கடந்த வசனங்களில் தர்மம் செய்வதன் ஒழுங்குமுறைகளும் அவை பின்பற்றப்படவில்லையெனில் ஏற்படும் விளைவுகளும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அடுத்த வரும் வசனங்களில் தர்மம் செய்யப்படும் பொருள் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும் இன்னும் கவனத்தில் கொள்ள வேண்டிய சில ஒழுங்குகள் குறித்தும் தெளிவுடுத்தப்படுகின்றன.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ وَمِمَّا أَخْرَجْنَا لَكُمْ مِنَ الْأَرْضِ وَلَا تَيَمَّمُوا الْخَبِيثَ مِنْهُ تُنْفِقُونَ وَلَسْتُمْ بِآخِذِيهِ إِلَّا أَنْ تُغْمِضُوا فِيهِ وَاعْلَمُوا أَنَّ اللهَ غَنِيٌّ حَمِيدٌ
2:267. “நம்பிக்கையாளர்களே! நீங்கள் சம்பாதித்தவற்றிலிருந்தும் பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித் தந்தவற்றிலிருந்தும் நல்லவற்றையே செலவு செய்யுங்கள். மட்டமான பொருட்களை செலவு செய்ய நினைக்காதீர்கள். அத்தகைய பொருட்களை கண்களை மூடிக் கொண்டே தவிர நீங்கள் வாங்க மாட்டீர்களே! அல்லாஹ் தேவையற்றவனாகவும் புகழுக்குரியவனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.”
தர்மப்பொருள் எப்படி இருக்க வேண்டும்? அது நீங்கள் விரும்பக்கூடிய நல்ல பொருளாக இருக்க வேண்டும். உங்களுக்குத் தேவையில்லை என்று நீங்கள் ஒதுக்கும் மட்டமான பொருட்களை தர்மமாக நீங்கள் முன்வைக்கக்கூடாது. அத்தகைய பொருட்கள் உங்களுக்கு வழங்கப்பட்டால் வேண்டா வெறுப்பாகத்தானே நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்!. உங்களுக்கு விரும்புவதை மற்றவர்களுக்கும் விரும்புங்கள். வியாபாரத்தின்மூலமோ விவசாயத்தின்மூலமோ இன்னபிற வழிகளின்மூலமே நீங்கள் சம்பாதித்த மிகச் சிறந்த செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுங்கள். அல்லாஹ் தேவைகள் அற்றவன். உங்களின் செல்வங்கள் அவனுக்குத் தேவையில்லை. அவன் தன் கட்டளையைக் கொண்டு உங்களைச் சோதிக்கிறான். அவனுடைய பாதையில் நீங்கள் செய்யக்கூடிய செலவுகள் உங்களுக்குத்தான் பயனளிக்கும். அவன் புகழுக்குரியவன். உங்களிடம் இருக்கும் அனைத்தும் அவன் அளித்தவையே.
தங்களிடம் இருப்பவற்றில் மட்டமானதைப் பார்த்து செலவு செய்வதும் கஞ்சத்தனத்தின் ஒரு பகுதிதான். நம்பிக்கைகொண்ட மனம் எல்லாவகையான கஞ்சத்தனத்திலிருந்தும் விடுபட வேண்டும். அது தனக்கு விரும்புவதையே தன் சகோதரனுக்கும் விரும்ப வேண்டும். மனதின் கஞ்சத்தனத்திலிருந்து விடுபடுவது மனிதன் அடையக்கூடிய மகத்தான வெற்றிகளில் ஒன்றாகும்.
الشَّيْطَانُ يَعِدُكُمُ الْفَقْرَ وَيَأْمُرُكُمْ بِالْفَحْشَاءِ وَاللَّهُ يَعِدُكُمْ مَغْفِرَةً مِنْهُ وَفَضْلًا وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ يُؤْتِي الْحِكْمَةَ مَنْ يَشَاءُ وَمَنْ يُؤْتَ الْحِكْمَةَ فَقَدْ أُوتِيَ خَيْرًا كَثِيرًا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ
2:268,269. “ஷைத்தான் வறுமையைக் கொண்டு உங்களை அச்சுறுத்துகிறான். தீய செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகிறான். அல்லாஹ் தன்னிடமிருந்து மன்னிப்பையும் அருளையும் வாக்களிக்கிறான். அல்லாஹ் தாராளமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். தான் விரும்பியவருக்கு அவன் ஞானத்தை வழங்குகிறான். யாருக்கு ஞானம் வழங்கப்பட்டுவிட்டதோ அவருக்குப் பெரும் செல்வம் வழங்கப்பட்டுவிட்டது. அறிவுடையோரே அறிவுரை பெற்றுக்கொள்வர்.”
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்தால் உங்களின் செல்வம் குறைந்து விடும், உங்களுக்குத் தேவையான சமயத்தில் அது உங்களிடம் இல்லாமலாகி விடும், எதிர்காலத்திற்காக சேமித்து வையுங்கள், நீங்கள் கொடுக்கக்கூடிய தர்மத்தினால் பெறுபவர் சோம்பேறியாகி விடுவார், மற்றவர்கள் எல்லாம் செலவு செய்யாமல் இருக்கும்போது நீங்கள் மட்டும் ஏன் செலவு செய்கிறீர்கள்? உங்களின் செல்வம் குறைந்து நீங்கள் ஏழையாகி விடுவீர்கள்… இப்படியான ஊசலாட்டங்களின் வழியாக ஷைத்தான்கள் உங்களை அச்சுறுத்துகிறார்கள். அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்து நீங்கள் நன்மைகளை சம்பாதித்துவிடக்கூடாது என்பதுதான் அந்த ஷைத்தான்களின் நோக்கம். அவர்கள் பொறாமையை மறைத்துக் கொண்டு நலம்விரும்பிகளின் வடிவத்தில் வந்து உங்களுக்கு அறிவுரை கூறுகிறார்கள். அந்த ஷைத்தான்கள் மானக்கேடான, அருவருப்பான செயல்களைச் செய்யுமாறு உங்களைத் தூண்டுகிறார்கள். உங்களின் செல்வங்களைக் கொண்டு கீழான இச்சைகளைத் தணித்துக் கொள்ளுமாறு அவர்கள் உங்களைத் தூண்டுகிறார்கள். இந்த வகையான அச்சுறுத்தல்களும் தூண்டல்களும் உங்களை மயக்கிவிடக்கூடாது. ஷைத்தானின் சூழ்ச்சியைக் குறித்து, அவனிடமிருந்து எந்த நன்மையும் வெளிப்பட வாய்ப்பில்லை என்பதைக் குறித்து நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். அவன் கலப்படமில்லாத பொய்யன். உங்களின் பகிரங்கமான எதிரி.
அல்லாஹ் உங்களுக்கு வாக்களிப்பது அவனது மன்னிப்பை. உங்களின் நற்செயல்கள் உங்களின் பாவங்களுக்கு பரிகாரமாக அமையும் என்றும் நீங்கள் அவனுடைய பாதையில் செய்யும் செலவின் காரணமாக பலமடங்கு நன்மைகளையும் பரக்கத்துகளையும் பெறுவீர்கள் என்றும் அவன் உங்களுக்கு வாக்களிக்கிறான். அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது, என்றும் மாறாதது. செல்வங்கள் அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. அவன் தாராளமாக வழங்குபவன். உங்களின் நற்செயல்கள், நீங்கள் செய்யும் தர்மங்கள் என அனைத்தையும் குறித்து நன்கறிந்தவன். அவன் ஒருபோதும் உங்களின் எந்தச் செயலையும் கண்டுகொள்ளாமல் விட்டுவிட மாட்டான்.
இதுதான் ஹிக்மத். இதுதான் ஞானம். உள்ளதை உள்ளபடியே உணர்தல். ஊசலாட்டங்களால் மறைக்கப்பட்டிருக்கும் உண்மைகளை உள்ளபடியே அறிதல். இதுதான் பெரும் செல்வம். இந்த வகையான அறிதலும் ஞானமும் யாருக்கு வழங்கப்பட்டிருக்கிறதோ அவர்கள் பெரும் செல்வம் வழங்கப்பட்டவர்கள் ஆவர். ஷைத்தானின் அச்சுறுத்தல்களும் தூண்டல்களும் அவர்களை எதுவும் செய்துவிட முடியாது. அறிவுடையவர்கள்தாம் இந்த உண்மையைப் புரிந்து கொள்வார்கள். அவர்களே இந்த உண்மையிலிருந்து பயனடைவார்கள்.
செல்வத்தை செலவு செய்யாமல் சேகரித்து வைப்பதுதான் புத்திசாலித்தனம் என்று எண்ணுகிறார்கள் உலகியல்வாதிகள். அவர்கள் ஷைத்தானின் அச்சுறுத்தல்களுக்கு, ஊசலாட்டங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள். உண்மையில் அது வடிகட்டிய மடமைத்தனம். வழங்கப்பட்ட அருட்கொடைகளைப் பயன்படுத்தி நிலையான மறுவுலகிற்கான முன்னேற்பாடுகளை செய்து கொள்பவனே அறிவாளி. அவர்கள்தாம் ஞானம் வழங்கப்பட்டவர்கள். அந்த ஞானம்தான் மிகப் பெரிய செல்வம்.
وَمَا أَنْفَقْتُمْ مِنْ نَفَقَةٍ أَوْ نَذَرْتُمْ مِنْ نَذْرٍ فَإِنَّ اللهَ يَعْلَمُهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍإِنْ تُبْدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ وَيُكَفِّرُ عَنْكُمْ مِنْ سَيِّئَاتِكُمْ وَاللهُ بِمَا تَعْمَلُون خَبِير
2:270,271. “நீங்கள் எதைச் செலவுசெய்தாலும் அல்லது நேர்ச்சை செய்தாலும் அதனை அல்லாஹ் நன்கறிவான். அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாரும் இல்லை. நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதுதான். அதையே நீங்கள் மறைமுகமாக ஏழைகளுக்குக் கொடுப்பீர்களாயின் அதுவும் உங்களுக்குச் சிறந்ததாகும். அல்லாஹ் உங்கள் பாவங்களைப் போக்கிவிடுவான். அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறியக்கூடியவன்”
நேர்ச்சை என்பது இன்ன விசயம் நிகழ்ந்து விட்டால் நான் என்னுடைய இன்ன பொருளை தர்மம் செய்வேன் என்றோ இன்ன வகையான நற்செயல்களில் ஈடுபடுவேன் என்றோ ஒரு மனிதன் அல்லாஹ்விடம் வாக்குறுதி வழங்குவது. ஆகவே நேர்ச்சை நிறைவேற்றப்பட வேண்டும். இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் வலியுறுத்தவில்லை என்றாலும் நேர்ச்சை செய்துவிட்டால் அதனை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
நீங்கள் சிறிய அளவிலோ பெரிய அளவிலோ எதைச் செலவு செய்தாலும் எந்த நோக்கத்திற்காகச் செய்தாலும் அதனை அல்லாஹ் அறிவான். நீங்கள் செய்யும் நேர்ச்சைகளையும் அவன் அறிவான். எதுவும் அவனுக்கு மறைவாக இல்லை. எந்தவொரு செயலுக்கும் அது நற்செயலாக இருந்தாலும் அல்லது தீய செயலாக இருந்தாலும் அது அல்லாஹ்வுக்காக செய்யப்பட்டிருந்தாலும் அல்லது வேறு நோக்கத்திற்காக செய்யப்பட்டிருந்தாலும் எதற்கும் அவன் கூலி வழங்காமல் விட்டுவிடுவதில்லை. ஒவ்வொரு செயலும் அதற்குரிய கூலியை பெற்றே தீரும். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றாமல் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்து கொண்ட அநியாயக்காரர்களுக்கு உதவியாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
நீங்கள் தர்மங்களை வெளிப்படையாக வழங்கினால் அதுவும் நல்லதுதான். அது மற்றவர்களையும் தர்மம் செய்யத் தூண்டும். நீங்கள் அவற்றை மற்றவர்களுக்குத் தெரியாமல் ஏழைகளுக்குக் கொடுத்தால் அது உங்களுக்கு மிகவும் நல்லது. அது உங்களின் உள்ளத்தை தூய்மைப்படுத்தும். அதன் காரணமாக உங்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். நீங்கள் செய்யக்கூடிய செயல்கள் அனைத்தையும் அல்லாஹ் நன்கறிந்தவன்.
ஒரு பொதுக்காரியத்திற்காக பணம் வசூலிக்கப்படும்போது வெளிப்படையாக வழங்குவது நல்லது. அது மற்றவர்களையும் வழங்கத் தூண்டும். தனிப்பட்ட முறையில் நாம் யாருக்கேனும் உதவி செய்தால் அதனை யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகச் செய்வதே சிறந்தது. அது பெறுபவரின் கண்ணியத்தையும் காக்கும். நம்முடைய உள்ளத்தையும் தேவையற்ற முஹஸ்துதியிலிருந்து தூய்மைப்படுத்தும்.
لَيْسَ عَلَيْكَ هُدَاهُمْ وَلَكِنَّ اللَّهَ يَهْدِي مَنْ يَشَاءُ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَلِأَنْفُسِكُمْ وَمَا تُنْفِقُونَ إِلَّا ابْتِغَاءَ وَجْهِ اللَّهِ وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ
2:272. “அவர்களை நேர்வழியில் கொண்டுவருவது உம்முடைய பொறுப்பல்ல. மாறாக அல்லாஹ்வே தான் நாடுவோரை நேர்வழியில் செலுத்துகிறான். நீங்கள் எந்தப் பொருளைச் செலவு செய்தாலும் அது உங்களுக்கே நன்மையாக அமையும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியே தவிர செலவு செய்யாதீர்கள். நீங்கள் எந்தப் பொருளை செலவு செய்தாலும் அதற்குரிய கூலி உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். அதில் உங்களுக்கு அநீதி இழைக்கப்படாது.”
இந்த வசனம் தூதரை விளித்து, அவர் வழியாக முஸ்லிம்களை விளித்து உரையாடுகிறது. யாரையும் நீங்கள் நிர்ப்பந்திக்க முடியாது. அறிவுரை கூறுவது மட்டுமே உங்களின் பொறுப்பு. அவர் நேர்வழியை அடைவது அல்லது வழிகெட்டுச் செல்வது அல்லாஹ்வின் கையில் இருக்கிறது. அவன் தான் நாடியவர்களை நேர்வழியில் செலுத்துகிறான். உங்களின் பணி எடுத்துரைப்பது மட்டுமே. நீங்கள் எந்தச் செல்வத்தை செலவு செய்தாலும் அது உங்களுக்கு நன்மையாகவே அமையும். ஆனால் ஒரு நிபந்தனை, நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி மட்டுமே செலவு செய்ய வேண்டும். நீங்கள் யாருக்கு அளிக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல, யாருக்காக அளிக்கிறீர்கள் என்பதே முக்கியம். அல்லாஹ்வுக்காக நீங்கள் செய்யும் எந்தச் செயலுக்கும் அவன் முழுமையாக கூலி வழங்கி விடுவான். எந்த வகையிலும் உங்களுக்கு அநீதி செய்யப்பட மாட்டாது. உங்களின் எந்த நற்செயலும் ஒருபோதும் வீணாகி விடாது.
لِلْفُقَرَاءِ الَّذِينَ أُحْصِرُوا فِي سَبِيلِ اللَّهِ لَا يَسْتَطِيعُونَ ضَرْبًا فِي الْأَرْضِ يَحْسَبُهُمُ الْجَاهِلُ أَغْنِيَاءَ مِنَ التَّعَفُّفِ تَعْرِفُهُمْ بِسِيمَاهُمْ لَا يَسْأَلُونَ النَّاسَ إِلْحَافًا وَمَا تُنْفِقُوا مِنْ خَيْرٍ فَإِنَّ اللَّهَ بِهِ عَلِيمٌ
2:273. “பூமியில் ஓடியாடி வியாபாரம் செய்ய முடியா வண்ணம் தங்களை அல்லாஹ்வின் பாதையில் அர்ப்பணித்துக் கொண்ட ஏழைகளுக்கு தர்மங்கள் அளிக்கப்பட வேண்டும். அவர்கள் யாசிக்காதததால் அறியாதவன் அவர்களை செல்வந்தர்கள் என எண்ணி விடுகிறான். நீர் அவர்களை அவர்களின் அடையாளங்களைக் கொண்டு அறிந்துகொள்ளலாம். அவர்கள் மக்களிடம் கெஞ்சிக் கேட்பதில்லை. நீங்கள் எந்தப் பொருளைச் செலவு செய்தாலும் அதை அல்லாஹ் நன்கறிபவனாக இருக்கின்றான்.”
அல்லாஹ்வின் பாதையில் தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதனால் சம்பாதிக்க முடியாமல் போனவர்கள். அவர்கள் இயலாமையினால் அந்த நிலையை அடையவில்லை. அல்லாஹ்வின் பாதையில் செயல்பட வேண்டும் என்பதற்காக அந்த நிலையை விரும்பி ஏற்றுக் கொண்டவர்கள். அவர்கள் மக்களிடம் தங்களின் நிலையை எடுத்துரைத்து கேட்க மாட்டார்கள். அவர்களைக் குறித்து அறியாதவர்கள் அவர்களின் கண்ணியமான நடத்தையினால் அவர்களை செல்வந்தர்கள் என்று எண்ணிக் கொள்வார்கள். ஆனால் அறிய விரும்புவர்கள் அவர்களைக் குறித்து அறிந்துகொள்ளலாம். அகப்பார்வை கொண்ட நம்பிக்கையாளனுக்கு அவர்களை அறிவது கடினமான ஒன்றாக இருக்காது. அவர்கள் கண்டறியப்பட்டு உதவி செய்யப்பட வேண்டும். கண்ணியமான முறையில் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
எந்தவொரு இயக்கமும் தனக்காக பணிசெய்யக்கூடிய முழுநேர ஊழியர்களை வேண்டி நிற்கிறது. இயக்கத்தின் வளர்ச்சிக்கு அது இன்றியமையாதது. ஒரு நிறுவனத்திற்கு எப்படி பணிக்கு ஆட்கள் அமர்த்தப்படுகிறார்களோ அப்படி அந்த இயக்கத்திற்கு ஆட்கள் பணிக்கு அமர்த்தப்படக்கூடாது. இயக்கத்தின் இலட்சியத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களே அதன் முழுநேர ஊழியர்களாக நியமிக்கப்பட வேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்திற்கு இயக்கம் பொறுப்பெடுத்துக் கொள்ள வேண்டும். திண்ணைத் தோழர்களின் உதாரணம் நமக்கு முன்னால் இருக்கிறது. இந்த வசனம் திண்ணைத் தோழர்களையே பேசுகிறது. ஆனாலும் அவர்களைப் போன்று தங்களை இஸ்லாமியப் பணிகளுக்காக அர்ப்பணித்துக் கொண்ட அனைவருக்கும் பொருந்தக்கூடியது.
الَّذِينَ يُنْفِقُونَ أَمْوَالَهُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ سِرًّا وَعَلَانِيَةً فَلَهُمْ أَجْرُهُمْ عِنْدَ رَبِّهِمْ وَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
2:274. “தங்களின் செல்வங்களை இரவிலும் பகலிலும் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்பவர்களுக்கு அவர்களின் இறைவனிடம் நற்கூலி இருக்கின்றது. அவர்களுக்கு எவ்வித அச்சமுமில்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.”
அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வது தொடர்பாக இந்தப் பாடத்தில் இடம்பெறும் இறுதியான வசனம். செலவு செய்வதன் அனைத்து நிலைகளையும் உள்ளடக்கி விடுகிறது. அதற்கென குறிப்பிட்ட நேரம் எதுவும் இல்லை. நிர்ணயிக்கப்பட்ட ஒரே வடிவமும் இல்லை. இங்கு நோக்கம்தான் முக்கியம். வெளிப்படையாகவோ மறைமுகமாகவே செலவு செய்யுங்கள். எந்தச் சமயத்தில் வேண்டுமானாலும் செலவு செய்யுங்கள். உங்களின் நோக்கம் சரியானதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் அதற்கான கூலி நிச்சயம் கிடைக்கும். அவர்களுக்கு எதிர்காலம் குறித்த பயமும் இல்லை. கடந்த காலத்தை எண்ணி கவலையும் இல்லை. அவர்கள் தாங்கள் செய்த செலவின் காரணமாக முழுமையான அமைதியை, நிம்மதியை உணர்வார்கள்.
