வாழ்வது போன்று நடிப்பது

You are currently viewing வாழ்வது போன்று நடிப்பது

அதிகம் காட்டிக் கொள்பவர்கள் ஏன் அதற்கு மாறாக இருக்கிறார்கள்? அவர்கள் உணரும் தனிமைதான் அவர்களை அதிகம் காட்டிக் கொள்ளத் தூண்டுகிறதா? தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்ளும் தம்பதியினர் உண்மையில் அதற்கு மாறானவர்களாக இருக்கிறார்களே! அது ஏன்? சமூக ஊடகங்களில், பொதுத் தளங்களில் தங்களை மகிழ்ச்சியானவர்களாக காட்டிக் கொள்பவர்கள் எல்லாம் உண்மையில் அப்படி இல்லையே!

இங்கு ஒரு வகையான சமூக அழுத்தம், நிர்ப்பந்தம் இருக்கிறது. அவர்கள் தங்களை மறைக்க எண்ணுகிறார்கள். தங்களைக் குறித்து தாங்கள் கற்பனை செய்து வைத்திருக்கும் ஒரு பிம்பத்தை மக்களிடம் காட்ட விரும்புகிறார்கள். அவர்கள் வாழ்க்கையை வாழ்வதைவிட வாழ்வதுபோல காட்டிக் கொள்வதற்கே விரும்புகிறார்கள். அதனால்தான் தங்களின் ஒவ்வொரு நிகழ்வையும் படம்படித்து ஊருக்கு அறிவிக்கிறார்கள். அவர்கள் பயணம் செய்தாலும் பயணத்தின் வழியாக எதையும் பார்ப்பதில்லை. மாறாக காட்டிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்களுக்கு தருணங்களை அனுபவித்தல் அவசியமான ஒன்றாகத் தெரிவதில்லை. தருணங்களை படம்பிடித்துக் காட்டுவதுதான் அவசியமான ஒன்றாகத் தெரிகிறது. பெருமையடித்தல் உலகியல் வாதத்தின் அடிப்படைக் கூறு.

நாம் மகிழ்ச்சியான ஒரு தருணத்தை படம்பிடித்து சக மனிதர்களுக்கு அறிவிக்கும்போது என்ன நிகழ்கிறது? அந்த படத்தைப் பார்த்து சக மனிதர்கள், நம் உறவினர்கள், நண்பர்கள் மகிழ்ச்சி அடைகிறார்களா? நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான், அதைப் பார்த்து அவர்கள் மகிழ்ச்சியடைவதில்லை என்பது. மாறாக அதனைக் கண்டு எரிச்சல் அடைபவர்களும் பொறாமை கொள்பவர்களும் அதிகம் இருக்கிறார்கள். அது நாம் அறியாத வகையில் நமக்கான பிரச்சனைகளைக் கொண்டு வரும். கண்ணேறு என்ற ஒன்றை, அது ஏற்படுத்தும் பாதிப்புகளை நாம் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறோம். துன்பத்தில் சிக்கியிருப்பவர்கள் அதைப் பார்த்து பெருமூச்சு விடுகிறார்கள். தங்களுக்கு மட்டும் ஏன் இப்படி நிகழ்கிறது என்று நொந்து கொள்கிறார்கள். ஆனாலும் நாம் எல்லாவற்றையும் பொதுவெளியில் அறிவிக்கிறோம். வாழ்வதைவிட வாழ்வதைப்போல காட்டிக் கொள்ளுதல் நமக்கு இனிமையான ஒன்றாக காட்டப்பட்டிருக்கிறது. சுய தம்பட்டம் இயல்பான ஒன்றாக ஆக்கப்பட்டிருக்கிறது.

வாழ்வு என்பது நடிப்பாக ஆகிவிடக்கூடாது. அது கடுமையான சலிப்பை, வாழ்வின் மீதான கசப்பைக் கொண்டு வந்து சேர்க்கும். சோஷியல் மீடியா யுகம் அதிகமான நடிகர்களை உற்பத்தி செய்திருக்கிறது. அது மனிதர்களின் ஈகோவை பல மடங்கு தூண்டி விட்டிருக்கிறது. சார்ந்து வாழ்தல், ஒருவர் மற்றவரை அனுசரித்து வாழ்தல் ஆகிய பண்புகள் மோசமான பண்புகளாக சித்தரிக்கப்பட்டிருக்கின்றன.

மகிழ்ச்சி என்பது சார்பு வாழ்க்கையில் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது நீங்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளில் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது உங்களின் ஈகோவை நசுக்குவதில் உள்ளது. மகிழ்ச்சி என்பது உங்களுக்குக் கிடைத்தவற்றை மற்றவர்களுக்கும் பகிர்வதில் இருக்கிறது. மகிழ்ச்சி என்பது இயல்பான வாழ்க்கையில்தான் இருக்கிறது.   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply