وَلَا تَأْكُلُوا أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ وَتُدْلُوا بِهَا إِلَى الْحُكَّامِ لِتَأْكُلُوا فَرِيقًا مِنْ أَمْوَالِ النَّاسِ بِالْإِثْمِ وَأَنْتُمْ تَعْلَمُونَ
2:188. “உங்களுக்கு மத்தியில் ஒருவர் மற்றவரின் செல்வங்களை தவறான முறையில் உண்ணாதீர்கள். மக்களின் செல்வங்களில் ஒரு பகுதியை பாவமான முறையில் உண்பதற்காக அறிந்துகொண்டே அதிகாரிகளை அணுகாதீர்கள்”
நோன்பு தொடர்பான விவகாரங்கள் பேசப்பட்ட பிறகு இந்த விவகாரம் பேசப்படுவது கவனிக்கத்தக்கது. நோன்பு மனக்கட்டுப்பாட்டை உருவாக்குகிறது. அது மனக்கட்டுப்பாட்டை உருவாக்க வேண்டும். அது தீய இச்சைகளைக் கட்டுப்படுத்துவதற்கான அற்புதமான பயிற்சி. வாழ்க்கை என்பது நிரந்தமான நோன்புதான். அதில் அனுமதிக்கப்பட்ட வழிகளின்மூலமே பொருள் ஈட்டப்பட வேண்டும். தடை செய்யப்பட்ட எந்த வழிமுறையைக் கொண்டும் பொருள் ஈட்டப்படக்கூடாது.
இங்கு உண்பது என்பது உண்பதை மட்டுமே குறிக்கவில்லை. அது அடுத்தவர்களின் பொருள்களை உரிமையின்றி பயன்படுத்துவதைக் குறிக்கிறது.
உங்களுக்கு மத்தியில் செல்வம் அனுமதிக்கப்பட்ட வழிகளில்தான் கைமாற வேண்டும். உங்களின் சம்பாத்தியம் அல்லாஹ் அனுமதித்த வழிகளில்தான் நிகழ வேண்டும். திருடுதல், ஏமாற்றுதல், வட்டி, இலஞ்சம்… இப்படியான தடை செய்யப்பட்ட வழிகளில் அது அமைந்து விடக்கூடாது.
உங்கள் செல்வத்தின் வலிமையினால் அதிகாரம் கொண்டவர்களை அணுகி மற்றவர்களின் செல்வங்களை அநியாயமாக நீங்கள் அபகரித்து விடக்கூடாது. அன்பளிப்பு என்ற பெயரில் அதிகாரம் கொண்டவர்களை தன்வயப்படுத்தி அவர்களை தங்களுக்கு சாதகமாக, தங்களின் அநியாயமான ஆசைகளை நிறைவேற்றுவதற்காக பயன்படுத்துவதையும் இது குறிக்கிறது. உண்மையில் அது அன்பளிப்பு அல்ல. அவர்களை தன்வயப்படுத்துவதற்காக அன்பளிப்பு என்ற பெயரில் அவர்களுக்கு அளிக்கப்படும் இலஞ்சம். ஆதாரம் இல்லை என்ற ஒரே காரணத்தைப் பயன்படுத்தி அதிகாரிகளை அணுகி மற்றவர்களின் செல்வங்களை அநியாயமான முறையில் கைப்பற்ற முயற்சித்தல் என்ற பொருளையும் இந்த வாசகம் உள்ளடக்கி இருக்கிறது.
يَسْأَلُونَكَ عَنِ الأهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
2:189. “அவர்கள் பிறைகளைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். தூதரே! நீர் கூறும்: “அவை மக்களுக்கு காலங்காட்டியாகவும் ஹஜ்ஜுடைய காலத்தை அறிவிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன. நீங்கள் வீடுகளுக்குள் அவற்றின் பின்புறமாக வந்துவிடுவது நன்மையானது அல்ல. மாறாக அல்லாஹ்வை அஞ்சுவதே நன்மையாகும். வீடுகளுக்குள் அவற்றின் வாசல்கள் வழியாகவே வாருங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள், நீங்கள் வெற்றியடைவீர்கள்.”
தூதரே! உங்களின் தோழர்கள் வளர்ந்து, தேய்ந்து வரும் பிறைகளைக் குறித்து உங்களிடம் கேட்கிறார்கள். அவற்றின் நோக்கம் குறித்து நீங்கள் அவர்களிடம் கூறுங்கள்: அவை உங்களுக்குக் காலங்காட்டியாக இருக்கின்றது. நீங்கள் அவற்றின்மூலம் உங்களின் மாதங்களை, வணக்க வழிபாட்டுக்கான காலங்களை அறிந்து கொள்கிறீர்கள். குறிப்பாக, அவை ஹஜ் உடைய காலத்தை அறிவிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றது. இப்படித்தான் பெரும்பாலான விரிவுரையாளர்கள் விளக்கம் அளித்துள்ளார்கள். அவர்கள் இப்படி விளக்கம் அளிப்பதற்கு இந்த வசனம் இறக்கப்பட்டது தொடர்பாக இடம்பெறும் இரண்டு அறிவிப்புகளாகும்.
இந்த வசனத்தின் இடம்பெறும் அடுத்த வாசகத்தையும் இதற்குப் பின்னால் இடம்பெறும் வசனங்களையும் கவனித்துப் பார்க்கும்போது இந்த விளக்கத்தில் ஒரு நெருடல் ஏற்படத்தான் செய்கிறது. இந்த வசனத்தில் இடம்பெறும் இன்னொரு வாசகம் ஹஜ்ஜில் அன்றைய அறபுக்கள் செய்து வந்த தேவையில்லாத ஒரு சடங்கைக் குறித்துப் பேசுகிறது. அவர்கள் ஹஜ் முடித்து விட்டு வீட்டுக்கு வரும்போது அதன் வாசல் வழியாக நுழையாமல் அதன் பின்புறம் வழியாக நுழைபவர்களாக இருந்தார்கள். இவ்வாறு செய்வதை அவர்கள் ஒரு சடங்காக, நன்மையான ஒரு செயலாக கருதி வந்தார்கள். அது தேவையில்லாத ஒன்று என்பதையும் அதில் எந்த நன்மையும் இல்லை என்பதையும் தக்வாதான் முதன்மையானது, அதுதான் கவனத்தில் கொள்ளத்தக்கது என்பதையும் அந்த வாசகம் தெளிவுபடுத்துகிறது.
இதற்கு மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி அளிக்கும் விளக்கம் இந்த நெருடலைப் போக்குவதுபோல இருக்கிறது. ஆனாலும் நெருடல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது. அவர் கூறுகிறார்: இந்த வசனத்தில் ‘அல்அஹில்லா’ என்ற வார்த்தை பிறைகளைக் குறிக்கவில்லை. அல்அஹில்லா என்ற வார்த்தை மாதங்களைக் குறிப்பதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. ஹிலால் என்ற வார்த்தை மாதத்தின் தொடக்கம் என்பதற்கும் அது பன்மையாக அஹில்லா என்பது மாதங்களைக் குறிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதில் வந்துள்ள அலிஃப், லாம் அவை குறிப்பான மாதங்கள் என்பதற்கான அடையாளமாகும். அடுத்தடுத்து வந்துள்ள வசனங்கள் அவை புனிதமான மாதங்களையே குறிக்கிறது என்பதைத் தெளிவுபடுத்தி விடுகின்றன. இந்த விளக்கத்தின் அடிப்படையில் இந்த வசனத்திற்கான மொழியாக்கம் பின்வருமாறு: “அவர்கள் புனிதமான மாதங்களைக் குறித்து உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: அவை மக்கள் பயனடைவதற்கான காலமாகவும் ஹஜ்ஜின் காலத்தை அறிவிக்கக்கூடியவையாகவும் இருக்கின்றன…
போர்ச் சூழல் பரவியிருந்த அன்றைய அறபு வாழ்க்கையில் அவர்கள் வியாபாரம் செய்வதற்கும் வணக்க வழிபாட்டில் ஈடுபடுவதற்கும் புனித மாதங்களையே நம்பியிருந்தார்கள்.
தக்வாதான் வழிபாட்டின் நோக்கம். அதுதான் இந்த மார்க்கத்தின் ஆன்மா. அசலான ஆன்மாவை இழந்த சமூகம் தேவையற்ற சடங்குகளில் ஈடுபட்டு தம்மை திருப்திபடுத்திக் கொள்ளும். அன்றைய அறபுக்களிடம் இருந்த தேவையற்ற ஒரு சடங்கு இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அதனுடன் மார்க்கத்தின் அசலான அம்சம் நினைவூட்டப்படுகிறது. அதுதான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறுவதற்கான வழி.
وَقَاتِلُوا فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يُقَاتِلُونَكُمْ وَلا تَعْتَدُوا إِنَّ اللَّهَ لا يُحِبُّ الْمُعْتَدِين وَاقْتُلُوهُمْ حَيْثُ ثَقِفْتُمُوهُمْ وَأَخْرِجُوهُمْ مِنْ حَيْثُ أَخْرَجُوكُمْ وَالْفِتْنَةُ أَشَدُّ مِنَ الْقَتْلِ وَلا تُقَاتِلُوهُمْ عِنْدَ الْمَسْجِدِ الْحَرَامِ حَتَّى يُقَاتِلُوكُمْ فِيهِ فَإِنْ قَاتَلُوكُمْ فَاقْتُلُوهُمْ كَذَلِكَ جَزَاءُ الْكَافِرِينَ فَإِنِ انْتَهَوْا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ وَقَاتِلُوهُمْ حَتَّى لا تَكُونَ فِتْنَةٌ وَيَكُونَ الدِّينُ لِلَّهِ فَإِنِ انْتَهَوْا فَلا عُدْوَانَ إِلا عَلَى الظَّالِمِينَ الشَّهْرُ الْحَرَامُ بِالشَّهْرِ الْحَرَامِ وَالْحُرُمَاتُ قِصَاصٌ فَمَنِ اعْتَدَى عَلَيْكُمْ فَاعْتَدُوا عَلَيْهِ بِمِثْلِ مَا اعْتَدَى عَلَيْكُمْ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ
2:190-195. “உங்களுடன் போர் புரிபவர்களுடன் நீங்களும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரியுங்கள். வரம்பு மீறாதீர்கள். வரம்பு மீறுவோரை அல்லாஹ் நேசிப்பதில்லை. அவர்களை எங்கு கண்டாலும் கொல்லுங்கள். எங்கிருந்து அவர்கள் உங்களை வெளியேற்றினார்களோ அங்கிருந்து அவர்களை நீங்களும் வெளியேற்றுங்கள். குழப்பம் கொலையைவிடக் கொடியது. மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனித ஆலயத்தில் அவர்கள் உங்களுடன் போரிடாதவரை நீங்கள் அவர்களுடன் போரிட வேண்டாம். ஆனால் அவர்கள் உங்களுடன் போரிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள். இதுவே நிராகரிப்பாளர்களுக்கான தண்டனையாகும். அவர்கள் விலகிக் கொண்டால் அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான். குழப்பம் ஒழிந்து மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரித்தானதாக ஆகும்வரை அவர்களுடன் போரிடுங்கள். அவர்கள் விலகிக் கொண்டால், அக்கிரமக்காரர்களைத்தவிர வேறு யாரிடமும் அத்துமீறக்கூடாது. புனிதமான மாதத்திற்கு புனித மாதமே ஈடாகும். புனிதங்களுக்கும் ஈடு உண்டு. ஆகவே யாரேனும் உங்கள்மீது வரம்பு மீறினால் அவர் வரம்பு மீறியதைப்போன்றே நீங்களும் அவர்மீது வரம்பு மீறுங்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் தன்னை அஞ்சக்கூடியவர்களுடன் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். நல்ல முறையில் செயலாற்றுங்கள். நல்ல முறையில் செயல்படுபவர்களையே அல்லாஹ் நேசிக்கின்றான்.”
நோன்பு, ஹஜ், புனித மாதங்கள் தொடர்பான இந்தப் பின்னணியில் போர் புரிவது தொடர்பான கட்டளையும் இடம்பெறுகிறது. இந்த வசனங்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கையின்போது அருளப்பட்டன என்று அறிவிப்புகள் கூறுகின்றன. முஸ்லிம்கள் ஹஜ் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டபோது நிராகரிப்பாளர்களை எதிர்த்து போர் புரிவதற்கான இந்தக் கட்டளை அருளப்பட்டது.
இந்த வசனங்களை மேலோட்டமாகப் படிக்கும்போது வெவ்வேறு தலைப்புகளைக் கொண்ட சிதறல்களாகத் தெரியும். ஆனால் அருளப்பட்ட பின்னணியை பார்க்கும்போது, வசனங்களுக்கு மத்தியிலான இணைப்பை கூர்ந்து கவனிக்கும்போது மாலையில் அடுத்தடுத்து கோர்க்கப்பட்ட முத்துகள்போன்று தெரியும். நோன்பு, ஹஜ், போர்… என ஒவ்வொன்றும் இடைவிடாத பொறுமையையும் தொடர் முயற்சியையும் வேண்டி நிற்கும் செயல்பாடுகளாகும்.
இந்த அழைப்பின் ஆரம்ப கட்டத்தில், மக்காவுடைய வாழ்க்கையில் முஸ்லிம்களுக்கு போர் புரிய அனுமதியளிக்கப்படவில்லை. எதிர்த்து அடிக்காமல் பொறுமையாக இருங்கள், தொழுகையை நிலைநிறுத்துங்கள், ஸகாத்தை அளித்து வாருங்கள் என்றே அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு போர் புரிவதற்கான அனுமதி வழங்கப்பட்டது. பிறகு போர் புரியுங்கள் என்று கட்டளை இடப்பட்டது. இந்த வசனம் உங்களை எதிர்த்து போர் புரிபவர்களுடன் நீங்களும் போர் புரியுங்கள் என்பதற்கான கட்டளையாகும். அத்துடன் வரம்பு மீறக்கூடாது என்ற கட்டளையும் இடம்பெறுகிறது. போர் என்றால் வரம்பு மீறல்தான், போர் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று புரிந்துகொள்ளப்பட்டிருந்த காலகட்டத்தில் இஸ்லாம் போருக்கான கட்டளையுடன் அதற்கான ஒழுங்குமுறைகளையும் முன்வைத்தது. எந்த வகையிலும் வரம்பு மீறக்கூடாது. போருடன் தொடர்பில்லாத யாரையும் கொல்லக்கூடாது. பெண்களையும் குழந்தைகளையும் வயது முதிர்ந்தவர்களையும் விலங்குகளையும் கொல்லக்கூடாது. இறந்த உடல்களை சிதைக்கக் கூடாது. விளைநிலங்களை நாசம் செய்யக்கூடாது. போரின் நோக்கம் குழப்பத்தை நீக்குவதும் அமைதியை ஏற்படுத்துவதும்தானே அன்றி தேவையின்றி உயிர்களைக் கொல்வதும் நாசம் ஏற்படுத்துவதும் அல்ல.
மக்காவில் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு, சொத்துகள் பறிக்கப்பட்டு மதீனாவில் தஞ்சமடைந்து அங்கு ஒரு சமூகமாக வலுப்பெற்ற பின் முஸ்லிம்களுக்கு இந்தக் கட்டளை இடப்படுகிறது. நீங்கள் அவர்களுடன் போரிட்டால் கண்ட இடத்தில் அவர்களைக் கொலை செய்யுங்கள். உங்களை உங்கள் வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேற்றியதுபோன்று அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றுங்கள். அநியாயக்காரர்கள் தாங்கள் செய்த அநியாயத்திற்கான தண்டனையைப் பெற்றே தீர வேண்டும். கொலை செய்வது கொடுமையானதுதான். ஆனால் அவர்கள் செய்வது அதைவிட கொடுமையான செயல். அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு மக்களைத் தடுக்கிறார்கள். அல்லாஹ் மனிதர்களுக்காக வழங்கிய இஸ்லாம் என்னும் வழிகாட்டலை பின்பற்ற விடாமல் அவர்களைத் தடுக்கிறார்கள். தங்களின் நிராகரிப்பான கொள்கையை முஸ்லிம்களின் மீது திணிக்கிறார்கள். இது அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எதிராகச் செய்யப்படும் மிகப் பெரிய கலகமும் பெரும் குழப்பமும் ஆகும். கொலையைவிட இந்தக் கலகம் கொடியது. கொலையைவிட இந்தக் குழப்பம் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. இந்தக் கலகத்தைத் தடுக்க நீங்கள் அவர்களுடன் போரிட்டு அவர்களைக் கொலை செய்யலாம். மஸ்ஜிதுல் ஹராம் என்னும் புனித ஆலயத்திற்கு அருகில் அவர்களுடன் போரிடாதீர்கள். ஆனால் அவர்கள் அங்கு வைத்து போரிட்டால் நீங்கள் போரிடலாம். புனிதமான அந்த இடத்தில் இரத்தம் சிந்தப்படக்கூடாது. ஆனால் அவர்கள் அந்த புனிதத்தைப் பேணவில்லை எனில் நீங்கள் அவர்களுடன் போரிட்டு அவர்களைக் கொலை செய்யலாம். இதுதான் நிராகரிப்பாளர்களுக்கான தண்டனை. அவர்கள் தங்களின் வரம்பு மீறலிலிருந்து, அநியாயத்திலிருந்து விலகிக் கொண்டால் அல்லாஹ் அவர்களை மன்னித்து ஏற்றுக் கொள்பவனாகவும் அவர்கள் மீது கருணை காட்டுபவனாகவம் இருக்கின்றான்.
அவர்களுடன் நீங்கள் போரிடுங்கள், எதுவரை? இந்தக் கலகமும் குழப்பமும் முழுமையாக நீங்கும்வரை, அவர்களின் அதிகாரம் பறிக்கப்பட்டு அவர்கள் சிறுமையடையும்வரை. அவர்களிடம் இருக்கும் அதிகாரமும் கர்வமும் நம்பிக்கையாளர்களை அவர்களின் பாதையை விட்டு தடுக்கவும் அவர்களைத் துன்புறுத்தவும் தூண்டுகின்றன. அவைதாம் அல்லாஹ்வின் மார்க்கத்திற்கும் மக்களுக்கும் மத்தியில் பெரும் தடைகளாக வந்து நிற்கின்றன. போரின்மூலம் அந்த தடைகள் நீக்கப்பட வேண்டும். மனிதர்களுக்கு அல்லாஹ் வழங்கிய அருட்கொடை இந்த அநியாயக்காரர்களினால் பறிக்கப்படக்கூடாது. மனிதர்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவர்கள் அவனுடைய மார்க்கத்திற்கு மட்டுமே கீழ்ப்படிய வேண்டும். அவர்கள் அவனைத் தவிர யாருக்கும் எதற்கும் பயப்படக்கூடாது. அவர்கள் அவனைத் தவிர யாருக்கும் எதற்கும் கட்டுப்படக்கூடாது. அவனுடைய மார்க்கத்தைவிட்டு அவர்களைத் தடுக்கும் எந்த வகையான நிர்ப்பந்தமும் இங்கு நீடித்திருக்கக் கூடாது.
அந்த அநியாயக்காரர்கள் தங்கள் அநியாயத்திலிருந்து விலகிக் கொண்டால் அவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள். அவர்கள் முன்னர் செய்த தவறுகளுக்காக அவர்களைத் தண்டிக்காதீர்கள். அநியாயத்தில், நிராகரிப்பில் பிடிவாதமாக நீடித்திருக்கும் அநியாயக்காரர்களைத் தவிர மற்றவர்கள் தண்டிக்கப்படக்கூடாது.
போர் புரிவதற்குத் தடை செய்யப்பட்ட புனித மாதங்களில் நீங்கள் போரிடக்கூடாது. ஆனால் அவர்கள் புனிதங்களை கவனத்தில் கொள்ளாமல் உங்கள் மீது தாக்குதல் தொடுத்தால் நீங்களும் திருப்பி தாக்குதல் தொடுக்கலாம். புனிதங்களை மதிக்காதவர்கள் அவற்றைக் கொண்டு பயனடையக்கூடாது. எந்த அளவு அவர்கள் உங்களைத் தாக்கினார்களோ அந்த அளவு நீங்களும் அவர்களைத் தாக்குங்கள். அல்லாஹ்வை விதித்த வரம்புகளைப் பேணுங்கள். தக்வாவைக் கடைப்பிடியுங்கள். அவன் விதித்த வரம்புகளைப் பேணுபவர்களுடன், எந்த நிலையிலும் தக்வாவைக் கடைப்பிடிப்பவர்களுடன் அவன் இருக்கிறான். அவர்கள் அவனுடைய உதவியையும் பாதுகாப்பையும் அரவணைப்பையும் பெற்றுக் கொண்டேயிருப்பார்கள்.
அல்லாஹ்வின் பாதையில் உங்கள் செல்வங்களையும் செலவு செய்யுங்கள். உங்கள் செல்வங்களைச் செலவு செய்யாமல் கஞ்சத்தனத்தோடு நடந்து உங்களை நீங்களே அழிவில் ஆழ்த்திக் கொள்ளாதீர்கள். அவனுடைய பாதையில் செலவு செய்வதில்தான் பரக்கத் இருக்கிறது. அதுதான் உங்கள் செல்வங்களைப் பாதுகாப்பதற்கும் அவற்றைப் பெருக்குவதற்கும் கண்ணியம் அடைவதற்குமான வழி. திறந்த மனதோடு சிறந்த முறையில் அவற்றை அவனுடைய பாதையில் செலவு செய்யுங்கள். தண்டப்பணமாகக் கருதியோ நீங்கள் வெறுப்பதையோ அவனுடைய பாதையில் செலவு செய்யாதீர்கள். எந்தவொன்றையும் மனப்பூர்வமாக சிறந்த முறையில் செய்பவர்களையே அவன் நேசிக்கிறான்.
