திருக்குர்ஆனின் மிக நீண்ட அத்தியாயம் தன் இறுதிப் பகுதியை அடைந்திருக்கிறது. அடுத்து வரக்கூடிய இறுதியான வசனங்கள் அதன் முடிவுரைபோலவே இருக்கின்றன. அவை முந்தைய வசனங்களோடும் ஒட்டுமொத்த அத்தியாயத்தோடும் ஒருசேர தொடர்பு கொண்டிருக்கின்றன.
لِلَّهِ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الأرْضِ وَإِنْ تُبْدُوا مَا فِي أَنْفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُمْ بِهِ اللَّهُ فَيَغْفِرُ لِمَنْ يَشَاءُ وَيُعَذِّبُ مَنْ يَشَاءُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِير
2:284. “வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அல்லாஹ்வுக்கே உரியவை. நீங்கள் உங்கள் உள்ளங்களில் உள்ளதை வெளிப்படுத்தினாலும் அல்லது அதனை மறைத்தாலும் அது குறித்து அல்லாஹ் உங்களிடம் விசாரணை செய்வான். தான் நாடியவர்களை அவன் மன்னிக்கிறான். தான் நாடியவர்களை அவன் தண்டிக்கிறான். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான்.”
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவற்றில் அவனுடைய அதிகாரம் மட்டுமே செல்லுபடியாகும். அவனுடைய கட்டுப்பாட்டை மீறி அவற்றில் எதுவும் நிகழ்ந்துவிட முடியாது. உங்கள் உள்ளங்களில் உள்ளதை நீங்கள் வெளிப்படுத்தினாலும் அல்லது மறைத்தாலும் அதற்காக விசாரிக்கப்படுவீர்கள். முந்தைய வசனத்தில் இடம்பெற்ற “சாட்சியத்தை மறைக்காதீர்கள். அவன் உங்களின் செயல்பாடுகள் குறித்து நன்கறிந்தவன்” என்ற வாசகத்திற்கு விளக்கமாகவும் இந்த வாசகம் அமைந்து விடுகிறது. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது எனில் அவனுக்குத் தெரியாமல் நீங்கள் எதை மறைக்க முடியும்? அவ்வாறு மறைத்துவிட்டு அவனுடைய பிடியிலிருந்து எப்படி நீங்கள் தப்ப முடியும்?
உள்ளத்தில் உருவாகி மறையக்கூடிய எண்ணங்களுக்காக நாம் விசாரிக்கப்பட மாட்டோம். நபியவர்கள் கூறினார்கள்: “மனதில் தோன்றும் தீய எண்ணங்களை வெளிப்படுத்திப் பேசாதவரை அல்லது அவற்றுக்கு செயல்வடிவம் கொடுக்காதவரை அல்லாஹ் அவற்றை மன்னித்து விடுகிறான்.” (புகாரீ, முஸ்லிம்) ஏனெனில் அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை.
நம் கட்டுப்பாட்டில் உள்ளவற்றுக்குத்தான் நாம் பொறுப்பாவோம். அவை குறித்து நாம் விசாரிக்கப்படுவோம். உள்ளத்தில் உருவாகி வேரூன்றக்கூடிய, நிலைபெறக்கூடிய எண்ணங்களுக்கு நாமே பொறுப்பு. ஏனெனில் நம்முடைய விருப்பமில்லாமல் அவை வேரூன்றவோ நிலைபெறவோ முடியாது. பொறாமையை, வெறுப்பை, காழ்ப்பை உள்ளத்தில் சுமந்து கொண்டு அலையும்போது அவை நிச்சயம் நம்மையும் மீறி சொல்லாகவோ செயலாகவோ வெளிப்பட்டு விடும். மற்றவர்களின் வீழ்ச்சியில் நாம் அடையக்கூடிய குரூரமான ஆனந்தம் நாம் மனதளவில் அழுக்கடைந்தவர்களாக இருக்கின்றோம் என்பதன் அடையாளமே. வெளிப்படுத்தப்படாமல் உள்ளத்தில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் நயவஞ்சகமும் இந்த வகையில் உள்ளவையே.
அல்லாஹ் தான் நாடியவர்களை மன்னிக்கிறான். தான் நாடியவர்களை தண்டிக்கிறான். இது முந்தைய வாசகத்தை வலுப்படுத்தும் வாசகம். மன்னிக்கும் அதிகாரமும் தண்டிக்கும் அதிகாரமும் அவனிடமே இருக்கின்றது. அவனுடைய மன்னிப்புக்குத் தகுதியானவர்களை அவன் மன்னிக்கிறான். அவனுடைய தண்டனைக்கு உரியவர்களை அவன் தண்டிக்கிறான். அவனுடைய நாட்டம் அவன் அமைத்த விதிகளுக்கு உட்பட்டவை. அவனுடைய நாட்டம் அவன் அமைத்த விதிகளோடு முரண்படக்கூடியது அல்ல. அவனிடமிருந்து நோக்கம் இன்றி எதுவும் வெளிப்படாது. அவனால் முடியாதது எதுவும் இல்லை. அவன் ஒவ்வொன்றின் மீதும் பேராற்றலுடையவன்.
آمَنَ الرَّسُولُ بِمَا أُنْزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ لا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلا وُسْعَهَا لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ رَبَّنَا لا تُؤَاخِذْنَا إِنْ نَسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِنَا رَبَّنَا وَلا تُحَمِّلْنَا مَا لا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنْتَ مَوْلانَا فَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
2:285,286. “இந்தத் தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்புகிறார். நம்பிக்கையாளர்களும் அதனை நம்புகிறார்கள். இவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீதும் அவனுடைய வானவர்களின் மீதும் அவனுடைய வேதங்களின் மீதும் அவனுடைய தூதர்களின் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளார்கள். “நாங்கள் அவனுடைய தூதர்களில் யாருக்கு மத்தியிலும் பாகுபாடு காட்ட மாட்டோம்” என்று அவர்கள் முன்மொழிகிறார்கள். “கேட்டோம், கட்டுப்பட்டோம். எங்கள் இறைவனே! நாங்கள் உன்னிடம் மன்னிப்பை வேண்டுகிறோம். உன் பக்கமே நாங்கள் திரும்பிவர வேண்டும்” என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ் யார் மீதும் அவரது சக்திக்குட்பட்டே தவிர பொறுப்பு சுமத்துவதில்லை. அவர் சம்பாதித்ததன் பலன் அவருக்கே. அவரது செயலின் விளைவும் அவருக்கே. “எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ தவறிழைத்து விட்டாலோ எங்களை தண்டித்துவிடாதே. எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது சுமத்தியதைப் போன்று எங்கள் மீதும் சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! எங்களால் சுமக்க முடியாத சுமையை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக. எங்களை மன்னிப்பாயாக. எங்கள் மீது கருணை காட்டுவாயாக. நீயே எங்களின் பாதுகாவலன். ஆகவே நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக.”
இந்த மார்க்கம், இந்த வேதம் அல்லாஹ்விடமிருந்து தமக்கு அருளப்பட்டிருக்கிறது என்பதை இந்த தூதர் மனமார உறுதியாக நம்பிக்கை கொண்டிருக்கிறார். அதனடிப்படையில்தான் தம் வாழ்க்கையை அமைத்திருக்கிறார். அவர் எதன் பக்கம் மக்களை அழைத்தாரோ அதற்கு முன்மாதிரியாகவே வாழ்ந்து காட்டியிருக்கிறார். அவரது அழைப்பை ஏற்றுக் கொண்ட நம்பிக்கையாளர்களும் தங்களின் சொல்லாலும் செயலாலும் அதனை உண்மைப்படுத்திக் காட்டினார்கள்.
அவர் தம்முடைய கருத்துகளை மக்களுக்கு மத்தியில் பரப்புவதற்காகவோ தம்முடைய ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காகவோ அவ்வாறு வாதிடவில்லை. தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை மிகச் சிறந்த முறையில் அவர் நிறைவேற்றினார். அவருடைய சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில், அவருடைய அழைப்புக்கும் வாழ்க்கைக்கும் மத்தியில் எந்த வேறுபாடும் இருக்கவில்லை.
அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் உறுதியாக நம்புகிறார்கள். அல்லாஹ்வை நம்புவது என்பது அவனுடைய இருப்பை, அவன் ஒருவனே வணக்கத்திற்குத் தகுதியான ஒரே இறைவன் என்பதை, அவனுக்கேயுரிய அத்தனை பண்புகளுடனும் ஏற்றுக்கொள்வதும் குறைபாடுகளும் பலவீனங்களும் கொண்ட பண்புகளைவிட்டு அவனைத் தூய்மைப்படுத்துவதும் ஆகும். அவனுடைய வானவர்களை நம்புவது என்பது அவர்கள்தாம் அல்லாஹ்விடமிருந்து வஹியை தூதர்களுக்குக் கொண்டு வருகிறார்கள் என்பதை ஏற்றுக் கொள்வதாகும். அந்த வானவர்களின் வழியாகவே அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழிகாட்டும்பொருட்டு வேதங்களை தூதர்களுக்கு வழங்குகிறான். இதுதான் வேதங்களை நம்புவதும் தூதர்களை நம்புவதும் ஆகும்.
யூதர்களும் கிருஸ்தவர்களும் இந்த இடத்தில்தான் வேறுபடுகிறார்கள். அவர்கள் வானவர்களில் சிலரை ஏற்றுக் கொண்டு சிலரை நிராகரித்தார்கள். அவர்கள் வேதங்களில் சிலவற்றை ஏற்றுக் கொண்டு சிலவற்றை நிராகரித்தார்கள். அவர்கள் தூதர்களில் சிலரை ஏற்றுக் கொண்டு சிலரை நிராகரித்தார்கள். தூதர்களுக்கு மத்தியில் பாகுபாடு காட்டினார்கள். தங்கள் இனத்திலிருந்து வந்த தூதர்களை மட்டும் ஏற்றுக் கொண்டார்கள். அந்த தூதர்கள் கொண்டு வந்த சட்டங்களையும் முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை. தங்களுக்கு இலகுவானவற்றை ஏற்றுக் கொண்டார்கள். கடினமானவற்றை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்த வசனம் யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்குமான மறுப்பாகவும் அவர்கள் வழிதவறிச் சென்ற புள்ளியை தெளிவுபடுத்தக்கூடியதாகவும் உண்மையான நம்பிக்கையாளர்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான முன்மாதிரியை முன்வைக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.
தூதர்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்து வந்தவர்கள். அந்த தூதர்களுக்கு வஹியைக் கொண்டு வந்த வானவர்கள் அனைவரும் அல்லாஹ்விடமிருந்தே வந்தார்கள். தூதர்களில் சிலரை நிராகரிப்பதும் வானவர்களில் சிலரை நிராகரிப்பதும் அல்லாஹ்வை நிராகரிப்பதாகும். உண்மையில் அவர்கள் தூதர்களையோ வானவர்களோ நிராகரிக்கவில்லை. அல்லாஹ்வையே நிராகரிக்கிறார்கள்.
யூதர்கள் “கேட்டோம், அதற்கு மாறாகச் செய்தோம்” என்று கூறினார்கள். அவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மார்க்கத்தைப் புறக்கணித்தார்கள். அவர்களின் செயல்பாடு அப்படித்தான் இருந்தது. இந்த வசனத்தில் அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்கு “கேட்டோம், கட்டுப்பட்டோம், எங்கள் இறைவனே! எங்களை மன்னிப்பாயாக. உன் பக்கமே நாங்கள் திரும்பிவர வேண்டும்” என்ற பிரார்த்தனையை கற்றுக் கொடுக்கிறான். இந்த மார்க்கம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்ட மகத்தான அருட்கொடை. இந்த அருட்கொடைக்கு நன்றிசெலுத்துவது என்பது இந்த மார்க்கத்தின் அடிப்படையில் செயல்படுவதுதான்.
எங்கள் இறைவனே! எங்களின் தவறுகளை, பாவங்களை மறைப்பாயாக, மன்னித்து விடுவாயாக. நாங்கள் உன் பக்கமே திரும்பி வர வேண்டும். அந்த நாளை நினைவில் கொண்டே நாங்கள் எங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். யூதர்கள் அந்த நாளை மறந்து வாழ்ந்ததுபோல நாங்கள் எங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக்கூடாது.
அல்லாஹ் யார் மீதும் அவரது சக்திக்கு உட்பட்டு தவிர பொறுப்பு சுமத்துவதில்லை. தாங்கள் முடியாத துன்பம் என்று எதுவும் இல்லை. சுமக்க முடியாத பாரம் என்று எதுவும் இல்லை. ஒவ்வொரு பொறுப்பும் அதற்கான தகுதிகளோடு சேர்த்தே வழங்கப்படும். ஒவ்வொரு பிரச்சனையும் அதற்கான தீர்வையும் கொண்டிருக்கும். ஒரு மனிதன் செய்யும் நன்மை அவனுக்கே பயனளிக்கும். அந்த நன்மை இந்த உலகிலும் மறுவுலகிலும் அவனுக்குப் பயனளிக்கும். அவன் சம்பாதித்த நன்மை எதுவும் அதற்குரிய பலனைத் தராமால் வீணாகி விடாது. அதேபோன்று அவன் சம்பாதித்த தீமை அவனுக்கே தீங்களிக்கும். அவன் செய்த பாவங்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் அவனுக்கு துன்பங்களைக் கொண்டு வந்து சேர்க்கும்.
இங்கு நன்மையை சம்பாதித்தல் என்பதற்கு கஸபத் என்ற வார்த்தையும் தீமையை சம்பாதித்தல் என்பதற்கு இக்தஸபத் என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. கஸபத் என்றால் இயல்பாக, இலகுவாக சம்பாதிப்பது. நன்மை செய்வது இயல்பானது, இலகுவானது. இக்தஸபத் என்ற வார்த்தையில் வலிந்து சம்பாதிப்பது என்ற பொருளும் இருக்கிறது. அது அவனுடைய இயல்பான பாதை அல்ல. அது பிறழ்வின் பாதை. மனிதனின் இயல்பில் நன்மையின் பக்கமே சாய்கிறான். அவன் நன்மையை நன்மை என்றும் தீமையை தீமை என்றும் அறிந்தே இருக்கிறான். நன்மை அவனுக்கு மன நிறைவையும் தீமை அவனுக்கு குற்றவுணர்ச்சியையும் அளிக்கக்கூடியது.
“எங்கள் இறைவனே! நாங்கள் மறந்து விட்டாலோ தவறிழைத்து விட்டாலோ எங்களைக் குற்றம்பிடித்து விடாதே. எங்கள் இறைவனே! எங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது சுமத்தியதைப் போன்று எங்கள் மீதும் சுமத்தி விடாதே. எங்கள் இறைவனே! எங்களால் சுமக்க முடியாத சுமையை எங்கள் மீது சுமத்தி விடாதே. எங்களைப் பொறுத்தருள்வாயாக. எங்களை மன்னிப்பாயாக. எங்கள் மீது கருணை காட்டுவாயாக. நீயே எங்களின் பாதுகாவலன். ஆகவே நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்கு உதவி புரிவாயாக” நம்பிக்கையாளர்களிடமிருந்து வெளிப்படும் இயல்பான பிரார்த்தனை. அவர்களின் உள்ளத்து உணர்வுகளுக்கு உகந்த வார்த்தைகளை அல்லாஹ் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கிறான். இச்சைகளின் ஆதிக்கத்தினால் அவர்கள் மறந்து விடலாம், தவறிழைத்து விடலாம். மறதியும் தவறும் மனிதப் பலவீனங்கள். யாரும் அவற்றிலிருந்து விலகியிருக்க முடியாது. மனிதர்கள் தவறிழைக்கக்கூடியவர்கள். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்பதன்வழியாகவே அவர்கள் தூய்மையடைகிறார்கள்.
முந்தையவர்கள் கடினமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள். யூதர்களின் பாவங்களின் காரணமாக அவர்களின் மீது கூடுதல் சுமை ஏற்றப்பட்டது. அவர்களுக்கு கடினமான சட்டங்கள் வழங்கப்பட்டன. மனிதர்கள் செய்யும் பாவங்கள் அவர்களுக்குத் துன்பங்களைக் கொண்டு வருகின்றன.
எங்களால் சுமக்க முடியாத சுமையை என்ற வாசகம் கடினமான சட்டங்களை, கடினமான சோதனைகளை எங்கள் மீது சுமத்தி விடாதே என்ற பொருளையே தருகிறது. அன்றைய அறபுக்களின் மொழியில் சுமக்க முடியாத சுமை என்பது நிறைவேற்றுவதற்குக் கடினமான பொறுப்புகளையே குறிக்கும்.
எங்கள் பாவங்களை, தவறுகளை மன்னித்து எங்களை கண்டும் காணாமல் விட்டு விடுவாயாக, எங்களின் தவறுகளை மறைத்து விடுவாயாக. எங்கள் மீது கருணை காட்டுவாயாக. இது மூன்று நிலைகளைக் குறிக்கிறது. அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாவங்களை கண்டும் காணாமல் விட்டுவிடக்கூடியவன். அவற்றை மறைத்து மன்னிக்கக்கூடியவன். பிறகு அவர்கள் மீது கருணை காட்டக்கூடியவன்.
அல்லாஹ்வே! நீயே எங்களின் பொறுப்பாளன். நீயே எங்களின் பாதுகாவலன். உன்னை நிராகரிக்கும் கூட்டத்தாருக்கு எதிராக எல்லா வகையிலும் எங்களுக்கு உதவி புரிவாயாக.
