அதிகப்படியான செய்திகள் நம்மை பெரும் குழப்பத்திலும் கடும் மனச்சோர்விலும் ஆழ்த்தும். எந்த அளவு நாம் நம்முடைய வாழ்க்கையை சிறியதாக அமைத்துக் கொள்கிறோமோ அந்த அளவு நாம் நிம்மதியாக இருக்கலாம். தொடர்ந்து உலகச் செய்திகள் முதற்கொண்டு உள்ளூர் செய்திகள்வரை அறிந்து கொண்டு அலசுபவர்கள் அச்சுறுத்தும் எதிர்மறை மனிதர்களாக மாறிவிடுகிறார்கள். ஏனெனில் நம்முடைய அறிவு எந்தவொன்றையும் எளிய சூத்திரங்களுக்குள் அடைத்துக் கொண்டு புரிந்துகொள்ள முயற்சிக்கும். அது தன் இயலாமையை ஒத்துக் கொள்ளாது. இங்கு எந்தவொன்றும் வீணாக நிகழ்ந்து விடுவதில்லை, ஒவ்வொன்றுக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்பதை நீண்ட அனுபவங்களுக்குப் பிறகே நம்மால் உணர்ந்துகொள்ள முடியும்.
எல்லாவற்றையும் எளிய சூத்திரங்களைக் கொண்டு புரிய வைக்க முயற்சிப்பவர்களே எல்லாவற்றையும் குறித்து மிகுந்த உறுதியுடன் பேசுகிறார்கள். இப்படித்தான் நடக்கும் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். அவர்களின் கணிப்புகளில் சில நிகழ்ந்து விடும்போது அவர்கள் இன்னும் உறுதியான குரலில் பேசுகிறார்கள்.
படைக்கப்பட்ட நோக்கத்தை அறிந்து கொண்டு அந்த நோக்கத்தை அடைவதற்காக இங்கும் அங்கும் பார்க்காமல் நேரான பாதையில் முன்னேறிச் செல்பவனே இங்கு வெற்றிகரமான ஒரு வாழ்க்கையை வாழ முடியும். இந்த உலகம் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும், எனக்கு ஒரு வாழ்க்கை இங்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அது வீணானதல்ல. எனக்கு வழங்கப்பட்ட ஒவ்வொரு மணித்துளியும் எனக்கு முக்கியமானது. நோக்கத்தை அடையும் பாதையில் தேவையற்ற ஒவ்வொன்றிலிருந்தும் நான் விலகி இருக்க வேண்டியுள்ளது. என் உணர்வுகளை, ஆற்றல்களை தேவையற்ற எந்த இடத்திலும் நான் பயன்படுத்தி விடக்கூடாது.
நம்பிக்கையாளன் இந்த விழிப்புணர்வைக் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகியிருக்கிறது. குழப்பங்கள் நிரம்பிய இந்த காலகட்டம் அவனைத் திசைதிருப்பி விட்டுவிடக்கூடாது. சிறிய அளவிலான திரும்புதல்கூட இலக்கை நோக்கிய பாதையில் பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும்.
