உங்களுக்காக சேர்த்து வையுங்கள்

You are currently viewing உங்களுக்காக சேர்த்து வையுங்கள்

திருமணம் தொடர்பான பேச்சு தொடங்கிய பிறகு பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் குறித்த கேள்விக்கு பதிலளிக்கப்படுகிறது. அந்தப் பதிலின்மூலம் சமூகத்தில் அது தொடர்பாகப் பரவியிருந்த பிழையான நம்பிக்கைகள் நீக்கப்படுகின்றன. அடுத்தடுத்த வசனங்களில் இடம்பெறப் போகும் விவகாரத்து தொடர்பான விசயங்களுக்கும் அந்தப் பதில் அவசியமானதாக இருக்கிறது.   

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللهُ إِنَّ اللهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ نِسَاؤُكُمْ حَرْثٌ لَكُمْ فَأْتُوا حَرْثَكُمْ أَنَّى شِئْتُمْ وَقَدِّمُوا لِأَنْفُسِكُمْ وَاتَّقُوا اللهَ وَاعْلَمُوا أَنَّكُمْ مُلَاقُوهُ وَبَشِّرِ الْمُؤْمِنِينَ         

2:222,223. “அவர்கள் உம்மிடம் மாதவிடாய் குறித்துக் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அது அசுத்தமாகும். அச்சமயங்களில் பெண்களைவிட்டு விலகியிருங்கள். அவர்கள் தூய்மையடையும்வரை அவர்களை நெருங்க வேண்டாம். அவர்கள் தூய்மையடைந்துவிட்டால் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிட்டவாறு அவர்களிடம் செல்லுங்கள். பாவமன்னிப்புக் கோருபவர்களையும் தூய்மையாக இருப்பவர்களையும் அல்லாஹ் விரும்புகிறான். உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். ஆகவே உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள். உங்களுக்காக முற்படுத்திவையுங்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயம் நீங்கள் அவனை சந்தித்தே தீர வேண்டும் என்பதை அறிந்துகொள்ளுங்கள். நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தி கூறுவீராக.”

யூதர்கள் மாதவிடாய் பெண்களை தீட்டாகக் கருதி வந்தார்கள். அவர்களைத் தொடுவது, அவர்களுடன் சேர்ந்து உணவருந்துவது, அவர்களின் ஆடையைத் தொடுவது, அவர்கள் பயன்படுத்திய பொருள்களைப் பயன்படுத்துவது… என ஒவ்வொன்றிலிருந்தும் அவர்கள் விலகியிருந்தார்கள். அன்றைய அறபுக்களும் கிட்டத்தட்ட இதே வகையான கண்ணோட்டங்களையே கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்களில் சிலர் அதற்கு மாறான நிலைப்பாடுகளையும் கொண்டிருந்தார்கள். அந்த சமயங்களில்கூட அவர்களுடன் உடலுறவு கொள்பவர்களும் அவர்களில் இருந்தார்கள். யூதர்கள் கடும்போக்குடன் நடந்து கொண்டார்கள் என்றால் கிருஸ்தவர்கள் இந்த விசயத்தில் மிகுந்த அலட்சியப்போக்குடன் நடந்து கொண்டார்கள். அந்தச் சமயங்களில் உறவு கொள்வதைக்கூட அவர்கள் தவறெனக் கருதவில்லை. கிட்டத்தட்ட இன்றும் உலகம் முழுவதும் இந்த இரு வேறு நிலைப்பாடுகளும் காணப்படத்தான் செய்கின்றன.

திருக்குர்ஆன் அது குறித்த சரியான, நடுநிலையான நிலைப்பாட்டை முஸ்லிம்களுக்குத் தெளிவுபடுத்துகிறது. உண்மையில் அது அசுத்தமான நிலைதான். அந்தச் சமயத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள். ஆனால் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதில், அவர்களும் நீங்களும் ஒரு பொருளைப் பயன்படுத்துவதில் எந்தத் தவறும் இல்லை. உடலுறவு கொள்வது மட்டும்தான் தடுக்கப்பட்டுள்ளதே தவிர வேறு எதுவும் தடுக்கப்படவில்லை. அவர்களைத் தீட்டாகக் கருதாதீர்கள். அவர்கள் அந்த இரத்தப்போக்கிலிருந்து விடுபட்டு தூய்மையடையும்வரை காத்திருங்கள். அவர்கள் தூய்மையடைந்து விட்டால் அல்லாஹ் கட்டளையிட்டவாறு அவர்களுடன் உறவு கொள்ளுங்கள். அவர்களுடன் உறவு கொள்ள வேண்டிய முறைப்படி உறவு கொள்ளுங்கள். அவன் அமைத்த இயற்கையான அமைப்புக்கு மாறாக உறவு கொள்ளாதீர்கள்.

இந்த வசனம் விசித்திரமான, இயற்கைக்கு மாறான பாலியல் வழக்கங்கள் அனைத்தையும் தடை செய்கிறது. மனித சமூகத்தைப் பாதுகாக்கவும் பெருக்கவும்தான் அல்லாஹ் மனிதர்களுக்கு காம இச்சைகளை, பாலியல் விழைவுகளை வழங்கியுள்ளான். அவை வெறுமனே அனுபவித்தலை மட்டும் நோக்கமாகக் கொண்டவை அல்ல.

தவ்வாபீன் என்ற வார்த்தை உளரீதியான அகத்தூய்மையைக் குறிக்கிறது. முத்தஹ்ஹிரீன் என்ற வார்த்தை உடல்ரீதியான புறத்தூய்மையைக் குறிக்கிறது. உள்ளும் புறமும் யார் தூய்மையாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். மாதவிடாய் சமயங்களில் பெண்களுடன் உறவு கொள்பவர்கள், இயற்கைக்கு மாறான விசித்திரமான பாலியல் வழக்கங்களைக் கொண்டிருப்பவர்கள் உளரீதியாக அசுத்தமடைந்தவர்கள் ஆவர். அவர்கள் அல்லாஹ்வின் வெறுப்புக்கு ஆளாவார்கள்.  

“உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். ஆகவே உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள்”

கணவன், மனைவிக்கான தொடர்பை அற்புதமான முறையில் சித்தரிக்கும் சொல்லாடல் இது. உங்கள் மனைவியர் உங்கள் விளைநிலங்களாவர். பொருத்தமான சமயத்தில் அதில் பயிரிடுங்கள். பயிரிடுவதற்கு உகந்த சூழல் இல்லாத சமயத்தில் அதில் பயிரிடாதீர்கள். மாதவிடாய் சமயத்தில் அவர்களுடன் உடலுறவு கொள்வது அவர்களைத் துன்புறுத்துவதும் உங்கள் ஆற்றலை வீணடிப்பதும் ஆகும்.

உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லுங்கள். தேவையற்ற கட்டுப்பாடுகளை நீங்கள் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு செல்லும் சுதந்திரம் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த சுதந்திரத்தைப் பயன்படுத்தி உங்கள் விளைநிலங்களை நாசம் செய்து விடாதீர்கள். அந்த விளைநிலங்களில் உங்களுக்குப் பயனளிப்பவற்றை பயிரிடுங்கள். உங்கள் எதிர்காலத்திற்குத் தேவையானதை சேகரித்துக் கொள்ளுங்கள்.

குழந்தைச் செல்வங்கள் இந்த உலகின் மிக உயர்ந்த செல்வங்கள். மறுமையிலும் பயனளிக்கும் செல்வங்கள். ஒரு மனிதன் தன் சந்ததியின் வழியாகவே இவ்வுலகில் நீடிக்கிறான். அவன் இங்கிருந்து பயணிக்கும்போது அவன் செய்து கொண்டிருந்த பணிகளைத் தொடரும், அவனுக்காக பிரார்த்தனை செய்யும் சந்ததியை விட்டுவிட்டுச் செல்கிறான். அவனுடைய சந்ததியினர் அவன் தனக்காக சேர்த்து வைத்திருக்கும் பெரும் செல்வங்கள் ஆவர்.

இந்த வசனத்திலிருந்து நமக்குத் தெரிய வரும் அடிப்படையான விசயம், பெண்கள் குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொள்வது அவசியமற்ற, திருக்குர்ஆன் கூறும் நோக்கத்தை சிதைக்கும் அந்நியமான ஒன்று. ஆண், பெண் தொடர்பின் அசலான நோக்கமே மனித சமூகம் பல்கிப் பெருகுவதுதான். அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உடலின்பம் இந்த பெரும் நோக்கத்திற்காகவே வழங்கப்பட்டுள்ளது. நோக்கத்தை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் செயல்பாடுகள் வேறு வகையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

அல்லாஹ் விதித்த இந்த கட்டளைகளை பேணிக் கொள்ளுங்கள். உள்ளும் புறமும் தக்வாவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் நிச்சயம் அவனை சந்திக்க வேண்டும் என்பதையும் உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் அவனிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றும் நம்பிக்கையாளர்களுக்கு நீர் நற்செய்தி கூறுவீராக.

وَلَا تَجْعَلُوا اللهَ عُرْضَةً لِأَيْمَانِكُمْ أَنْ تَبَرُّوا وَتَتَّقُوا وَتُصْلِحُوا بَيْنَ النَّاسِ وَاللهُ سَمِيعٌ عَلِيمٌ لَا يُؤَاخِذُكُمُ اللهُ بِاللَّغْوِ فِي أَيْمَانِكُمْ وَلَكِنْ يُؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوبُكُمْ وَاللهُ غَفُورٌ حَلِيمٌ لِلَّذِينَ يُؤْلُونَ مِنْ نِسَائِهِمْ تَرَبُّصُ أَرْبَعَةِ أَشْهُرٍ فَإِنْ فَاءُوا فَإِنَّ اللهَ غَفُورٌ رَحِيمٌ وَإِنْ عَزَمُوا الطَّلَاقَ فَإِنَّ اللهَ سَمِيعٌ عَلِيمٌ

2:224-226. “நன்மை செய்வதற்கும் தக்வாவைக் கடைப்பிடிப்பதற்கும் மக்களிடையே சமாதானம் ஏற்படுத்துவதற்கும் தடையாக நீங்கள் செய்யும் சத்தியங்களுக்கு அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தாதீர்கள். அவன் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். நீங்கள் செய்யும் அர்த்தமற்ற சத்தியங்களுக்காக அவன் உங்களைக் குற்றம்பிடிக்க மாட்டான். ஆனால் உளப்பூர்வமாக நீங்கள் செய்யும் சத்தியங்களுக்காக உங்களைக் குற்றம்பிடிப்பான். அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் சகிப்புத்தன்மையுடையவனாகவும் இருக்கின்றான். தங்கள் மனைவியருடன் சேருவதில்லை என்று சத்தியம் செய்து விலகியிருப்பவர்களுக்கு நான்கு மாதங்கள்வரை அவகாசம் உண்டு. பின்னர் அவர்கள் திரும்பிவிட்டால் அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான். ஆனால் அவர்கள் விவாகரத்துச் செய்ய தீர்மானித்து விட்டால், நிச்சயமாக அல்லாஹ் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.”      

இங்கிருந்து விவகாரத்து தொடர்பான விவகாரம் தொடங்குகிறது. இந்த வசனமும் இதற்கு முந்தைய வசனங்களும் அது தொடர்பான அடிப்படையான விசயங்களையே தெளிவுபடுத்துகின்றன. இந்த வசனங்களில் சத்தியம் செய்வது தொடர்பான அடிப்படையான விதி நிறுவப்படுகிறது. செய்த சத்தியம் பேணப்பட வேண்டும். ஆனால் தவறான ஒன்றுக்காக செய்யப்பட்ட சத்தியம் பேணப்பட வேண்டிய அவசியம் இல்லை. அது முறிக்கப்பட வேண்டும். அதற்கான பரிகாரம் நிறைவேற்றப்பட வேண்டும்.

நன்மை செய்யவும் இணக்கம் ஏற்படுத்தவும் அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்பற்றவும்தான் அவனுடைய பெயர் பயன்படுத்தப்பட வேண்டும். நன்மை செய்யாமல் இருப்பதற்கும் மக்களிடையே இணக்கம் ஏற்படுத்தாமல் இருப்பதற்கும் அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றாமல் இருப்பதற்கும் அவனுடைய பெயரைப் பயன்படுத்தி சத்தியம் செய்யக்கூடாது. ஒரு வேளை அப்படி சத்தியம் செய்தாலும் அந்த சத்தியத்தை முறித்துவிட வேண்டும். உதாரணமாக, நான் இன்ன மனிதருடன் பேச மாட்டேன் என்று சத்தியம் செய்வது, நான் இன்ன மனிதருக்கு உதவி செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்வது, கோபத்தில் என் மகனுக்கு அல்லது மகளுக்கு என் செல்வத்தை வழங்க மாட்டேன் என்று சத்தியம் செய்வது, அல்லாஹ் அனுமதித்த ஒன்றை செய்ய மாட்டேன் என்று சத்தியம் செய்வது… 

ஒரு நம்பிக்கையாளன் அதிகம் சத்தியம் செய்ய மாட்டான். அவன் அதிகமாக சத்தியம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. அவனுடைய சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் காணப்படும் ஒத்திசைவு அவனை நம்பத்தகுந்தவனாக ஆக்குகிறது. யாருடைய சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் மிகப் பெரிய இடைவெளி காணப்படுகிறதோ அவர்களே தங்களின் ஒவ்வொரு பேச்சையும் சத்தியம் செய்து நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  

அர்த்தமற்ற சத்தியங்களுக்காக அவன் உங்களை குற்றம்பிடிக்க மாட்டான். போகிற போக்கில் நாட்டமின்றி வெளிப்படும் வார்த்தைகள், கோபமான சமயத்தில் வெளிப்படும் வார்த்தைகள் ஆகியவற்றை அவன் மன்னித்து விடுவான். ஆனால் நீங்கள் உளமாற செய்யும் சத்தியங்களுக்கு நீங்கள்தான் பொறுப்பு. அந்த சத்தியங்களை நீங்கள் நிறைவேற்றியாக வேண்டும். ஆனால் அவை தவறானவையாக இருந்தால் அவற்றை நீங்கள் முறித்துவிட வேண்டும். அதற்கான பரிகாரங்களைச் செய்ய வேண்டும்.

மனைவியுடன் உறவுகொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்வது அன்றைய அறபுக்களிடத்தில் பரவியிருந்த ஒரு தவறான வழிமுறை. அவ்வாறு சத்தியம் செய்து விட்டால் உறவும் கொள்ள மாட்டார்கள். விவாகரத்தும் செய்ய மாட்டார்கள். இது பெண்களின் மீது இழைக்கப்பட்ட மாபெரும் அநீதியாக இருந்தது. அவர்கள் அங்கும் இன்றி இங்கும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் விட்டுவிடப்பட்டார்கள். இந்த வசனத்தில் திருக்குர்ஆன் இதற்கான தீர்வையே முன்வைக்கிறது. அவ்வாறு சத்தியம் செய்யப்பட்ட பெண்கள் நான்கு மாதங்கள்வரை காத்திருக்க வேண்டும். இந்த நான்கு மாத கால இடைவெளியில் கணவன் தன் சத்தியத்தை முறித்து மனைவியுடன் உறவு கொண்டு விட்டால் அவர்களின் மணவாழ்வு தொடரும். நான்கு மாதங்கள் வரை உறவு கொள்ளாமல் கணவன் தன் சத்தியத்தில் உறுதியாக இருந்து விட்டால் இருவருக்கும் மத்தியில் விவாகரத்து நிகழ்ந்து விடும்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply