٌ مِنْ رَبِّكُمْ وَرَحْمَةٌ فَمَنِ اعْتَدَى بَعْدَ ذَلِكَ فَلَهُ عَذَابٌ أَلِيمٌ  وَلَكُمْ فِي الْقِصَاصِ حَيَاةٌ يَا أُولِي الألْبَابِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

2:178,179. “நம்பிக்கையாளர்களே! கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது உங்கள்மீது கடமையாக்கப்பட்டுள்ளது.  சுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவன், அடிமைக்குப் பதிலாக அடிமை, பெண்ணுக்குப் பதிலாக பெண். யாருக்கேனும் அவருடைய சகோதரரிடமிருந்து சலுகை வழங்கப்பட்டால் அவர் வழக்கமான முறையைப் பின்பற்றி ஈட்டுத்தொகையை சிறந்த முறையில் வழங்கிவிட வேண்டும். இது உங்கள் இறைவனிடமிருந்து கிடைத்துள்ள இலகுவும் கருணையும் ஆகும். இதற்குப் பின்னரும் யார் வரம்புமீறுகிறாரோ அவருக்கு வதைக்கும் வேதனை உண்டு. அறிவுடையோரே! பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. இதன்மூலம் நீங்கள் விலகியிருக்கக்கூடும்.”

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொல்வது பெரும் குற்றமாகும். அது சமூகத்தின் அமைதியை சீர்குலைத்து விடும். சமூகத்தின் அமைதியும் பாதுகாப்பும் எல்லாவற்றையும்விட முதன்மையானது. அதன் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் எந்தவொன்றும் உடனடியாக கவனிக்கப்பட வேண்டும். அது மீண்டும் நிகழாதவாறு தற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

கொலைக் குற்றம் கடும் தண்டனையை வேண்டி நிற்கும் ஒரு குற்றமாகும். கொன்றால் கொல்லப்படுவோம் என்ற அச்சம் மனித உள்ளத்தில் வேரூன்றினால் மட்டுமே கொலைக் குற்றங்களை சமூகத்திலிருந்து நீக்க முடியும். இல்லையெனில் அது சமூகத்தில் சர்வ சாதாரணமாக நிகழும் குற்றமாகி விடும்.

கொலை செய்யப்பட்டவர்களுக்காக பழிவாங்குவது முஸ்லிம் சமூகத்தின் மீது அல்லது வேறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இஸ்லாமிய அரசின் மீது கடமையாகும். இது தனிநபரின் மீது, சம்பந்தப்பட்டவர்கள் மீது விதிக்கப்பட்ட கடமையல்ல. இஸ்லாமிய அரசு பாதிக்கப்பட்டவர்களின் சார்பாக நின்று கொலை செய்யப்பட்டவர்களுக்காகப் பழிவாங்க வேண்டும். கொன்றவர் கொல்லப்பட வேண்டும். இந்த விசயத்தில் எந்த உயர்வு தாழ்வும் இன்றி சமநீதி பேணப்பட வேண்டும். ஒருவருக்குப் பதிலாக சம்பந்தமற்ற இன்னொருவர் கொல்லப்படக்கூடாது. கொலையாளியைத் தவிர்த்து அவர் சமூகத்தைச் சேர்ந்த மற்றவர்கள் அநியாயமாகக் கொல்லப்படக்கூடாது. வசனத்தில் இடம்பெற்றுள்ள பின்வரும் வரி இந்தக் கருத்தையே தெளிவுபடுத்துகிறது: “சுதந்திரமானவனுக்குப் பதிலாக சுதந்திரமானவன், அடிமைக்குப் பதிலாக அடிமை, பெண்ணுக்குப் பதிலாக பெண்” குல அடிப்படையில் வாழ்ந்து கொண்டிருந்த அன்றைய அறபுக்களுக்கு மத்தியில் இருந்த தவறான ஒரு வழக்கம் இந்த வரியின்மூலம் நீக்கப்படுகிறது. அவர்கள் தங்கள் குலத்தைச் சேர்ந்த சுதந்திரமான ஒரு மனிதர் கொல்லப்பட்டால் அதற்குப் பதிலாக கொன்றவரின் சமூகத்தைச் சேர்ந்த இருவரை அல்லது மூவரை அல்லது பலரை கொலை செய்வார்கள். இது அந்தச் சமூகம் பெற்றிருக்கும் உயர் அந்தஸ்தைப் பொறுத்து நீண்டு கொண்டே செல்லும். இந்தக் காலகட்டத்திலும் தங்களின் தலைவரோ தங்கள் சமூகத்தில் முக்கியமான ஒருவரோ கொல்லப்பட்டால் எதிரி சமூகத்தைச் சேர்ந்தவர்களை கணக்கில்லாமல் கொல்லக்கூடியவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஒரு கொலை சமூகங்களுக்கு மத்தியில் பெரும் கலவரத்தை ஏற்படுத்தி பல்வேறு மனிதர்கள் கொல்லப்பட காரணமாக அமைந்து விடுகிறது.  

கொலையாளிக்கு தண்டனை வழங்கும் உரிமை இஸ்லாமிய அரசுக்கு இருக்கிறது. ஆனால் அவனை மன்னிக்கும் உரிமை அரசுக்கு இல்லை. கொல்லப்பட்டவரின் வாரிசுகள் அல்லது பொறுப்பாளர்களுக்குத்தான் அந்த உரிமை இருக்கிறது. கொல்லப்பட்டவரின் வாரிசுகள் கொலையாளியை மன்னிக்க விரும்பினால் மன்னிக்கலாம். அதற்குப் பகரமாக கொலையாளி சமூகத்தில் வழக்கத்தில் இருக்கும் அல்லது அரசு நிர்ணயித்திருக்கும் ஈட்டுத்தொகையை சிறந்த முறையில் வழங்கி விட வேண்டும்.                               

“யாருக்கேனும் அவருடைய சகோதரரிடமிருந்து சலுகை வழங்கப்பட்டால்… இங்கு அவருடைய சகோதரர் என்ற வார்த்தை கொல்லப்பட்டவரின் பொறுப்பாளரைக் குறிக்கும். அவருடைய சகோதரர் என்ற வார்த்தை இங்கு கவனிக்கத்தக்கது. நம்பிக்கையாளர்கள் அனைவரும் சகோதரர்களாவர். சகோதரத்துவ வாஞ்சை இங்கு நினைவூட்டப்படுவது பொருத்தமானது. அது மன்னிப்பது சிறந்தது என்ற கருத்தை மறைமுகமாக உணர்த்துகிறது. கிஸாஸ் என்ற அறபு வார்த்தையில் உயிருக்குப் பதிலாக உயிரும் உள்ளடங்கும் உயிருக்குப் பதிலாக ஈட்டுத்தொகையும் உள்ளடங்கும். உயிருக்குப் பதிலாக உயிரா அல்லது ஈட்டுத்தொகையா என்பதை நிர்ணயிக்கும் உரிமை கொல்லப்பட்டவரின் பொறுப்பாளருக்கு இருக்கிறது.

மன்னிப்பு வழங்கி விட்டு இழப்பீட்டுத் தொகை பெற்றுவிட்டு பிறகு கொலையாளியைக் கொன்று விட்டால் அல்லது அவரைப் பழிவாங்க மறைமுகமான வேறு வழியை நாடினால் அது வரம்பு மீறலாகும். அவர்களுக்கு அல்லாஹ்விடத்தில் வலி தரக்கூடிய வேதனை காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் அவன் விதித்த வரம்பை மீறி விட்டார்கள்.

“அறிவுடையோரே! பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்வு உள்ளது. இதன்மூலம் நீங்கள் விலகியிருக்கக்கூடும்” எவ்வளவு அற்புதமான, ஞானம்நிரம்பிய வாசகம் இது! சமூகத்தின் அமைதி சீர்குலையாமல் இருக்க, அது பாதுகாப்பாகவும் நிம்மதியாகவும் இருக்க கிஸாஸ் என்னும் இந்த நடவடிக்கை மிக அவசியம். உண்மையில் அதில்தான் வாழ்வு உள்ளது. வாழ்வைச் சீர்குலைக்கும் அம்சங்கள் அகற்றப்படுவதன்மூலமே வாழ்வு சமநிலையோடு நீடிக்க முடியும். கொலைக் குற்றம் சமூகத்தின் புற்றுநோய்க்கட்டி. உடனடியாக அகற்றப்படாத புற்றுநோய்க்கட்டி முழு உடலையும் அரித்து விடும் அபாயம் இருக்கிறது.

அறிவுடையோரே என்ற வார்த்தை இங்கு கவனிக்கத்தக்கது. மனித இயல்பைக் குறித்த ஆழ்ந்த அறிவும் விசாலமான பார்வையும் கொண்டவர்கள் இதுதான் மனித இயல்புக்கு, சமூகத்தின் இயல்புக்கு உகந்த தண்டனை என்பதை எளிதாக உணர்ந்து கொள்வார்கள். குறையறிவு கொண்டவர்களும் இயல்பு சிதைந்தவர்களும்தான் இதற்கு எதிராக குரல் கொடுப்பார்கள்.

மரண தண்டனைக்கு எதிரான குரல் உலகெங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் சன்னமாக ஒலித்துக் கொண்டிருந்த இந்தக் குரல் இன்று மிக வலுவாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் குற்றங்களை மனச்சிக்கல்களாக, மன நோயின் விளைவுகளாக முன்வைக்கிறார்கள். ஆகவே அவர்கள் மனநல மருத்துவமனைகளில், சீர்திருத்த முகாம்களில், சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு பண்படுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அவர்களின் இந்தக் கருத்து மனித இயல்பைக் குறித்த அறியாமையையே வெளிப்படுத்துகிறது. எல்லா வகையான குற்றங்களும் இதன்வழியாக நியாயப்படுத்தப்பட்டு குற்றவாளிகள் மிக எளிதாக தப்பிப்பதற்கான வழிகள் ஏற்படுத்தப்பட்டு விடும். குற்றவாளிகள் மீது இரக்கம் காட்டும் இந்த மூடர்கள் பாதிக்கப்பட்டவர்களின் மனக்காயத்தை பார்க்க மறுக்கிறார்கள். பழிவாங்குதல்தான் அவர்களின் மனக்காயத்திற்கு மருந்தாக அமைகிறது. இல்லையெனில் அவர்களே மனமுவந்து மன்னித்தால் மட்டுமே அவர்களின் மனக்காயம் ஆறுகிறது.    

ஒரு உயிரைப் போக்குவதன்மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. குற்றவாளி தண்டனைக்குரியவன்தான். அவன் செய்த குற்றத்திற்கான தண்டனையைத்தான் அனுபவிக்கிறான். இதன்மூலம் கொலை செய்யத் துணிபவர்களின் உள்ளத்தில் அச்சம் ஏற்படுகிறது. ஒருவேளை அவர்கள் மனச்சிக்கலால் பாதிக்கப்பட்டிருந்தாலும் இந்த அச்சம்தான் அவர்களை கொலை செய்ய விடாமல் தடுக்கும்.  

அல்லாஹ்வின் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதன்மூலமே நீங்கள் தக்வா உடையவர்களாக மாற முடியும். அதாவது உங்களின் வாழ்க்கையை அவனுடைய கட்டளைகளுக்கு உட்பட்டதாக ஆக்க முடியும். அதன்மூலமே நீங்கள் உங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவர் மீது அநியாயம் இழைப்பதிலிருந்தும் அல்லாஹ்வின் தண்டனைக்கு ஆளாவதிலிருந்தும் உங்களைக் காத்துக்கொள்ள முடியும்.

அடுத்த வசனம் தக்வா உடையவர்களின் மீது விதிக்கப்படும் இன்னொரு கடமையைத் தெளிவுபடுத்துகிறது. அது அவர்கள் விட்டுச் செல்லும் செல்வத்திற்கான பாதுகாப்பை அளிக்கிறது. அது தங்களின் மரண வேளை நெருங்கி விட்டதை உணரும்போது அவர்கள் செய்யும் வஸிய்யத்தாகும். வஸிய்யத் என்பது தன் மரண வேளை நெருங்கி விட்டதை உணரும் மனிதன் இறுதியாகச் செய்யும் உபதேசம் அல்லது அவனுடைய இறுதி விருப்பம் என்று கூறலாம். அது தவிர முக்கியமான சந்தர்ப்பத்தில் வழங்கப்படும் அறிவுரைக்கும் வஸிய்யத் என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது.  

كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ الْمَوْتُ إِنْ تَرَكَ خَيْرًا الْوَصِيَّةُ لِلْوَالِدَيْنِ وَالْأَقْرَبِينَ بِالْمَعْرُوفِ حَقًّا عَلَى الْمُتَّقِينَ فَمَنْ بَدَّلَهُ بَعْدَمَا سَمِعَهُ فَإِنَّمَا إِثْمُهُ عَلَى الَّذِينَ يُبَدِّلُونَهُ إِنَّ اللهَ سَمِيعٌ عَلِيمٌ فَمَنْ خَافَ مِنْ مُوصٍ جَنَفًا أَوْ إِثْمًا فَأَصْلَحَ بَيْنَهُمْ فَلَا إِثْمَ عَلَيْهِ إِنَّ اللهَ غَفُورٌ رَحِيمٌ

2:180-182. “உங்களில் யாருக்கேனும் மரணம் நெருங்கிவிட்டால், அவர் தமக்குப் பின்னால் செல்வத்தை விட்டுச் செல்பவராக இருப்பின் முறைப்படி தம் பெற்றோருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் வஸிய்யத் செய்துவிட வேண்டும். இது இறையச்சமுடையோர் மீது கடமையாகும். அந்த வஸிய்யத்தைக் கேட்டபிறகு யார் அதனை மாற்றிவிடுகிறாரோ அதன் பாவமெல்லாம் அதனை மாற்றியவர் மீதுதான். நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். வஸிய்யத் செய்பவரைக் குறித்து ‘அவர் பாரபட்சம் பார்ப்பவர்’ அல்லது ‘அநீதி இழைப்பவர்’ என்று யாரேனும் அஞ்சி அவர்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தினால் அவர்மீது குற்றமாகாது. அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.”

 இந்த வசனத்தில் செல்வம் என்பதற்கு ‘அல்கைர்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் அசலான பொருள் நன்மை என்பதாகும். செல்வம் தன்னளவில் நன்மையானது, விரும்பத்தக்கது என்ற கண்ணோட்டம் இந்த பயன்பாட்டிலிருந்து வெளிப்படுகிறது. அது அல்லாஹ் அளிக்கும் அருட்கொடை. தான் நாடியோருக்கு அவன் கணக்கில்லாமல் வழங்குகிறான். அதனை சரியான முறையில் பயன்படுத்துபவர்கள், அதனைக் கொண்டு அல்லாஹ்வின் திருப்தியைத் தேடுபவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி அடைகிறார்கள். அதனைத் தவறான முறையில் பயன்படுத்துபவர்கள், அதனை அல்லாஹ்வின் அருட்கொடையாக அல்லாமல் தங்கள் திறமையின், சம்பாத்தியத்தின் விளைவாக எண்ணுபவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுடைய தண்டனைக்கு உள்ளாகி தோல்வியடைகிறார்கள்.

ஒருவர் தம்முடைய மரண வேளை நெருங்குவதை உணர்ந்தால், அவர் செல்வந்தராக இருப்பின் தமக்குப் பிறகு அந்தச் செல்வம் யாருக்கெல்லாம் சேர வேண்டும் என்பதை வஸிய்யத் செய்துவிட வேண்டும். இந்த வசனத்தில் அவருடைய தாய்தந்தை, நெருங்கிய உறவினர் என்ற இரு வார்த்தைகள் குறிப்பிடப்பட்டுள்ள. நெருங்கிய உறவினர் என்ற வார்த்தை அவரது பிள்ளைகள், சகோதர சகோதரிகள் என அவருக்கு நெருக்கமாக வரக்கூடிய அனைவரையும் குறிக்கக்கூடியது. இது ஆரம்ப கட்டத்தில் அருளப்பட்ட பொதுவான கட்டளை. அதற்குப் பிறகு அருளப்பட்ட வாரிசுரிமை தொடர்பான அந்நிசா அத்தியாயத்தின் வசனங்கள் ஒவ்வொருவருக்கும் உரிய பங்கை நிர்ணயித்து விடுகின்றன. ஆனாலும் வஸிய்யத்தின் தேவை அப்படியேதான் இருக்கிறது. அவன் செய்யக்கூடிய வஸிய்யத் அல்லாஹ் வழங்கிய பங்கீட்டிற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். பொதுவாக சொத்துப் பங்கீடு வாரிசுதாரர்களுக்கு மத்தியில் கசப்பை, பகைமையை ஏற்படுத்தி விடுகிறது. நெருங்கியவர்கள் சொத்துக்காக ஒருவரை ஒருவர் பகைத்துக் கொள்கிறார்கள். முன்கூட்டியே செய்யப்படும் வஸிய்யத் வாரிசுதாரர்களுக்கு மத்தியிலான இந்தப் பிரச்சனையை நீக்கி விடுகிறது. உரியவரால் முடிவு செய்யப்பட்ட விசயத்தில் மக்கள் குறைவாகவே முரண்படுகிறார்கள். அவரது முடிவு இறுதியான ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகிறது.

இந்த வஸிய்யத் அப்படியே செயல்படுத்தப்பட வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யப்படக்கூடாது. யாரேனும் செய்யப்பட்ட வஸிய்யத்தை அறிந்த பிறகும் அதனை மாற்றி விட்டால் அதன் பாவமெல்லாம் மாற்றியவரையே சேரும். அல்லாஹ்விடத்தில் அவர்தான் குற்றவாளியாக இருப்பார். வஸிய்யத் செய்தவர் அதற்குப் பொறுப்பாக மாட்டார். அல்லாஹ் மனிதர்களின் பேச்சுகள் அனைத்தையும் செவியேற்பவனாகவும் அவர்களின் செயல்பாடுகளைக் குறித்து நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். மனிதர்கள் சக மனிர்களை ஏமாற்றி விடுவதைப் போல அவனை ஏமாற்றிவிட முடியாது. தவறு செய்தவர்கள் அதற்கான தண்டனையைப் பெற்றே தீருவார்கள்.

ஆனால் வஸிய்யத் செய்பவர் ஒரு பக்கம் சாய்ந்து விடுவார் அல்லது உரியவர்களுக்குக் கொடுக்காமல் அநியாயம் இழைத்து விடுவார் என்ற அச்சம் இருந்து அறிந்து யாரேனும் வஸிய்யத் செய்பரிடம் உண்மையை எடுத்துரைத்து, அல்லாஹ்வின் சட்டத்தை நினைவூட்டி அவருக்கும் வாரிசுதாரர்களுக்கும் மத்தியில் இணக்கத்தை ஏற்படுத்தினால் அது வஸிய்யத்தை மாற்றிய குற்றமாகாது. அது இஸ்லாம் விரும்பும் நற்செயல்களில் ஒன்றாகி விடும். அல்லாஹ் தங்களின் தவறுகளை ஒத்துக்கொண்ட அடியார்களின் பாவங்களை மன்னிக்கக்கூடியவனாக, அவர்களின் மீது தொடர்ந்து கருணை காட்டுபவனாக இருக்கின்றான்.      

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply