அற்புதமான நிகழ்வுகள் -1

You are currently viewing அற்புதமான நிகழ்வுகள் -1

இங்கிருந்துதான் அத்தியாயத்தின் அசலான கருப்பொருள் தொடங்குகிறது. இம்ரானின் குடும்பத்தாருடைய வரலாறு உள்ளத்தை ஈர்க்கும் அற்புதமான வகையில் எடுத்துரைக்கப்படுகிறது. அந்த வரலாற்றினூடே ஈசா நபி குறித்தும் அவரது தாயார் மர்யம் குறித்தும் கிருஸ்தவர்கள் உருவாக்கி வைத்திருந்த பிழையான நம்பிக்கைகளுக்கும் அவர்கள் முன்வைத்த ஆட்சேபனைகளுக்கும் பதிலளிக்கப்படுகிறது. இந்த உண்மையான வரலாறு தவ்ஹீதின் மீதும் ஈமானின் மீதும் படிந்திருந்த அழுக்குகள் அனைத்தையும் அப்பட்டமாக வெளிச்சமிட்டுக் காட்டி விடுகிறது. உண்மையை அடைய விரும்பும் மனம் எவ்வித மறுப்பும் இன்றி அதனை ஏற்றுக் கொள்ளும்வகையில் அது தெளிவடைந்து விடுகிறது.    

إِنَّ اللهَ اصْطَفَى آدَمَ وَنُوحًا وَآلَ إِبْرَاهِيمَ وَآلَ عِمْرَانَ عَلَى الْعَالَمِينَ ذُرِّيَّةً بَعْضُهَا مِنْ بَعْضٍ وَاللهُ سَمِيعٌ عَلِيمٌ

3:33,34. “நிச்சயமாக அல்லாஹ் ஆதமையும் நூஹையும் இப்ராஹீமின் குடும்பத்தாரையும் இம்ரானின் குடும்பத்தாரையும் உலகத்தார் அனைவரையும்விட மேலாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டான். அவர்கள் ஒருவர் மற்றவரின் வழித்தோன்றல்களாவர். அல்லாஹ் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.”

ஆதம், நூஹ், இப்ராஹீம் இந்த மூவரின் வழித்தோன்றல்களிலிருந்துதான் தூதுத்துவங்கள் அனைத்தும் உருவாயின. தூதர்கள் அனைவரும் இந்த மூவரின் வழி வந்தவர்கள்தாம். இம்ரானின் குடும்பமும் இப்ராஹீமின் குடும்பத்தில் உள்ளடங்கக்கூடியதுதான். இம்ரானுடைய குடும்பதினரைக் குறித்து இங்கு பேசப்படுவதால் அந்தக் குடும்பம் தனித்துவமாக குறிப்பிடப்படுகிறது. அதன்மூலம் அந்த குடும்பத்தில் இருந்து வந்தவர்களும் மற்ற தூதர்களைப் போன்ற தூதர்கள்தாம் என்ற கருத்து மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து ஒரே வகையான தூதுத்துவத்தையே கொண்டு வந்தார்கள். அவர்கள் ஒருவரையொருவர் வலுப்படுத்தக்கூடியவர்கள். அவர்களுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் அவர்கள் அல்லாஹ்வினால் இந்த தூதுத்துவ பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். இந்த வகையில் அவர்கள் மற்ற மனிதர்களைவிட பெரும் பாக்கியமும் சிறப்பும் வழங்கப்பட்டவர்கள். இந்தப் பணிக்குத் தகுதியானவர்களையே அவன் தெரிவு செய்துள்ளான். அவன் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன்.      

إِذْ قَالَتِ امْرَأَةُ عِمْرَانَ رَبِّ إِنِّي نَذَرْتُ لَكَ مَا فِي بَطْنِي مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّي إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّي وَضَعْتُهَا أُنْثَى وَاللهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ الذَّكَرُ كَالْأُنْثَى وَإِنِّي سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّي أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنْبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا الْمِحْرَابَ وَجَدَ عِنْدَهَا رِزْقًا قَالَ يَامَرْيَمُ أَنَّى لَكِ هَذَا قَالَتْ هُوَ مِنْ عِنْدِ اللهِ إِنَّ اللهَ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ.

3:35-37. “இம்ரானின் மனைவி, “என் இறைவனே! என் வயிற்றில் உள்ளதை உனக்காக அர்ப்பணிக்க நான் நேர்ச்சை செய்துவிட்டேன். ஆகவே நீ என்னிடமிருந்து ஏற்றுக்கொள்வாயாக. நிச்சயமாக நீ செவியேற்பவனாகவும் நன்கறிபவனாகவும் இருக்கின்றாய்” என்று கூறியதை எண்ணிப் பாருங்கள். அவர் அந்தக் குழந்தையை பெற்றெடுத்தபோது, “என் இறைவனே! நான் பெண் குழந்தையைப் பெற்றெடுத்து விட்டேனே” என்று கூறினார் – அவர் எதைப் பெற்றெடுத்தார் என்பதை அல்லாஹ் நன்கறிவான் – “ஆண் குழந்தை பெண் குழந்தையைப் போலல்ல. நான் அந்தக் குழந்தைக்கு மர்யம் எனப் பெயரிட்டுள்ளேன். நான் அதற்கும் அதனுடைய வழித்தோன்றல்களுக்கும் விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன்.” ஆகவே அவளது இறைவன் அவளை நல்லமுறையில் ஏற்றுக் கொண்டான். அவளை சிறந்தமுறையில் வளரச் செய்தான். அவளுக்கு ஜகரிய்யாவை பொறுப்பாளராக்கினான். மர்யமின் தொழுகை அறைக்கு ஜகரிய்யா செல்லும்போதெல்லாம் அங்கே அவளிடம் ரிஸ்க் இருப்பதைக் காண்பார். “மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைக்கிறது?” என்று அவர் கேட்பார். அதற்கு மர்யம், “இது அல்லாஹ்விடமிருந்து வந்ததாகும். தான் நாடியோருக்கு அல்லாஹ் கணக்கின்றி வழங்குகிறான்” என்று கூறுவாள்.”

இம்ரானின் மனைவியிடமிருந்து சம்பவம் தொடங்குகிறது. இம்ரான் மர்யம் (அலை) அவர்களின் தந்தை. ஈசா நபிக்கு அம்மா வழி பாட்டனார். இம்ரானின் மனைவி செய்த நேர்ச்சையிலிருந்தே சம்பவம் தொடங்குகிறது. அவர் தம் வயிற்றில் வளர்கின்ற குழந்தையை அல்லாஹ்வின் பணிகளுக்காக, பைத்துல் மக்தஸ் என்னும் ஆலயத்தின் பணிகளுக்காக அர்ப்பணம் செய்ய நேர்ச்சை செய்து கொண்டார். தம்முடைய குழந்தை உலகியல் பணிகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு தன் வாழ்க்கையை அல்லாஹ்வை வணங்குவதிலும் அவனுடைய இல்லத்திற்காக சேவை செய்வதிலும் அர்ப்பணிக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். இறையில்லப் பணிகளுக்காக குழந்தைகளை உலகியல் செயல்பாடுகளிலிருந்து விடுவிப்பது அந்தச் சமயத்தில் வழக்கத்தில் இருந்த ஒரு வழிபாடாக இருந்தது. தம்முடைய இந்த நேர்ச்சை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என அவர் அல்லாஹ்விடம் இறைஞ்சுகிறார்.

பொதுவாக ஆண் குழந்தையைத்தான் இறையில்லத்திற்கு அர்ப்பணிப்பார்கள். அதுதான் வழக்கமாக இருந்தது. இறையில்லத்திற்கான பணிகளில் ஆண்கள்தான் எவ்வித தடைகளும் இன்றி ஈடுபட முடியும். பெண் குழந்தையை அர்ப்பணம் செய்வது அரிதான ஒன்றாக இருந்தது. தமக்கு ஆண் குழந்தை பிறக்கும் என்றே அவர் எண்ணினார். ஆனால் எண்ணியதற்கு மாறாக அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்தார். நான் பெண் குழந்தையை பெற்றுவிட்டேனே என்று வருத்தத்துடன் கூறினார். ஆண் குழந்தையை போலல்ல பெண் குழந்தை. தம்முடைய நேர்ச்சை நிறைவேறாமல் போய்விடுமோ என்ற அச்சம் அவரை அவ்வாறு வருத்தப்படச் செய்திருக்கலாம். பெண் குழந்தையோ ஆண் குழந்தையோ அல்லாஹ்வுக்குத் தெரியும் யாருக்கு என்ன குழந்தையை கொடுக்க வேண்டும் என்று. அவனுடைய நாட்டத்தில்தான் நன்மை இருக்கும். அவனுடைய தெரிவில்தான் மனித சமூகத்திற்கு நன்மை இருக்கும்.

அவர் அல்லாஹ்வின் நாட்டத்தை முழுமையாக ஏற்றுக் கொண்டார். தம்முடைய நேர்ச்சையைத் தொடர்ந்தார். அந்தக் குழந்தைக்கு மர்யம் என பெயரிட்டார். மர்யம் என்றால் வணக்கசாலி, பணிவிடை செய்பவள் என்று பொருள். அந்தக் குழந்தைக்கும் அந்தக் குழந்தையின் வழித்தோன்றல்களுக்கும் விரட்டப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடினார். ஷைத்தான் அவர்களை வழிகெடுத்து தம்முடைய நேர்ச்சையை நிறைவேற்ற விடாமல் செய்துவிடக்கூடாது என்ற அவருடைய அச்சமே அவரிடமிருந்து பிரார்த்தனையாக வெளிப்படுகிறது. இது நம்பிக்கை கொண்ட ஒரு தாயின் இயல்பான ஆசையும்கூட.  

தன்னை வணங்குவதற்காக, தன்னுடைய பணிகளுக்காக அர்ப்பணம் செய்யப்பட்ட அந்தக் குழந்தையை அல்லாஹ் நல்ல முறையில் ஏற்றுக் கொண்டான். அந்தக் குழந்தை சிறந்த முறையில் வளர்வதற்கான சூழலை அவன் ஏற்படுத்திக் கொடுத்தான். ஸகரிய்யா (அலை) அவர்களை அந்தக் குழந்தைக்குப் பொறுப்பாளராக ஆக்கினான். ஸகரிய்யா (அலை) அவர்கள்தாம் அந்தச் சமயத்தில் பைத்துல் மக்தஸின் தலைமைப் பொறுப்பாளராக இருந்தார். அல்லாஹ் யாரை தன் பணிகளுக்காக தேர்ந்தெடுக்கிறானோ அவர்கள் நல்ல முறையில் வளர்வதற்கான சூழலை அவன் ஏற்படுத்திக் கொடுக்கிறான். அவர்களுக்காக அவன் மிகச் சிறந்த பொறுப்பாளர்களை ஏற்படுத்துகிறான். அவர்கள் அற்புதமான முறையில் உதவி செய்யப்படுவார்கள்.

மர்யம் பைத்துல் மக்தஸில் தமக்கென ஒரு தொழுகை அறையை ஏற்படுத்திக் கொண்டு அங்கு அல்லாஹ்வை வணங்கிக் கொண்டும் அவனை நினைவுகூர்ந்து கொண்டும் இருந்தார். ஸகரிய்யாதாம் அவருக்குப் பொறுப்பாளராக இருந்தார். அவருக்கான உணவு ஏற்பாடு, இன்னபிற விசயங்கள் ஆகியவற்றை ஸகரிய்யாதாம் கவனித்து வந்தார்.

அவர் மர்யமின் தொழுகை அறைக்குச் செல்லும்போதெல்லாம் அங்கு அவரிடத்தில் ‘ரிஸ்க்’ இருப்பதைக் கண்டார். ரிஸ்க் என்பதற்கு பெரும்பாலான விரிவுரையாளர்கள் உணவு என்றே பொருள் கொண்டுள்ளார்கள். அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி ரிஸ்க் என்பதற்கு ஞானம், அறிவு என்று பொருள்கொள்கிறார். ரிஸ்க் என்ற வார்த்தை விரிவான பொருளில் பயன்படக்கூடிய ஒன்றுதான். அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொன்றும் ரிஸ்க்தான். அந்த வகையில் இப்படி கொள்ளலாம்: மர்யமின் தொழுகை அறைக்குச் செல்லும்போதெல்லாம் அவரிடம் அற்புதமான ஞானம் இருப்பதைக் கண்டார். இந்த ஞானம் அல்லாஹ்விடமிருந்து தமக்குக் கிடைத்தது. தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் கணக்கில்லாமல் வழங்குகிறான் என்பதை மர்யம் தெளிவுபடுத்துகிறார்.  

ரிஸ்க் என்பதற்கு உணவு என்று பொருள்கொண்டால் பின்வருமாறு விளக்கம் அளிக்கலாம்: மர்யமுக்கு உணவு கிடைக்க வேண்டும் என்றால் அது பொறுப்பாளரான அவரிடமிருந்தே கிடைக்க வேண்டும். ஆனால் அவர் மர்யமின் தொழும் அறைக்குச் செல்லும்போதெல்லாம் அவரிடம் உணவு இருப்பதைக் கண்டார். மர்யமே! இது உனக்கு எங்கிருந்து கிடைத்து? என்று கேட்பார். அதற்கு அவர் “இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது. அவன் எனக்கு அற்புதமான முறையில் வழங்கியுள்ளான். அவன் நாடியவர்களுக்கு கணக்கில்லாமல் வழங்குகிறான்” என்று கூறுவார். இங்கு ஸகரிய்யா (அலை) அவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய விசயம் அற்புதமான முறையில் மர்யமுக்கு உணவு கிடைப்பதுதான். இந்த இடத்தில்தான் ஸகரிய்யாவின் ஆசை கிளர்ந்து எழுகிறது. தள்ளாத வயதிலும் தமக்கு ஒரு குழந்தை வேண்டும் என்று விரும்புகிறார். அதற்கான சாத்தியங்களே இல்லாத சூழல். அவருகோ வயதாகி விட்டது. அவருடைய மனைவியே குழந்தை பெற முடியாத மலடியாக இருக்கிறாள். அற்புதமான முறையில் மர்யமுக்கு உணவை வழங்கிய அல்லாஹ் அற்புதமான முறையில் தமக்கு குழந்தை வழங்குவான் என்று எண்ணுகிறார்.

هُنَالِكَ دَعَا زَكَرِيَّا رَبَّهُ قَالَ رَبِّ هَبْ لِي مِنْ لَدُنْكَ ذُرِّيَّةً طَيِّبَةً إِنَّكَ سَمِيعُ الدُّعَاءِ فَنَادَتْهُ الْمَلَائِكَةُ وَهُوَ قَائِمٌ يُصَلِّي فِي الْمِحْرَابِ أَنَّ اللهَ يُبَشِّرُكَ بِيَحْيَى مُصَدِّقًا بِكَلِمَةٍ مِنَ اللهِ وَسَيِّدًا وَحَصُورًا وَنَبِيًّا مِنَ الصَّالِحِينَ قَالَ رَبِّ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ قَالَ كَذَلِكَ اللهُ يَفْعَلُ مَا يَشَاءُ قَالَ رَبِّ اجْعَلْ لِي آيَةً قَالَ آيَتُكَ أَلَّا تُكَلِّمَ النَّاسَ ثَلَاثَةَ أَيَّامٍ إِلَّا رَمْزًا وَاذْكُرْ رَبَّكَ كَثِيرًا وَسَبِّحْ بِالْعَشِيِّ وَالْإِبْكَارِ

3:38-41. “அந்த இடத்தில் ஸகரிய்யா தம் இறைவனிடம் “என் இறைவனே! எனக்கு உன்னிடமிருந்து தூய சந்ததியை அளிப்பாயாக. நிச்சயமாக நீ பிரார்த்தனையைச் செவியேற்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தனை செய்தார். அவர் தம்முடைய தொழுகை அறையில் நின்று தொழுது கொண்டிருந்தபோது வானவர்கள் அவரை அழைத்து, “அல்லாஹ் உமக்கு யஹ்யாவைக் கொண்டு நற்செய்தி கூறுகிறான். அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தக்கூடியவராகவும் தலைவராகவும் மனக்கட்டுப்பாடு கொண்டவராகவும் நல்லோர்களில் உள்ள தூதராகவும் இருப்பார்” என்று கூறினார்கள். “என் இறைவனே! எனக்கு எவ்வாறு மகன் பிறப்பான்? நானோ முதியவனாகி விட்டேன். எனது மனைவியோ மலடியாக இருக்கிறாள்” என்று அவர் கேட்டார். அதற்கு அவன், “இவ்வாறே அல்லாஹ் தான் நாடியதைச் செய்துவிடுகிறான்” என்று கூறினான். அதற்கு அவர், “என் இறைவனே! எனக்கு ஏதேனும் ஒரு அடையாளத்தை ஏற்படுத்து” என்று வேண்டினார். அதற்கு அவன், “நீர் மூன்றுநாட்கள்வரை சைகை மூலமாகவே அன்றி மக்களுடன் பேச மாட்டீர் என்பதே அதற்கான அடையாளமாகும். உம் இறைவனை அதிகமதிகம் நினைவுகூருவீராக. காலையிலும் மாலையிலும் அவன் புகழ்பாடுவீராக” என்று கூறினான்.

அந்த சமயத்தில், அந்த இடத்தில் தமக்கும் ஒரு வாரிசு வேண்டும் என்ற ஸகரிய்யாவின் ஆசை கிளர்ந்து எழுந்தது. அந்த ஆசை பிரார்த்தனையாக மாறியது. மர்யமைப் போல தமக்கும் ஞானமுள்ள ஒரு மகன் வேண்டும் என்று அவர் விரும்பியிருக்கலாம். அல்லாஹ்வை நெருங்கிச் செல்லக்கூடியவர்கள், அவனுடைய பாதையில் இருப்பவர்கள் பெறக்கூடிய அற்புதமான அனுபவங்கள் மற்றவர்களையும் அவன் பக்கம் நெருங்கச் செய்கின்றன. இங்கு அனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் காரணிகளோடும் கொடுப்பான். காரணிகள் இன்றியும் கொடுப்பான். சாத்தியமானது, சாத்தியமற்றது என்ற பாகுபாடு மனிதர்களுக்குத்தான். அல்லாஹ்வுக்கு இல்லை. அவனால் செய்ய முடியாதது எதுவும் இல்லை. அவன் ஒன்றைச் செய்ய நினைத்தால் ஆகு என்றுதான் கூறுவான். அது ஆகிவிடும்.

அவர் தம்முடைய மிஹ்ராபில் தொழுது கொண்டிருந்தபோது (இங்கு மிஹ்ராப் என்பதை தொழும் அறை என்று மொழிபெயர்த்திருக்கிறேன். அல்லாஹ்வை வணங்குவதற்காக தமக்கென சிறிய அளவில் ஓரிடத்தை ஏற்படுத்திக்கொள்வது அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது. மிஹ்ராப் என்றால் போரிடக்கூடிய இடம் என்று பொருள். அங்கு மனிதன் அல்லாஹ்வை வணங்கும்போது ஷைத்தானுக்கு எதிராக, தன் மன இச்சைகளுக்கு எதிராகப் போரிடுவதால் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம்) வானவர்கள் அவரை அழைத்து யஹ்யா என்னும் மகனைக் கொண்டு நற்செய்தி கூறினார்கள். இந்த இடத்தில் மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹியின் கருத்தே எனக்கு சரியெனப்படுகிறது. ஸகரிய்யா நபி வானவர்களின் குரலை அசரீரீ போன்று கேட்டிருக்கலாம் என்கிறார் அவர். காரணம், அவர் நம்ப முடியாமல் தமக்கு ஒரு சான்றினை ஏற்படுத்துமாறு கோரிக்கை விடுத்ததுதான். நேரடியாக வானவர்கள் வந்து அவரிடம் இந்த செய்தியை கூறியிருந்தால் எனக்கு ஒரு சான்றினை ஏற்படுத்து என்று அவர் அல்லாஹ்விடம் கேட்டிருக்க மாட்டார்.

யஹ்யா எப்படிப்பட்டவராக இருப்பார் என்ற விவரத்தையும் அந்த நற்செய்தி உள்ளடக்கி இருக்கிறது. அந்த விவரத்தில் அவருடைய மூன்று பண்புகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன. ஒன்று, அவர் அல்லாஹ்வின் வார்த்தையை உண்மைப்படுத்தக்கூடியவர். அல்லாஹ்வின் வார்த்தை என்பது ஈசா (அலை) அவர்களைக் குறிக்கும். அவர்தான் அல்லாஹ்வின் ‘குன்’(ஆகிவிடு) என்ற வார்த்தையைக் கொண்டு உருவானவர். அவர் ஈசாவைக் குறித்த முன்னறிவிப்பைக் கொண்டு வந்தார். ஈசா நபி செயல்படுவதற்கு ஏற்ப களத்தை தயார்படுத்துவதற்காக வந்தார். இரண்டு, தலைவராக இருப்பார். அல்லாஹ்வின் அழைப்பை முன்வைக்கும் ஒரு நபி எப்போதும் தலைவர்தான். அழைப்பாளர் தலைவராக மாறிவிடுவார். மக்கள் யாருடைய அழைப்பைக் கேட்டு நேர்வழியடைந்தார்களோ அவரே அவர்களின் தலைவராகவும் இருப்பார். மூன்று, மனக்கட்டுப்பாடு கொண்டவர், இச்சைகளிலிருந்து விலகியவர். இச்சைகள் அவரை வீழ்த்திவிட முடியாது. பொதுவான மனிதர்கள் அவர்களின் இச்சைகளைக் கொண்டே வீழ்த்தப்படுகிறார்கள். ஷைத்தான் அவர்களின் இச்சைகளைக் கொண்டே அவர்களை வழிகெடுக்கிறான். இச்சைகளால் வீழ்த்தப்பட முடியாத அளவு மனக்கட்டுப்பாடு கொண்டவராக அவர் இருந்தார். நான்கு, நல்லோர்களில் உள்ள தூதராக இருப்பார். அவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹியைப் பெற்று மக்களை வழிநடத்தக்கூடிய தூதராகவும் இருப்பார்.

ஸகரிய்யாவும் ஒரு மனிதர்தானே, மனித அறிவால் சாத்தியமானவற்றை கடந்து யோசிக்க முடியாது அல்லவா! அவர் தம்முடைய ஆச்சரியத்தை, சாத்தியமின்மையை வெளிப்படுத்துகிறார். இது எப்படி சாத்தியம்? இப்படித்தான் அல்லாஹ் தான் நாடியதைச் செய்கிறான் என்ற பதில் அவருக்கு அளிக்கப்படுகிறது. இப்படித்தான் பின்னால் மர்யமுக்கும் பதிலளிக்கப்படுகிறது. மனித அறிவால் புரிந்து கொள்ள முடியாத ஒவ்வொன்றுக்கும் அல்லாஹ்வின் நாட்டமே பதிலாக அமைந்து விடுகிறது. இப்படித்தான் மிக இலகுவாக அவன் நாடியதைச் செய்து விடுகிறான். யாரும் அவனுடைய நாட்டத்திற்குக் குறுக்காக வந்துவிட முடியாது.

அவர் தொழுகையில் நின்று கொண்டிருந்தபோது வானவர்களின் குரலைக் கேட்டார். அவர்கள் கூறிய நற்செய்தியை கேட்டு ஆச்சரியமடைந்தார். ஆனாலும் இது தம்முடைய மனதின் ஆசையாக இருக்குமோ என்ற அச்சமும் அவருக்கு இருந்திருக்கலாம். ஆகவேதான் தம்முடைய மனம் அமைதியடைய தமக்கு ஒரு சான்றினை ஏற்படுத்துமாறு கேட்கிறார். “மூன்று நாட்கள் சைகை மூலமாகவே அன்றி நீர் மக்களுடன் பேச முடியாது. காலையிலும் மாலையிலும் நீர் அல்லாஹ்வை தொழுவீராக. அவனைப் புகழும்போது உம்முடைய நாவு செயல்படும். மக்களுடன் பேசும்போது உம்முடைய நாவு செயல்படாது. மூன்று நாட்கள்வரை சைகை மூலமாகவே நீர் அவர்களுடன் பேச முடியும்.”   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply