மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்து விலகியிருப்பது தலாக்கின் ஒரு வடிவமாகவே கருதப்படுகிறது. இந்தச் சூழலில் அடுத்தடுத்த வசனங்கள் தலாக் தொடர்பான சட்டங்களைப் பேசுகின்றன.
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللهُ عَزِيزٌ حَكِيمٌ
2:228. “தலாக் சொல்லப்பட்டுள்ள பெண்கள் மூன்று மாதவிடாய்வரை காத்திருக்க வேண்டும். அவர்கள் அல்லாஹ்வின்மீதும் மறுமைநாளின்மீதும் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் தங்களின் கருப்பையில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைக்கக் கூடாது. அவர்களின் கணவர்கள் இணக்கத்தை விரும்பினால் அந்த தவணைக்குள் அவர்களை மீண்டும் அழைத்துக் கொள்ள அவர்களுக்கு உரிமை உண்டு. அந்தப் பெண்களுக்குப் பொதுவான வழக்கப்படி கடமைகள் இருப்பதுபோலவே உரிமைகளும் உள்ளன. அவர்களைவிட ஆண்களுக்கு ஒருபடி அதிகமாகவே உள்ளன. அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றான்.”
தலாக் என்ற வார்த்தைக்கு விடுவித்தல் என்று பொருள். அதாவது கணவன் தன் கட்டுப்பாட்டிலிருந்து மனைவியை விடுவித்தல் என்பதாகும். குடும்பம் என்னும் அமைப்பில் கணவனே தலைமைத்துவ பொறுப்பைப் பெறுகிறான். மனைவி அவனுக்குக் கட்டுப்பட்டவள் ஆவாள்.
கணவனால் தலாக் சொல்லப்பட்ட பெண் உடனடியாக அவனுடைய பொறுப்பிலிருந்து வெளியேறி வேறு திருமணம் செய்து கொள்ள முடியாது. அவள் மூன்று மாதவிடாய்வரை காத்திருக்க வேண்டும். கணவன் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் அந்த மூன்று மாதவிடாய் காத்திருப்பு முடிவடைவதற்கு அவளை திரும்ப அழைத்துக் கொள்ளலாம். அவளை திரும்ப அழைத்துக் கொள்வதற்கான உரிமை அவளுக்கு உண்டு. அவளோ அவளது குடும்பத்தினரோ அதை மறுக்கக் கூடாது. அவள் கருவுற்றிருக்கிறாள் எனில் அதை அவள் மறைக்கக் கூடாது. அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட பெண்கள் தாங்கள் கருவுற்றிருப்பதை மறைக்க மாட்டார்கள்.
மண வாழ்க்கையில் பிரச்சனைகளும் சிக்கல்களும் வந்து கொண்டே இருக்கும். அவை உடனடியாக அவர்களுக்கு மத்தியில் பிரிவை ஏற்படுத்தி விடக்கூடாது. கோபம் தணிந்து விடும், தற்காலிகமான வெறுப்பு அகன்று விடும். சட்டென ஏற்பட்ட மனப்புழுக்கம் நீங்கி விடும். ஆனால் இவற்றினால் ஏற்படும் விளைவு ஒரு குடும்பத்தையே நாசம் செய்து விடும். இஸ்லாம் அதற்கான தடைகளை, முன்னேற்பாடுகளை ஏற்படுத்துகிறது. அவை கோபத்தை, தற்காலிகமான வெறுப்பை, மனப்புழுக்கத்தை தடுத்து விடுகின்றன. தலாக் தொடர்பாக இஸ்லாம் முன்வைக்கும் இந்த ஒழுங்குகள் மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட மகத்தான அருட்கொடைகள் ஆகும்.
தலாக் சொல்லும் உரிமை ஆணுக்கு மட்டுமே இருக்கிறது. உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதில் பெண்ணைவிட ஆணே வலிமையானவன் அந்த உரிமை அவனுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கலாம். பெண் மண வாழ்க்கையில் இருந்து விடுபட விரும்பினால் அவள் நீதிமன்றத்தையே நாட வேண்டும். அந்த நீதிமன்றமே அவளுக்கு கணவனிடமிருந்து தலாக்கைப் பெற்றுக் கொடுக்கும். இதுதான் இஸ்லாமிய வழக்கில் குலா (விவாகரத்து) என்று அறியப்படுகிறது.
தலாக் சொல்லப்பட்ட பெண் மூன்று மாதவிடாய்வரை காத்திருக்க வேண்டும். உண்மையில் அது அவளுக்குப் பயனளிக்கும் காத்திருத்தல் ஆகும். அவள் தன்னை தயார்படுத்திக் கொள்வதற்கும் மனதளவில் பலமடைவதற்கும் முந்தைய கசப்பான அனுபவங்களிலிருந்து விடுபடுவதற்கும் மிகப் பெரிய அளவில் அது அவளுக்கு உதவி செய்யும். நாம் எந்தவொன்றின் பாதிப்பிலிருந்தும் முழுமையாக விடுபட மூன்று மாத கால அவகாசம் பெரிதும் பயனளிக்கும்.
ஒரு பெண்ணுக்கு அவள் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் இருப்பதுபோன்று அவளுக்குச் சேர வேண்டிய உரிமைகளும் இருக்கின்றன. அவளிடமிருந்து கடமைகளைப் பெற்றுக் கொண்டு அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்ய மறுப்பது அநியாயம் ஆகும். குடும்ப அமைப்பில் கணவனும் மனைவியும் சமமான அளவில் கடமைகளையும் உரிமைகளையும் கொண்டிருக்கிறார்கள். கணவனோ மனைவியோ தங்களின் கடமைகளை நிறைவேற்றிய பிறகே உரிமைகளைக் கோர வேண்டும்.
குடும்ப அமைப்பில் ஆணுக்குத்தான் தலைமைத்துவ பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வகையில் பெண்ணைவிட அவன் ஒருபடி மேலானவன். ஆணும் பெண்ணும் சமம் என்ற கண்ணோட்டத்தை இஸ்லாம் முன்வைக்கவில்லை. அது மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து உருவாகி உலகம் முழுவதும் பரவிய கண்ணோட்டம். இஸ்லாமிய குடும்ப அமைப்பு இந்தக் கண்ணோட்டத்திற்கு எதிரானது. இந்த கண்ணோட்டம் மனித இயல்பை கவனத்தில் கொள்ளாத, நடைமுறைச் சிக்கல்கள் கொண்ட, ஆணையும் பெண்ணையும் ஒருவர் மற்றவரின் எதிரிகளாக சித்தரிக்கக்கூடிய கண்ணோட்டமாகும்.
இந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ்வின் இரண்டு பண்புகள் இடம்பெறுகின்றன. ஒன்று, அஸீஸ் (அவன் பேராற்றல் மிக்கவன்) அவன் எதை விரும்புகிறானோ அதையே அவன் கட்டளையாக இடுகிறான். இரண்டு, ஹகீம் (ஞானம்மிக்கவன்). அவனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொன்றும் நோக்கம் கொண்டவை. காரணம் அற்ற, நோக்கம் அற்ற, நன்மை அற்ற எதுவும் அவனிடமிருந்து வெளிப்படாது. அவன் உங்களுக்கு வழங்கிய சட்டங்களை அப்படியே பின்பற்றுங்கள். அவற்றில்தான் உங்களுக்கான் நன்மை அடங்கியுள்ளது.
الطَّلَاقُ مَرَّتَانِ فَإِمْسَاكٌ بِمَعْرُوفٍ أَوْ تَسْرِيحٌ بِإِحْسَانٍ وَلَا يَحِلُّ لَكُمْ أَنْ تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَنْ يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللهِ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ تِلْكَ حُدُودُ اللهِ فَلَا تَعْتَدُوهَا وَمَنْ يَتَعَدَّ حُدُودَ اللهِ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ
2:229. “தலாக் இருமுறைதான் கூற முடியும். பிறகு முறைப்படி அவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் அல்லது நல்ல முறையில் அவர்களை விட்டுவிட வேண்டும். நீங்கள் உங்கள் மனைவியிருக்கு வழங்கியவற்றிலிருந்து எதையும் எடுத்துக்கொள்வது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல. ஆனால் அல்லாஹ்வின் வரம்புகளை பேண முடியாது என்று அவர்கள் இருவரும் அஞ்சினாலே தவிர. அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேண மாட்டார்கள் என நீங்கள் அஞ்சினால் அவள் அதற்கு ஈடாக எதையாவது கொடுத்து விடுபடுவது அவர்கள் இருவர் மீதும் குற்றமாகாது. இவை அல்லாஹ்வின் வரம்புகளாகும். இவற்றை மீறி விடாதீர்கள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.”
தலாக் கூறியவுடன் உடனுக்குடன் நிகழ்ந்து விடாது. தலாக் சொல்லப்பட்ட பெண் மூன்று மாதவிடாய் காலம்வரை காத்திருக்க வேண்டும். அந்த மூன்று மாதவிடாய் கால இடைவெளியில் கணவன் விரும்பினால் அவளை திரும்ப அழைத்துக் கொள்ளலாம். தவணை முடிந்து விட்டால் இருவருக்கும் மத்தியில் விவாகரத்து நிகழ்ந்து விடும். மீண்டும் இருவரும் இணைய விரும்பினால் அவர்கள் புதிதாக திருமணம் செய்து இணைந்து கொள்ளலாம். இவ்வாறு இருமுறைதான் செய்ய முடியும். கணவன் தலாக் கூறி விட்டால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை அவனுக்கு இருமுறைதான் இருக்கிறது. மூன்றாவதாக அவன் தலாக் கூறி விட்டால் மூன்று மாதவிடாய் காலம் முடிந்த பிறகு இருவருக்கும் மத்தியில் விவாகரத்து நிகழ்ந்து விடும். மீண்டும் அவர்கள் இணைந்துகொள்ள விரும்பினால் புதிய மண ஒப்பந்தத்தின்மூலம் இணைய முடியாது. இதுதான் திருக்குர்ஆன் கூறும் முத்தலாக். மூன்றாவது முறை தலாக் கூறப்பட்டு விட்டால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையையும் மீண்டும் புதிய மண ஒப்பந்தத்தின் மூலம் இணைந்து கொள்ளும் உரிமையையும் கணவன் இழந்து விடுவான்.
தலாக், தலாக், தலாக் என்று ஒரே சமயத்தில் முத்தலாக் கூறும் வழக்கம் முஸ்லிம்களிடத்தில் பிற்காலத்தில் தோன்றிய ஒன்றாகும். இது குர்ஆன் முன்வைக்கும் அழகிய வழிமுறைக்கு எதிரான ஒன்றாகும். ஒருவன் தலாக், தலாக் என்று ஒரே சமயத்தில் எத்தனை முறை கூறினாலும் அது ஒரே தலாக்காகவே கருதப்படும்.
திருமண உறவு என்பது ஆழமான, நெருக்கமான உறவு. அந்த உறவை முறித்து விட்டுச் செல்லும்போது அழகிய முறையில் பிரிந்து செல்லுங்கள். தாராளத்தன்மையோடு நடந்து கொள்ளுங்கள். அற்பத்தனமாக நடந்து கொள்ளாதீர்கள். நீங்கள் உங்கள் மனைவிக்கு அளித்த மணக்கொடை, அன்பளிப்புகள், இன்னபிற செல்வங்கள் எதையும் திரும்பப் பெறக்கூடாது. கொடுத்த அன்பளிப்பை திரும்பப் பெறுவது இழிபண்பு. ஆனால் இருவருக்கும் மத்தியில் காணப்படும் கடும் வெறுப்பினால் இருவரும் அல்லாஹ்வின் சட்டங்களை, அவன் விதித்த வரம்புகளை பேண முடியாது என்று அஞ்சினால், தன்னால் தன் கணவனின் பேச்சை கேட்க முடியாது, அவனுடைய ஆளுமையை சகித்துக்கொள்ள முடியாது என்பதை மனைவி உணர்ந்தால் அவள் தான் மணக்கொடையாகப் பெற்றவற்றை திருப்பிக் கொடுத்து விட்டு அவனிடமிருந்து தலாக் பெற்றுக் கொள்ளலாம். இதுதான் இஸ்லாமிய சொல்வழக்கில் ‘குலா’ (திருமணத்தை இரத்து செய்தல்) என்று அறியப்படுகிறது.
ஒரு ஆண் தலாக் சொல்கிறான் எனில் அவன் மனைவிக்கு கொடுத்த மணக்கொடை, அன்பளிப்புகள் எதையும் திரும்பப் பெறக்கூடாது. ஆனால் ஒரு பெண் மண வாழ்க்கையிலிருந்து விடுபட விரும்புகிறாள் எனில் அவள் மணக்கொடையாக, அன்பளிப்பாக பெற்றவற்றை திருப்பி அளித்துவிட வேண்டும்.
இந்த வசனத்தை இன்னும் தெளிவாகப் புரிந்துகொள்ள நபியவர்களின் காலகட்டத்தில் நிகழ்ந்த இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடுகிறேன். சம்பவம் ஒன்று: “ஹபீபா பின்த் ஸஹ்ல் என்னும் பெண்மணி ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாசின் மனைவியாக இருந்தார். ஒருநாள் நபியவர்கள் அதிகாலையில் வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது வீட்டின் வாயிலில் ஹபீபா பின்த் ஸஹ்லைக் கண்டார்கள். “நீங்கள் யார்” என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், “நான் ஹபீபா பின்த் ஸஹ்ல் ஆவேன்” என்று பதிலளித்தார். நபியவர்கள், “உங்களின் விவகாரம் என்ன?” என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண்மணி, “என்னால் ஸாபித் இப்னு கைசுடன் வாழமுடியாது’‘ என்று பதிலளித்தார். அவளுடைய கணவர் ஸாபித் இப்னு கைஸ் வந்தவுடன் நபியவர்கள் அவரிடம் “ஹபீபா பின்த் ஸஹ்ல் என்ற இந்தப் பெண்மணி இவ்வாறெல்லாம் கூறினார்” என்று கூறினார்கள். அப்போது ஹபீபா பின்த் ஸஹ்ல், “அல்லாஹ்வின் தூதரே! அவர் எனக்கு அளித்ததெல்லாம் என்னிடம்தான் இருக்கிறது” என்றார். அல்லாஹ்வின் தூதர் அவர்கள் ஸாபித் இப்னு கைஸிடம் அவளிடமிருந்து பெற வேண்டியதைப் பெற்றுக் கொள்ளுங்கள்” என்றார்கள். அவர் தான் கொடுத்ததை வாங்கிக் கொண்டார். அந்தப் பெண்மணி அவருடைய வீட்டாரிடம் சென்று சேர்ந்துவிட்டார்.” (இமாம் மாலிக் தொகுத்த முஅத்தா)
சம்பவம் இரண்டு: இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்: “ஸாபித் இப்னு கைஸ் இப்னு ஷம்மாசின் மனைவி நபியவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய குணத்தையோ மார்க்கத்தையோ குறைகூற மாட்டேன். ஆயினும் நான் இஸ்லாத்தில் இருந்துகொண்டு நிராகரிப்பதை வெறுக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபியவர்கள், “நீங்கள் அவருடைய தோட்டத்தை திருப்பி அளிக்கிறீர்களா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர், “ஆம்” என்று கூறினார். நபியவர்கள் ஸாபித் இப்னு கைஸிடம், “தோட்டத்தை ஏற்றுக்கொண்டு அவளை ஒரு முறை தலாக் சொல்லி விடுவீராக” என்று கூறினார்கள். (புகாரீ)
இவை உங்களின் மண வாழ்க்கைக்கு அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அந்த வரம்புகளை மீறிவிடாதீர்கள். அவன் விதித்த வரம்புகளை மீறுவது மிகப் பெரிய அநியாயம். அநியாயம் அழிவைக் கொண்டு வந்து சேர்க்கும். அவன் விதித்த வரம்புகளை மீறுபவர்கள் பெரும் அநியாயக்காரர்களாவர். அவர்கள் செய்த அநியாயத்தினால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளுக்கு அவர்கள்தாம் பொறுப்பு. அல்லாஹ் யார் மீது சிறிதும் அநீதி இழைப்பதில்லை.
فَإِنْ طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِنْ بَعْدُ حَتَّى تَنْكِحَ زَوْجًا غَيْرَهُ فَإِنْ طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَنْ يَتَرَاجَعَا إِنْ ظَنَّا أَنْ يُقِيمَا حُدُودَ اللهِ وَتِلْكَ حُدُودُ اللهِ يُبَيِّنُهَا لِقَوْمٍ يَعْلَمُونَ
2:230. “அவன் அவளை (மூன்றாவது முறையாக) தலாக் சொல்லி விட்டால் அதன் பிறகு அவள் வேறொரு ஆணை திருமணம் செய்து அவன் தலாக் அளிக்கும்வரை முதல் கணவனுக்கு அனுமதிக்கப்பட்டவள் அல்ல. இரண்டாவது கணவன் தலாக் சொல்லி விட்டால் முதல் கணவனும் அவளும் அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணமுடியும் என்று எண்ணினால் மீண்டும் இணைந்து கொள்வதில் எவ்விதக் குற்றமுமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்திய வரம்புகளாகும். அறிந்துகொள்ளும் மக்களுக்கு இவற்றை அவன் தெளிவுபடுத்துகிறான்.”
இந்த வசனம் மூன்றாவது முறையாக தலாக் சொல்லப்பட்ட பெண்ணைக் குறித்துப் பேசுகிறது. முதல், இரண்டு முறை ஆணுக்கு அவளை திரும்ப அழைத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. மூன்றாவது முறையும் அவன் அவளுக்கு தலாக் கூறிவிட்டால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையும் அவனுக்கு இல்லை, புதிய மண ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் இணைந்து கொள்ளும் வாய்ப்பும் அவனுக்கு இல்லை. அந்தப் பெண் வேறொரு ஆணை மணமுடித்து அந்த ஆணும் அவளை தலாக் சொல்லி விட்டால் அப்போது அந்தப் பெண்ணும் முந்தைய கணவனும் இணைந்து கொள்ள விரும்பினால் புதிய மண ஒப்பந்தத்தின் மூலம் மீண்டும் இணைந்து கொள்ளலாம், அவர்கள் இருவரும் அல்லாஹ் விதித்த வரம்புகளைப் பேண முடியும் என்று எண்ணும்பட்சத்தில்.
தலாக் என்பது விளையாட்டாக, அலட்சியமாக, கோபத்தில் சொல்லப்படும் வார்த்தை அல்ல. ஒரு முறை அவனிடமிருந்து அந்த தவறு வெளிப்படலாம். இரண்டாவது முறைகூட அந்த தவறு அவனிடமிருந்து வெளிப்படலாம். ஆனால் மூன்றாவது முறை வெளிப்படும்போது அது வெறொரு நிலையை அடைந்து விடுகிறது. அங்கு ஒட்ட முடியாத இடைவெளி உருவாகி விடுகிறது. அதற்குரிய பலனை அவன் அனுபவித்தே தீர வேண்டும். ஆகவே தலாக் என்ற வார்த்தையை கூறுவதற்கு முன்னால் அவன் பலமுறை யோசிக்க வேண்டும். ஒரு வேளை அவன் கூறுகிறான் எனில் நிதானமான நிலையில்தான் அது அவனிடமிருந்து வெளிப்பட வேண்டும்.
அல்லாஹ்வின் சட்டங்களை அறிந்துகொள்ள விரும்புவோருக்கு அவன் அவற்றைத் தெளிவுபடுத்துகிறான். அவர்கள் அவசரகதியில், கோபத்தில் எந்தவொரு செயலையும் செய்துவிடக்கூடாது. அவர்களிடமிருந்து வெளிப்படும் செயல்கள் நிதானமான நிலையில் வெளிப்பட வேண்டும்.
