மீண்டும் அத்தியாயம் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதன் பக்கம் திரும்புகிறது. இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பலப்படுத்தும்பொருட்டு செய்யப்படும் செலவுகள் அனைத்தும் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் செலவுகள்தாம். அவ்வாறு செலவு செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குமுறைகள் அடுத்தடுத்த வசனங்களில் தெளிவுபடுத்தப்படுகின்றன. அவை நுட்பமான, ஆழமான உளவியல் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.
مَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنْبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنْبُلَةٍ مِائَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَا يُتْبِعُونَ مَا أَنْفَقُوا مَنًّا وَلَا أَذًى لَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ قَوْلٌ مَعْرُوفٌ وَمَغْفِرَةٌ خَيْرٌ مِنْ صَدَقَةٍ يَتْبَعُهَا أَذًى وَاللهُ غَنِيٌّ حَلِيمٌ
2:261-263. “அல்லாஹ்வின் பாதையில் தங்களின் செல்வங்களை செலவு செய்பவர்களுக்கு உதாரணம், ஒரு விதையைப் போன்றது. அதிலிருந்து ஏழு கதிர்கள் முளைக்கின்றன. ஒவ்வொரு கதிரிலும் நூறு விதைகள் உள்ளன. அல்லாஹ் தான் நாடியவர்களுக்கு அதனைப் பன்மடங்காக்குகிறான். அவன் தாராளமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். யார் தங்களின் செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறார்களோ பிறகு அதனைச் சொல்லிக் காட்டாமலும் தொல்லை தராமலும் இருக்கின்றார்களோ அவர்களின் நற்கூலி அவர்களின் இறைவனிடத்தில் இருக்கின்றது. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள் . “கனிவான சொல்லும் மன்னிப்பும் தொல்லையைத் தொடரும்படிச் செய்யும் தர்மத்தைவிட சிறந்ததாகும். அல்லாஹ் தேவையற்றவனானவும் சகிப்புத்தன்மைமிக்கவனாகவும் இருக்கின்றான்.”
அல்லாஹ்வின் பாதையில் நாம் செய்யும் செலவுகள் ஒருபோதும் வீணாகி விடுவதில்லை. அது பலமடங்காகப் பெருகி நம்மிடம் வந்து சேரும். இது அல்லாஹ் இந்த உலகில் அமைத்த நியதி. ஒரு விதையிலிருந்து பல நூறு விதைகள் உருவாவதைப் போன்றதுதான் அல்லாஹ்வின் பாதையில் நாம் செய்யும் செலவுகளும். அது பன்மடங்காகப் பெருகி நமக்கும் மற்றவர்களுக்கும் பயனளிக்கின்றன. செல்வம் எடுக்க எடுக்க ஊறக்கூடிய நீருற்றைப் போன்றதுதான். நீருற்றிலிருந்து நீர் எடுக்கப்படவில்லையெனில் அது அழுக்கடைந்து விடும். குறிப்பிட்ட அளவைத் தாண்டி அது ஊறாமல் நின்று விடும். செலவு செய்யப்படும் செல்வமே பெருகும் என்பதை மனித அனுபவங்கள் உண்மைப்படுத்துகின்றன. இந்த உண்மையைத்தான் அழகிய இந்த உதாரணத்தின்மூலம் அல்லாஹ் நமக்குப் புரிய வைக்கின்றான். தர்மத்தினால் செல்வத்தில் எந்தக் குறைவும் ஏற்பட்டு விடுவதில்லை என்ற நபிமொழியும் இதையே வலியுறுத்துகிறது.
கஞ்சர்களால் இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியாது. கஞ்சர்கள் செலவு செய்வதில்லை என்பதால் அவர்களால் இந்த அனுபவத்தைப் பெற முடியாது. இது அனுபவம் வழியாக கண்டடைய வேண்டிய உண்மை. நம்பிக்கையாளர்கள் பொதுப்பயன் கருதி தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் தாண்டி செலவு செய்ய வேண்டும் என்பதற்காக திருக்குர்ஆன் தெளிவான இந்த கண்ணோட்டத்தை அளிக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது அவனுக்கு அளிக்கும் கடனாகும். அதை அவன் தாராளமாக, பலமடங்காக திருப்பி அளிக்கிறான். அவன் மனிதர்களைப் போல கஞ்சத்தனம் செய்வதில்லை. அவன் பாதையில் செய்யக்கூடிய சிறிய, பெரிய செலவுகள், வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் செய்யப்படும் செலவுகள் என அனைத்தையும் அவன் நன்கறிவான். எந்தச் செயலையும் அவன் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதில்லை.
அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் உதவி எவ்வாறு இருக்க வேண்டும்? அது அல்லாஹ்வின் திருப்தியை நாடி செய்யப்படும் உதவியாகவே இருக்க வேண்டும். சொல்லிக் காட்டியோ ஏதேனும் ஒரு வகையில் தொந்தரவு அளித்தோ அது களங்கப்படுத்தப்பட்டு விடக்கூடாது. செய்த உதவியை, அளித்த தர்மத்தை சொல்லிக் காட்டுவது மோசமான பண்பு. அது பெற்றவரின் உள்ளத்தில் கடுப்பையும் கசப்பையும் இழிவுணர்ச்சியையும் ஏற்படுத்தி விடும். கொடுப்பவர் அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்தே கொடுக்கிறார். அது அவன் அவருக்கு அளிக்கும் மிகச் சிறந்த வாய்ப்பு. செய்த உதவி, அளித்த தர்மம் பலமடங்காக மாறி திரும்பி அவரிடமே வந்துசேரும். அவரிடம் ஆதிக்க மனநிலை வந்துவிட்டால், தாம் செய்த உதவிக்காக பெற்றவர் எப்போதும் நன்றிக்கடனுடன், விசுவாசத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டால் அவர் தாம் செய்த உதவியை சொல்லிக் காட்டுகிறார். சொல்லிக் காட்டுவது நன்றிகெட்டத்தனத்தின் வெளிப்பாடு. அல்லாஹ்விடம் கூலியை எதிர்பார்க்காமல் மனிதர்களிடம் நன்றியை எதிர்பார்ப்பவர்களே சொல்லிக் காட்டுகிறார்கள்.
இன்னொரு பண்பு, உதவி பெற்றவரிடம் சொல்லிக் காட்டாமல் அவருக்கு உதவி செய்தேன் என்று இன்னொருவரிடம் கூறி பெருமிதம் கொள்வது, அவர்வழியாக சம்பந்தப்பட்டவர் அறிந்துகொள்வது. இதுவும் ஒருவிதமான தொந்தரவு. உதவி பெற்றவரை சங்கடத்தில், கசப்பில் ஆழ்த்தும் தொந்தரவு. இதுவும் மோசமான பண்புதான். தங்களிடம் உதவி பெற்றவர்கள் தங்களுக்கு விசுவாசமானவர்களாக, தங்களின் பேச்சை கேட்பவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் உதவி பெற்றார் என்ற காரணத்திற்காக அவரிடம் வேலை வாங்குவதும் அவர்மீது ஆதிக்கம் செலுத்த முற்படுவதும் அவருக்கு அளிக்கும் தொந்தரவுதான். இதுவும் மோசமான பண்புதான். இந்த வசனம் எல்லா வகையான தொந்தரவுகளையும் தடைசெய்கிறது.
உங்களிடம் உதவி பெற்றவர் உங்களுக்கு எதிராக மாற முடியுமா என்ன? ஆம், அவருக்குச் செய்த உதவியை நீங்கள் சொல்லிக் காட்டினால், அவருக்கு உதவி செய்தீர்கள் என்ற காரணத்திற்காக ஏதேனும் ஒரு வகையில் அவருக்கு தொந்தரவு அளித்தால், அவர் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சித்தால் அவரிடமிருந்து நன்றியுணர்வு வெளியேறி கசப்புணர்வு அவரை ஆக்கிரமித்து விடும். அவர் உங்களின் வீழ்ச்சியை எதிர்பார்ப்பவராக, உங்களை வீழ்த்த நினைப்பவர்களுக்கு உதவி செய்பவராக மாறிவிடுவார். நீங்கள் செய்த உதவி உங்களுக்குப் பயனளிப்பதற்குப் பதிலாக தீங்களிக்கக்கூடியதாக மாறிவிடும்.
யார் அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய திருப்தியை நாடி தங்களின் செல்வங்களை செலவு செய்கிறார்களோ பிறகு அவற்றை சொல்லிக் காட்டாமலும் எந்த வகையிலும் தொந்தரவு அளிக்காமலும் இருக்கிறார்களோ அவர்களுக்குத்தான் அல்லாஹ்விடம் கூலி இருக்கின்றது. அவர்கள் எதிர்காலம் குறித்து அச்சப்படவோ இழந்தவற்றை எண்ணி கவலைப்படவோ மாட்டார்கள். அவர்களுக்கு எந்த அச்சமும் கவலையும் இல்லை. அல்லாஹ்விடத்தில் தாங்கள் அடையக்கூடிய நற்கூலியை, அது பலமடங்காக தங்களுக்குப் பயனளிக்கும் என்பதை எண்ணி அவர்கள் மனநிறைவு கொள்ளக்கூடியவர்களாக இருப்பார்கள்.
உங்களால் உதவி செய்ய முடியவில்லை எனில் கனிவான, நல்ல வார்த்தைகளைக் கொண்டு பதிலளியுங்கள். கேட்பவர் தேவையற்ற வார்த்தைகளைக் கூறி உங்களைப் புண்படுத்தினாலும் அவரை மன்னித்து விடுங்கள். உங்களின் இந்த கனிவான வார்த்தையும் நன்னடத்தையும் தொல்லையைக் கொண்டு வரும் உங்களின் உதவியைவிட சிறந்ததாகும். எதுவும் அளிக்காமல் கனிவான வார்த்தைகளைக் கொண்டும் மன்னித்து விடுதலைக் கொண்டும் நீங்கள் நன்மையைப் பெறலாம். அது நீங்கள் அளித்துவிட்டு கடைப்பிடிக்க வேண்டிய மேற்கண்ட ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிக்காமல் இருப்பதைக் காட்டிலும் சிறந்ததாகும். அல்லாஹ் தேவைகள் அற்றவன். உங்களின் செல்வத்தை அவன் கேட்கவில்லை. அவன் இடக்கூடிய கட்டளைகளை நிறைவேற்றுவதன்மூலம் உங்களுக்கு நீங்களே நன்மை செய்து கொள்கிறீர்கள். இதனால் அவனுக்கு எந்தப் பயனும் இல்லை. அவன் உங்களின் தவறுகளை பொறுத்துக் கொள்பவன். உங்களிடமிருந்து வெளிப்படும் தவறுகளுக்காக அவன் உங்களை உடனுக்குடன் தண்டிப்பதில்லை. மனிதர்களுடன் சகிப்புத்தன்மையுடன் நடந்து கொள்ளுங்கள்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى كَالَّذِي يُنْفِقُ مَالَهُ رِئَاءَ النَّاسِ وَلَا يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ الْآخِرِ فَمَثَلُهُ كَمَثَلِ صَفْوَانٍ عَلَيْهِ تُرَابٌ فَأَصَابَهُ وَابِلٌ فَتَرَكَهُ صَلْدًا لَا يَقْدِرُونَ عَلَى شَيْءٍ مِمَّا كَسَبُوا وَاللهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ وَمَثَلُ الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَتَثْبِيتًا مِنْ أَنْفُسِهِمْ كَمَثَلِ جَنَّةٍ بِرَبْوَةٍ أَصَابَهَا وَابِلٌ فَآتَتْ أُكُلَهَا ضِعْفَيْنِ فَإِنْ لَمْ يُصِبْهَا وَابِلٌ فَطَلٌّ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
2:264,265. “நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் மீதும் மறுமைநாளின் மீதும் நம்பிக்கைகொள்ளாமல் தன் செல்வத்தை வெளிப்பகட்டிற்காகச் செலவு செய்பவனைப் போன்று நீங்களும் கொடுத்ததைச் சொல்லிக் காட்டியும் தொல்லை கொடுத்தும் உங்கள் தர்மங்களை வீணாக்கிவிடாதீர்கள். அவனுக்கு உதாரணம் ஒரு மண்மூடிய பாறையைப் போன்றதாகும். அதன்மீது பெருமழை பெய்து அதனை முற்றிலும் வெறுமையாக்கிவிட்டது. இத்தகையோருக்கு அவர்கள் சம்பாதித்தவை எந்தப் பயனும் தரப்போவதில்லை. அல்லாஹ் நிராகரிப்பாளர்களுக்கு நேர்வழிகாட்டுவதில்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடியும் தங்கள் உள்ளத்தை பலப்படுத்தவும் செலவு செய்பவர்களின் உதாரணம், உயரமான இடத்திலுள்ள ஒரு தோட்டத்தைப் போன்றது. அதன்மீது பெருமழை பொழிந்தால் அது தன் விளைச்சலை இருமடங்காகத் தருகிறது. பெருமழை பொழியாவிட்டால் அதற்குச் சிறு தூறல்கூட போதுமானதாகும். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்.”
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும்போது கவனமாக இருங்கள். நீங்கள் செய்யும் தவறுகளால் உங்களின் நற்செயல்கள் வீணாகி விடக்கூடாது. அளித்த தர்மத்தை, செய்த உதவி சொல்லிக் காட்டி, உதவி செய்தீர்கள் என்ற காரணத்திற்காக அவரை நீங்கள் ஏதேனும் ஒரு வகையில் தொந்தரவுக்குள்ளாக்கி உங்களின் உதவியை, தர்மத்தை வீணாக்கி விடாதீர்கள். இவை உதவி பெற்றவரை புண்படுத்தக்கூடிய மோசமான பண்புகள். இவை உங்களின் தர்மங்களை வீணாக்கி விடும். அதேபோன்று அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொள்ளாமல் வெளிப்பகட்டுக்காகவும் மக்கள் புகழ வேண்டும் என்பதற்காகவும் செலவு செய்பவனைப் போன்றும் நீங்கள் ஆகிவிடாதீர்கள். அல்லாஹ்வுக்காக செய்யப்படும் இந்தச் செயல் இதுபோன்ற அற்ப நோக்கத்திற்காக செய்யப்படக்கூடாது. அதனால் எந்தப் பயனும் விளையப்போவதில்லை. அது மலைப்பகுதியில் மண்மூடி இருக்கும் பாறையில் பயிரிடுவதைப் போன்றதாகும். ஒரு பெருமழை அந்தப் பாறையில் இருக்கும் மண்ணை முழுமையாக அகற்றி அதனை வழுக்குப் பாறையாக ஆக்கி விடுகிறது. அந்தப் பாறையில் பயிரிடுபவன் எவ்வாறு எந்தப் பயனையும் பெற மாட்டானோ அதேபோன்றுதான் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாமல் வெளிப்பகட்டுக்காக, மக்களிடம் பெருமையடிக்க வேண்டும் என்பதற்காக செலவு செய்பவனின் நிலைமையும். அதனால் அவனுக்கு எந்தப் பயனும் விளையப்போவதில்லை. அல்லாஹ்வுக்காக செய்ய வேண்டிய ஒரு செயலை வெளிப்பகட்டுக்காக செய்வது நன்றிகெட்டத்தனம் ஆகும். இப்படிப்பட்ட நன்றிகெட்ட மனிதர்களுக்கு அல்லாஹ் நேர்வழிகாட்டுவதில்லை.
யார் அல்லாஹ்வின் திருப்தியை நாடியும் தங்களின் உள்ளத்தைப் பலப்படுத்தவும் செலவு செய்கிறார்களோ அவர்கள்தாம் அதற்கான முழுமையான பலனைப் பெறுவார்கள். அவர்களுக்கு உதாரணம், மலைப்பாங்கான, உயரமான இடத்தில் இருக்கின்ற தோட்டத்தைப் போன்றதாகும். பெருமழை அதில் இருமடங்கு விளைச்சலைத் தருகிறது. அவ்வாறு பெருமழை பொழியாவிட்டாலும் சிறுதூறல்கூட அதற்குப் போதுமானது. எந்த நிலையிலும் அவர்கள் நஷ்டமடையப் போவதில்லை. அல்லாஹ் நீங்கள் செய்யக்கூடிய செயல்களை பார்த்துக் கொண்டிருக்கிறான்.
أَيَوَدُّ أَحَدُكُمْ أَنْ تَكُونَ لَهُ جَنَّةٌ مِنْ نَخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ لَهُ فِيهَا مِنْ كُلِّ الثَّمَرَاتِ وَأَصَابَهُ الْكِبَرُ وَلَهُ ذُرِّيَّةٌ ضُعَفَاءُ فَأَصَابَهَا إِعْصَارٌ فِيهِ نَارٌ فَاحْتَرَقَتْ كَذَلِكَ يُبَيِّنُ اللَّهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ
2:266. “ஒருவரிடம் பேரீச்சைகளும் திராட்சைகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கின்றது. அதில் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. அதில் அவருக்கு எல்லாவகையான கனிகளும் கிடைக்கின்றன. அவருக்கு முதுமை ஏற்பட்டுவிடுகிறது. அவரது குழந்தைகளோ பலவீனமானவர்களாக இருக்கின்றனர். அப்போது அந்தத் தோட்டத்தில் தீயுடன் கூடிய புயல்காற்று வந்ததால் அது எரிந்துவிடுகிறது. உங்களில் யாரேனும் தனக்கு இவ்வாறு நிகழ்வதை விரும்புவாரா? இவ்வாறு நீங்கள் சிந்திக்கும்பொருட்டு அல்லாஹ் தன் சான்றுகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.”
இது செய்த உதவியை, அளித்த தர்மத்தை சொல்லிக் காட்டி அல்லது ஏதேனும் ஒரு வகையில் தொந்தரவு அளித்து அல்லது அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாமல் வெளிப்பகட்டுக்காக, தற்பெருமைக்காக செலவு செய்து தங்களின் செயல்களை வீணாக்கிக் கொண்டவர்களின் நிலையை தெளிவுபடுத்தும் மூன்றாவது உதாரணமாகும். இது பேரீச்சைகளும் திராட்சைகளும் சூழ்ந்த, எல்லா வகையான விளைச்சல்களையும் தருகின்ற, நீரோடைகள் ஓடுகின்ற அழகிய தோட்டத்தின் காட்சி. ஒரு மனிதருக்கு இத்தகைய ஒரு தோட்டம் இருக்கிறது அல்லது இத்தகைய ஒரு தோட்டத்தை சிரமப்பட்டு உருவாக்கி இருக்கிறார். அவருக்கு முதுமை வந்து விடுகிறது. ஆனால் அவரது பிள்ளைகளோ இன்னும் சிறார்களாக, பலவீனர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ஒரு வெப்பத்துடன் கூடிய சூறாவளிக் காற்று வந்து அந்த தோட்டத்தை எரித்து விடுகிறது. அவருக்கும் அவரது பிள்ளைகளுக்கும் பயனளிக்க வேண்டிய தோட்டம் அவர்களுக்குப் பயனளிக்காத ஒன்றாக மாறிவிடுகிறது. இந்த நிலையை யாராவது விரும்புவார்களா? இப்படித்தான் ஒழுங்குகளுடன் செய்யப்படாத தர்மமும் உதவியும் எந்தப் பயனும் தராமல் ஆகிவிடுகிறது. முறையான தர்மம் தக்க சமயத்தில் பயனளிக்கும். முறையற்ற தர்மம் கானல்நீர்போல ஏமாற்றத்தையே அளிக்கும்.
