இவ்வுலக இன்பங்களின் இயல்பு என்ன?

You are currently viewing இவ்வுலக இன்பங்களின் இயல்பு என்ன?

அறிவுமுதிர்ச்சி கொண்டவர்கள் தங்களின் பலத்தையும் பலவீனத்தையும் அறிகிறார்கள். தங்களின் பலவீனம் தங்களை தடுமாறச் செய்துவிடக்கூடாது என்ற விழிப்புணர்வின் வெளிப்பாடே அவர்களிடமிருந்து வெளிப்பட்ட மேற்கண்ட பிரார்த்தனை. மனம் இச்சைகளுக்கு அடிமையாகி விடும்போது பலவீனமடைந்து விடுகிறது. நிராகரிப்பு பலவீனமடைந்த மனதின் வெளிப்பாடேயாகும். அற்ப ஆதாயங்களுக்காக அவர்கள் சத்தியத்தை கைவிட துணிகிறார்கள். அவர்கள் எந்த ஆதாயத்திற்காக நிராகரிக்கிறார்களோ அது அவர்களுக்கு எந்தப் பயனும் அளிக்காது. நிராகரிப்பாளர்கள் நரகத்தின் எரிபொருள்களாகத்தான் இருப்பார்கள்.

إِنَّ الَّذِينَ كَفَرُوا لَنْ تُغْنِيَ عَنْهُمْ أَمْوَالُهُمْ وَلَا أَوْلَادُهُمْ مِنَ اللهِ شَيْئًا وَأُولَئِكَ هُمْ وَقُودُ النَّارِ كَدَأْبِ آلِ فِرْعَوْنَ وَالَّذِينَ مِنْ قَبْلِهِمْ كَذَّبُوا بِآيَاتِنَا فَأَخَذَهُمُ اللهُ بِذُنُوبِهِمْ وَاللهُ شَدِيدُ الْعِقَابِ قُلْ لِلَّذِينَ كَفَرُوا سَتُغْلَبُونَ وَتُحْشَرُونَ إِلَى جَهَنَّمَ وَبِئْسَ الْمِهَادُ قَدْ كَانَ لَكُمْ آيَةٌ فِي فِئَتَيْنِ الْتَقَتَا فِئَةٌ تُقَاتِلُ فِي سَبِيلِ اللهِ وَأُخْرَى كَافِرَةٌ يَرَوْنَهُمْ مِثْلَيْهِمْ رَأْيَ الْعَيْنِ وَاللهُ يُؤَيِّدُ بِنَصْرِهِ مَنْ يَشَاءُ إِنَّ فِي ذَلِكَ لَعِبْرَةً لِأُولِي الْأَبْصَارِ

3:10-13. “நிராகரிப்பாளர்களுக்கு அவர்களின் செல்வங்களோ பிள்ளைகளோ அல்லாஹ்விடம் சிறிதும் பயனளிக்க மாட்டார்கள். அவர்கள்தாம் நரகத்தின் எரிபொருள்களாவர். ஃபிர்அவ்னைச் சேர்ந்தவர்களுக்கும் அவர்களுக்கு முன்னிருந்தவர்களுக்கும் நேர்ந்ததைப் போலவே இவர்களுக்கும் நேரும். அவர்கள் நம் சான்றுகளை நிராகரித்தார்கள். ஆகவே அவர்களின் பாவங்களின் காரணமாக அல்லாஹ் அவர்களைத் தண்டித்தான். அவன் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன். நிராகரிப்பாளர்களிடம் நீர் கூறும்: “நீங்கள் ஒடுக்கப்பட்டு ஒன்றுதிரட்டப்பட்டு நரகத்தின் பக்கம் ஓட்டிச் செல்லப்படுவீர்கள். அது மிகவும் மோசமான இருப்பிடமாகும். மோதிக்கொண்ட இரு பிரிவினரிடம் நிச்சயமாக உங்களுக்கு ஒரு சான்று இருக்கின்றது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். மற்றொரு பிரிவினர் நிராகரிப்பாளர்களாக இருந்தார்கள். அவர்கள் தம் கண்களால் நம்பிக்கையாளர்களை இரு மடங்காகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ் தான் நாடியோரை தன் உதவியால் பலப்படுத்துகிறான். இதில் பார்வையுடையோருக்குப் பெரும் படிப்பினை இருக்கின்றது.”          

இந்த வசனத்தில் நிராகரிப்பாளர்கள் என்ற வார்த்தை குர்ஆனை நிராகரித்த வேதக்காரர்களான யூதர்களையும் கிருஸ்தவர்களையும் குறிக்கிறது. குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள வேதம் என்பதை அவர்கள் அறிந்த பின்னரும் எது அவர்களை நிராகரிக்கத் தூண்டியது? தாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்த உலகிய ஆதாயங்கள், தங்களின் செல்வாக்கு தங்களைவிட்டுப் போய்விடும் என்று அவர்கள் அஞ்சினார்கள். செல்வத்தின் மீது அவர்கள் கொண்டிருந்த மோகமும் பிள்ளைகளின் மீது அவர்கள் வைத்திருந்த பாசமும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஏற்றுக் கொள்வதற்கு தடைகளாக இருந்தன. சத்தியத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அவர்கள் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது. அவர்களின் செல்வங்களும் பிள்ளைகளும் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து அவர்களை ஒருபோதும் பாதுகாத்துவிடாது. அவை அல்லாஹ்வின் தண்டனைக்கு முன்னால் சிறிதளவுகூட பயனளிக்காது. இத்தகைய நிராகரிப்பாளர்கள் நரகத்தின் எரிபொருள்களாகத்தான் இருப்பார்கள்.

அவர்களின் நிராகரிப்புக்குப் பின்னால் இருக்கும் அசலான காரணங்களை குர்ஆன் அம்பலப்படுத்துகிறது. ஆனால் அவர்களோ புரிந்துகொள்ள முடியாத சொல்லாடல்களைக் கொண்டு தங்களின் நிராகரிப்பை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலும் மனிதர்கள் ஒன்றை நிராகரிக்கும்போது இதுபோன்று போலியான சாக்குப்போக்குகளையே முன்வைக்கிறார்கள். அசலான காரணங்களை அவர்களை முன்வைப்பதில்லை. மனிதர்கள் இவ்வாறு சாக்குப்போக்குகளை முன்வைத்து தங்களைப் போன்ற மனிதர்களை ஏமாற்றலாம். படைத்த இறைவனை எப்படி அவர்களால் ஏமாற்ற முடியும்? அவன் நீதியாளன் அல்லவா! ஃபிர்அவ்னின் கூட்டத்தாரும் அவர்களுக்கு முன் இருந்தவர்களும் அவர்களின் நிராகரிப்பின் காரணமாக எவ்வாறு தண்டிக்கப்பட்டார்களோ அப்படித்தான் இவர்களும் தண்டிக்கப்படுவார்கள். தங்களின் செல்வமும் படைபலமும் தங்களைக் காப்பாற்றும் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தண்டனைக்கு முன்னால் அவை அவர்களுக்கு எந்த வகையிலும் பயனளிக்கவில்லை. அவர்கள் செய்த பாவங்களின் காரணமாகவே அவன் அவர்களைத் தண்டித்தான். யாரெல்லாம் நிராகரிப்பின் பாதையை தெரிவு செய்கிறார்களோ அவர்களும் அதே முடிவையே அடைவார்கள். அல்லாஹ் தண்டிப்பதில் மிகக் கடுமையானவன்.

நீங்கள் அந்த நிராகரிப்பாளர்களிடம் கூறுங்கள்: உங்களின் நிராகரிப்பின் காரணமாக நீங்களும் தண்டிக்கப்படுவீர்கள். நீங்கள் இந்த உலகில் ஒடுக்கப்படுவீர்கள். மறுமையில் ஒன்றுதிரட்டப்பட்டு நரகத்தின் பக்கம் ஓட்டிச் செல்லப்படுவீர்கள். அது உங்களுக்கான மோசமான தங்குமிடமாகும்.

பத்ருப்போரில் மோதிக் கொண்ட இரு பிரிவினரிடம் உங்களுக்கு சான்று இருக்கின்றது. ஒரு பிரிவினர் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொண்டிருந்த நம்பிக்கையாளர்கள். இன்னொரு பிரிவினர் ஷைத்தானின் பாதையில் போரிட்டுக் கொண்டிருந்த நிராகரிப்பாளர்கள். அவர்கள் களத்தில் நம்பிக்கையாளர்களை தங்களைவிட இருமடங்கு அதிக எண்ணிக்கையினராகக் கண்டார்கள். இது அல்லாஹ் நம்பிக்கையாளர்களுக்குச் செய்த உதவி. அவன் தான் நாடியவர்களுக்கு இப்படித்தான் உதவி செய்கிறான். அகப்பார்வை கொண்டவர்களுக்கு இந்த சம்பவத்தில் பெரும் படிப்பினை இருக்கிறது.

முஸ்லிம்களுக்கும் நிராகரிப்பாளர்களுக்கும் மத்தியில் நிகழ்ந்த பத்ருப்போரில் முஸ்லிம்கள் எண்ணிக்கையில் குறைவானவர்களாக, போதுமான ஆயுத பலம் இல்லாதவர்களாக இருந்தார்கள். நிராகரிப்பாளர்கள் முஸ்லிம்களைவிட அதிக எண்ணிக்கையினராக, பெரும் ஆயுத பலம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் அதிக எண்ணிக்கையும் ஆயுத பலமும் அவர்களுக்குப் பயளனிக்கவில்லை. முஸ்லிம்கள் வெற்றி பெற்றார்கள். சத்தியம் அசலான வடிவில் வெளிப்படும்போது அதுதான் வெல்லும். அதனை யாராலும் முறியடிக்க முடியாது. முஸ்லிம்கள் வெற்றி பெற்றதற்கான காரணம், அவர்களிடம் இருந்த சத்தியம்தான். சத்தியத்திற்கு உதவி செய்வதும் அதனைப் பலப்படுத்துவதும் பாதுகாப்பதும் அல்லாஹ்வின் பொறுப்பாகும். எத்தனையோ சிறு படைகள் அல்லாஹ்வின் உதவி கொண்டு பெரும் படைகளை வீழ்த்தியிருக்கின்றன. தாலூத்தின் சிறு படை ஜாலூத்தின் பெரும் படையை வென்றதும் இப்படித்தான். அகப்பார்வை கொண்டவர்களுக்கு இதில் பெரும் படிப்பினை இருக்கின்றது.

இது மீண்டும் மீண்டும் நிகழ்ந்து கொண்டேயிருக்கும் நிகழ்வுதான். நிராகரிப்பாளர்களுக்கு அவகாசம் வழங்கப்படும். ஆனால் அவர்களின் கதை சட்டென முடிக்கப்பட்டு விடும். வெளிப்படையான எல்லா காரணிகளும் அவர்களுக்குச் சாதகமாக இருந்தாலும் அவர்களால் அல்லாஹ்வின் பிடியிலிருந்து ஒருபோதும் தப்ப முடியாது. எதிர்பாரா புறத்திலிருந்து பெரும் வேதனை அவர்களைத் தாக்கியே தீரும். தாங்கள் அனுபவிக்கும் பதவிகளும்  இன்பங்களும் பெற்றுள்ள வாய்ப்புகளும் தங்களைவிட்டு பறிபோய்விடும் என்ற பயத்தினால் இந்தக் குர்ஆனை, இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் மனிதர்கள் வாழ்க்கையில் செயல்படும் அல்லாஹ்வின் இந்த நியதியைக் குறித்து சிந்திக்கட்டும்.

زُيِّنَ لِلنَّاسِ حُبُّ الشَّهَوَاتِ مِنَ النِّسَاءِ وَالْبَنِينَ وَالْقَنَاطِيرِ الْمُقَنْطَرَةِ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةِ وَالْخَيْلِ الْمُسَوَّمَةِ وَالْأَنْعَامِ وَالْحَرْثِ ذَلِكَ مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَاللهُ عِنْدَهُ حُسْنُ الْمَآبِ قُلْ أَؤُنَبِّئُكُمْ بِخَيْرٍ مِنْ ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِنْدَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِنَ اللهِ وَاللهُ بَصِيرٌ بِالْعِبَادِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا إِنَّنَا آمَنَّا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَقِنَا عَذَابَ النَّارِ الصَّابِرِينَ وَالصَّادِقِينَ وَالْقَانِتِينَ وَالْمُنْفِقِينَ وَالْمُسْتَغْفِرِينَ بِالْأَسْحَارِ

3:14-17. “பெண்கள், ஆண் பிள்ளைகள், தங்கம் மற்றும் வெள்ளியின் குவியல்கள், உயர் ரகக் குதிரைகள், கால்நடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றை விரும்புவது மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இவ்வுலக வாழ்வின் இன்பங்களேயாகும். அல்லாஹ்விடமே அழகிய தங்குமிடம் இருக்கின்றது. நீர் கூறும்: இவற்றைவிடச் சிறந்தவற்றை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இறையச்சமுடையோருக்கு அவர்களின் இறைவனிடம் சுவனச் சோலைகள் இருக்கின்றன. அவற்றில் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள். அங்கு அவர்களுக்கு தூய மனைவியரும் அல்லாஹ்வின் திருப்தியும் உண்டு. அல்லாஹ் தன் அடியார்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவர்கள், “எங்கள் இறைவனே! நாங்கள் நம்பிக்கைகொண்டோம். ஆகவே நீ எங்கள் பாவங்களை மன்னித்து நரக வேதனையைவிட்டும் எங்களைக் காப்பாற்றுவாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள். அவர்கள் பொறுமையாளர்களாகவும் உண்மையாளர்களாகவும் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாகவும் அவனுடைய பாதையில் செலவு செய்பவர்களாகவும் பின்னிரவில் பாவமன்னிப்புக் கோருபவர்களாகவும் இருக்கிறார்கள்.”

இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள உண்மையான வழிகாட்டல், இந்த தூதர்தான் எதிர்பார்க்கப்பட்ட இறுதித்தூதர் என்பதை அவர்கள் அறிந்துகொண்ட பின்னரும் இந்த உண்மையை ஏற்கவிடாமல் அவர்களைத் தடுப்பது எது? அவர்கள் இவ்வுலக வாழ்வின் இன்பங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அந்த இன்பங்கள் தங்களிடமிருந்து பறிக்கப்பட்டு விடும் என்று அஞ்சுகிறார்கள். இந்த வசனத்தில் அந்த இன்பங்களில் இயல்பைத் தெளிவுபடுத்துகிறான்.

மனிதர்களின் உள்ளங்கள் அந்த இன்பங்களை நோக்கிச் சாய்கின்றன. அவர்கள் அவற்றை விரும்புகிறார்கள். அந்த விருப்பம் அவர்களின் இயல்பிலேயே இருக்கிறது. அந்த விருப்பம் அவர்களை மீறிய ஒன்று. அதனை அவர்கள் ஒரேயடியாக நசுக்கிவிட முடியாது. ஒரேயடியாக நசுக்கிவிட முயற்சிப்பது வேறு வகையான மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அது அவர்களை கடும் மனச்சிக்கலில் ஆழ்த்திவிடும். திருக்குர்ஆன் அந்த இன்பங்களின் இயல்பைத் தெளிவுபடுத்துகிறது. அவை இவ்வுலக வாழ்வின் தற்காலிகமான இன்பங்கள்தாம். அவை நிலையானவை அல்ல. நிலையான இன்பங்கள் அல்லாஹ்விடம் இருக்கின்றன.

இவ்வுலக வாழ்வுக்கு அந்த இன்பங்கள் அவசியமானவை. அவை வாழ்வின் மீதான ஈர்ப்பை அதிகரிக்கின்றன. மனித வாழ்வை நீடிக்கச் செய்கின்றன. மனிதர்கள் மணமுடிக்கிறார்கள். குழந்தைகள் பெற்றுக் கொள்கிறார்கள். குடும்பங்களை உருவாக்குகிறார்கள். அதன் வழியாக சமூகம் உருவாகிறது. மனித சமூகம் பலமடைகிறது, வளர்ச்சியடைகிறது, நீடிக்கிறது.

அந்த இன்பங்களில் பெண்ணின்பம்தான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் ஆண்பிள்ளைகள் வருகிறார்கள். அதற்குப் பிறகு பெரும் செல்வம் குறிப்பிடப்படுகிறது. அதற்குப் பிறகு உயர்ரக குதிரைகள் இடம்பெறுகின்றன. அந்தக் காலகட்டத்தில் அறபுக்களில் மிக உயர்ந்த செல்வமாக உயர்ரக குதிரைகளே கருதப்பட்டன. இந்தக் காலகட்டத்தின் சொகுசு வாகனங்களுக்கு இணையான செல்வங்கள் அவை. பிறகு கால்நடைகள் குறிப்பிடப்படுகின்றன. பிறகு விளைநிலங்கள். குறிப்பிடப்பட்டுள்ள இந்த வரிசை முறையும் கவனிக்கத்தக்கது. ஒவ்வொன்றும் அடுத்தடுத்ததை வேண்டி நிற்கின்றன.

இவ்வுலக வாழ்வுக்கு இந்த இன்பங்கள் அவசியமானவை. ஆனால் இவ்வுலக வாழ்வு என்பது மறுவுலக வாழ்வுக்கான விளைநிலமேயாகும். இவ்வுலக வாழ்வு நிரந்தரமானது அல்ல. அதன் இன்பங்கள் நிலையானவை அல்ல. மறுவுலக வாழ்வே நிரந்தரமானது. அதன் இன்பங்களே நிலையானது. ஆகவே மறுவுலக வாழ்வும் அதன் இன்பங்களுமே முதன்மையான நோக்கமாக கொள்ளப்பட வேண்டும்.

தக்வா உடையவர்களுக்கு அதாவது அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி நடப்பவர்களுக்கு அல்லாஹ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களை தயார்படுத்தி வைத்திருக்கிறான். அவை நிலையானவை. அங்கு அவர்கள் தூய மனைவியரையும் பெறுவார்கள். அவர்கள் உடலளவிலும் மனதளவிலும் தூய்மையானவர்கள். அங்குள்ள இன்பங்கள் இவ்வுலக இன்பங்களைப் போன்றவை அல்ல. அவை நிலையானவை. எப்போதும் இன்பமூட்டக்கூடியவை. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கு அல்லாஹ்வின் திருப்தி கிடைக்கும். இதுதான் மிக உன்னதமான இன்பம். மனித வாழ்வின் நோக்கமாக அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதுதான். அல்லாஹ் அடியார்களைக் குறித்து நன்கறிந்தவன்.

தக்வா உடையவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களின் பண்புகள் என்னென்ன? அவர்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இந்த தூதரின் அழைப்பை ஏற்றுக்கொள்வார்கள். இந்தக் குர்ஆனை தங்களின் வாழ்வியல் வழிகாட்டியாக ஏற்றுக்கொள்வார்கள். இத்தனைக்குப் பிறகும் அவர்கள் தங்களின் பாவங்களுக்காக, தவறுகளுக்காக அவனிடம் மன்னிப்புக் கோருவார்கள். நரகத்தின் வேதனையிலிருந்து தங்களைக் காத்தருளும்படி அவனிடம் இறைஞ்சுவார்கள். அவனுடைய கருணையே தங்களை வழிநடத்துகின்றது என்பதை அவர்கள் உறுதியாக நம்புவார்கள்.

அவர்கள் பொறுமையாளர்கள். இச்சைகளின் ஈர்ப்புக்குப் பின்னால் ஓடி அவற்றுக்கு அடிமையாகிவிட மாட்டார்கள். துன்பங்களின்போதும் சிரமங்களின்போதும் நிலைகுலையாமல் அல்லாஹ்வின் அருளை எதிர்பார்த்தவாறு உறுதியாக நிற்பார்கள். அவர்கள் உண்மையாளர்கள். அவர்களின் சொல்லுக்கும் செயலுக்கும் மத்தியில் பெரிய அளவில் இடைவெளி எதுவும் இருக்காது. அவர்கள் நம்பகமானவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப்படக்கூடியவர்கள். அவனுடைய பாதையில் யோசிக்காமல் செலவு செய்யக்கூடியவர்கள். ஷைத்தானின் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாதவர்கள். பின்னரவில் தங்களின் பாவங்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கோரக்கூடியவர்கள்.               

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply