நோன்பு தொடர்பான சில சந்தேகங்கள்

You are currently viewing நோன்பு தொடர்பான சில சந்தேகங்கள்

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ   

2:186. “என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், “நான் மிக அருகில் இருக்கின்றேன்; அழைப்பவரின் அழைப்புக்கு பதிலளிக்கின்றேன், அவர் என்னை அழைக்கும்போது. ஆகவே அவர்கள் என் கட்டளையை ஏற்றுக்கொள்ளட்டும், என்மீதே நம்பிக்கை வைக்கட்டும். அதனால் அவர்கள் நேர்வழியடைந்திடலாம்.”

நோன்பைக் குறித்து பேசப்படும் இந்தச் சூழலில் பிரார்த்தனையைக் குறித்து, அவனிடம் முன்வைக்கப்படும் கேள்விகள், கோரிக்கைகள் குறித்து இடம்பெறுவது கவனிக்கத்தக்கது. இந்த வசனம் அடுத்து இடம்பெறும் நோன்பு தொடர்பான சந்தேகங்கள், கேள்விகளுக்கு ஒரு முன்னுரை போலவும் அமைந்திருக்கின்றது. உங்களின் சந்தேகங்களை, கேள்விகளை அல்லாஹ்விடம் கேளுங்கள். உங்களின் கோரிக்கைகளை அவனிடம் முன்வையுங்கள். அவன் உங்களுக்கு மிக அருகில் இருக்கின்றான். அழைப்பவரின் அழைப்புக்கு உடனே பதிலளிக்கின்றான். அவன் யாரையும் வெறும் கையோடு அனுப்புவதில்லை. வஹி அருளப்பட்டுக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கப்படும். அவன் அளிக்கும் கட்டளைகளை அப்படியே செயல்படுத்துங்கள். அவன் மீதே முழுமையாக நம்பிக்கை வையுங்கள். இதன்மூலம் நீங்கள் அவனுடைய திருப்தியைப் பெற்றுத் தரும் நேரான வழியை அடைந்திடலாம்.

“என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்…” அல்லாஹ்வைப் பற்றி என்பது அவனுடைய பண்புகளைக் குறித்து மட்டுமல்ல, அவனுடைய மார்க்கத்தைக் குறித்து, அவனுக்குப் பிடித்த, அவனுக்குப் பிடிக்காத விசயங்கள் குறித்து, அவனிடம் கோரிக்கைகள் முன்வைப்பது குறித்து… இப்படி இந்த வாசகம் அவன் தொடர்பான அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்கலாம்.

பிரார்த்தனை என்பது வணக்கமாகும். அது அல்லாஹ்விடம் மட்டுமே முன்வைக்கப்பட வேண்டிய வழிபாடாகும். அவனை அழைப்பதற்கு இடைத்தரகர்கள் அவசியமில்லை. அவன் நமக்கு மிக அருகில் இருக்கின்றான். நம்முடைய பிடரி நரம்பைவிட நமக்கு மிக அருகில் இருக்கின்றான். நம்முடைய உள்ளத்தில் உருவாகும் எண்ணங்களைக்கூட அவன் அறிவான். அவனுக்குத் தெரியாமல் நம்மிடம் எதுவும் இல்லை. நம்மைக் குறித்து நமக்குத் தெரியாததையும் அவன் அறிவான். அவனுடைய இந்த அருகாமை உணரப்பட வேண்டிய ஒன்று. இந்த உணர்வுதான் நம்பிக்கையாளனுக்கு பெரும் பலத்தை அளிக்கிறது. யாருடைய துணையும் இன்றி அவன் நேரடியாக அல்லாஹ்வை அணுகுகிறான். அவனிடம் தன் விருப்பங்களை, கோரிக்கைகளை முன்வைக்கிறான்.

أُحِلَّ لَكُمْ لَيْلَةَ الصِّيَامِ الرَّفَثُ إِلَى نِسَائِكُمْ هُنَّ لِبَاسٌ لَكُمْ وَأَنْتُمْ لِبَاسٌ لَهُنَّ عَلِمَ اللهُ أَنَّكُمْ كُنْتُمْ تَخْتَانُونَ أَنْفُسَكُمْ فَتَابَ عَلَيْكُمْ وَعَفَا عَنْكُمْ فَالْآنَ بَاشِرُوهُنَّ وَابْتَغُوا مَا كَتَبَ اللهُ لَكُمْ وَكُلُوا وَاشْرَبُوا حَتَّى يَتَبَيَّنَ لَكُمُ الْخَيْطُ الْأَبْيَضُ مِنَ الْخَيْطِ الْأَسْوَدِ مِنَ الْفَجْرِ ثُمَّ أَتِمُّوا الصِّيَامَ إِلَى اللَّيْلِ وَلَا تُبَاشِرُوهُنَّ وَأَنْتُمْ عَاكِفُونَ فِي الْمَسَاجِدِ تِلْكَ حُدُودُ اللهِ فَلَا تَقْرَبُوهَا كَذَلِكَ يُبَيِّنُ اللهُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَّقُونَ

2:187. “நோன்புக்கால இரவில் உங்கள் மனைவியருடன் உறவுகொள்வது உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். உங்களுக்கு நீங்களே துரோகம் செய்து கொண்டிருந்ததை அல்லாஹ் அறிந்துகொண்டான். ஆகவே அவன் உங்கள்மீது கருணை காட்டி உங்களை மன்னித்துவிட்டான். இனி இரவில் நீங்கள் அவர்களுடன் உறவுகொள்ளுங்கள். அல்லாஹ் உங்களுக்காக விதித்திருப்பதைத் தேடிக்கொள்ளுங்கள். இரவின் இருளிலிருந்து அதிகாலையின் வெளிச்சம் பிரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள். பிறகு இரவுவரை நோன்பை நிறைவு செய்யுங்கள். நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் நிலையில் மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள். இவை அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். இவற்றின் அருகில் செல்லாதீர்கள். மனிதர்கள் தக்வா உடையவர்களாக ஆகும்பொருட்டு இவ்வாறு அல்லாஹ் தன் வசனங்களை தெளிவுபடுத்துகிறான்.”  

நோன்பு தொடர்பாக ஆரம்பகட்ட முஸ்லிம்களுக்கு இருந்த சில சந்தேகங்களுக்கு இந்த வசனம் பதிலளிக்கிறது. நோன்பு கால இரவில் மனைவியுடன் உறவு கொள்வது கூடுமா, கூடாதா என்பது தொடர்பாக அவர்களுக்கு சந்தேகம் இருந்து வந்தது. முந்தையவர்கள் மீது கடமையாகப்பட்டதைப் போன்றே உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது என்ற வாசகத்தின்மூலம் யூதர்கள் எப்படி நோன்பு நோற்கிறார்களோ அப்படி நோன்பு நோற்க வேண்டும் என்று அவர்கள் புரிந்து வைத்திருக்கலாம். யூதர்கள் நோன்பு கால இரவில் மனைவியருடன் உறவுகொள்ள மாட்டார்கள். அவர்கள் நோன்பு துறக்கும்போது மட்டுமே சாப்பிடுவார்கள். தூங்கி விட்டால் அதற்குப் பிறகு சாப்பிட மாட்டார்கள். இந்த வசனம் இந்த விசயங்களையும் நோன்பு தொடர்பான இன்னும் சில விசயங்களையும் தெளிவுபடுத்துகிறது.   

“அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள்”

கணவனுக்கும் மனைவிக்குமான தொடர்பை சித்தரிக்கும் கச்சிதமான வாசகம் இது. உங்களுக்கு அவர்களும் அவர்களுக்கு நீங்களும் ஆடையைப் போன்று நெருக்கமாக இருக்கின்றீர்கள். அவர்களுக்கு மத்தியில் காணப்படும் இந்த நெருக்கம்தான் அவர்களைப் பாவங்களிலிருந்து பாதுகாக்கிறது. ஆகவே இந்த நெருக்கம் நோன்புக் கால இரவிலும் நீடிப்பதுதான் சிறந்தது.

ஆண், பெண் மத்தியிலான இந்த தொடர்புக்கு உவமானமாக ஆடை கூறப்பட்டுள்ளது. ஆடை மானத்தைப் பாதுகாக்கிறது. அது வெப்பத்திலிருந்தும் குளிரிலிருந்தும் உடலைப் பாதுகாக்கிறது. அது உடலின் குறைகளை மறைக்கிறது. அது உடலுக்கு அலங்காரமாகவும் இருக்கின்றது. இப்படித்தான் திருமண உறவும் அமைய வேண்டும். ஒருவர் மற்றவரின் இச்சைகளைப் பூர்த்தி செய்து ஷைத்தானின் பிடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஷைத்தான் மனிதர்களிடம் ஊடுருவும் வழிகளில் காமமும் ஒன்று.      

“உங்களுக்கு நீங்களே துரோகம் இழைத்துக் கொண்டிருந்தீர்கள்… இது தடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று அவர்கள் எண்ணியதனால் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி. நோன்பு கால இரவில் உறவுகொள்ள நேர்ந்ததனால் அவர்களுக்கு ஏற்பட்ட குற்ற உணர்ச்சியையே இந்த வாசகம் உங்களுக்கு நீங்களே துரோகம் இழைத்துக் கொண்டிருந்தீர்கள் என்று குறிப்பிடுகிறது. இதற்கான தீர்வை வழங்கி அல்லாஹ் உங்கள் மீது கருணை காட்டி விட்டான். உங்களிடமிருந்து வெளிப்பட்ட தவறுகளை அவன் மன்னித்து விட்டான். இனி நோன்புக் கால இரவுகளில் நீங்கள் உறவு கொள்ளலாம். அந்த உறவின்மூலம் அவன் உங்களுக்கு விதித்த குழந்தைச் செல்வங்களை தேடிக் கொள்ளலாம்.

காமத்தின்மூலம் பெறப்படும் உடலின்பம் வெறுமனே இன்பம் அனுபவிப்பதற்கானது அல்ல. மனிதர்கள் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு தங்கள் குடும்பத்தைப் பெருக்க வேண்டும், அதன்மூலம் மனித சமூகம் பெருக வேண்டும் என்பதற்காகத்தான். குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு குடும்பத்தைப் பெருக்குவது கடினமானது. மனிதர்கள் பொறுப்பெடுக்கத் தயங்குபவர்கள். ஆனால் அல்லாஹ் காமம் என்னும் உடலின்பத்தை அளித்து அந்தச் செயல்பாட்டை இன்பமாக ஆக்கி விடுகிறான். பிறகு அந்தக் குழந்தையின் மீது இரக்கத்தை, கருணையை, பாசத்தை சுரக்கச் செய்கிறான். அவன் அமைத்த அற்புதமான இந்த ஏற்பாட்டைக் கொண்டே மனித சமூகம் பல்கிப் பெருகுகிறது.

காமத்தை வெறுமனே உடலின்பமாக மட்டும் கருதுபவர்கள், அதற்குப் பிறகு சுமக்க வேண்டிய பொறுப்புகளை சுமக்க மறுப்பவர்கள் விரைவில் வாழ்வின் பிடியிலிருந்து விடுபட்டு சலிப்படைந்து விடுவார்கள். கொல்லும் வெறுமை அவர்களை சூழ்ந்து கொள்ளும். இங்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் இருக்கிறது. இங்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. பொறுப்புகளை சுமக்காமல் இன்பம் அனுபவிக்க விரும்புவர்கள் தேவையில்லாத சுமைகளை சுமக்கும் நிர்ப்பந்த நிலைக்கு ஆளாகி விடுவார்கள்.

“இரவின் இருளிலிருந்து அதிகாலையின் வெளிச்சம் பிரியும்வரை உண்ணுங்கள், பருகுங்கள். பிறகு இரவுவரை நோன்பை நிறைவு செய்யுங்கள்”

இதுதான் நம்முடைய நோன்பையும் வேதக்காரர்களின் நோன்பையும் வேறுபடுத்தக்கூடியது. அவர்கள் நோன்புக் கால இரவுகளில் உறவுகொள்ள மாட்டார்கள். ஸஹர் உணவு உண்ண மாட்டார்கள். அதிகாலை வெளிச்சம் தெளிவாகும்வரை உணவு உண்பதற்கு நமக்கு அனுமதி மட்டும் அல்ல, ஆர்வமும் ஊட்டப்பட்டுள்ளது. நபியவர்களின் சொல்லும் இதையே உறுதிப்படுத்துகிறது, “ஸஹர் உணவு உண்ணுங்கள். அதில் பரக்கத் உள்ளது.”

“நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் நிலையில் மனைவியருடன் உறவு கொள்ளாதீர்கள்…

இஃதிகாஃப் என்பது ஏதேனும் ஒன்றிலிருந்து தன்னை தடுத்துக் கொள்ளுதல் அல்லது ஏதேனும் ஒன்றில் தன்னை நிலைபெறச் செய்தல் என்று பொருள். இஸ்லாம் இந்த வார்த்தையை அல்லாஹ்வை நினைவு கூருவதற்காக உலக விவகாரங்கள் எல்லாவற்றிலிருந்தும் விலகி பள்ளிவாசலில் தங்கியிருத்தல் என்ற பொருளில் பயன்படுத்துகிறது. நோன்புக்கும் இஃதிகாஃபிற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதனால்தான் நோன்பு தொடர்பான விசயங்களோடு இது இடம்பெறுகிறது. நபியவர்களின் செயல்பாடும் இதையே உறுதிப்படுத்துகிறது. அவர்கள் ரமலான் மாதத்தில் கடைசி பத்து நாட்களில் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருப்பார்கள். இந்த நாட்களில் மனைவியோடு உறவு கொள்ள அனுமதி இல்லை. அல்லாஹ் விதித்த வரம்புகளை பேணிக் கொள்ளுங்கள். அவற்றின் அருகில் சென்று மீறி விடாதீர்கள். அல்லாஹ் ஒரு விசயத்தை தடை செய்திருக்கிறான் எனில் அதன் அருகில்கூட செல்லாமல் இருப்பதுதான் சிறந்தது. அதுதான் அதிலிருந்து விலகியிருப்பதற்கான சரியான வழிமுறை. தடை செய்யப்பட்ட பொருள் ஈர்ப்பு மிகுந்தது. அருகில் செல்வது ஈர்த்து விடும் என்பதனால்தான் அதன் அருகில் செல்லாதீர்கள் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பாவங்கள் ஈர்ப்பு மிகுந்தவை. அவற்றின் அருகில் செல்பவர்கள் ஈர்க்கப்படுவார்கள். அவை மனிதர்களை அடுத்தடுத்த நிலைக்குக் கொண்டு சென்று விடும். அவற்றின் அருகில் செல்லாமல் தவிர்ந்திருப்பவர்களே அவற்றிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.                

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply