அற்புதமான நிகழ்வுகள் – 2

You are currently viewing அற்புதமான நிகழ்வுகள் – 2

மர்யமிடமும் வானவர்கள் வருகிறார்கள், ஸகரிய்யாவிடம் வந்ததைப்போல. அவருக்கும் ஒரு மகனைக் கொண்டு நற்செய்தி கூறுகிறார்கள். ஸகரிய்யா ஆச்சரியமடைந்ததைப்போல மர்யமும் ஆச்சரியமடைகிறார். இரண்டுமே மனித அறிவின் சாத்தியத்தைக் கடந்தவை. அல்லாஹ்வின் நாட்டத்தைக் கொண்டு மட்டுமே புரிந்துகொள்ள முடியுமானவை. கிருஸ்தவர்கள் ஈசாவை இறைவனின் மகன் என்றும் மர்யமை தெய்வீகக் குழந்தையை பெற்றெடுத்த தெய்வீகத் தாய் என்றும் கூறி வருகிறார்கள். அடுத்து வரக்கூடிய ஒவ்வொரு வாசகமும் அவர்களின் இந்த மூட நம்பிக்கையை, வரம்புமீறலை ஒன்றுமில்லாமல் ஆக்கி உண்மையை உள்ளபடியே தெளிவுபடுத்தி விடுகிறது.

وَإِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَامَرْيَمُ إِنَّ اللهَ اصْطَفَاكِ وَطَهَّرَكِ وَاصْطَفَاكِ عَلَى نِسَاءِ الْعَالَمِينَ يَامَرْيَمُ اقْنُتِي لِرَبِّكِ وَاسْجُدِي وَارْكَعِي مَعَ الرَّاكِعِينَ

3:42,43. “வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்துத் தூய்மையாக்கியுள்ளான். உலகிலுள்ள பெண்கள் அனைவரையும்விட உம்மைச் சிறப்பித்துள்ளான். மர்யமே!  உமது இறைவனுக்குக் கீழ்ப்படிந்து சிரம்பணிவீராக. குனிந்து தொழுவோருடன் சேர்ந்து நீரும் குனிந்து தொழுவீராக.”

அல்லாஹ் மர்யமைத் தேர்ந்தெடுத்தான், தன்னுடைய குறிப்பிட்ட பணிக்காக. அவர் வழியாக தன்னுடைய சான்றினை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காக. உலகில் எந்தப் பெண்ணுக்கும் வழங்கப்படாத பெரும் சிறப்பு அது. அந்த பெரும் பணிக்காக அல்லாஹ் அவரை எல்லாவிதமான அசுத்தங்களிலிருந்தும் தூய்மைப்படுத்தினான்.

அந்த பெரும் பொறுப்பை சுமக்கும்பொருட்டு அவருக்கு இடப்பட்ட கட்டளை: அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுவீராக. தொழுபவர்களுடன் இணைந்து நீரும் தொழுவீராக. தொழுகையின் வழியாகவே ஆன்மா அல்லாஹ்வுடன் தொடர்பு கொள்கிறது. அதன் வழியாகவே அது தூய்மையடைகிறது. அதன் வழியாகவே அது பலமடைகிறது. இந்த மார்க்கத்தின் பெரும் பொறுப்பை சுமப்பவர்கள் தொழுகையின் வழியாகவே அதற்கான பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். அதுதான் நம்மை தயார்படுத்துவற்கான வழி. அதுதான் அந்தப் பொறுப்பைக் கொடுத்த அல்லாஹ்வுக்கு நன்றியுள்ள அடிமையாக இருப்பதற்கான வழி.      

ذَلِكَ مِنْ أَنْبَاءِ الْغَيْبِ نُوحِيهِ إِلَيْكَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يُلْقُونَ أَقْلَامَهُمْ أَيُّهُمْ يَكْفُلُ مَرْيَمَ وَمَا كُنْتَ لَدَيْهِمْ إِذْ يَخْتَصِمُونَ

3:44. “இவை மறைவின் செய்திகளில் உள்ளவையாகும். இவற்றை நாமே உமக்கு வஹியாக எடுத்துரைக்கின்றோம். மர்யமுக்குப் பொறுப்பேற்பவர் யார் என்பதை முடிவுசெய்ய அவர்கள் தங்களின் எழுதுகோல்களை எறிந்துகொண்டிருந்தபோது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. அவர்கள் தங்களுக்கிடையே சண்டையிட்டுக் கொண்டிருந்தபோதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.”

ஸகரிய்யா, யஹ்யா, மர்யம், ஈசா ஆகியோரைக் குறித்த துல்லியமான இந்த செய்திகள் அல்லாஹ் மட்டுமே அறிந்த மறைவான செய்திகளாகும். அவனே இவற்றை நபியவர்களுக்கு வஹியின் வழியாக அறிவித்தான். இவை முந்தைய வேதங்களிலிருந்தோ வேதம் கற்ற அறிஞர்களிடமிருந்தோ அவர் கற்றவை அல்ல. அப்படி கற்றவர்களால்கூட இந்த செய்திகளை இவ்வளவு துல்லியமாகவும் சரியாகவும் கூற முடியாது. இவை முழுக்க முழுக்க முஹம்மது நபியவர்களுக்கு அருளப்பட்ட வஹியேயாகும். இந்த செய்திகளை வாசிக்கும் வேதக்காரர்கள் மட்டுமல்ல, வேதம் அறியாத மற்ற மனிதர்களும்கூட இவை அல்லாஹ்விடமிருந்து மட்டுமே வந்திருக்க முடியும் என்பதை அறிந்து கொள்வார்கள்.

மர்யம் (அலை) அவர்கள் பிறந்தபோது அவர்களுக்குப் பொறுப்பேற்பவர் யார் என்பது குறித்து அங்கிருந்த அறிஞர்களிடையே போட்டி ஏற்பட்டது. இம்ரானுடைய மனைவியின் நேர்ச்சையை அறிந்த, பிறக்கப்போகும் அந்தக் குழந்தையின் பெரும் சிறப்பை தவ்ராத்தின் வழியாக அறிந்த அறிஞர்களிடையேதான் இந்த போட்டி ஏற்பட்டது. ஒவ்வொருவரும் அந்தப் பொறுப்பு தங்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். இறுதியாக இப்போது குலுக்கிப் போட்டு தேர்ந்தெடுக்கும் முறை இருப்பது போன்று அந்தச் சமயத்தில் இருந்த எழுதுகோல்களை ஆற்றில் எறிந்து யாருடைய எழுதுகோல் ஆற்றில் மிதக்கிறதோ அவருக்கே அந்தப் பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அல்லாஹ் ஸகரிய்யாகவுக்கு அந்தப் பொறுப்பை வழங்கினான்.     

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَامَرْيَمُ إِنَّ اللهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ قَالَتْ رَبِّ أَنَّى يَكُونُ لِي وَلَدٌ وَلَمْ يَمْسَسْنِي بَشَرٌ قَالَ كَذَلِكِ اللهُ يَخْلُقُ مَا يَشَاءُ إِذَا قَضَى أَمْرًا فَإِنَّمَا يَقُولُ لَهُ كُنْ فَيَكُونُ وَيُعَلِّمُهُ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَالتَّوْرَاةَ وَالْإِنْجِيلَ وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنَ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنْفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِي الْمَوْتَى بِإِذْنِ اللهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَلِأُحِلَّ لَكُمْ بَعْضَ الَّذِي حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ فَاتَّقُوا اللهَ وَأَطِيعُونِ إِنَّ اللهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ

3:45-51. “வானவர்கள் கூறினார்கள்: “மர்யமே! அல்லாஹ் தன்னிடமிருந்து ஒரு வார்த்தையைக் கொண்டு உமக்கு நற்செய்தி கூறுகிறான். அவரது பெயர் மஸீஹ் ஈசா இப்னு மர்யம் என்பதாகும். அவர் இவ்வுலகிலும் மறுவுலகிலும் உயர்ந்த அந்தஸ்துடையவராகவும் அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியாராகவும் இருப்பார். அவர் தொட்டில் பருவத்தில் இருக்கும்போதும் பக்குவமான வயதை அடைந்தபின்பும் மக்களிடம் பேசுவார். நல்லோர்களில் ஒருவராகவும் இருப்பார்.” அதற்கு மர்யம் கேட்டார்: “என் இறைவனே! என்னை எந்த ஆணும் தீண்டாதிருக்க எனக்கு எவ்வாறு குழந்தை பிறக்கும்?” அவன் கூறினான்: “அப்படித்தான். அல்லாஹ் தான் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒரு விசயத்தைத் தீர்மானித்து விட்டால் ’ஆகு’ என்றுதான் அதற்குக் கூறுவான். அது ஆகிவிடும்.” அல்லாஹ் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான். இஸ்ராயீலின் மக்களுக்கு அவர் தூதராகவும் இருப்பார். “நான் உங்களிடம் உங்கள் இறைவனின் சான்றினைக் கொண்டு வந்துள்ளேன். நான் உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் வடிவத்தைப்போல செய்து அதில் ஊதுவேன். அது அல்லாஹ்வின் கட்டளையினால் உண்மையான பறவையாகிவிடும். அல்லாஹ்வின் கட்டளையினால் நான் குருடனையும் தொழுநோயாளியையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் கட்டளையினால் மரணித்தவர்களையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் உண்பவற்றையும் உங்கள் வீடுகளில் சேகரித்து வைப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் நிச்சயமாக இவற்றில் உங்களுக்கு சான்று இருக்கின்றது. நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியவனாகவும் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ள சில பொருட்களை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்குவதற்காகவும் வந்துள்ளேன். உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்குச் சான்றினைக் கொண்டுவந்துள்ளேன். ஆகவே நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். எனக்குக் கீழ்ப்படியுங்கள். நிச்சயமாக அல்லாஹ்தான் என் இறைவனும் உங்கள் இறைவனுமாவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுவே நேரான வழியாகும்.”

மர்யம் (அலை) அவர்கள் அல்லாஹ்வை வணங்குவதிலும் அவனை நினைவு கூருவதிலும் மூழ்கி இருந்தபோது மீண்டும் வானவர்கள் அவரிடம் வந்தார்கள். இந்த முறை அவருக்கு அற்புதமான முறையில் பிறக்கக்கூடிய குழந்தையைக் கொண்டு நற்செய்தி கூறினார்கள். அது தந்தையின்றி பிறக்கக்கூடிய குழந்தை. அது மர்யமின் குழந்தை என்றே அழைக்கப்படும். அந்தக் குழந்தையின் பெயர் மஸீஹ் ஈசா. அவர் இந்த உலகிலும் மறுவுலகிலும் பெரும் கண்ணியம் பெற்றவராக, அல்லாஹ்வுக்கு நெருக்கமான அடியார்களில் ஒருவராக இருப்பார். கண்ணியம் என்பது அல்லாஹ் அளிப்பது. அவன் தான் நாடியவர்களை கண்ணியப்படுத்துகிறான். யூதர்கள் ஈசா நபி அவர்களை அவதூறுகளைக் கொண்டு இழிவுபடுத்த நாடினார்கள். அவரது பிறப்பைக் கொச்சைப்படுத்தினார்கள். அத்தனையையும் தாண்டி அவர் மக்களின் உள்ளங்களில் உயர்ந்த கண்ணியத்தைப் பெற்றார். அல்லாஹ் கண்ணியப்படுத்த நாடுபவர்களை யாராலும் இழிவுபடுத்த முடியாது. அவன் கண்ணியப்படுத்த நாடுபவர்களை இழிவுபடுத்த நினைப்பவர்கள் இழிவடைந்து போவார்கள் என்பதற்கான உதாரணம்தான் இந்த யூதர்கள். 

ஈசா தொட்டிலில் குழந்தையாக இருந்தபோதே மக்களிடம் பேசினார். தம்மைக் குறித்து தாம் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகள் குறித்து அவர் மக்களிடம் தெளிவுபடுத்தினார். அது அவரது வாழ்க்கையில் நிகழ்ந்த முதலாவது அற்புதம். அவரது வாழ்க்கை அற்புதங்கள் சூழ்ந்த வாழ்க்கைதான். ஆனால் அவற்றில் எதையும் அவர் தாமாகவே நிகழ்த்தவில்லை. அல்லாஹ்வின் கட்டளையின்படியே அவை அவரிடமிருந்து வெளிப்பட்டன. பக்குவ வயதை அடைந்த பிறகு அவர் மக்களிடம் பேசினார் என்பது அவர் நிறைவேற்ற வேண்டிய தூதுத்துவ பணிகளைக் குறிக்கும்.

மர்யம் ஆச்சரியமுடன் கேட்கிறார், “எந்த ஆணும் என்னைத் தீண்டாதிருக்க எனக்கு எப்படி குழந்தை பிறக்கும்?” அவருக்குப் பதிலளிக்கப்படுகிறது: “இப்படித்தான் அவன் நாடியதைப் படைக்கிறான். அவன் ஒன்றைப் படைக்க நாடி விட்டால் அதற்கு ஆகு என்றுதான் கூறுவான். அது அவன் விரும்பும் படைப்பாக ஆகிவிடும்.” இங்கு விதிகளை அமைத்தவன் அவனே. அவை அவனுடைய நாட்டத்திற்கு உட்பட்டவை. அவன் நாடினால் அவற்றை மாற்றி விடுவான். ஒரு குழந்தை உருவாக வேண்டும் என்றால் ஆணும் பெண்ணும் இணைய வேண்டும் என்ற விதியை அவனே ஏற்படுத்தியிருக்கிறான். அவன் அமைத்த ஒவ்வொரு விதியும் அவனுடைய நாட்டத்துடன் இணைந்துள்ளது. அவன் நாடவில்லை எனில் அவ்வாறு இணைந்தாலும் குழந்தை உருவாகாது. அவன் நாடினால் அவ்வாறு இணையாமலும் குழந்தை உருவாகி விடும். இங்கு நாம் புரிந்துகொள்ள வேண்டியது, எல்லாவற்றையும் தழுவிய, எந்தவொன்றாலும் கட்டுப்படுத்தப்பட முடியாத அவனுடைய நாட்டத்தைத்தான். அதுவே இங்கு அசலானது. அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருப்பது.

“அல்லாஹ் அவருக்கு வேதத்தையும் ஞானத்தையும் தவ்ராத்தையும் இன்ஜீலையும் கற்றுக் கொடுப்பான்” வேதம் என்பது தவ்ராத்தை குறிக்கிறது. ஞானம் என்பது இன்ஜீலைக் குறிக்கிறது. முதல் இரண்டு வார்த்தைகளும் அடுத்த இரண்டு வார்த்தைகளுக்கான விளக்கமாக அமைந்து விடுகின்றன. மூசாவுக்கு வழங்கப்பட்ட தவ்ராத்தை அல்லாஹ் ஈசாவுக்கும் கற்றுக் கொடுத்தான். கூடுதலாக ஞான வார்த்தைகளையும் கற்றுக் கொடுத்தான். இன்ஜீல் என்பது அவரிடமிருந்து வெளிப்பட்ட ஞான வார்த்தைகளின் தொகுப்புதான். அவர் இஸ்ரவேல் சமூகத்தாருக்குத்தான் ரஸுலாக, தூதராக அனுப்பப்பட்டார். மற்றவர்களுக்கு அல்ல. அவர்களால் மட்டுமே அவரின் அழைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும். அவர்களிடம் மறுமலர்ச்சி ஏற்படுத்தும், சீர்திருத்தம் செய்யும் ஒரு தூதராகத்தான் அவர் அனுப்பப்பட்டார். அவர் அல்லாஹ்விடமிருந்து வந்த உண்மையான தூதர் என்பதை அவர்கள் அறிந்துகொள்ளும்பொருட்டே அவன் அவரை அற்புதங்கள் நிகழ்த்தக்கூடியராக ஆக்கினான்.  

அவர் நிகழ்த்திய ஒவ்வொரு அற்புதமும் அல்லாஹ்வின் கட்டளையின்படி அவர் நிகழ்த்தியவைதான். தாமாகவே அவர் எதையும் நிகழ்த்தவில்லை. திருக்குர்ஆன் அவர் நிகழ்த்திய ஒவ்வொரு அற்புதத்தோடும் அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டு என்ற சொல்லாடலை இணைத்து அனுடைய இயல்பை தெளிவுபடுத்தி விடுகிறது. இந்த அற்புதங்கள் அவரிடமிருந்து வெளிப்பட்டதனால்தான் கிருஸ்தவர்கள் அவரை தெய்வீகத்தன்மை கொண்டவர், தேவகுமாரன் என்றெல்லாம் வாதிட்டார்கள். அந்த அற்புதங்கள் அவரிடமிருந்து நிகழவில்லை என்று திருக்குர்ஆன் வாதிடவில்லை. அந்த அற்புதங்களுக்குப் பின்னால் இருக்கும் அசலான காரணியை அது தெளிவுபடுத்தி விடுகிறது. ஒரு பக்கம் யூதர்கள் அவர் நிகழ்த்திய அற்புதங்களை சூனியம் என்று வாதிடுகிறார்கள். இன்னொரு பக்கம் கிருஸ்தவர்கள் அவர் தெய்வீகத்தன்மை கொண்டிருந்ததனால் அவரிடமிருந்து அவை வெளிப்பட்டன என்று வாதிடுகிறார்கள். திருக்குர்ஆன் அது தொடர்பான உண்மையை உள்ளபடியே தெளிவுபடுத்துகிறது. உண்மையைப் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் எவ்வித சிக்கலும் இன்றி அதனைப் புரிந்து கொள்கிறார்கள். அது வரம்புமீறிய இந்த இரு கூட்டத்தாருக்கும் சரியான மறுப்பாகவும் அமைந்து விடுகிறது.

நீங்கள் உண்மையில் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இந்த அற்புதங்கள் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள சான்றுகள் என்பதைப் புரிந்து கொள்வீர்கள். இவை மனிதனால் நிகழ்த்த முடியாதவை. நம்பிக்கையாளர்கள் அகப்பார்வை கொண்டவர்கள். அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள அற்புதங்களையும் ஷைத்தானிடமிருந்து வெளிப்படும் சூனியத்தையும் வேறுபடுத்திப் பார்க்கும் தன்மை கொண்டவர்கள். இதுதான் அவர்களை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்துகிறது. இரண்டும் மனித வழக்கங்களுக்கு மாறான செயல்பாடுகளாக இருந்தாலும் அடிப்படையிலும் தன்மையிலும் முழுமையான அளவில் வேறுபடுபவை.

“நான் எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை உண்மைப்படுத்தக்கூடியவனாகவும் உங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ள சில பொருட்களை உங்களுக்கு அனுமதிக்கப்பட்டவையாக ஆக்குவதற்காகவும் வந்துள்ளேன்.” ஈசா புதியதொரு மார்க்கத்தை கொண்டு வரவில்லை. மனிதர்கள் அனைவருக்குமான தூதராகவும் அவர் அனுப்பப்படவில்லை. யூதர்களுக்கு அவர்களின் பாவங்களின் காரணமாக தடைசெய்யப்பட்ட அல்லது அவர்கள் தங்களுக்குத் தாங்களே தடைசெய்துகொண்ட பொருட்களை அனுமதிக்கப்பட்டவையாக ஆக்குவதற்காகவும் அவர் அவர்களிடம் அனுப்பப்பட்டார். அவர் அவர்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்தார். அவரது தூதுத்துவத்தின் நோக்கம் இதுதான்: “அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு அவன் வழங்கிய வழிகாட்டலின்படி உங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள். உங்களின் தூதராகிய என் பேச்சைக் கேளுங்கள். என்னை முன்மாதிரியாக ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்தான் என் இறைவனும் உங்களின் இறைவனும் ஆவான். ஆகவே அவனையே வணங்குங்கள். இதுதான் அவன் பக்கம் செல்லக்கூடிய நேரான வழி.” இதுதான் அவரது அழைப்பு. இதுதான் தூதர்கள் அனைவரின் அழைப்பும். இதற்காகவே தூதர்கள் அவரவர் சமூகங்களை நோக்கி அனுப்பப்பட்டார்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply