தீய ஆலிம்கள்

You are currently viewing தீய ஆலிம்கள்

இந்த சமூகத்திற்கு பெரும் ஆபத்தாக அமைபவர்கள் தீய ஆலிம்கள்தாம் என்கிறார் இமாம் கஸ்ஸாலி. இன்னும் ஒரு படி மேலாகச் சென்று அவர்களை இந்த சமூகத்தின் நயவஞ்சகர்கள் என்கிறார். இந்த மார்க்கத்தைக் கொண்டு ஏதேனும் உலக ஆதாயத்தைப் பெற வேண்டும் என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கமாக இருக்கும். அதற்காக அவர்கள் எதுவும் செய்யத் தயங்க மாட்டார்கள். அவர்களைக் கொண்டு இந்த மார்க்கம் வலுப்பெற வாய்ப்பிருக்கிறதா என்றால் அவர்களைக் கொண்டும் இந்த மார்க்கம் வலுப்பெறலாம் என்கிறார் அவர். ஆனால் அது அவர்கள் சரியான பாதையில் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் அல்ல. அல்லாஹ் பாவியான மனிதரைக் கொண்டும் இந்த மார்க்கத்தை வலுப்படுத்துவான் என்ற நபிமொழியின் கீழ் அது வந்து விடும் என்கிறார் அவர்.

இமாம் கஸ்ஸாலியின் காலகட்டத்தில் ஷரீஆ துறைகளைக் கற்பது செல்வத்தை, பதவியை, மதிப்பை பெறுவதற்கான சிறந்த வழியாக இருந்தது. ஆகவே அவற்றைக் கற்பவர்களும் அதிகரித்து விட்டார்கள். ஆனால் அந்த பெரும் எண்ணிக்கையினால் ஏற்பட்ட நன்மைகளைவிட குழப்பங்களே அதிகம் ஏற்பட்டது. கருத்து வேறுபாடுகளைக் குறித்துப் பேசுவது விருப்பத்திற்குரிய ஒன்றாக ஆகியது. அந்தச் சமயத்தில் முஸ்லிம் உலகில் பரவியிருந்த கிரேக்க தர்க்கக் கலையும் அதனோடு சேர்ந்து கொண்டது. மார்க்கப் பிரிவுகள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு காரணம். தங்கள் தர்க்கங்களின்மூலம் தாங்கள் சார்ந்திருக்கும் அணியை வலுப்படுத்துபவர்களே சிறந்த அறிஞர்களாகக் கருதப்பட்டார்கள், கொண்டாடப்பட்டார்கள். கருத்து வேறுபாடுகளுக்குரிய விசயங்களை தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்கள் மிக விரைவில் பிரபல்யமான ஆலிம்களாக ஆனார்கள்.

தீய ஆலிம்களின் முதன்மையான அடையாளம், அவர்கள் தங்களின் ஆதாயத்திற்காக எதையும் செய்யத் துணிவார்கள். ஆட்சியாளர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அல்லது செல்வந்தர்களை திருப்திபடுத்தும் நோக்கில் அல்லது பொதுமக்களை கவரும் நோக்கில் அல்லது வேறு ஏதேனும் உலக ஆதாயத்தைப் பெறும் நோக்கில் அல்லது தங்கள் தவறுகளை நியாயப்படுத்தும்பொருட்டு மார்க்கத்தின் ஆதாரங்களை வளைப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை மார்க்கம் என்பது அவர்கள் பிழைப்பதற்கான ஒரு வழிமுறை. உள்ளதை உள்ளபடியே சொன்னால் தங்களுக்கு இலாபம் இருக்கிறது எனில் உள்ளதை உள்ளபடியே சொல்வார்கள். திரித்துச் சொன்னால்தான் தங்களுக்கு இலாபம் இருக்கிறது எனில் திரித்துச் சொல்வார்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply