இஸ்லாம் என்னும் மகத்தான அருட்கொடை

You are currently viewing இஸ்லாம் என்னும் மகத்தான அருட்கொடை

அடுத்து வரும் வசனங்கள் நம்பிக்கையாளர்கள் அனைவருக்குமான பொதுவான அழைப்பைக் கொண்டிருந்தாலும் நயவஞ்சகர்கள், நம்பிக்கையில் பலவீனமானவர்களுக்கான தனித்துவமான அழைப்பையும் உள்ளடக்கி இருக்கின்றன. தெளிவான சான்றுகளோடு முன்வைக்கப்படும் இந்த அழைப்பைப் புறக்கணிப்பதால் ஏற்படும் மோசமான விளைவுகளையும் அவை எச்சரிக்கின்றன.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ فَإِنْ زَلَلْتُمْ مِنْ بَعْدِ مَا جَاءَتْكُمُ الْبَيِّنَاتُ فَاعْلَمُوا أَنَّ اللهَ عَزِيزٌ حَكِيمٌ هَلْ يَنْظُرُونَ إِلَّا أَنْ يَأْتِيَهُمُ اللهُ فِي ظُلَلٍ مِنَ الْغَمَامِ وَالْمَلَائِكَةُ وَقُضِيَ الْأَمْرُ وَإِلَى اللهِ تُرْجَعُ الْأُمُورُ  

2:208-210. “நம்பிக்கையாளர்களே! நீங்கள் முழுமையாக இந்த மார்க்கத்தில் நுழைந்து விடுங்கள். ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். அவன் உங்களுக்கு வெளிப்படையான எதிரியாவான். உங்களிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் நீங்கள் வழிதவறிவிடுவீர்களாயின் அறிந்துகொள்ளுங்கள், அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன், ஞானம்மிக்கவன். மேகத்தின் நிழல்களில் அல்லாஹ்வும் வானவர்களும் வர வேண்டும் என்பதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? விவகாரம் தீர்க்கப்பட்டுவிட்டது. விவகாரங்கள் அவன் பக்கமே கொண்டு செல்லப்படும்.”

அமைதியும் நிம்மதியும் அல்லாஹ் அளித்த இந்த மார்க்கத்தில்தான் இருக்கின்றன. அதில் உங்களுக்குப் பிடித்த சில விசயங்களை ஏற்றுக் கொண்டு உங்களுக்குப் பிடிக்காத விசயங்களை விட்டு விடாதீர்கள். இந்த மார்க்கத்தின் கட்டளைகள் அனைத்தையும் பின்பற்றுங்கள். இதில் முழுமையாக நுழைந்து விடுங்கள். அல்லாஹ்விடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள். இந்த மார்க்கத்தின் போதனைகளை விட்டுவிட்டு நீங்கள் பின்பற்றக்கூடியவை அனைத்தும் ஷைத்தானின் போதனைகள்தாம். அவன் பேச்சை நம்பாதீர்கள். அவனுக்குப் பின்னால் செல்லாதீர்கள். அவன் உங்களின் பகிரங்கமான விரோதியாவான்.

இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘அஸ்ஸில்ம்’ என்ற வார்த்தைக்கு அமைதி என்று பொருள். இந்த வார்த்தை இஸ்லாத்தை குறிக்கிறது என்று சில அறிஞர்கள் கூறுகிறார்கள். அந்த வகையில் இந்த வாசகத்திற்கு இப்படி பொருள் வைக்கலாம்: “இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள். அவ்வாறு முழுமையாக நுழைந்து விடுவதில்தான் அமைதியும் நிம்மதியும் உள்ளது.” அஸ்ஸில்ம் என்ற வார்த்தைக்கு கட்டுப்படுதல் என்ற பொருளும் உண்டு. அந்த வகையில் இந்த வாசகத்திற்கு, “அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் முழுமையாகக் கட்டுப்படுங்கள்” என்று பொருள் கொள்ளலாம். அஸ்ஸில்ம் என்ற வார்த்தையை இஸ்லாம் என்ற பொருளில் கொண்டாலும் அல்லது கட்டுப்படுதல் என்ற பொருளில் கொண்டாலும் இரண்டும் கிட்டத்தட்ட ஒரே வகையான பொருளையே தருகின்றன. அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுதல்தான் இஸ்லாம். இஸ்லாத்தின் போதனைகளை முழுமையாகப் பின்பற்றுவதில்தான் மனிதர்களுக்கு அமைதியும் நிம்மதியும் உள்ளது.

இந்தக் கட்டளை அனைவருக்கும் பொதுவானதாக இருந்தாலும் முன்பின் வசனங்களை வைத்துப் பார்க்கும்போது இது நம்பிக்கையில் பலவீனமானவர்களை, நயவஞ்சகர்களை நோக்கி குறிப்பாகப் பேசுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. நீங்கள் யூதர்களைப் போன்று இருக்காதீர்கள். அவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தை முழுமையாகப் பின்பற்றவில்லை. அதில் தங்களைப் பிடித்தமானதை, தங்களுக்கு இலகுவானதை ஏற்றுக் கொண்டார்கள். தங்களுக்குப் பிடிக்காததை, பின்பற்றுவதைக்குக் கடினமானதைப் புறக்கணித்தார்கள்.

இந்த மார்க்கத்தை விட்டு திருப்புவதற்கு ஷைத்தான் உங்களிடம் ஆயிரம் சாக்குப்போக்குகளைக் கொண்டு வருவான். பல்வேறு வேடம் தரித்து உங்களுக்கு முன்னால் வந்து நிற்பான். நலம் விரும்பிகளின் வேடம் பூண்டு அவன் உங்களிடம் வந்து நிற்பான். அவன் பேச்சைக் கேட்காதீர்கள். அவனை நம்பாதீர்கள். அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். உங்களை வழிகெடுப்பதுதான் அவனுடைய நோக்கம். உங்களுக்கு நலம் நாடுவது அவனுடைய நோக்கம் அல்ல. உங்களை அல்லாஹ்வின் மார்க்கத்தைவிட்டு திசை திருப்பும் அத்தனை வழிகளும் ஷைத்தானின் வழிகள்தாம். அவை பார்ப்பதற்கு நல்லவை போன்று இருந்தாலும் சரியே.     

உங்களிடம் தெளிவான சான்றுகள் வந்திருக்கின்றன. இந்தக் குர்ஆன் ஷைத்தானின் சூழ்ச்சிகளையும் அவன் விரிக்கும் சதிவலைகளையும் அவன் ஏற்படுத்தும் குழப்பங்களையும் உங்களுக்குத் தெளிவாக பட்டியிட்டுக் காட்டுகிறது. அது நன்மையையும் தீமையையும் உண்மையையும் பொய்யையும் நேர்வழியையும் தவறான வழியையும் பிரித்துக் காட்டக்கூடிய உரைகல்லாக இருக்கிறது. அதனைக் கொண்டு நீங்கள் பயனடையுங்கள். அதில் கவனம் செலுத்தி நேர்வழியையும் தவறான வழியையும் அறிந்து கொள்ளுங்கள்.

இந்த தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்த பின்னரும் இவற்றைக் கொண்டு நீங்கள் பயனடையவில்லை எனில் அது உங்களுக்குத்தான் பேரிழப்பு என்பதை அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களைத் தண்டிப்பதற்கு ஆற்றல் கொண்டவன். அவன் ஞானம் மிக்கவன். உங்களை உடனுக்குடன் தண்டிப்பதில்லை. உங்களுக்கு அவகாசம் அளிக்கிறான். அவன்    உடனடியாக உங்களைத் தண்டிப்பதற்கு ஆற்றல் பெற்றிருந்தும் அவன் உங்களைத் தண்டிக்காமல் இருக்கிறான் எனில் அது உங்களுக்கு அவன் அளிக்கும் அவகாசம். அந்த அவகாசத்தை நீங்கள் தவறாக எண்ணி விடாதீர்கள். எந்தச் சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவன் நன்கறிவான்.  ஒவ்வொருவரும் விரைவாகவோ தாமதமாகவோ அவர்களுக்கு உரிய கூலியே பெற்றே தீருவார்கள். அவனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு செயலும் நோக்கங்கள் நிரம்பியவை.

இவ்வளவு தெளிவான சான்றுகள் வந்த பின்னரும் அவனுடைய மார்க்கத்தை, அவனுடைய கட்டளையை ஏற்றுக்கொள்ள மறுத்து ஷைத்தான் ஏற்படுத்திக் கொடுத்த பாதைகளில் செல்பவர்கள் வேறு என்னதான் எதிர்பார்க்கிறார்கள்? அவனிடமிருந்து வேதனை வருவதையா எதிர்பார்க்கிறார்கள்? அந்தச் சமயத்தில் அவர்கள் நம்பிக்கை கொண்டால் அதனால் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. அவர்களின் தண்டனை முடிவு செய்யப்பட்டு விடும். இந்த உலகில் மனிதனுக்கு அறிவு கொடுக்கப்பட்டுள்ளது, தெரிவு செய்யும் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவனுக்கு வழங்கப்பட்ட அறிவைப் பயன்படுத்தி உண்மையை அறிந்துகொள்ள வேண்டியது அவனது கடமை. இந்த உலகில் அல்லாஹ்வைப் பார்க்கமாலேயே அவனுடைய சான்றுகளைக் கண்டு அவனை அறிந்துகொண்டு நம்பிக்கை கொள்ளுமாறு மனிதர்கள் கட்டளை இடப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கான அவகாசம் முடிந்து விட்டால், அவர்கள் தண்டனையை கண்கூடாகக் கண்டுவிட்டால் அந்தச் சமயத்தில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கையினால் எந்தப் பயனும் இல்லை. அவர்களின் விவகாரங்கள் அனைத்தும் அவன் பக்கமே திருப்பப்படும். ஒவ்வொருவரும் அவர்கள் சம்பாதித்தற்கேற்ப முழுமையான கூலியைப் பெறுவார்கள்.

سَلْ بَنِي إِسْرَائِيلَ كَمْ آتَيْنَاهُمْ مِنْ آيَةٍ بَيِّنَةٍ وَمَنْ يُبَدِّلْ نِعْمَةَ اللهِ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُ فَإِنَّ اللهَ شَدِيدُ الْعِقَابِ زُيِّنَ لِلَّذِينَ كَفَرُوا الْحَيَاةُ الدُّنْيَا وَيَسْخَرُونَ مِنَ الَّذِينَ آمَنُوا وَالَّذِينَ اتَّقَوْا فَوْقَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَاللهُ يَرْزُقُ مَنْ يَشَاءُ بِغَيْرِ حِسَابٍ    

2:211,212. “நாம் இஸ்ராயீலின் மக்களுக்கு எவ்வளவு தெளிவான சான்றுகளை வழங்கியிருந்தோம் என்பதை அவர்களிடம் நீர் கேளும். யார் அல்லாஹ்வின் அருட்கொடை தம்மிடம் வந்தபின்னரும் அதனை மாற்றி விடுகிறாரோ அவர் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் தண்டிப்பதில் கடுமையானவன். நிராகரிப்பாளர்களுக்கு இவ்வுலக வாழ்வு அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் நம்பிக்கையாளர்களைக் கேலி செய்கிறார்கள். ஆனால் இறையச்சமுடையோர் மறுமைநாளில் அவர்களைவிட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். அல்லாஹ் தான் நாடுபவர்களுக்கு கணக்கின்றி வழங்குகிறான்.

உங்களுக்கு முன்னால் மார்க்கம் வழங்கப்பட்ட யூதர்களிடம் கேளுங்கள், நாம் அவர்களுக்கு எவ்வளவு தெளிவான சான்றுகளை வழங்கியிருந்தோம் என்பதை. அவர்கள் மீண்டும் மீண்டும் சான்றுகளை வேண்டிக் கொண்டே இருந்தார்கள். சான்றுகளைக் கண்கூடாகக் கண்ட பின்னரும் நம்பிக்கை கொள்ள வேண்டிய முறைப்படி அவர்கள் நம்பிக்கை கொள்ளவில்லை.  தொடர்ந்து சந்தேகங்களில் உழன்று கொண்டிருந்தார்கள். பொறாமையும் கர்வமும் உலகியல் ஆசைகளும் அவர்களின் அறிவை மழுங்கடித்து விட்டன. அவர்கள் அவர்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தை பின்பற்ற வேண்டிய முறைப்படி பின்பற்றவில்லை. நன்றிகெட்டத்தனம் அவர்களின் இயல்பான குணம்போன்று வெளிப்பட்டது. அல்லாஹ்வின் அருட்கொடையை நன்றிகெட்டத்தனத்தால் எதிர்கொள்பவர்கள் அவனுடைய கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள் என்பது இங்கு அவனை அமைத்த நியதி. இது அவர்களுக்கு மட்டுமல்ல, ஒவ்வொருவருக்கும் பொருந்தக்கூடிய நியதி. அவர்களின் வரலாற்றைப் படித்துப் பாருங்கள். அதிலிருந்து பாடங்களை, படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

நன்றிகெட்ட இந்த மனிதர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்? அவர்கள் ஏன் தங்களின் அறிவைப் பயன்படுத்தி இந்த மார்க்கத்தின் உண்மைத்தன்மையை புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை? அவர்களுக்கு இந்த உலக இன்பங்கள் அழகாக்கப்பட்டுள்ளன. அவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கைக்கே முக்கியத்துவம் அளிக்கிறார்கள். இவ்வுலகில் இலாபமடைதல் ஒன்றே அவர்களின் குறிக்கோளாக இருக்கிறது. ஆகவே அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த மாபெரும் அருட்கொடையான இந்த மார்க்கத்தை அவர்கள் புறக்கணிக்கிறார்கள். நம்பிக்கையாளர்கள் இந்த மார்க்கத்தைக் கொண்டு அவர்களுக்கு நினைவூட்டினால், அல்லாஹ் தண்டனையைக் கொண்டு அவர்களை எச்சரித்தால் அவர்கள் நம்பிக்கையாளர்களைக் கேலி செய்கிறார்கள். உங்களைவிட நாங்களே எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்கிறோம் என்று கர்வத்துடன் கூறுகிறார்கள்.

இந்த வசனத்திலிருந்து இரண்டு விசயங்கள் வெளிப்படுகின்றன. ஒன்று, நிராகரிப்பாளர்கள் வாழ்க்கை வசதிகளோடு இருப்பது அவர்கள் சரியான திசையில் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் அல்ல. இரண்டு, நம்பிக்கையாளர்களுக்கு துன்பங்கள் ஏற்படுவது அவர்கள் சரியான திசையில் இல்லை என்பதற்கான அடையாளம் அல்ல.  

நிராகரிப்பாளர்கள் இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதன் அழகில் மயங்கிக் கிடக்கிறார்கள். அவர்கள் பெறக்கூடிய இவ்வுலகின் இன்பங்கள் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கின்றன. அவற்றின் காரணமாக தாங்கள் சரியான திசையில்தான் சென்று கொண்டிருக்கிறோம் என்றும் நம்பிக்கையாளர்கள் பிழைக்கத் தெரியாதவர்கள் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். இந்த எண்ணத்திலிருந்துதான் அவர்களின் கேலி வெளிப்படுகிறது. ஒருவன் நன்றிகெட்டவன், நிராகரிப்பாளன் என்பதனால் இவ்வுலகில் அவன் உடனுக்குடன் தண்டிக்கப்பட மாட்டான். இவ்வுலகின் வசதி வாய்ப்புகள் அவனுக்கு வழங்கப்படலாம். ஆனால் இது அவன் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறான் என்பதற்கான அடையாளம் அல்ல. இரண்டு, நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படலாம். இன்னும் சில சமயங்களில் நிராகரிப்பாளர்களைவிட கூடுதலாக துன்பங்களை அனுபவிக்க நேரிடலாம். ஆனால் இது அல்லாஹ் அவர்களின் மீது கோபமாக இருக்கிறான் என்பதற்கான அடையாளம் அல்ல. அல்லாஹ் அவர்களுக்கான வெகுமதியை இவ்வுலகில் முழுமையாக வழங்காமல் இருக்கலாம். ஆனால் மறுமையில் அவர்கள் தாங்கள் செய்த நற்செயல்களுக்கான கூலியை முழுமையாகப் பெறுவார்கள். அங்கு அவர்களே உயர் நிலையில் இருப்பார்கள். அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்காத வகையில் கணக்கில்லாமல் வழங்குகிறான்.     

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply