அதிகப்படியான சுதந்திரம், பெரும் செல்வம், அதிகாரம் ஆகியவை நேர்மறையான விளைவுகளைவிட எதிர்மறையான விளைவுகளையே அதிகம் ஏற்படுத்துகின்றன. கட்டுப்பாடுகள் கொண்ட சூழலில் நாம் நல்ல மனிதர்களாக வாழ்வது இலகுவானது. ஆனால் கட்டுப்பாடுகள் அற்ற சுதந்திரமான சூழல் நம்மை தவறான திசைகளின் பக்கம் தள்ளுகிறது. மனிதர்கள் உள்ளுக்குள் கட்டுப்பாடுகளை விரும்புவது இதனால்தான்.
பெரும் செல்வம் வைத்திருப்பவர்கள் எல்லாம் அதனைக் கொண்டு நிம்மதியாக வாழ்கிறார்களா? அது அவர்களுக்கு அதீத தன்னம்பிக்கையே அளிக்கின்றன. அதனைக் கொண்டு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று அவர்கள் எண்ணுகிறார்கள். இந்த எண்ணம் அவர்களை அவர்களுக்குச் சம்பந்தம் அற்ற பல விசயங்களில் அவர்களைத் தள்ளுகிறது. விளைவாக, அவர்கள் நிம்மதியை, அமைதியான வாழ்க்கையை இழக்கிறார்கள்.
அதிகாரமும் அப்படித்தான். அது மனிதர்களை அநியாயக்காரர்களாக மாற்றி விடுகிறது. தங்களின் வரம்புக்குட்பட்ட அதிகாரத்தை எந்த வரம்பும் அற்ற முற்றதிகாரமாக அவர்கள் எண்ணிக் கொள்கிறார்கள்.
சுதந்திரத்தையும் பெரும் செல்வத்தையும் அதிகாரத்தையும் கொண்டு நாம் பயனடைய வேண்டும் எனில் மனக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். மனக்கட்டுப்பாடு கொண்டவர்களே அவற்றைக் கொண்டு பயனடைகிறார்கள். அவர்களே அவற்றைக் கொண்டு நிறைவேற்ற வேண்டிய பெரும் பணிகளை நிறைவேற்றுகிறார்கள். அவர்களுக்குத்தான் அவை அருட்கொடைகள். மற்றவர்களுக்கு அவை அவர்களைப் பிணைத்திருக்கும் தளைகள்.
