செய்யத் குதுப்
திருக்குர்ஆன் இஸ்லாமிய அழைப்பின் வேதமாகவும் அதன் ஆன்மாகவும் அதனை செயல்படத் தூண்டும் காரணியாகவும் அதன் அடித்தளமாகவும் இருக்கின்றது. அதுதான் இந்த அழைப்பைப் பாதுகாக்கக்கூடியது; பராமரிக்கக்கூடியது; தெளிவுபடுத்தக்கூடியது. அதுதான் இந்த அழைப்பின் சட்டமாகவும் வழிமுறையாகவும் இருக்கின்றது. அதிலிருந்தே – அழைப்பாளர்கள் பெற்றுக்கொள்வதுபோல – இஸ்லாமிய அழைப்பு தனக்கான செயல் வழிமுறைகளை அனுபவங்களை பாதையின் தடைகளை எதிர்கொள்வதற்குரிய முன்னேற்பாடுகளைப் பெற்றுக் கொள்கிறது.
இந்தக் குர்ஆன் உயிரோட்டமிக்க ஒரு சமூகத்தை விளித்து உரையாடியது. அந்த சமூகத்தின் வாழ்க்கையில் எதார்த்தமான நிகழ்வுகளை எதிர்கொண்டது. அதன்மூலம் அது இந்த பூமியில் மனித சமூகத்தை எதிர்கொண்டது. அது மனித மனத்திலும் வெளியிலும் மிகப் பெரிய போரை நடத்தியது. இந்த விசயத்தை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளாதவரை நமக்கும் குர்ஆனுக்கும் மத்தியில் மிகப் பெரிய இடைவெளி காணப்படத்தான் செய்யும்.
மனிதன் என்று சொல்லப்படக்கூடிய இந்தப் படைப்பின் அன்றாட வாழ்வோடு எவ்விதத் தொடர்பும் அற்று வெறுமனே ஓதப்படக்கூடிய அல்லது கேட்கப்படக்கூடிய ஒன்றாக நாம் குர்ஆனை அணுகும்வரை நம்முடைய உள்ளத்திற்கும் இந்தக் குர்ஆனுக்கும் மத்தியில் வலுவான தடுப்பு இருந்து கொண்டேயிருக்கும். அதன் வசனங்கள் மனித உள்ளங்களை மனிதர்களுடைய அன்றாட வாழ்வின் உயிரோட்டமான நிகழ்வுகளை எதிர்கொள்வதற்காகவே அருளப்பட்டன. அவை மனித உள்ளங்களை, அவர்களுடைய அன்றாட வாழ்க்கையின் உயிரோட்டமான சம்பவங்களை உண்மையாகவே எதிர்கொண்டன. அதன் விளைவாக மனித சமூகத்தில் சிறப்புகளைப் பெற்ற ஒரு சமூகம் உருவாகியது.
திருக்குர்ஆனின் வெளிப்படையான ஓர் அற்புதம் என்னவெனில் அது வரலாற்றின் குறிப்பிட்ட ஒரு காலகட்டத்தில் குறிப்பிட்ட சமூகத்தின் வாழ்க்கையில் குறிப்பிட்ட சூழல்களை எதிர்கொள்வதற்காக அருளப்பட்டது. அந்த சமூகத்துடன் அது மிகப் பெரிய போராட்டத்தில் ஈடுபட்டது. அது அதன் வரலாற்றுடன் மனித சமூகத்தின் வரலாற்றையும் மாற்றியது. ஆயினும் அது நிகழ்கால வாழ்க்கையையும் எதிர்கொள்ள ஆற்றல் பெற்றுள்ளது. அது தற்காலத்தில் அருளப்பட்டுக் கொண்டிருப்பதுபோல நிகழ்கால முஸ்லிம் சமூகத்தின் விவகாரங்களை, அது ஜாஹிலிய்ய சக்திகளுடன் மோதுவதை எதிர்கொள்கிறது. அதே அளவு உயிரோட்டத்துடன், எதார்த்தத்துடன் அது மனிதனின் அகவுலகையும் எதிர்கொள்கிறது.
திருக்குர்ஆனின் செயல்படும் ஆற்றலை நாம் பெறுவதற்கும் அதில் மறைந்திருக்கும் உயிரோட்டத்தை அறிவதற்கும் ஒவ்வொரு தலைமுறையிலும் முஸ்லிம் சமூகத்திற்குத் தேவையான வழிகாட்டலை அதிலிருந்து நாம் பெறுவதற்கும் அதனைக் கொண்டு முதன் முதலாக விளித்து உரையாடப்பட்ட அந்த முதல் முஸ்லிம் தலைமுறையினர் உருவாகிய விதத்தை நாம் அறிந்துகொள்வது மிக அவசியம். அவர்கள் மதீனாவிலும் அரேபிய தீபகற்பத்திலும் பல்வேறு நிகழ்வுகளை எதிர்கொண்டார்கள். தம் எதிரிகளுடன் நண்பர்களுடன் அவர்கள் மேற்கொண்ட அணுகுமுறை, தம் இச்சைகளுடன் ஆசைகளுடன் அவர்கள் மேற்கொண்ட போர் என அச்சமயத்தில் அவர்களின் நிகழ்வுகள் அனைத்தையும் எதிர்கொண்டவாறு குர்ஆன் இறங்கியது. அந்த முஸ்லிம்கள் தம் மனதுடனும் மதீனாவிலும் மக்காவிலும் தங்களுக்காக காத்திருந்த எதிரிகளுடனும் மேற்கொண்ட பெரும் போரில் தங்களுக்கான வழிகாட்டல்களை, அறிவுரைகளை அருளப்பட்டுக் கொண்டிருந்த குர்ஆனிலிருந்தே பெற்றார்கள்.
நன்று. நாம் அந்த முதல் முஸ்லிம் தலைமுறையினருடன் வாழ வேண்டும். அவர்களின் உண்மையான மனிதப் பண்புகளை, அவர்களின் எதார்த்தமான வாழ்க்கையை, மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்கள் எதிர்கொண்ட சிரமங்களைக் காண வேண்டும். அவர்களின் அன்றாட நிகழ்வுகளிலும் பொதுவான நோக்கங்களிலும் குர்ஆன் காட்டிய நேரடியான வழிகாட்டலைக் குறித்து சிந்திக்க வேண்டும். அது அவர்களின் விரல் பிடித்து அவர்களை எவ்வாறு கொஞ்சம் கொஞ்சமாக அழைத்துச் சென்றது என்பதையும் காண வேண்டும். அவர்கள் தடுக்கி விழுந்தார்கள், எழுந்து சென்றார்கள், வழிதவறினார்கள், நேரான பாதையில் சென்றார்கள், பலவீனப்பட்டார்கள், எதிர்த்து நின்றார்கள், வலியால் அவதிப்பட்டார்கள், வலிகளைத் தாங்கிக் கொண்டு பயணித்தார்கள். மெதுவாக, பொறுமையாக சிரமத்துடன் அது அவர்களை உயரம் நோக்கிக் கொண்டு சென்றது. அந்தப் பயணத்தில் மனிதனின் எல்லா தனித்தன்மைகளும் பலவீனங்களும் ஆற்றல்களும் தெளிவாகவே வெளிப்பட்டன.
நாம் அவ்வாறு காணும்போது அந்த முதல் தலைமுறை விளித்து உரையாடப்பட்டதுபோன்றே நாமும் விளித்து உரையாடப்படுவதாக உணர்வோம். நாம் காண்கின்ற, அறிந்த எல்லா தனித்தன்மைகளோடும் நாம் உணர்கின்ற நம்முடைய மனிதத்தன்மை குர்ஆனின் அழைப்புக்குப் பதிலளிக்கும். அது நீண்ட நெடிய தன் வாழ்க்கைப் பயணத்தில் அதன் வழிகாட்டலைக் கொண்டு பயனடையும்.
இந்தப் பார்வையோடு நாம் குர்ஆனை அணுகும்போது அது அந்த முதல் முஸ்லிம் தலைமுறையினரின் வாழ்க்கையில் உயிரோட்டத்துடன் செயல்பட்டதையும் நம்முடைய வாழ்க்கையிலும் அதனால் செயல்பட முடியும் என்பதையும் காண்போம். அது இன்றும் நாளையும் நம்முடன் பயணிக்கும் என்பதையும் அது நம்முடைய நடைமுறை வாழ்க்கைக்குத் தொடர்பற்ற வெறுமனே ஓதப்படுகின்ற மந்திரங்கள் அல்ல என்பதையும் அதேபோன்று அது மனித சமூகத்துடன் தன் செயலை நிறுத்திக் கொண்ட கடந்துபோன வரலாறும் அல்ல என்பதையும் நாம் உணர்வோம்.
இந்தப் பிரபஞ்சம் எவ்வாறு உண்மையான இருப்பைக் கொண்டுள்ளதோ அதேபோன்று குர்ஆனும் உண்மையான இருப்பைக் கொண்டதாகும். பிரபஞ்சம் பார்க்கப்பட வேண்டிய அல்லாஹ்வின் வேதம். குர்ஆன் படிக்கப்பட வேண்டிய அல்லாஹ்வின் வேதம். இரண்டுமே படைப்பாளனின் வல்லமையை பறைசாற்றும் சாட்சிகள். அதேபோன்று இரண்டுமே செயல்படுவதற்காக இருக்கக்கூடியவை. பிரபஞ்சம் தம்முடைய விதிகளுடன் படைப்பாளன் அதற்கு விதித்த பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. சூரியன் தன் வட்டப்பாதையில் சென்று கொண்டும் தனக்கு விதிக்கப்பட்ட பணியை நிறைவேற்றிக் கொண்டும் இருக்கிறது. சந்திரன், பூமி மற்றும் எல்லா நட்சத்திரங்களும் தம் பணிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன. நீண்ட காலம், அவை தம் பணிகளை நிறைவேற்றுவதற்குத் தடையாக இல்லை. அதேபோன்று குர்ஆனும் மனித சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது. அது இன்றளவும் அப்படித்தான் இருக்கிறது. மனிதனும் அதே மனிதன்தான். இயல்பின் அடிப்படையிலும் படைக்கப்பட்ட விதத்திலும் அவன் என்றும் மாறாதவன். இந்தக் குர்ஆனின் மூலம் அல்லாஹ் மனித சமூகத்தை விளித்து உரையாடுகிறான். அந்த உரையாடல் என்றும் மாறப்போவதில்லை. ஏனெனில் மனிதன் வேறொரு படைப்பாக மாறப்போவதில்லை, அவனைச் சுற்றியுள்ள சூழல்கள் எவ்வளவுதான் மாற்றடைந்தாலும் சரியே. அவற்றால் அவன் எவ்வளவுதான் தாக்கமடைந்திருந்தாலும் சரியே. குர்ஆன் என்றும் மாறாத மனிதனின் இயல்பை விளித்து உரையாடுகிறது. அது நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் மனித வாழ்க்கையை மாற்றும் ஆற்றலைக் கொண்டுள்ளது. ஏனெனில் அது அதற்காகவே உருவாக்கப்பட்டுள்ளது. அது அல்லாஹ் மனித சமூகத்தை இறுதியாக விளித்து உரையாடிய உரையாடல். மாறா இயல்பைப் பெற்றுள்ள இந்தப் பிரபஞ்சத்தைப் போலவே அதன் இயல்பும் மாறாதது.
யாரேனும் ஒருவர் சூரியனைப் பார்த்து இது பழமையான நட்சத்திரம். நமக்கு முன்னேற்றமடைந்த புதிய நட்சத்திரம் வேண்டும் என்று கூறினால் அல்லது இந்த மனிதன் பழமையான படைப்பு. நமக்கு முன்னேற்றமடைந்த புதியதொரு படைப்பு வேண்டும் என்று கூறினால் நாம் அவரைப் பார்த்து சிரிக்க மாட்டோமா? அப்படித்தான் திருக்குர்ஆனைக் குறித்து, அல்லாஹ்வின் இறுதியான உரையாடலைக் குறித்து கூறுவதும்.
இந்தக் கட்டுரை செய்யத் குதுப் எழுதிய திருக்குர்ஆனின் நிழலில் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது.
