ஆபத்தான சூழலும் அல்லாஹ்வின் பாதுகாப்பும்

You are currently viewing ஆபத்தான சூழலும் அல்லாஹ்வின் பாதுகாப்பும்

எப்போதும் இல்லாத அளவுக்கு இஸ்லாமிய வெறுப்புத் தொழில் பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் உச்சகட்டத்தை அடைந்திருக்கிறது. வெறுப்புத் தொழிலாளர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் இஸ்லாத்தை எதிர்ப்பதற்கான காரணிகளாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு நிகழ்வும் அதற்கேற்றவாறு திரிக்கப்படுகிறது. வெவ்வெறு கோணங்களில் அந்த நிகழ்வுகள் அலசப்படுகின்றன. ஒவ்வொரு கோணத்திலும் இஸ்லாம் ஆபத்தானது என்பது மறைமுகமாக உணர்த்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது.

இந்தச் சூழல் உண்மையில் ஆபத்தான சூழல்தான். பெயரளவில் முஸ்லிம்களாக இருக்கின்றவர்கள் தாழ்வு மனப்பான்மையோடு இஸ்லாமிய அடையாளங்களை விட்டு விலக நேரிடலாம். ஆனால் இந்தச் சூழல் யாரும் எதிர்பாராத வகையில் இஸ்லாத்திற்கு சாதகமானதாகக்கூட ஆகிவிடலாம். அது தொடர்ந்து இஸ்லாம் குறித்து பேசப்படுவதற்கு வழிவகுக்கிறது. உண்மையில் தேடல் கொண்டவர்கள் அதன் பக்கம் வருவதற்கான வாய்ப்புகளும் இருக்கதான் செய்கின்றன. ஆனால் அவர்கள் திரண்டு இருக்கும் அந்த தடைகளை தாண்டி வர வேண்டும்.

தங்களை முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனைவருக்கும் இது ஒரு வகையான அழுத்தத்தையும் கொடுக்கிறது. அவர்கள் இஸ்லாத்தின் சார்பாக நின்று வாதிட வேண்டும் அல்லது இஸ்லாத்தை விட்டு விலகிச் சென்றுவிட வேண்டும். அவர்கள் இஸ்லாத்தின் சார்பாக நின்று வாதிட வேண்டுமெனில் அவர்கள் இஸ்லாத்தை, அதன் கண்ணோட்டங்களை, அதன் கொள்கையை, அதன் விழுமியங்களை, அதன் இயல்பை முறையாக கற்றிருக்க வேண்டும். வெறுமனே முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததனால், முஸ்லிம் சூழலில் இருந்ததனால் அல்லது அங்கொன்றும் இங்கொன்றுமாக கேள்விப்பட்ட செய்திகளைக் கொண்டு அவர்கள் இஸ்லாத்தின் சார்பாக வாதிடக்கூடியவர்களாக மாறிவிட முடியாது. அவ்வாறு நின்று கொண்டு பேசுவது அவர்களுக்கு கடும் பதற்றத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும். அல்லது அது இஸ்லாத்திற்கு தேவையற்ற பிரச்சனைகளை கொண்டு வந்து சேர்க்கும். அவர்கள் மௌனமாக இருப்பதே இஸ்லாத்திற்குச் செய்யும் மாபெரும் உபகாரம்.

மனிதர்கள் வழிதவறிச் செல்வதற்கும் அவர்கள் செய்த பாவங்களுக்கும் தொடர்பிருக்கிறதா? ஆம். இரண்டுக்கும் மத்தியில் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. பாவங்கள் மனிதர்களின் இயல்பைச் சிதைக்கின்றன. இயல்பு சிதைக்கப்பட்ட மனிதர்கள் சரியையும் தவறையும் பிரித்து அறியும் பக்குவத்தை இழக்கிறார்கள். இங்கிருந்துதான் அவர்களின் பார்வைக்கோணம் மாறுபடத் தொடங்குகிறது. தக்வாவுடைய வாழ்க்கை இந்த பக்குவத்தை கூர்தீட்டுகிறது. அவர்கள் கூடுதலாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து உள்ளுணர்வையும் பெறுகிறார்கள். அவர்கள் ஃபுர்கான் என்னும் உரைகல்லைப் பெறுகிறார்கள். அது ஒளியின் மீது ஒளியாக அமைந்து விடுகிறது. அவர்கள் எவ்வித சிக்கலும் இன்றி நன்மையை நன்மையென தீமையை தீமையென அறிந்து கொள்கிறார்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply