வட்டித் தொழிலும் தன்னல வெறியும்

You are currently viewing வட்டித் தொழிலும் தன்னல வெறியும்

தர்மம் செய்வதன் ஒழுங்குகள், நல்ல தர்மம் ஏற்படுத்தும் தாக்கங்கள், மோசமான தர்மம் ஏற்படுத்தும் விளைவுகள் ஆகியவை தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதற்கு முற்றிலும் மாறான வட்டியைக் குறித்து பேசப்படுகிறது. முஸ்லிகள் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சமூகத்தினர். அவர்கள் மற்றவர்களின் துன்பங்களைக் கொண்டு பயனடையக்கூடியவர்கள் அல்ல. அந்த துன்பங்களிலிருந்து அவர்களை விடுவிக்க தங்களால் இயன்ற அளவு முயற்சிப்பவர்கள். தர்மம் செய்வது அதன் ஒரு வழிமுறைகளில் ஒன்றுதான்  தர்மத்தின் வழியாக செல்வம் அவர்களிலுள்ள ஏழைகளையும் சென்றடைகிறது.

ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் சமூகத்தில் அன்பும் இணக்கமும் சகோதரத்துவமும் வளர்கின்றன. ஒருவர் மற்றவரின் துன்பத்தைக் கொண்டு பயனடையும் சமூகத்தில் காழ்ப்பும் வெறுப்பும் தன்னற வெறியும் வளர்கின்றன. அவை சமூகத்தை உள்ளிருந்து அரித்து விடுகின்றன. வட்டி அத்தகைய மோசமான பண்புகளையே உருவாக்கும். ஆகவேதான் இஸ்லாம் வட்டியை கடுமையான அளவில் தடைசெய்கிறது. வட்டித்தொழில் மேலோங்கியிருக்கும் ஒரு சமூகத்தில் அன்பையும் இணத்தையும் சகோதரத்துவத்தையும் மனிதநேயத்தையும் எதிர்பார்க்க முடியாது.

வட்டித் தொழில் மனிதனின் தன்னல வெறியைத் தூண்டுகிறது. அவன் தன் நலனைத் தவிர வேறு எதையும் குறித்து யோசிக்காதவனாக ஆகிவிடுகிறான். தன்னிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவன் கடனைக் கொடுக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டாலும் அவனுடைய குடும்பத்தாரிடமிருந்து கடனையும் வட்டியையும் வசூலித்துவிட வேண்டும் என்று வட்டித்தொழில் செய்பவன் கங்கணம் கட்டிக் கொண்டு அலைவது இந்த சுயநல வெறியின் வெளிப்பாடுதான்.  

الَّذِينَ يَأْكُلُونَ الرِّبَا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ الَّذِي يَتَخَبَّطُهُ الشَّيْطَانُ مِنَ الْمَسِّ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا إِنَّمَا الْبَيْعُ مِثْلُ الرِّبَا وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَا فَمَنْ جَاءَهُ مَوْعِظَةٌ مِنْ رَبِّهِ فَانْتَهَى فَلَهُ مَا سَلَفَ وَأَمْرُهُ إِلَى اللَّهِ وَمَنْ عَادَ فَأُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ يَمْحَقُ اللَّهُ الرِّبَا وَيُرْبِي الصَّدَقَاتِ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ كَفَّارٍ أَثِيمٍ

2:275,276. “வட்டியை உண்பவர்கள் மறுமைநாளில் ஷைத்தான் தீண்டியதால் பைத்தியமாகி விட்டவர்களைப் போலல்லாமல் எழ மாட்டார்கள். இதற்குக் காரணம், வியாபாரமும் வட்டியைப் போன்றதுதான் என்று அவர்கள் கூறியதேயாகும். உண்மையில் அல்லாஹ் வியாபாராத்தை அனுமதிக்கப்பட்டதாகவும் வட்டியைத் தடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆக்கியுள்ளான். ஆகவே யார் தம் இறைவனிடமிருந்து அறிவுரை வந்த பின்னர் விலகிக்கொண்டாரோ அவர் முன்னர் வாங்கியது அவருக்குரியதாகும். அதன் விவகாரம் அல்லாஹ்விடமே உள்ளது. யார் அதனை மீண்டும் செய்கிறார்களோ அவர்களே நரகவாசிகளாவர். அதில் அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். அல்லாஹ் நன்றிகெட்டவர்களையும் பாவிகளையும் விரும்புவதில்லை.”

வட்டித் தொழில் செய்பவர்கள் இயல்பு நிலையில் இருக்க வாய்ப்பில்லை. அவர்கள் இயல்பு சிதைக்கப்பட்ட நிலையில்தான் இருப்பார்கள். மறுமை நாளில் இயல்பு சிதைக்கப்பட்ட நிலையில்தான் எழுப்பப்படுவார்கள். ஜின் தீண்டியவர்கள், பேய் பிடித்தவர்கள் என்ற வார்த்தை அவர்கள் இயல்பு சிதைக்கப்பட்ட, அறிவு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இருப்பார்கள் என்பதையே குறிக்கிறது. ஷைத்தான் அவர்களின் அறிவை மழுங்கடித்து எவ்வித இரக்கமும் அற்ற கொடிய மிருகங்களாக அவர்களை மாற்றி விடுகிறான். அன்றைய அறபுக்கள் பைத்தியம் பிடித்தவர்களை ஜின்களால் பாதிக்கப்பட்டவர்கள் என்றே கூறி வந்தார்கள். இந்த வசனம் அதே வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது. அதன்மூலம் அது அவர்களின் நிலையைக் குறித்த அச்சுறுத்தும் பயங்கரமான காட்சியை நம் முன்னால் கொண்டு வந்து விடுகிறது.  

ஏனெனில் அவர்கள் வட்டியும் வியாபாரத்தைப் போன்றதுதான் என்று கூறினார்கள். இயல்பு நிலையில் நீடிக்கும் எந்த மனமும் இந்த ஒப்பீட்டை ஏற்றுக் கொள்ளாது. வியாபாரத்தில் இலாபமும் நஷ்டமும் இருக்கிறது. அதில் மனிதர்களின் உழைப்பு இருக்கிறது. அதில் பயன்பெற்று பயனடைதல் இருக்கிறது. வட்டி அப்படியல்ல. அது இலாபத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. எவ்வித உழைப்பும் இன்றி அந்த இலாபம் பெறப்படுகிறது. அது சக மனிதர்களின் துன்பத்திலிருந்து, நெருக்கடியிலிருந்து பெறப்படும் இலாபம் ஆகும். அதில் பயன்பெற்று பயனடைதல் இல்லை. அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலானதாக, அனுமதிக்கப்பட்டதாக ஆக்கியிருக்கிறது. வட்டியை ஹராமானதாக, தடை செய்யப்பட்டதாக ஆக்கியிருக்கிறது. அல்லாஹ் அனுமதித்த ஒன்றும் தடைசெய்த ஒன்றும் எப்படி சமமாக முடியும்? அவன் மனித சமூகத்திற்கு நன்மையளிப்பவற்றையே ஹலாலானவையாக ஆக்கியிருக்கிறான். அவன் மனித சமூகத்திற்கு தீங்களிப்பவற்றையே ஹராமானவையாக ஆக்கியிருக்கிறான்.

இந்த அறிவுரை, இந்த எச்சரிக்கை வந்த பிறகு யார் வட்டியிலிருந்து விலகிக் கொண்டார்களோ அவர்கள் முன்னர் வாங்கியவை அவர்களுக்கு உரியவை. அவற்றை அவர்கள் திருப்பித் தர வேண்டிய அவசியம் இல்லை. அவர்களின் விவகாரம் அல்லாஹ்விடம் இருக்கின்றது. யார் இந்த அறிவுரை, இந்த எச்சரிக்கை வந்த பின்னரும் தொடர்ந்து வட்டித் தொழிலில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் நரகவாசிகளாவர். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள். அல்லாஹ் ஒரு செயலைத் தடுத்திருக்கிறான் என்பது தெளிவான பின்னரும் யார் அந்த செயலில் தொடர்ந்து ஈடுபடுவாரோ அவர் பாவச் சுழலில் சிக்கி விடுவார். அந்தப் பாவம் அவரை முழுமையாக ஆக்கிரமித்து அவரை நரகவாசியாக ஆக்கி விடும்.

அல்லாஹ் வட்டியை அழிக்கிறான். பார்ப்பதற்கு அது வளர்வதுபோன்று, பெருகுவதுபோன்று தெரிந்தாலும் அழிவுக்கான கூறுகளையே கொண்டிருக்கும். உடலை அரிக்கும் புற்றுநோய் கட்டி போன்று அது உள்ளத்தை அரிக்கும் புற்று. நிம்மதியின்மையயும் மனச்சிக்கல்களையும் துன்பங்களையும் ஆபத்துகளையும் கொண்டு வந்து சேர்க்கும். நன்றிகெட்ட மனிதர்கள் வெளித்தோற்றத்தைப் பார்த்து ஏமாந்து விடுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருட்கொடையை தவறாகப் பயன்படுத்துபவர்கள். அவர்கள் மற்றவர்களின் உரிமைகளையும் பறிக்கிறார்கள். அப்படிப்பட்ட பாவிகளையும் நன்றிகெட்டவர்களையும் அல்லாஹ் விரும்புவதில்லை.

அல்லாஹ் தர்மங்களை வளர்க்கிறான். அது வெளிப்படையாகப் பார்க்கும்போது குறைவதுபோன்று தெரிந்தாலும் எல்லா வகையிலும் வளரக்கூடியது. அது மனதின் கஞ்சத்தனத்தை, தன்னல வெறியை நீக்குகிறது. அதனால் மனம் நெருக்கடியிலிருந்து விடுபட்டு விசாலப்படுகிறது. அது சமூகத்தில் இணக்கத்தையும் ஒருவர் மற்றவருக்கு உதவிக் கொள்ளும் தன்மையையும் வளர்க்கிறது. அது எதிர்பாரா புறத்திலிருந்து பரக்கத்துகளைக் கொண்டு வருகிறது. உதவி செய்தவர்கள் ஆச்சரியமான முறையில் உதவி செய்யப்படுகிறார்கள்.      

إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَذَرُوا مَا بَقِيَ مِنَ الرِّبَا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ فَإِنْ لَمْ تَفْعَلُوا فَأْذَنُوا بِحَرْبٍ مِنَ اللَّهِ وَرَسُولِهِ وَإِنْ تُبْتُمْ فَلَكُمْ رُءُوسُ أَمْوَالِكُمْ لَا تَظْلِمُونَ وَلَا تُظْلَمُونَ وَإِنْ كَانَ ذُو عُسْرَةٍ فَنَظِرَةٌ إِلَى مَيْسَرَةٍ وَأَنْ تَصَدَّقُوا خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ تَعْلَمُونَ وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

2:277-281. “யார் நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்து தொழுகையை நிலைநிறுத்தி ஸகாத்தையும் கொடுத்து வருகின்றார்களோ அவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் நற்கூலி இருக்கின்றது. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாயின் எஞ்சியுள்ள வட்டியை விட்டுவிடுங்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லையெனில் அல்லாஹ்விடமிருந்தும் அவனுடைய தூதரிடமிருந்தும் போருக்கான அறிவிப்பை எதிர்பாருங்கள். நீங்கள் மன்னிப்புக் கோரினால் உங்களின் மூலதனத்திற்கு நீங்கள் உரிமையாளர்களாவீர்கள். நீங்கள் அநீதி இழைக்கக் கூடாது. உங்கள் மீதும் அநீதி இழைக்கப்படவும் கூடாது. கடன் பெற்றவர் கஷ்டத்தில் இருந்தால் அவருக்கு வசதி ஏற்படும்வரை அவகாசம் அளியுங்கள். நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின் மன்னித்து விடுவதே உங்களுக்கு மிகச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் பக்கம் திரும்பக் கொண்டுவரப்படும் அந்த நாளை அஞ்சிக் கொள்ளுங்கள். பிறகு ஒவ்வொருவருக்கும் அவரவர் செய்தவற்றுக்கான கூலி முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.”

யார் இந்த தூதர் கொண்டு வந்த இந்த மார்க்கத்தை நம்பினார்களோ, இந்த மார்க்கம் முன்வைக்கும் நற்செயல்களில் ஈடுபட்டார்களோ, தொழுகையை அதற்குரிய கடமைகளுடன், ஒழுங்குகளுடன் நிறைவேற்றினார்களோ, தாங்கள் சம்பாதித்த செல்வத்திலிருந்து ஸகாத்தும் கொடுத்து வந்தார்களோ அவர்களின் நற்கூலி இறைவனிடத்தில் உறுதியாகி விட்டது. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

வட்டி, தர்மம், கடன் அளித்தல் தொடர்பாக பேசப்படும் இந்தச் சூழலில் இடம்பெறும் இந்த வசனம் ஈமான் என்பது அல்லாஹ்வின் பேச்சை நம்பி அவனுடைய பாதையில் செலவு செய்வதையும் கடன் அளித்தலையும் வட்டியிலிருந்து விலகியிருத்தலையும் குறிக்கும். அவனுடைய கட்டளையை அறிந்துகொண்ட பின்னரும் வட்டித்தொழிலில் ஈடுபடுபவர்கள் அவனுக்கு எதிராக, அவனுடைய மார்க்கத்திற்கு எதிராகப் போர்ப்பிரகடனம் செய்பவர்கள் ஆவர். அவர்கள் உண்மையில் நம்பிக்கையாளர்கள் அல்ல. 

நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் இந்த கட்டளையை செவியேற்ற பிறகு அவனுடைய கட்டளையை முழுமையாகப் பின்பற்றுங்கள். அவனுடைய தண்டனைக்கு அஞ்சுங்கள். நீங்கள் உண்மையில் அவனுடைய பேச்சை நம்புபவர்களாக இருந்தால், அவனுடைய மார்க்கத்தை பின்பற்றுபவர்களாக இருந்தால் எஞ்சியுள்ள உங்களின் வட்டியை விட்டுவிடுங்கள். நீங்கள் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோருங்கள்.  வட்டித் தொழிலில் ஈடுபட்டு நீங்கள் யாருக்கும் அநியாயம் இழைக்கக் கூடாது. வட்டித்தொழிலில் ஈடுபடுவது அநியாயமாகும். அது மற்றவர்களின் துன்பத்தில் பயனடைவதாகும். அது எவ்வித உழைப்பும் இன்றி அநியாயமாக நீங்கள் பெறும் இலாபமாகும். அதேபோன்று உங்கள் மீதும் அநீதி இழைக்கப்பட மாட்டாது. நீங்கள் அளித்த அசலான தொகைக்கு, உங்கள் மூலதனத்திற்கு நீங்கள் உரிமையாளர்களாவீர்கள். அதை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

வட்டித் தொழிலில் ஈடுபடுவது அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் அவனுடைய மார்க்கத்திற்கும் எதிராகச் செய்யப்படும் போர். அது சமூகத்திற்கு எதிராக செய்யப்படும் மாபெரும் கலகம். அது சமூகத்தின் நிம்மதியை, அமைதியைக் கெடுக்கும் பெரும் குழப்பம். வட்டித் தொழிலில் ஈடுபடுவது இதர பாவங்களைப் போன்ற எளிதான பாவம் அல்ல. மற்ற பாவங்கள் இச்சைகளின் ஆதிக்கத்தினால் நிகழ்வது. நிகழ்ந்த பிறகு கடும் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தக்கூடியது. ஆனால் வட்டித்தொழிலில் ஈடுபடுவது அறிந்து கொண்டே செய்யப்படும் மிகப் பெரிய பாவம். அது மனதில் தன்னல வெறியை அதிகப்படுத்தி மென்மையான உணர்வுகளை இல்லாமல் ஆக்கி விடுகிறது. அது உள்ளத்தை பாறையைப் போன்ற கடினமான ஒன்றாக ஆக்கி விடுகிறது.

உங்களிடம் கடன் பெற்றவர் கடனை திருப்பி அளிக்க முடியாதவாறு கஷ்டமான சூழலில் இருந்தால் அந்த கஷ்டம் நீங்கி அவர் இலகுவான சூழலை அடையும்வரை நீங்கள் அவருக்கு அவகாசம் அளியுங்கள். அது போன்ற கஷ்டமான சூழலில் நீங்கள் கடனை தள்ளுபடி செய்வதே சிறந்ததாகும். அதனால் ஏற்படும் நன்மைகளை நீங்கள் அறிவீர்களாயின் அந்தக் கடனை மன்னித்து விடுவதே உங்களுக்குச் சிறந்ததாகும். அல்லாஹ்வின் பக்கம் கொண்டு வரப்படும் அந்த நாளைக் குறித்து நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அந்த நாளில் இது போன்ற நன்மைகள்தான் உங்களுக்குப் பயனளிக்கும். அந்த நாளில் நீங்கள் இந்த உலகில் செய்த அத்தனை செயல்களுக்காகவும் முழுமையாக கூலி கொடுக்கப்படுவீர்கள். யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. யாருடைய செயலும் கூலியின்றி கண்டுகொள்ளப்படாமல் விட்டுவிடப்படாது.

அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது, அவ்வாறு செலவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகள், சுயநல வெறியின் அடிப்படையில் நிலைபெறும் வட்டித் தொழிலிலிருந்து விலகி இருப்பது ஆகியவை தொடர்பாக பேசப்பட்ட பிறகு கடன் அளிப்பது, கடன் அடிப்படையில் வியாபாரம் செய்வது ஆகியவை தொடர்பாக பேசப்படுகிறது. வட்டித் தொழிலை தடைசெய்யும்போது அதற்கு மாற்றாக சமூகத்தில் கடன் கொடுத்தலும், குறிப்பிட்ட தவணைக்குப் பிறகு பணத்தை அளிக்கும் அல்லது முன்கூட்டியே பணத்தை அளித்து பிறகு பொருட்களை பெற்றுக்கொள்ளும் கடன் அடிப்படையிலான வியாபாரமும் ஊக்குவிக்கப்பட வேண்டும். அடுத்த வசனம் அதைக் குறித்துதான் பேசுகிறது. அவ்வாறு கடனாக அளிக்கப்படும் பணம் அல்லது வியாபாரம் தகுந்த சாட்சிகளின் முன்னிலையில் ஓர் எழுத்தரின் உதவியோடு முறையாகப் பதிவு செய்யப்பட வேண்டும். சாட்சிகளும் எழுத்தரும் இல்லாத சூழலில் அடமானப் பொருள் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும். அளிக்கப்படும் கடனை பாதுகாப்பதற்கான அற்புதமான வழிமுறையை இந்த வசனம் முன்வைக்கிறது.     

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى فَاكْتُبُوهُ وَلْيَكْتُبْ بَيْنَكُمْ كَاتِبٌ بِالْعَدْلِ وَلَا يَأْبَ كَاتِبٌ أَنْ يَكْتُبَ كَمَا عَلَّمَهُ اللهُ فَلْيَكْتُبْ وَلْيُمْلِلِ الَّذِي عَلَيْهِ الْحَقُّ وَلْيَتَّقِ اللهَ رَبَّهُ وَلَا يَبْخَسْ مِنْهُ شَيْئًا فَإِنْ كَانَ الَّذِي عَلَيْهِ الْحَقُّ سَفِيهًا أَوْ ضَعِيفًا أَوْ لَا يَسْتَطِيعُ أَنْ يُمِلَّ هُوَ فَلْيُمْلِلْ وَلِيُّهُ بِالْعَدْلِ وَاسْتَشْهِدُوا شَهِيدَيْنِ مِنْ رِجَالِكُمْ فَإِنْ لَمْ يَكُونَا رَجُلَيْنِ فَرَجُلٌ وَامْرَأَتَانِ مِمَّنْ تَرْضَوْنَ مِنَ الشُّهَدَاءِ أَنْ تَضِلَّ إِحْدَاهُمَا فَتُذَكِّرَ إِحْدَاهُمَا الْأُخْرَى وَلَا يَأْبَ الشُّهَدَاءُ إِذَا مَا دُعُوا وَلَا تَسْأَمُوا أَنْ تَكْتُبُوهُ صَغِيرًا أَوْ كَبِيرًا إِلَى أَجَلِهِ ذَلِكُمْ أَقْسَطُ عِنْدَ اللهِ وَأَقْوَمُ لِلشَّهَادَةِ وَأَدْنَى أَلَّا تَرْتَابُوا إِلَّا أَنْ تَكُونَ تِجَارَةً حَاضِرَةً تُدِيرُونَهَا بَيْنَكُمْ فَلَيْسَ عَلَيْكُمْ جُنَاحٌ أَلَّا تَكْتُبُوهَا وَأَشْهِدُوا إِذَا تَبَايَعْتُمْ وَلَا يُضَارَّ كَاتِبٌ وَلَا شَهِيدٌ وَإِنْ تَفْعَلُو  فَإِنَّهُ فُسُوقٌ بِكُمْ وَاتَّقُوا اللهَ وَيُعَلِّمُكُمُ اللهُ وَاللهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ وَإِنْ كُنْتُمْ عَلَى سَفَرٍ وَلَمْ تَجِدُوا كَاتِبًا فَرِهَانٌ مَقْبُوضَةٌ فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا فَلْيُؤَدِّ الَّذِي اؤْتُمِنَ أَمَانَتَهُ وَلْيَتَّقِ اللهَ رَبَّهُ وَلَا تَكْتُمُوا الشَّهَادَةَ وَمَنْ يَكْتُمْهَا فَإِنَّهُ آثِمٌ قَلْبُهُ وَاللهُ بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ

2:282,289. “நம்பிக்கையாளர்களே! நீங்கள் ஒரு குறிப்பிட்ட தவணைக்காக கடன் கொடுக்கல்வாங்கலை வைத்துக் கொண்டால் அதனை எழுதிக் கொள்ளுங்கள். உங்களிடையே எழுதக்கூடிய ஒருவர் அதனை நேர்மையுடன் எழுதிக் கொள்ள வேண்டும். எழுதுபவர் எழுதுவதற்கு மறுப்பு தெரிவிக்கக் கூடாது. அல்லாஹ் அவருக்குக் கற்றுத்தந்தவாறே அவர் அதனை எழுத வேண்டும். யார் மீது அந்தப் பொறுப்பு உள்ளதோ அவரே வாசகம் சொல்ல வேண்டும். அவரது இறைவனான அல்லாஹ்வை அவர் அஞ்சிக் கொள்ளட்டும். அதில் அவர் எவ்வித குறையும் செய்யக் கூடாது. யார் மீது அந்தப் பொறுப்பு உள்ளதோ அவர் விவரம் தெரியாதவராக அல்லது பலவீனராக அல்லது தானே வாசகம் சொல்ல இயலாதவராக இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையான முறையில் வாசகம் சொல்ல வேண்டும். உங்கள் ஆண்களிலிருந்து இருவரை சாட்சியாக்கிக் கொள்ளுங்கள். இரண்டு ஆண்கள் இல்லையென்றால் நீங்கள் விரும்பும் மக்களில் ஒரு ஆணையும் இரண்டு பெண்களையும் சாட்சியாக்கிக் கொள்ளுங்கள், அதில் ஒரு பெண் மறந்துவிட்டாலும் இன்னொரு பெண் நினைவூட்டுவாள் என்பதற்காக. சாட்சியாளர்கள் அழைக்கப்பட்டால் அவர்கள் மறுக்கக்கூடாது. விவகாரம் சிறியதோ பெரியதோ அதனுடைய நிர்ணயிக்கப்பட்ட காலவரையறையுடன் அதனை எழுதிக் கொள்வதில் அலட்சியம் காட்டாதீர்கள். இதுவே உங்களுக்கு அல்லாஹ்விடத்தில் மிக நீதியானதும் சாட்சியத்தை உறுதிப்படுத்தக்கூடியதும் ஆகும். நீங்கள் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு இதுவே சிறந்ததாகும். ஆனால் உங்களிடையே சுற்றிச் சுற்றி வரும் உடனடி ரொக்க வியாபாரமாக இருந்தாலே தவிர. அதனை நீங்கள் எழுதிக்கொள்ளாமல் இருப்பது உங்கள்மீது குற்றமாகாது. ஆயினும் நீங்கள் இந்த வியாபாரத்தைச் செய்தால் சாட்சியத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். எழுதுபவரோ சாட்சியாளரோ துன்புறுத்தப்படக்கூடாது. அவ்வாறு செய்வீர்களானால் அது உங்களுக்குப் பெரும் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் உங்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றான். அல்லாஹ் ஒவ்வொன்றையும் குறித்து நன்கறிந்தவனாக இருக்கின்றான். நீங்கள் பயணத்தில் இருந்தால் எழுதக்கூடியவர் யாரையும் பெறவில்லையெனில் அடகுப் பொருட்களை கொடுக்கலாம். உங்களில் ஒருவர் மற்றவரை நம்புகிறார் எனில் நம்பப்பட்டவர் தம்மிடம் நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருளை அளித்து விடட்டும். தம் இறைவனாகிய அல்லாஹ்வை அவர் அஞ்சிக் கொள்ளட்டும். சாட்சியத்தை மறைத்துவிடாதீர்கள். யார் அதனை மறைக்கின்றாரோ அவரது உள்ளம் பாவத்திற்கு உள்ளாகிவிடும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கின்றான்.”

அளிக்கப்படும் கடன் சாட்சிகளின் முன்னிலையில் எழுதப்பட வேண்டும். அதுதான் கடன் கொடுத்தவர், கடன் பெற்றவர் இருவருக்கும் உகந்த, தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து இருவரையும் பாதுகாக்கும் சரியான வழிமுறை. மனிதர்கள் மறதியாளர்கள். கடன் பெற்றவர் மறந்து விடலாம் அல்லது வாங்கிய தொகையை குறைத்து விடலாம். மனம் தனக்கு சாதகமாக எல்லாவற்றையும் புனைந்து கொள்ளும் இயல்புடையது. சாட்சிகளின் முன்னிலையில் எழுத்தரின் உதவி கொண்டு பதிவு செய்யப்பட்ட கடன் பாதுகாப்பானதும் தேவையற்ற பிரச்சனைகளை நீக்கக்கூடியதும் ஆகும்.

இந்த வசனங்கள் பின்வரும் விசயங்களை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன:

  • கடனை சாட்சிகளின் முன்னிலையில் எழுத்தரின் உதவி கொண்டு பதிவு செய்வது அவசியமாகும்.
  • எழுதக்கூடியவர் அழைக்கப்பட்டால் அவர் மறுக்கக் கூடாது. அல்லாஹ் ஒருவருக்கு ஒரு அருட்கொடையை வழங்கியிருக்கிறான் எனில் அதைக் கொண்டு அவர் சக மனிதர்களுக்குப் பயனளிக்க வேண்டும்.
  • சாட்சிகள் முஸ்லிம்களிலிருந்து இன்னும் இருவருக்கும் நெருங்கியவர்களிலிருந்து ஏற்படுத்தப்பட வேண்டும். சாட்சி கூற அழைக்கப்படுவோர் மறுக்கக் கூடாது.
  • எழுத்தரிடம் வாசகம் சொல்ல வேண்டிய பொறுப்பு கடன் பெற்றவருக்கு இருக்கிறது. அவர் அந்த விசயத்தில் அல்லாஹ்வைப் பயந்துகொள்ள வேண்டும். அளிக்க வேண்டிய தொகையில் சிறிதும் குறைத்துவிடக் கூடாது.
  • கடன் பெற்றவர் விவரம் அறியாதவராக அல்லது பலவீனராக அல்லது வாசகம் சொல்ல இயலாதவராக இருந்தால் அவர் சார்பாக அவரது பொறுப்பாளர் வாசகம் சொல்ல வேண்டும்.
  • இரண்டு ஆண் சாட்சியங்கள் கொண்டுவரப்பட வேண்டும் அல்லது ஒரு ஆண் மற்றும் இரண்டு பெண் சாட்சிகள் கொண்டுவரப்பட வேண்டும்.
  • சாட்சியங்களோ எழுத்தரோ துன்புறுத்தப்படக்கூடாது. அவர்களைத் துன்புறுத்துவதும் மிரட்டுவதும் பெரும் பாவமாகும்.
  • உடனடியாக பணம் கொடுத்து நடக்கும் வியாபாரங்களை பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
  • சாட்சி கூறக்கூடியவர்களோ எழுத்தரோ இல்லாத பட்சத்தில் அடமானப் பொருளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். பொதுவாக பயணத்தில்தான் இதுபோன்ற சூழல் ஏற்படுகிறது என்பதால் இங்கு பயணம் குறிப்பிடப்படுகிறது. பிறகு அவர்கள் இயல்பான சூழலுக்குத் திரும்பி சாட்சிகளும் எழுத்தரும் கிடைத்து விட்டால் கடன் கொடுத்தவர் அடமானப் பொருளை திருப்பி கொடுத்துவிட வேண்டும்.
  • பொய் சாட்சி கூறுவது பெரும் பாவமாகும்.   

இரண்டு பெண் சாட்சிகள் ஒரு ஆண் சாட்சிக்கு இணையாக ஆக்கப்பட்டிருப்பதற்கான காரணத்தை வசனமே தெளிவுபடுத்துகிறது. ஒருத்தி மறந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. இன்னொருத்தி அவளுக்கு நினைவூட்டுவாள். இதில் பெண்களின் நினைவாற்றலை குறைகூறும் விசயம் இல்லை. பெண்கள் அவர்களுக்கேயுரிய விசயங்களில், அவர்கள் நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளில் நினைவாற்றல் கொண்டவர்களே. பொதுக் காரியங்களில் பெரும்பாலும் ஆண்களே அழைக்கப்படுகிறார்கள். அவர்களே பொறுப்புசாட்டப்பட்டவர்கள். பெண்கள் பொறுப்பு சாட்டப்பட்டவர்கள் இல்லை என்பதால் அவர்கள் மறந்துவிடக்கூடிய அபாயம் இருக்கிறது.

பாவங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். சில பாவங்கள் மேலோட்டமானவை. அவை உள்ளத்தில் பாதிப்பை ஏற்படுத்தாதவை. இன்னும் சில பாவங்கள் உள்ளத்தில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை. உதாரணமாக, பொய் சாட்சியம் கூறுவது, அடுத்தவரைக் குறித்து அவதூறு கூறுவது, வட்டித்தொழிலில் ஈடுபடுவது… போன்றவை. இவை போன்ற பாவங்கள் உள்ளத்தை இருளடையச் செய்து விடும். சமூகத்திலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும்.   

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply