மூன்று உதாரணங்கள்

You are currently viewing மூன்று உதாரணங்கள்

யார் நேர்வழியை விரும்புகிறார்களோ அவர்கள் நிச்சயம் நேர்வழியை அடைவார்கள். நேர்வழியை விரும்பக்கூடியவர்களை அல்லாஹ் ஒருபோதும் கைவிட்டு விடுவதில்லை. நேர்வழியை விரும்பக்கூடியவர்களுக்குத்தான் அந்தப் பாதை தெளிவாகிக் கொண்டே செல்லும். அவர்கள் எல்லாவிதமான இருள்களிலிருந்தும் பாதுகாக்கப்படுவார்கள். நேர்வழியை விரும்பாதவர்கள் அதனைவிட்டு தூரமாகிக் கொண்டே செல்வார்கள். ஷைத்தான்கள் அவர்களின் தோழர்களாக மாறிவிடுவார்கள். அந்த ஷைத்தான்கள் அவர்களை மேலும் மேலும் இருளுக்குள் தள்ளி விடுகிறார்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களை எவ்வாறு பாதுகாக்கிறான், எவ்வாறு அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி வெளிச்சத்தின் பக்கம் கொண்டு வருகிறான் என்பதற்கும் நிராகரிப்பாளர்கள் எவ்வாறு ஷைத்தான்களால் வழிகேட்டில் நிலைநிறுத்தப்படுகிறார்கள், எவ்வாறு அவர்கள் காரிருளுக்குள் தள்ளப்படுகிறார்கள் என்பதற்கும் அடுத்தடுத்த மூன்று உதாரணங்கள் கூறப்படுகின்றன.

أَلَمْ تَرَ إِلَى الَّذِي حَاجَّ إِبْرَاهِيمَ فِي رَبِّهِ أَنْ آتَاهُ اللهُ الْمُلْكَ إِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّيَ الَّذِي يُحْيِي وَيُمِيتُ قَالَ أَنَا أُحْيِي وَأُمِيتُ قَالَ إِبْرَاهِيمُ فَإِنَّ اللهَ يَأْتِي بِالشَّمْسِ مِنَ الْمَشْرِقِ فَأْتِ بِهَا مِنَ الْمَغْرِبِ فَبُهِتَ الَّذِي كَفَرَ وَاللهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ.

2:258. “இப்ராஹீமிடம் அவரது இறைவனைக் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் பார்க்கவில்லையா? காரணம், அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிருந்தான் என்பதுதான். “வாழ்வையும் மரணத்தையும் அளிப்பவனே என் இறைவன்” என்று அவர் கூறியபோது, “நானும்தான் வாழ்வையும் மரணத்தையும் அளிக்கின்றேன்” என்று அவன் கூறினான். அதற்கு அவர், “அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து உதிக்கச் செய்கிறான். நீ அதனை மேற்கிலிருந்து உதிக்கச் செய்” என்றார். நிராகரிப்பாளன் திகைத்துப் போனான். அல்லாஹ் அநியாயக்காரர்களுக்கு நேர்வழி காட்டுவதில்லை.”

அந்த அரசனின் பெயர் என்ன, சம்பவம் எப்போது, எந்த இடத்தில் நிகழ்ந்தது போன்ற விவரங்களை திருக்குர்ஆன் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. அது சம்பவங்களிலிருந்து கிடைக்கும் படிப்பினைகள், பாடங்களின் பக்கமே மனிதர்களின் கவனத்தை திருப்ப விரும்புகிறது. திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் இது நம்ரூதுக்கும் இப்ராஹீம் நபிக்கும் மத்தியில் நடைபெற்ற உரையாடல் என்று குறிப்பிடுகிறார்கள். யூதர்களின் தல்மூதில் (இது தவ்ராத்திற்கு காலம் காலமாக யூத அறிஞர்கள் அளித்த விளக்கங்களின் தொகுப்பு நூல்) இந்த உரையாடல் விரிவாக இடம்பெற்றுள்ளது.

சிலை வழிபாடு பரவியிருந்த அந்த காலகட்டங்களில் இறைவனுக்குரிய அதிகாரம் அரசனுக்கும் இருக்கிறது என்ற கருத்து பரவியிருந்தது. மக்கள் அரசர்களை தெய்வீகத்தன்மை கொண்டவர்கள் என்று கருதிக் கொண்டிருந்தார்கள். இப்ராஹீம் நபி சிலைகளை உடைத்து அல்லாஹ்வே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்ற கொள்கையை பிரச்சாரம் செய்ததனால் விசாரணை செய்யப்படுவதற்காக அரசவைக்கு அழைக்கப்பட்டிருக்கலாம். இந்த உரையாடல் அங்கு நடைபெற்ற உரையாடலாக இருக்கலாம்.

அவன் ஏன் இவ்வாறு மடத்தனமாக தர்க்கம் செய்தான்? அவன் ஏன் இப்ராஹீம் நபி எடுத்துரைத்த சத்தியத்தை ஏற்க மறுத்தான்? அல்லாஹ் அவனுக்கு ஆட்சியதிகாரத்தை வழங்கியிருந்தான். இதுதான் அவன் கர்வத்தில் ஆழ்த்தியது. அந்த ஆட்சியதிகாரம் அவனை நன்றியுள்ள அடியானாக ஆக்கியிருக்க வேண்டும். ஆனால் வழங்கப்பட்ட ஆட்சியதிகாரத்தைக் கொண்டு அவன் நன்றிகெட்டத்தனத்தை வெளிப்படுத்தினான். அல்லாஹ்வுக்கு இருக்கும் அதிகாரம் தனக்கும் இருப்பதாக வாதிட்டான். கர்வம் அறிவை மழுங்கடித்து விடுகிறது.

உம் இறைவன் எப்படிப்பட்டவன் என்ற அவனுடைய கேள்விக்கு வாழ்வும் மரணமும் யார் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அவனே என் இறைவன் என்று இப்ராஹீம் பதிலளித்தார். சிந்திக்கக்கூடியவர்களுக்கு இந்தப் பதில் போதுமானது. வாழ்வையும் மரணத்தையும் குறித்து யார் சிந்திக்கிறார்களோ அவர்கள் இறைவனை அறிந்து கொள்வார்கள். வாழ்வு எப்படி உருவாகிறது, மரணம் எப்படி நிகழ்கிறது, வாழ்வு என்பது என்ன, மரணம் என்பது என்ன போன்ற கேள்விகள் மனிதர்களால் பதிலளிக்க முடியாத எளிய கேள்விகள். அல்லாஹ்வைக் கொண்டு மட்டுமே இந்த கேள்விகளுக்கு விடையளிக்க முடியும்.

புரிந்துகொள்ள விரும்புபவனால் புரிந்துகொள்ள முடியுமான எளிமையான, தெளிவான பதில்தான் இது. ஆனால் நம்ரூத் விதண்டாவாதம் செய்தான். நானும்தான் வாழ்வளிக்கின்றேன், நானும்தான் மரணிக்கச் செய்கின்றேன் என்றான். தான் தண்டிக்க நாடுபவர்களை தண்டிக்காமல் மன்னித்து விட்டுவிடுவதை வாழ்வளித்தல் என்றும் மன்னிக்காமல் கொன்று விடுவதை மரணம் அளித்தல் என்றும் அவன் வாதிட்டான். அதிகாரம் அவனது அறிவை மழுங்கடித்ததனால் எளிமையான உண்மையைக்கூட விதண்டாவாதத்தைக் கொண்டு நிராகரித்தான். இப்ராஹீம் வேறொரு அடிப்படையான உண்மையைக் கொண்டு அவனை வாயடைக்கச் செய்தார். சரி, உனக்கும் அந்த அதிகாரம் இருக்கிறதா? அவ்வாறெனில் அல்லாஹ் சூரியனை கிழக்கிலிருந்து கொண்டு வருகிறான். நீ மேற்கிலிருந்து கொண்டு வா பார்ப்போம் என்றார். அவனால் பதில்கூற முடியவில்லை. ஆனாலும் அவன் உண்மையை ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையை புரிந்துகொள்ள விரும்பாத இத்தகைய அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதில்லை. நம்ரூதுகள் ஷைத்தான்களால் வழிநடத்திச் செல்லப்படுகிறார்கள். அவர்கள் அவர்களை வெவ்வேறு வகையான இருள்களுக்குள் ஓட்டிச் செல்கிறார்கள்.

أَوْ كَالَّذِي مَرَّ عَلى قَرْيَةٍ وَهِيَ خاوِيَةٌ عَلى عُرُوشِها قالَ أَنَّى يُحْيِي هذِهِ اللَّهُ بَعْدَ مَوْتِها فَأَماتَهُ اللَّهُ مِائَةَ عامٍ ثُمَّ بَعَثَهُ قالَ كَمْ لَبِثْتَ قالَ لَبِثْتُ يَوْماً أَوْ بَعْضَ يَوْمٍ قالَ بَلْ لَبِثْتَ مِائَةَ عامٍ فَانْظُرْ إِلى طَعامِكَ وَشَرابِكَ لَمْ يَتَسَنَّهْ وَانْظُرْ إِلى حِمارِكَ وَلِنَجْعَلَكَ آيَةً لِلنَّاسِ وَانْظُرْ إِلَى الْعِظامِ كَيْفَ نُنْشِزُها ثُمَّ نَكْسُوها لَحْماً فَلَمَّا تَبَيَّنَ لَهُ قالَ أَعْلَمُ أَنَّ اللَّهَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيرٌ 

 2:259. “அல்லது அடியோடு அழிந்துவிட்ட ஒரு ஊரினைக் கடந்துசென்ற ஒருவரை உதாரணமாகக் கொள்ளுங்கள். “அழிந்துவிட்ட பிறகு அல்லாஹ் இந்த ஊரினை எவ்வாறு மீண்டும் உயிர்ப்பிப்பான்” என்று அவர் கேட்டார். ஆகவே அல்லாஹ் நூறு ஆண்டுகள்வரை அவரை மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை மீண்டும் எழுப்பி, “நீர் எவ்வளவு காலம் இவ்வாறு இருந்தீர்?” என்று கேட்டான். அதற்கு அவர், “ஒருநாள் அல்லது ஒருநாளுக்கும் சற்றுக் குறைவாக” என்றார். “இல்லை. நீர் நூறு ஆண்டுகள்வரை இவ்வாறு இருந்தீர். இப்போது உமது உணவையும் பானத்தையும் பாரும். அவை கெட்டுவிடவில்லை. உமது கழுதையைப் பாரும். உம்மை மக்களுக்கு ஒரு சான்றாக ஆக்குவதற்காகவே இவ்வாறு செய்தோம். அதன் எலும்புகளை நாம் எவ்வாறு ஒன்றுசேர்த்து அதன்மீது தசையைப் போர்த்துகின்றோம் என்பதைப் பாரும்” என்று அல்லாஹ் கூறினான். ஆகவே அவருக்குத் தெளிவாகிவிட்டபிறகு அவர் கூறினார், “நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின்மீதும் பேராற்றலுடையவன் என்பதை நான் அறிகிறேன்.”

அல்லாஹ் நம்பிக்கையாளர்களை எவ்வாறு வழிநடத்துகிறான், எவ்வாறு அவர்களுக்கு மனத்தெளிவையும் உறுதியான நம்பிக்கையையும் அளிக்கிறான் என்பதற்கு மற்றுமொரு உதாரணம் இந்த வசனத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. இந்த வசனத்திலும் அந்த மனிதரின் பெயரோ நிகழ்ந்த காலகட்டமோ இடமோ குறிப்பிடப்படவில்லை. இந்த சம்பவத்தின் வழியாக வாழ்வையும் மரணத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அல்லாஹ்வின் பேராற்றல் தெளிவுபடுத்தப்படுகிறது.

அந்த மனிதர் ஒரு நபியாக அல்லது நல்லடியாராக இருக்கலாம். வசனத்தைக் கவனித்துப் பார்க்கும்போது அவர் நபியாக இருப்பதற்கே வாய்ப்பு அதிகம். அவர் அழிந்து விட்ட ஓர் ஊரினை கடந்து செல்கிறார். ஏதோ ஒரு காரணத்தினால் அந்த ஊரும் அங்குள்ளவர்களும் அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அந்த ஊர் வெறிச்சோடி அழிக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. அந்த ஊரை கடந்து செல்லும்போது அவருக்கு அந்த எண்ணம் எழுகிறது. எப்படி அல்லாஹ் இந்த ஊரை, இந்த ஊரிலுள்ளவர்களை உயிர்கொடுத்து எழுப்புவான்? இந்த ஊர் முற்றிலும் அழிக்கப்பட்டு விட்டதே! அவருக்கு எழுந்த இந்த கேள்வி சந்தேகத்தினால் ஏற்பட்ட கேள்வி அல்ல. அது ஆச்சரியத்தினால் ஏற்பட்ட கேள்வி. அவர் வியப்பு மேலிட அந்தக் கேள்வியை தனக்குத் தானே கேட்டிருக்கலாம்.

அல்லாஹ் அவரை நூறு வருடங்கள்வரை மரணிக்கச் செய்தான். பிறகு அவரை உயிர்கொடுத்து எழுப்பினான். நீர் எத்தனை காலம்வரை இங்கு தங்கி இருந்தீர் என்று அவரிடம் கேட்டான். அவர் கூறினார்: “ஒரு நாள் அல்லது நாளின் சில பகுதிவரை நான் இங்கு தங்கியிருக்கலாம்.” தூக்கமும் மரணத்தின் ஒரு பகுதிதான். நீண்ட தூக்கம்கூட காலத்தை மறக்கடிக்கச் செய்யும் ஆற்றலுடையது. ஒருவரின் உயிர் கைப்பற்றப்பட்டு விட்டால் அவருக்கும் மறுமை நாளுக்குமான தூரத்தை அவரால் உணரவே முடியாது. இரவில் தூங்கி அதிகாலையில் எழுவதைப் போலத்தான் அவரும் எழுப்பப்படுவார். நூறு வருடங்கள் தூங்கியும் அவரால் அவரை உணர முடியவில்லை. அவர் கொண்டு வந்த உணவும் பானமும் அப்படியே கெட்டு விடாமல் இருந்தன. உணவும் பானமும் எளிதில் கெட்டுவிடக்கூடியவை. ஆனால் அவை நூறு வருடங்கள்வரை அப்படியே மாறாமல் இருந்தன. அவருடைய கழுதை இறந்து மண்ணோடு மண்ணாக ஆகிவிட்டிருந்தது. அல்லாஹ் அவரது கண்முன்னால் அவரது கழுதையின் எலும்புகளை ஒன்றுசேர்த்தான். பிறகு தசைகளைக் கொண்டு அவற்றைப் போர்த்தி அதற்கு உயிர்கொடுத்தான். இவையனைத்தையும் கண்கூடாகக் கண்ட பின்னர் எவ்வித சந்தேகத்திற்கும் இடமில்லாத உறுதியான அறிவைப் பெறுகிறார்.

அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு உறுதியான அறிதலை வழங்குகிறான். அவன் தன் தூதர்களுக்கு இந்த உறுதியான அறிதலை வழங்குகிறான். யாரைக் கொண்டு அவன் தன் மார்க்கத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்று நாடுகிறானோ அவர்களுக்கும் அவன் இந்த உறுதியான அறிதலை வழங்குகிறான். இத்தகைய உறுதியான அறிதலைப் பெற்றவர்கள்தாம் மக்களுக்கு சான்றாக மாறுகிறார்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் சொற்களும் செயல்களும் மக்களின் சந்தேகங்களைப் போக்கி அவர்களை மனத்தெளிவோடு நேர்வழியில் செல்லக்கூடியவர்களாக ஆக்கி விடுகின்றன.

وَإِذْ قالَ إِبْراهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِ الْمَوْتى قالَ أَوَلَمْ تُؤْمِنْ قالَ بَلى وَلكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَصُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءاً ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْياً وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ

2:260. “என் இறைவனே! நீ இறந்தவர்களை எவ்வாறு உயிர்ப்பிக்கின்றாய் என்பதை எனக்குக் காட்டுவாயாக” என்று இப்ராஹீம் கூறியபோது, “நீர் நம்பவில்லையா?” என்று அவன் கேட்டான். அதற்கு அவர், “நிச்சயமாக நான் நம்புகிறேன். ஆயினும் என் மனம் அமைதியடைவதற்காகவே இவ்வாறு கேட்கிறேன்” என்றார். அவன், “நீர் நான்கு பறவைகளைப் பிடித்து அவற்றை அறுத்து பின்னர் அவற்றின் ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொரு மலையில் வைத்துவிட்டு பின்னர் அவற்றை கூப்பிடும். அவை உம்மிடம் விரைந்தோடி வரும். அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம்மிக்கவனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளும்.”

இது இப்ராஹீம் நபி அவர்களின் ஆரம்ப காலத்தில் நிகழ்ந்த சம்பவமாக இருக்கலாம். அறிதலின் உயர்நிலையை, எந்த சந்தேகத்திற்கும் இடமில்லாத உறுதியான அறிதலை, மனத்தெளிவை வேண்டி அவர் இந்த கோரிக்கையை அல்லாஹ்விடம் முன்வைத்திருக்கலாம். இதைத்தான் திருக்குர்ஆன் உள்ளம் விசாலமடைதல் என்னும் சொல்லாடலைக் கொண்டு குறிப்பிடுகிறது. இது சந்தேகத்தினால் ஏற்பட்ட கேள்வி அல்ல.

செய்யத் குதுப் இந்த உணர்வை பின்வருமாறு வர்ணிக்கிறார்: “இது அல்லாஹ் ஏற்படுத்திய இரகசியத்தை அறிவதற்கான ஆர்வம். பொறுமையாளராகவும் இறைவனின் பக்கம் அதிகம் மீளக்கூடியவராகவும் நம்பிக்கையாளராகவும் திருப்தியடைந்தவராகவும் வணக்கசாலியாகவும் இறைவனுக்கு நெருக்கமானவராகவும் அவனுடைய உற்ற நண்பராகவும் இருந்த இப்ராஹீமிருந்து வெளிப்பட்ட ஆவல் இது. சில சமயங்களில் இறைவனுக்கு நெருக்கமான அடியார்களின் உள்ளத்தில் ஏற்படுகின்ற அவன் ஏற்படுத்திய இரகசியங்களைக் காண வேண்டும் என்ற ஆசைதான் இப்ராஹீமுக்கும் ஏற்பட்டது. இந்த ஆவல் ஈமானின் இருப்பு, அதன் பரிபூரணம், உறுதி ஆகியவற்றோடு தொடர்புடையதல்ல. அது ஆதாரத்தை வேண்டியோ ஈமானை உறுதிப்படுத்தும் பொருட்டோ விடுக்கப்பட்ட கோரிக்கை அல்ல. நிச்சயமாக இது வேறொரு விசயமாகும். அது இறைவனின் இரகசியத்தை அது நிகழும்போது அறிய வேண்டும் என்ற ஆன்மாவின் ஆசை. மனிதனிடம் இந்த அனுபவம் ஏற்படுத்தும் உணர்வு வேறு. மறைவானவற்றின்மீது நம்பிக்கைகொள்வதால் ஏற்படும் உணர்வு வேறு. இப்ராஹீம் தம் இறைவனிடம் பேசினார். அவனும் அவருக்குப் பதிலளித்தான். இதற்குப் பிறகும் ஈமான் கொள்வதற்கு வேறு என்ன ஆதாரம் தேவையிருக்கிறது! ஆனால் இப்ராஹீம் இங்கு வேண்டுவது இறைவனின் ஆற்றல் செயல்படுவதை காண வேண்டும் என. அதன்மூலம் நிம்மதியடைய, அதன் சூழலில் திருப்தியடைய அவர் விரும்பினார். இதுவேறு ஈமான் வேறு.”

நான்கு பறவைகளை எடுத்து அவற்றை பழக்கி பிறகு அவற்றை அறுத்து துண்டு துண்டுகளாக்கி அவற்றை நான்கு புறமும் உள்ள மலைகளில் வைக்குமாறு அவன் கட்டளையிட்டான். பிறகு அவர் அழைத்தபோது துண்டு துண்டுகளாகப்பட்டு ஒவ்வொரு மலையிலும் வைக்கப்பட்டிருந்த அவற்றின் பகுதிகள் ஒன்றிணைந்து பறவைகளாக மாறி அவை அவரிடம் வந்தன. அவை எப்படி ஒன்றிணைந்தன? அவற்றில் உயிர் எப்படி ஊடுருவியது? மனிதர்களால் அறிய முடியாத இரகசியம். அல்லாஹ்வின் கட்டளையினால் நிகழக்கூடிய ஒன்று.

ஒன்றில் உயிர் ஊடுருவுவதையும் ஒன்றிலிருந்து உயிர் பறிக்கப்படுவதையும் காணும் மனிதன் ஆச்சரியப்பட்டு, திகைப்படைந்து நிற்பான். ஒரு மனிதனை அல்லாஹ்வின் பக்கம், ஆன்மீகத்தின் பக்கம் திருப்பக்கூடிய நிகழ்வுகளில் பிறப்பும் இறப்பும் முதன்மையானவை.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply