“இப்போது நடக்கும் நிகழ்வுகளை, குழப்பங்களை வைத்துப் பார்க்கும்போது மறுமை நாள் நெருங்கி விட்டது என்றே தெரிகிறது. குழப்பங்கள், முன்னறிவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளும் இதையே உண்மைப்படுத்துகின்றன.”
இந்த வாசகம் இப்போது சொல்லப்படுவது மட்டுமல்ல. அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம்வரை தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் நிகழும் நிகழ்வுகளோடு, குழப்பங்களோடு குழப்பங்கள், முன்னறிவிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் பொருந்திப் போவது இதற்கு ஒரு காரணம். அவற்றை முன்வைத்துப் பார்க்கும்போது நமக்கும் அப்படித்தான் தோன்றும். பரபரப்புச் செய்திகளின் சூறாவளிக் காற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் நமக்கு அப்படித் தோன்றுவதில் வியப்பேதும் இல்லை.
இந்த எண்ணம் ஏதோ ஒரு வகையில் அல்லாஹ்வுடனான தொடர்பை, மறுமைக்கான தயாரிப்பை அதிகப்படுத்தினால் நல்லதுதான். நமக்கு அது குறித்து ஆட்சேபனைகள் ஏதும் இல்லை. ஆனால் இங்கு ஒரு சிக்கல் எழுகிறது. இந்த எண்ணம் அதிகமானோரை செயலின்மையின் பக்கம், நிராசையின் பக்கம், தேவையற்ற அதீத பதற்றத்தின் பக்கம் கொண்டு செல்கிறது. இன்னும் சிலர் முன்னறிவிப்புகள் தொடர்பான அறிவிப்புகளை எடுத்துக் கொண்டு ஈர்ப்பான ஆனால் புரிந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்றின் பக்கம் சென்று விடுகிறார்கள். இதனால்தான் நாம் இது குறித்து விரிவாகப் பேச வேண்டிய, அலச வேண்டிய அவசியம் இருக்கிறது.
அபுல் ஹசன் அலீ நத்வீ எழுதிய ‘இஸ்லாமிய மறுமலர்ச்சி வரலாறு’ என்ற நூலை நான் மொழிபெயர்த்திருக்கிறேன். சீர்மை பதிப்பகம் அந்த நூலை வெளியிட்டிருக்கிறது. நான்கு பாகங்களைக் கொண்ட நூல் அது. உமர் இப்னு அப்துல் அஜீஸ் தொடங்கி ஷாஹ் வலியுல்லாஹ் வரை இஸ்லாமிய மறுமலர்ச்சியாளர்களை பட்டியலிட்டு அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் சூழல்களையும் அவர்கள் நிறைவேற்றிய பெரும் பணிகளையும் குறித்து இந்தப் புத்தகம் பேசுகிறது. அத்தனை குழப்பங்களையும் எதிர்ப்புகளையும் தாண்டி சிதையாமல் அது எந்த இயல்பில் தோன்றியதோ அதே இயல்புடன் நீடித்துக் கொண்டிருக்கும் இஸ்லாத்தின் ஸ்திரத்தன்மையை அந்தப் புத்தகத்தின் வழியாக நாம் அறிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு காலகட்டமும் இப்படியான குழப்பங்களைக் கொண்டிருக்கும் என்பதையும் இஸ்லாத்தைக் கொண்டே நாம் தெளிவும் நிறைவும் அடைய முடியும் என்பதையும் அந்தப் புத்தகம் நமக்கு உணர்த்தி விடும். இஸ்லாமிய களச் செயல்பாட்டாளர்கள், அறிவுஜீவிகள் கட்டாயம் வாசிக்க வேண்டிய பெரும் பொக்கிஷம் அது.
சரி, இப்போது விசயத்திற்கு வருகிறேன். உலகில் நிகழும் போர்கள், குழப்பங்கள் என எந்தவொன்றையும் கணக்கில் எடுக்காமல் இருந்தாலும் நம்மைச் சுற்றி நிச்சயமின்மை சூழ்ந்திருக்கிறது என்பதே உண்மை. அடுத்த நாளுக்கு உத்தரவாதமில்லாத ஒரு வாழ்க்கையைத்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நாம் எப்போது மரணிப்போம் என்று நமக்குத் தெரியாது. நம்முடைய கடைசி நாள் நமக்கு மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது. அது மறைவாக இருப்பதில்தான் நமக்கு நிம்மதி இருக்கிறது. நாம் நன்னம்பிக்கையோடு செயல்படுகிறோம் எனில் நமக்கு நிர்ணயிக்கப்பட்ட மரணம் மறைவாக இருக்கிறது என்பதனால்தான். நம்மைச் சுற்றி, நமக்கு மத்தியில் ஜின்களைப் போன்ற நமக்குத் தெரியாத உயிரினங்களும் இருக்கின்றன. நமக்குத் தேவையற்ற உண்மைகளை, இரகசியங்களை அறிந்து கொள்வது பெரும் சுமை. அவை நம்முடைய இயல்பான வாழ்க்கையைக் கெடுத்து விடும். இங்கு இருக்கும் எல்லா தகவல்களும் உண்மைகளும் அறிந்து கொள்ளப்பட வேண்டியவை அல்ல.
ஒரு மனிதனின் மரணத்தோடு அவனுடைய மறுமை நாள் நிலைபெற்று விடுகிறது என்று நபியவர்கள் கூறியதாக ஒரு அறிவிப்பு இருக்கிறது. இந்த அறிவிப்பு அறிவிப்பாளர் தொடரை வைத்துப் பார்க்கும்போது பலவீனமானதாக இருந்தாலும் இது கூறும் கருத்து முற்றிலும் சரியானதுதான் என்று நம்முடைய அறிஞர்கள் பலரும் கூறியுள்ளனர். மறுமைக்கான அடையாளங்களை நாம் தேடிக் கொண்டிருக்க அவசியமில்லை. நம்முடைய நிச்சயமின்மையை நாம் நினைவில் வைத்துக் கொண்டாலே போதும். நம்முடன் இருப்பவர்கள் சட்டென பெரும் நோயால் பாதிக்கப்படுவதையும் எதிர்பாராத விபத்தால் உயிரிழப்பதையும் அவர்களின் வாழ்க்கை சட்டென முடிந்து விடுவதையும் நாம் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அடக்கஸ்தலங்களுக்கு சென்று வாருங்கள் என்று நபியவர்கள் கூறியது நம்முடைய இந்த இயல்பை, நிச்சயமின்மையை நமக்கு நினைவூட்டுவதற்காகத்தான்.
இங்கு நாம் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருக்கின்றன. இந்த உலகை நாம் மறுமைக்கான விளைநிலமாக ஆக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. இங்கு நாம் செய்யும் எந்த நற்செயலும் நமக்கும் பயன்தராமல் இருக்கிறது. இங்கும் நாம் அதன் பயன்களை அறுவடை செய்யலாம். மறுமையிலும் அதன் பயன்களை அறுவடைய செய்யலாம். இஸ்லாம் சொல்லும் நற்செயல்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் நன்மையை பெற்றுத் தரக்கூடியவை. ஆனால் ஒரே ஒரு நிபந்தனை, அவை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும். நீடிக்கும் நற்செயல்களின் வழியாக, நாம் இங்கு விட்டுச் செல்லும் நல்லறங்களின் தடங்கள் வழியாக நாம் இங்கு நீடிக்க முடியும்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் …
நிச்சயம் இல்லாததது இந்த வாழ்க்கை என்னும் உண்மை நம் மூளைக்கு எட்டினாலும் . தற்போது நிலவக்கூடிய பதற்றமான சூழலில் இறைவனை நோக்கி ஓட உள்ளம்
துடித்தாலும்…உலகம் தரும் பொருளாதார நெருக்கடிகள் கழுத்தை நெறித்து தடுக்கும் இந்த சூழலை கையாள்வது எப்படி? …. உள்ளத்தை இரு முனைகளில் பிடித்து இழக்கும் ஊசலாட்டகளை எப்படி வெல்வது? போன்றவற்றிற்க்கு ஆலோசனை வழங்குங்கள் உஸ்தாத்
என்றும் நீங்காத உன்னதங்களை மரணமில்லா வாழ்வில் அடைவதற்கான முதற்படியாக இவ்வுலகின் நிச்சயமற்ற வாழ்க்கை…
தாயின் கருவில் உயிர் நிலைபெற்று அதில் ஆன்மா ஊதப்பட்ட போதே விதியில் நிச்சயமானது நமது மரணம். இறைவன் வகுத்த விதியில் நமது மரணத்தின் நாள் எது என்பதை அறிந்து கொள்ள காட்டப்படாத ஆர்வம், உலகின் அழிவு நாள் பற்றிய விடயத்தில் அளவுக்கு அதிகமாகவே காட்டப் படுகின்றது என்பது உண்மையே. இந்த இரண்டு விடயங்களும் நிச்சயிக்கப் பட்டவையே, ஆனால் அவை துல்லியமாக கண்டறிந்தே ஆகவேண்டும் என்ற அத்தியாவசியம் அற்றவை.
ஆனாலும் உலகின் அழிவு எப்போது என்பதை தேடுவதற்கான ஆவலை, எதிர்பார்ப்பை, ஏக்கத்தை தூண்டும் காரணங்கள் உலகில் எப்போதும் அதிகமாக உள்ளன என்பதையும் மறுக்க இயலாது.
இஸ்லாமியர்களோடு போரிடக் கூடிய கடைசி யூதன் அழிக்கப்படும் நாள் பற்றிய நபிமொழியும், தஜ்ஜாலை அழித்து நான் ஒரு முஸ்லிம் என்று தனக்குத் தானே சாட்சி கூறுவதற்காக வரக்கூடிய ஈஸா அலைஹிவஸல்லமுடைய வருகை பற்றிய நபிமொழியும், அந்த சூழலில் ஏற்படக்கூடிய இஸ்லாமிய வெற்றி மற்றும் உலகில் இஸ்லாமிய ஆட்சி பற்றிய நபிமொழியும் இப்படி இன்னும் ஆயிரக்கணக்கான காரணங்களை உதாரணமாகக் கூறலாம். ஆனால், இதனால் மட்டுமே, இவையெல்லாம் நடந்தால் மட்டுமே அல்லாஹ்வின் புகழ் ஓங்கும் என்று கருதுவது தவறாகும்…
மேலே ஷாஉமரியின் பதிவில் குறிப்பிட்டுள்ள நபிமொழி மற்றும் வேறு சில நபிமொழியின் அடிப்படையில் கடுகளவு இறையச்சம் உடைய கடைசி மனிதனின் மறுமை நிலைபெறாத வரையில் இவ்வுலகம் முழுவதுமாக அழிக்கப் படாது. அதாவது கடைசி முஸ்லிமும் மரணிக்காத வரை இவ்வுலகம் அழிக்கப் படாது. அன்று இந்த பூமியில் வாழும் ஏதேனும் ஒரு இறைநம்பிக்கை அற்ற மனிதன் தங்களோடு வாழ்ந்து மரணித்த இறை நம்பிக்கையாளர்களை குறித்து முட்டாள்கள் அழிந்துவிட்டனர், எங்களுடைய அறிவு எங்களை நிலை பெறச்செய்தது என்று கருதினால்? அதனால் அல்லாஹ்வின் புகழுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டுவிடாது. அவனது நித்தியமான இருப்பு இல்லாமலும் ஆகிவிடாது.
அனைத்துப் புகழும் அல்லாஹ்விற்கு மட்டுமே என்றென்றும் உரித்தானது…
உலகம் எப்படி மாறினாலும்.
என்ன நெருக்கடியில் தள்ளினாலும்
நம் ஈமானை பாதுகாத்து.
அல்லாஹ்வின் திருப்தியை அடைய குரானின் வழிகாட்டுதலோடு அறிஞர்களின் கருத்துக்களை அவ்வபோது எடுத்து கொண்டு நிச்சயிக்கப்பட்ட மரணத்தை எதிர்நோக்கி பயணிப்பதே உகந்ததாக நான் பார்க்கிறேன்.