மனதில் நேர்மறையானவை, எதிர்மறையானவை என ஆயிரம் எண்ணங்கள் வந்து கொண்டே இருக்கும். எண்ணங்கள் நம் கட்டுப்பாட்டில் இல்லை. வருகின்ற எண்ணங்களை புறக்கணிப்பதும் அவற்றை நீடிக்கச் செய்வதும் நம் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. எதிர்மறையான எண்ணங்களை புறக்கணிக்க வேண்டும். நேர்மறையான எண்ணங்களை நீடிக்கச் செய்ய வேண்டும். இதுதான் நாம் செய்ய வேண்டியது. இப்படித்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம்.
மனச்சிக்கல் கொண்டவர்கள் எதிர்மறையான எண்ணங்களை நீடிக்கச் செய்கிறார்கள். அவற்றைப் பின்தொடர்கிறார்கள், வளர்த்தெடுக்கிறார்கள். மனம் சமநிலையை இழக்கும்போது கட்டுப்பாட்டை இழக்கிறது. சில சமயங்களில் கட்டுப்பாட்டை இழந்த வாகனம்போல அவர்களின் மனம் இங்கும் அங்கும் தடுமாறித் திரிகிறது. இதுதான் அவர்களின் சிக்கல்.
முதலில் அவர்கள் தங்களின் சிக்கலை உணர வேண்டும். அவர்களிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொன்றையும் அவர்கள் நியாயப்படுத்தக்கூடாது. ஈகோ கூடுதல் சிக்கலை ஏற்படுத்தி விடும். அவர்கள் அறியாமல் அவர்களிடமிருந்து எதுவும் வெளிப்படுவதில்லை. அவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. தங்களிடமிருந்து தவறுகள் வெளிப்பட்டு விட்டால் மன்னிப்புக் கேட்கவும் அதற்குப் பரிகாரம் செய்யவும் அவர்கள் தயங்கக் கூடாது.
அவர்கள் தங்களுக்கு நம்பகமான ஒரு வழிகாட்டியை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அவரிடம் ஆலோசித்த பிறகே அவர்கள் முக்கியமான முடிவுகள் எடுக்க வேண்டும். அவர்கள் உணர்வெழுச்சி கொண்டவர்கள் என்பதாலும் எந்தவொரு முடிவையும் உடனடியாக செயல்படுத்தி விடுவார்கள் என்பதாலும் அவர்களுக்கு இந்த வேகத்தடை அவசியமாக இருக்கிறது. இந்த வேகத்தடை அவர்களுக்கு எரிச்சலூட்டலாம். ஆனால் அது அவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான அவசியமான வழிமுறை என்பதை மீண்டும் மீண்டும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே நினைவூட்டிக் கொள்ள வேண்டும்
