தூதர்கள் அவனுடைய தூதை சுமந்து வந்தவர்கள். அவர்களில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான தனித்தன்மையைக் கொண்டவர்கள். அந்த தனித்தன்மைகள் அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பணிகளுக்கேற்ப, அவர்களின் காலகட்டத்திற்கேற்ப அவர்களுக்கு வழங்கப்பட்டவையாகும். அவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டப்படக்கூடாது. அவர்கள் கொண்டு வந்த மார்க்கம் ஒன்றுதான். அவர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டுவதும் சிலரை ஏற்றுக்கொண்டு சிலரை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் வடிகட்டிய அறியாமையேயாகும்.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ وَلَوْ شَاءَ اللهُ مَا اقْتَتَلَ الَّذِينَ مِنْ بَعْدِهِمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمُ الْبَيِّنَاتُ وَلَكِنِ اخْتَلَفُوا فَمِنْهُمْ مَنْ آمَنَ وَمِنْهُمْ مَنْ كَفَرَ وَلَوْ شَاءَ اللهُ مَا اقْتَتَلُوا وَلَكِنَّ اللهَ يَفْعَلُ مَا يُرِيدُ
2:253. “அந்த தூதர்களில் சிலரை சிலரைவிட நாம் சிறப்பித்துள்ளோம். அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; சிலருடைய படித்தரத்தை உயர்த்தி இருக்கின்றான். நாம் மர்யமின் மகன் ஈசாவுக்கு தெளிவான சான்றுகளை வழங்கினோம். தூய ஆன்மாவைக் கொண்டு அவரை பலப்படுத்தினோம். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்குப் பின்வந்தவர்கள் தெளிவான ஆதாரங்கள் வந்தபின்னரும் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அவர்கள் கருத்து முரண்பட்டார்கள். அவர்களில் சிலர் நம்பிக்கைகொண்டனர், சிலர் நிராகரித்தனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆயினும் அல்லாஹ் தான் நாடுவதையே செய்கிறான்.”
நிச்சயமாக நீர் தூதர்களில் உள்ளவராவீர் என்ற வாசகத்தின் தொடர்ச்சியாக இந்த வசனம் இடம்பெறுகிறது. அவர்களில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான சிறப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலருடன் அல்லாஹ் நேரடியாகப் பேசியிருக்கின்றான். பொதுவாக அல்லாஹ் வானவர் ஜிப்ரீல் வழியாகத்தான் தூதர்களுக்கு வஹி அனுப்புகிறான். அவன் நேரடியாகப் பேசுவது அவர்களுக்கு அளிக்கும் சிறப்பு. உதாரணமாக, அல்லாஹ் மூசாவுடன் அவ்வாறு பேசியிருக்கின்றான். சிலருக்கு யாருக்கும் வழங்காத உயர்ந்த படித்தரங்களை வழங்கியிருக்கிறான். உதாரணமாக, முஹம்மது நபியவர்கள் மறுமை நாள்வரை வரக்கூடிய மனிதர்கள் அனைவருக்குமான தூதராகவும் இறுதித் தூதராகவும் அனுப்பப்பட்டது, இந்தக் குர்ஆன் என்னும் மாபெரும் அற்புதம் அவர்கள் வழியாக மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டது, தாவூதுக்கு அரசாட்சியையும் ஞானத்தையும் ஒருசேர வழங்கியது, யாருக்கும் வழங்கப்படாத தெளிவான சான்றுகளைக் கொண்டு மர்யமின் மகன் ஈசா அனுப்பப்பட்டது, ஜிப்ரீல் என்னும் பரிசுத்த ஆன்மாவைக் கொண்டு அவர் வலுப்படுத்தப்பட்டது…
ஈசாவுக்கு வழங்கப்பட்ட தனித்தன்மைகளை, அற்புதங்களை ஆதாரமாகக் கொண்டு கிருஸ்தவர்கள் மற்ற தூதர்கள் அனைவரைக் காட்டிலும் அவரை உயர்ந்தவராக, இறைவனின் மகனாக ஆக்கி விட்டார்கள். எங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் எங்களுக்குப் போதுமானவர்கள். நாங்கள் எங்கள் இனத்தைத் தவிர மற்ற இனத்தில் வந்த தூதரை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறினார்கள் யூதர்கள். தூதர்களுக்கு வழங்கப்பட்ட இந்த தனித்தன்மைகள் அவர்களுக்கு மத்தியில் உயர்வு, தாழ்வு காட்டப்படுவதற்காக அல்ல. அதற்குப் பின்னால் அல்லாஹ் உன்னதமான நோக்கம் மறைந்திருக்கிறது.
இந்த யூதர்களும் கிருஸ்தவர்களும் என்ன செய்தார்கள்? தங்களின் தூதர்கள் கொண்டு வந்த வழிகாட்டல்களை அப்படியே பின்பற்றினார்களா? அவர்களின் தூதர்கள் அவர்களிடம் தெளிவான ஆதாரங்களைக் கொண்டு வந்தார்கள். பிறகு ஏன் அவர்கள் கருத்து முரண்பட்டு தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டார்கள்? அவர்களுக்கு மத்தியில் காணப்பட்ட பொறாமையும் காழ்ப்பும்தான் அவர்களை முரண்படச் செய்தன. அல்லாஹ் அவர்களுக்கு வழங்கிய சுதந்திரத்தை அவர்கள் தவறாகப் பயன்படுத்தினார்கள். அவர்கள் முரண்பட்டு வழிகெட்டுச் சென்றதற்கு அவர்கள்தாம் காரணம். அல்லாஹ் யாரையும் நிர்ப்பந்திப்பதில்லை. யாரை எதை விரும்புகிறாரோ அவருக்கு அந்தப் பாதை இலகுபடுத்தப்படும். தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை சரியான வழியில் பயன்படுத்தியவர்கள் நேரான வழியை அடைந்தார்கள். தங்களுக்கு வழங்கப்பட்ட சுதந்திரத்தை தங்களின் இச்சைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைத்துக் கொண்டவர்கள் வழிகெட்டு நேரான வழியிலிருந்து விலகிச் சென்றார்கள். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு முரண்பட்டு சண்டையிட்டிருக்க மாட்டார்கள். ஆனால் அல்லாஹ் யாரையும் நிர்ப்பந்திக்க விரும்பவில்லை. ஆனாலும் அவனுடைய நாட்டத்தில் யாரும் தலையிட முடியாது. அவன் தான் நாடியதையே செய்கிறான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ يَوْمٌ لَا بَيْعٌ فِيهِ وَلَا خُلَّةٌ وَلَا شَفَاعَةٌ وَالْكَافِرُونَ هُمُ الظَّالِمُونَ
2:254. “நம்பிக்கையாளர்களே! எந்த விதமான கொடுக்கல் வாங்கலும் நட்பும் பரிந்துரையும் பயனளிக்காத அந்த நாள் வருவதற்கு முன்னரே நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்யுங்கள். நிராகரிப்பவர்கள்தாம் அநியாயக்காரர்களாவர்.”
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது தொடர்பாக முந்தைய 245ஆவது வசனத்தில் ஆர்வமூட்டப்பட்டிருந்தது. அவனுடைய பாதையில் செலவு செய்வது அவனுக்கு அளிக்கும் கடனாகும் என்றும் அந்த கடனை அவன் பலமடங்காகத் திருப்பித் தருவான் என்றும் வாக்குறுதி வழங்கப்பட்டது. இந்த வசனத்தில் அச்சமூட்டும் தொனியில் செலவு செய்யுங்கள் என்று நம்பிக்கையாளர்களுக்குக் கட்டளை இடப்படுகிறது. மனிதர்களில் சிலருக்கு ஆர்வமூட்டல் போதுமானது. அது அவர்களை செயல்படத் தூண்டும். இன்னும் சிலருக்கு அச்சமூட்டலும் அவசியமாகிறது. திருக்குர்ஆன் இந்த இரு வழிமுறைகளையும் ஒருசேர பயன்படுத்துகிறது.
‘நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து’ உங்களிடம் இருப்பது நாம் உங்களுக்கு வழங்கியவையே. அவை நீங்கள் சம்பாதித்தவை அல்ல. நாம் வழங்கியவை அனைத்தையும் நீங்கள் இந்தப் பாதையில் செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. அவற்றிலிருந்து சிலவற்றை செலவு செய்யுங்கள். உங்களுக்கு நாம் வழங்கிய செல்வம் மறுமை நாளில் பயன்பட வேண்டும் எனில் நீங்கள் செலவு செய்யுங்கள். உங்களிடம் இருக்கும் இந்த செல்வத்தைக் கொண்டு நீங்கள் இம்மையிலும் மறுமையிலும் பயன்பெற விரும்பினால் இதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை. உங்களின் கொடுக்கல் வாங்கல் இந்த உலகில் உங்களுக்குப் பயனளிக்கலாம். மறுமையில் அதனால் எந்தப் பயனும் இல்லை. உங்களின் நெருங்கிய நட்பு இந்த உலகில் உங்களுக்குப் பயனளிக்கலாம். அதனால் மறுமையில் எந்தப் பயனும் இல்லை. பெரிய மனிதர்களின் பரிந்துரையைக் கொண்டு நீங்கள் இங்கு பெற விரும்பியதைப் பெறலாம், தப்பிக்க வேண்டியதிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் மறுமை நாளில் யாருடைய பரிந்துரையைக் கொண்டும் நீங்கள் எதையும் பெற முடியாது, தண்டனையிலிருந்தும் தப்ப முடியாது. இந்த உலகில் ஈமானுடன் நீங்கள் செய்யும் நற்செயல்கள்தாம் அந்த நாளில் உங்களுக்குப் பயனளிக்கும். ஆகவே உங்களிடம் இருக்கும் செல்வங்களில் சிலவற்றை அவனுடைய பாதையில் தயங்காமல் செலவு செய்யுங்கள்.
அந்த நாள் நிலைபெறுவதை யார் நம்பவில்லையோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள். மறுமைநாளின் மீது நம்பிக்கை அற்றவர்களே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் செல்வங்களை சேர்த்து வைக்கிறார்கள். அவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள்.
இந்த வசனத்தில் வந்துள்ள காஃபிர்கள் என்ற வார்த்தைக்கு நன்றிகெட்டவர்கள் என்றும் மொழிபெயர்க்கலாம். தங்களிடம் செல்வம் இருந்தும் யார் அவற்றிலிருந்து அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யாமல் சேர்த்து வைக்கிறார்களோ அவர்கள் நன்றிகெட்டவர்கள் ஆவர். அல்லாஹ் அவர்களுக்கு அளித்த செல்வத்தை அவர்கள் அவனுடைய பாதையில் செலவு செய்யாமல் நன்றிகெட்டத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்கள் இதன்மூலம் தங்களுக்குத் தாங்களே அநீதி இழைத்துக் கொள்கிறார்கள்.
முஸ்லிம் செல்வந்தர்கள் யோசிக்க வேண்டிய இடம் இது. இஸ்லாத்தின் போதனைகள் மறக்கடிக்கப்படும்போது, இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் பரப்பப்படும்போது, ஷைத்தானியம் நாலாபுறமும் பரவி மனிதர்களை வழிகெடுத்துக் கொண்டிருக்கும்போது இஸ்லாத்தின் போதனைகளை பரப்புவதற்காக, திருக்குர்ஆனை தெளிவான வடிவில் எடுத்துரைப்பதற்காக அவர்கள் தங்கள் செல்வங்களிலிருந்து குறிப்பிட்ட ஒரு பகுதியை செலவு செய்ய வேண்டியிருக்கிறது. இது அவர்களின் மீது கட்டாயக் கடமையாக இருக்கிறது. அவர்கள் கண்டும் காணாமல் தங்களின் நலன்களுக்காக மட்டுமே அந்த செல்வங்களை செலவு செய்தால் அவர்கள் நன்றிகெட்டவர்கள் ஆவர்.
