அல்பகரா அத்தியாயத்தை தொடர்ந்து இடம்பெறும் இந்த அத்தியாயம் அதன் இன்னொரு பகுதி போன்று அதனை முழுமைப்படுத்தக்கூடியதாகவும் அதில் சுருக்கமாக இடம்பெற்றுள்ள சில விசயங்களை இன்னும் கூடுதலாக தெளிவுபடுத்தக்கூடியதாகவும் இருக்கின்றது. இந்த இரு அத்தியாயங்களும் ஒரு மரத்திலிருந்து வெளிப்பட்ட இரு கிளைகள்போன்று இருக்கின்றன. இரண்டும் முஹம்மது நபியவர்களின் தூதுத்துவத்தை சந்தேகத்திற்கு இடமின்றி நிறுவுகின்றன. அல்பகரா அத்தியாயத்தில் நபியவர்களின் தூதுத்துவம் தொடர்பாக யூதர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் அவர்கள் முன்வைத்த வாதங்களுக்கும் பதிலளிக்கப்பட்டது. இந்த அத்தியாயத்தில் கிருஸ்தவர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும், அவர்கள் முன்வைத்த வாதங்களுக்கும் பதிலளிக்கப்படுகின்றது.
இது மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயமாகும். இதன் வசனங்களைக் கவனித்துப் பார்க்கும்போது இது இஸ்லாத்தின் ஆதிக்கம் நிலைபெறுவதற்கான அடையாளங்கள் வெளிப்பட்ட காலத்தில் அருளப்பட்டதாக இருக்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கிருஸ்தவக் குழுக்கள் வந்து நபியவர்களைச் சந்தித்த காலகட்டத்தில் இது அருளப்பட்டிருக்கலாம். இஸ்லாத்தின் எதிரிகள் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக இஸ்லாத்திற்கு எதிரான குழப்பங்களையும் சந்தேகங்களையும் பரப்பத் தொடங்கியிருந்த காலகட்டம் அது.
இந்த அத்தியாயம் இரண்டு பகுதிகளைக் கொண்டிருக்கிறது. அதன் முதல் பகுதி இம்ரானின் குடும்பத்தினர் குறித்து, தன் தூதுத்துவ பணிக்காக அந்த குடும்பத்தினரை அல்லாஹ் தெரிவு செய்ததைக் குறித்து பேசுகிறது. இதன் இரண்டாவது பகுதி, உஹதுப் போரைக் குறித்தும் அதில் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கான காரணிகள் குறித்தும் பேசுகிறது. ஈசா நபி அவர்கள் இம்ரானின் குடும்பத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தூதர் ஆவார். ஈசா நபியின் தாயார் மர்யம் ஆவார். மர்யமின் தாயார் இம்ரானின் மனைவி ஆவார். மர்யமின் தாயார் தம் வயிற்றில் வளர்கின்ற கருவை இறையில்லத்திற்காக அர்ப்பணிப்பதற்கு நேர்ச்சை செய்த நிகழ்விலிருந்து இம்ரானுடைய குடும்பத்தினரின் சம்பவம் குறிப்பிடப்படுகிறது. இதன் காரணமாகவே இந்த அத்தியாயத்திற்கு ஆலுஇம்ரான் (இம்ரானின் குடும்பத்தினர்) என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம்.
بِسْمِ اللهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
அளவற்ற அருளாளனும் தொடர் கிருபையாளனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.
الم
3:1. “அலிப். லாம். மீம்.”
அல்பகரா அத்தியாயத்தின் தொடக்க வசனமும் இதுதான். ஆகவே நான் அங்கு அளித்த விளக்கத்தை அப்படியே இங்கும் குறிப்பிடுகின்றேன்:
இவை தனித்தனியாக வாசிக்கப்படும் எழுத்துகள் ஆகும். உரையின் ஆரம்பத்தில் இது போன்று கூறுவது அன்றைய அறபுக்களிடத்தில் வழக்கத்தில் இருந்த ஒன்றுதான். அதனால்தான் இது அவர்களுக்கு அந்நியமான, புரிந்து கொள்ள முடியாத ஒன்றாகத் தெரியவில்லை. நபித்தோழர்களில் யாரும் இது குறித்து நபியவர்களிடம் கேள்வி எழுப்பியதாக எந்தக் குறிப்பும் இல்லை. ஆனால் அவர்களுக்குப் பின் வந்த தலைமுறையினர்களிடம் இந்த எழுத்துகளைப் புரிந்து கொள்வதில் சிக்கல் உருவாகியது.
குர்ஆன் விரிவுரையாளர்களில் ஒரு தரப்பினர், “இது தெளிவாகப் புரிந்து கொள்ள முடியாத வசனங்களில் ஒன்று. இது குறித்து அல்லாஹ்வே நன்கறிந்தவன்” என்று கூறுகிறார்கள். குர்ஆனில் புரிந்து கொள்ள முடியாத வசனங்கள் இருப்பதாக நான் கருதவில்லை. இன்னொரு தரப்பினர், இதனைக் குறியீடுகளாகக் கருதி ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு விதமான விளக்கங்களை அளிக்கிறார்கள். இதனை ஆதாரத்தின் அடிப்படையிலான விளக்கம் என்று கூற முடியாது. இது யூகத்தின் அடிப்படையிலான விளக்கமாகும். சிலர், “இவை அத்தியாயங்களின் பெயர்களைக் குறிக்கின்றன” என்று கூறுகிறார்கள்.
சிலர், “இது குர்ஆனின் அற்புதத்தை, அது அல்லாஹ்விடமிருந்து வந்த தனித்துவமான, அற்புதமான ஒன்று என்பதை எடுத்துரைக்கும் வழிமுறை” என்று கூறுகிறார்கள். அதாவது இந்த எழுத்துகளைக் கொண்டுதான் நீங்கள் வார்த்தைகளை உருவாக்குகிறீர்கள், பேசுகிறீர்கள், கவிதை பாடுகிறீர்கள், உன்னதமான இலக்கியங்களை உருவாக்குகிறீர்கள். நீங்கள் பயன்படுத்துகின்ற அதே எழுத்துகளைக் கொண்டுதான் குர்ஆனும் உருவாக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்பதில் சந்தேகம் கொண்டிருந்தால், இது மனிதர்களால் உருவாக்க முடியுமான ஒன்றுதான் என்று கூறினால் இது போன்ற ஒன்றை உருவாக்கிக் காட்டுங்கள் என்ற சவாலை உள்ளடக்கி இருக்கிறது. இந்தக் கருத்தே என் மனதுக்கு மிக நெருக்கமான ஒன்றாகத் தெரிகிறது.
اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ نَزَّلَ عَلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَأَنْزَلَ التَّوْرَاةَ وَالْإِنْجِيلَ مِنْ قَبْلُ هُدًى لِلنَّاسِ وَأَنْزَلَ الْفُرْقَانَ إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ اللهِ لَهُمْ عَذَابٌ شَدِيدٌ وَاللهُ عَزِيزٌ ذُو انْتِقَامٍ إِنَّ اللهَ لَا يَخْفَى عَلَيْهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ هُوَ الَّذِي يُصَوِّرُكُمْ فِي الْأَرْحَامِ كَيْفَ يَشَاءُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ هُوَ الَّذِي أَنْزَلَ عَلَيْكَ الْكِتَابَ مِنْهُ آيَاتٌ مُحْكَمَاتٌ هُنَّ أُمُّ الْكِتَابِ وَأُخَرُ مُتَشَابِهَاتٌ فَأَمَّا الَّذِينَ فِي قُلُوبِهِمْ زَيْغٌ فَيَتَّبِعُونَ مَا تَشَابَهَ مِنْهُ ابْتِغَاءَ الْفِتْنَةِ وَابْتِغَاءَ تَأْوِيلِهِ وَمَا يَعْلَمُ تَأْوِيلَهُ إِلَّا اللهُ وَالرَّاسِخُونَ فِي الْعِلْمِ يَقُولُونَ آمَنَّا بِهِ كُلٌّ مِنْ عِنْدِ رَبِّنَا وَمَا يَذَّكَّرُ إِلَّا أُولُو الْأَلْبَابِ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ رَبَّنَا إِنَّكَ جَامِعُ النَّاسِ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ إِنَّ اللهَ لَا يُخْلِفُ الْمِيعَادَ
3:2-10. “அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் நித்திய ஜீவன்; அனைத்தையும் நிலைநிறுத்துபவன். அவனே இந்த வேதத்தை உமக்கு சத்தியத்தைக் கொண்டு அருளியுள்ளான். இது தனக்கு முன்னுள்ளவற்றை உண்மைப்படுத்துகின்றது. அவன் இதற்கு முன்னர் மக்களுக்கு வழிகாட்டியாக தவ்ராத்தையும் இன்ஜீலையும் அருளினான். ஃபுர்கானையும் அவன் அருளினான். அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரிப்பவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு. அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் தக்க தண்டனையளிப்பவனாகவும் இருக்கின்றான். வானத்திலும் பூமியிலும் உள்ள எதுவும் அல்லாஹ்வுக்கு மறைவானதாக இல்லை. அவனே தாயின் கருவறையில் தான் விரும்பியவாறு உங்களை வடிவமைக்கிறான். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான். அவனே உமக்கு வேதத்தை அருளினான். அதில் சில வசனங்கள் தெளிவானவையாக இருக்கின்றன. அவையே வேதத்தின் அடிப்படையாகும். சில வசனங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாதவையாக இருக்கின்றன. உள்ளங்களில் கோளாறு உள்ளவர்கள் குழப்பத்தை நாடியும் அவற்றின் விளக்கத்தைத் தேடியும் புரிந்துகொள்ள முடியாதவற்றுக்குப் பின்னால் ஓடுகிறார்கள். அவற்றின் விளக்கத்தை அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறிய மாட்டார். அறிவுமுதிர்ச்சி பெற்றவர்கள், “நாங்கள் இதன் மீது நம்பிக்கைகொண்டோம். இவையனைத்தும் எங்கள் இறைவனிடமிருந்து வந்தவைதான்” என்று கூறுவார்கள். அறிவுடையோர்தாம் அறிவுரையை ஏற்றுக்கொள்வர். “எங்கள் இறைவனே! நீ எங்களை நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் உள்ளங்களைத் தடுமாறச் செய்துவிடாதே. எங்களுக்கு உன்னிடமிருந்து அருளை வழங்குவாயாக. நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய். எங்கள் இறைவனே! நீ மனிதர்கள் அனைவரையும் ஒருநாள் ஒன்றுதிரட்டுபவனாக இருக்கின்றாய். அந்நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட மாட்டான்.”
அல்லாஹ்வுக்கே உரிய தனித்துவமான பண்புகளைக் கொண்டு இந்த அத்தியாயம் தொடங்குகிறது. அவை இந்த அத்தியாயத்தின் கருப்பொருளுக்கு உகந்தவை. அவை அத்தியாயம் தெளிவுபடுத்தும் கருப்பொருளுக்கு முன்னுரைபோன்று அமையக்கூடியவை. அத்தியாயம் ஈசா நபி குறித்து கிருஸ்தவர்கள் உருவாக்கியிருந்த பிழையான கொள்கைகள் குறித்துப் பேசுகிறது. அது அவர்கள் வழிதவறிச் சென்ற இடத்தை சுட்டிக் காட்டுகிறது. அவர்கள் ஈசாவை, இறைவனின் ஒரு பகுதியாக, இறைவனின் மகனான ஆக்கியிருந்தார்கள். அல்லாஹ் எப்படிப்பட்டவன்? அவன் மட்டுமே வணங்குவதற்குத் தகுதியான ஒரே இறைவன். அவன் என்றும் உயிருடன் இருப்பவன். அவன் வாழ்க்கை தொடக்கமோ முடிவோ பிறப்போ இறப்போ அற்றது. அவன் தன்னைக் கொண்டு நிலைபெற்றவன். அவனுக்குப் படைப்பாளன் என்று யாரும் இல்லை. அவனைக் கொண்டே அத்தனையும் நிலைபெறுகின்றன. அவனே படைப்புகள் அனைத்தையும் படைத்து பராமரித்துக் கொண்டிருப்பவன். அவனுடைய பராமரிப்பை, பாதுகாப்பை, கண்காணிப்பை மீறி எங்கும் எதுவும் இல்லை. எதுவும் இருக்கவும் முடியாது.
அல்லாஹ்வின் இந்த பண்புகளை வேதக்காரர்கள் அறிந்திருந்தார்கள். அவர்களிடம் எஞ்சியிருந்த இறைத்தூதர்களின் போதனைகளில் இருந்து இந்த பண்புகளை அவர்கள் தெளிவாக அறிந்திருந்தார்கள். ஆனாலும் தெளிவான இந்த பண்புகளை விட்டுவிட்டு அவர்களிடம் எஞ்சியிருந்த வேதத்தின் போதனைகளில் காணப்பட்ட மூட்டமான சில வார்த்தைகளைக் கொண்டு ஈசாவுக்கு இறைத்தன்மை இருப்பதாக வாதிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவன் கய்யூம் என்பதன் வெளிப்பாடுதான் மனிதர்களுக்கு வழிகாட்டும்பொருட்டு தூதர்களை, அவர்கள் வழியாக வேதங்களை அவன் வழங்கியுள்ளான். அவன்தான் இந்தக் குர்ஆனை சிறிது சிறிதாக இறக்கியுள்ளான். அது சத்தியத்தைக் கொண்டிருக்கிறது. அது சத்தியம் என்பதற்கு அதுவே சாட்சியாக இருக்கின்றது. அது அல்லாஹ்விடமிருந்து வந்த சத்தியமாகும். அது தனக்கு முன்னுள்ள வேதங்களை உண்மைப்படுத்துகிறது. அது அவற்றோடு முரண்படவில்லை. அவற்றில் உள்ள போதனைகளையே அதுவும் முன்வைத்தது.
அவன்தான் இதற்கு முன்னர் மனிதர்களுக்கு வழிகாட்டும்பொருட்டு தவ்ராத்தையும் இன்ஜீலையும் அருளினான். தவ்ராத் என்பது மூசா நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதமாகும். இன்ஜீல் என்பது ஈசா நபி அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதமாகும். இப்போது யூதர்களிடம் இருப்பது தவ்ராத் அல்ல. அதன் போதனைகளில் சிலவையும் மூசா நபி, அவர்களுக்குப் பிறகு வந்த அரசர்கள் மற்றும் இஸ்ராயீலின் சமூகத்தின் வரலாறும் அடங்கிய ஒரு தொகுப்புதான். அதுதான் கிருஸ்தவர்களிடம் பழைய ஏற்பாடு என்ற பெயரில் இருக்கின்றது. புதிய ஏற்பாடு என்ற பெயரில் அவர்களிடம் இருப்பது இன்ஜீல் அல்ல. அது ஈசா நபியின் போதனைகளையும் உள்ளடக்கி இருக்கிறது. அவை பல்வேறு நூல்களாக காணப்படுகின்றன. ஈசா நபியின் போதனைகள் என்ற பெயரில் அதில் காணப்படுபவை மட்டுமே இன்ஜீலின் பகுதியாகும். மற்றவை அந்த நூல்களை எழுதிய ஆசிரியர்களின் விளக்கங்களாக இருக்கலாம். திருக்குர்ஆன் உண்மைப்படுத்துவது பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் காணப்படும் இறைத்தூதர்களின் எஞ்சியுள்ள போதனைகளைத்தான்.
அவன் ஃபுர்கானையும் அருளியுள்ளான். ஃபுர்கான் என்பது சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக்கூடியது. ஃபுர்கான் என்பது அல்லாஹ்வின் வசனங்களையும் மனிதர்களின் இடைச்செருகல்களையும் பிரித்துக் காட்டக்கூடியது. திருக்குர்ஆன்தான் ஃபுர்கானாகும். அதைக் கொண்டே முந்தைய வேதங்களில் அல்லாஹ்வின் வசனங்கள் எவை, அறிஞர்களின் விளக்கங்கள் எவை, மனிதர்களின் இடைச்செருகல்கள் எவை என்பதை பிரித்து அறிய முடியும். எங்களின் வேதங்கள் எங்களுக்குப் போதுமானவை. நாங்கள் குர்ஆனை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று கூறும் யூதர்களும் கிருஸ்தவர்களும் அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள் ஆவர். அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கிறார்கள். அவன் அனுப்பிய இறுதித் தூதரை நிராகரிக்கிறார்கள். இந்த நிராகரிப்பின் காரணமாக அவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். அல்லாஹ் பேராற்றல் மிக்கவன். அவனை யாரும் மிகைக்க முடியாது. அவனிடமிருந்து யாரும் தப்ப முடியாது. அவன் குற்றவாளிகளுக்கு தகுந்த தண்டனை அளிப்பவன். பாவம் செய்தவர்கள் அவனுடைய தண்டனையிலிருந்து தப்ப முடியாது.
பூமியிலோ வானத்திலோ அவனுக்குத் தெரியாமல் எதுவும் இல்லை. எதுவும் அவனது பார்வையைவிட்டு மறைவாக இருக்க முடியாது. தாயின் கருவறையில் ஒரு கரு உருவாகும்போது அவனே அதற்கு வடிவம் கொடுக்கிறான். அந்தக் கரு உருவாகுவதும் அதற்கான வடிவத்தைப் பெறுவதும் அவனது விருப்பப்படியே நிகழ்கிறது. ஈசா தந்தையின்றி மர்யமின் கருவறையில் உருவானார் என்பதால் அவருக்கு தெய்வீகத்தன்மை இருக்கிறது என்று வாதிடும் கிருஸ்தவர்களுக்கு இந்த வசனத்தில் மறுப்பு உள்ளது. அவர்களின் பிரச்சனை என்ன? தெளிவான வார்த்தைகளை விட்டுவிட்டு புரிந்துகொள்ள முடியாத மூட்டமான சில வார்த்தைகளை பிடித்துக் கொண்டு அலைகிறார்கள். தங்களின் பிழையான கொள்கைக்கு அவற்றையே அவர்கள் ஆதாரமாக முன்வைக்கிறார்கள்.
அல்லாஹ்தான் குர்ஆன் என்னும் மகத்தான இந்த வேதத்தை அருளினான். அதில் முஹ்கமாத் எனப்படும் வசனங்கள் இருக்கின்றன. அவை தெளிவானவையும் புரிந்துகொள்ள இலகுவானவையும் ஆகும். அவையே இந்த வேதத்தின் அடிப்படையாகும். இந்த வேதம் முன்வைக்கும் முதன்மையான கண்ணோட்டங்கள், வழிகாட்டல்கள், சட்டங்கள் உறுதியும் தெளிவும் கொண்டவை. அவை அத்தனையும் முஹ்கமாத் ஆகும். இன்னொரு வகையான வசனங்களும் இந்த வேதத்தில் உள்ளன. அவை முதஷாபிஹாத் என்று அழைக்கப்படுபவை. அவற்றின் யதார்த்தம் குறித்து நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அவை நம்முடைய புரிதலுக்கு அப்பாற்பட்டவை. நம் அறிவின் எல்லையைத் தாண்டியவை. அவற்றை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கான ஆற்றல் நமக்கு வழங்கப்படவில்லை. எந்த விசயத்தைப் புரிந்துகொள்ளும் ஆற்றல் நமக்கு வழங்கப்படவில்லையோ அந்த விசயத்திற்குப் பின்னால் சென்றால் மேலும் மேலும் குழப்பத்திற்கே உள்ளாவோம்.
நாம் நம்முடைய உலகத்தில் உள்ளவற்றைத் தவிர வேறு எதையும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. அல்லாஹ் எப்படிப்பட்டவன்? சுவனம் என்பது என்ன? நரகம் என்பது என்ன? விண்ணுலகம் என்பது என்ன? ஆன்மா என்பது என்ன? உயிர் ஊதப்படுதல் என்றால் என்ன? மரணம் என்பது என்ன? அடுத்து என்ன நிகழும்?… இவை போன்ற எத்தனையோ விசயங்களைக் குறித்து குர்ஆன் பேசுகிறது. அவற்றை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாது. நம்மால் புரிந்துகொள்ள முடியாத விசயங்களை அவன் தெளிவுபடுத்துகிறான். அவன் அவை குறித்து என்ன கூறியிருக்கின்றானோ அவற்றைத் தவிர வேறு எதையும் அறிய மாட்டோம். அவற்றை நம் அறிவைக் கொண்டு அறிய முயற்சிப்பது மேலும் மேலும் குழப்பத்தையே அதிகரிக்கும்.
நாம் வாழ்க்கைக்கு மிக அவசியமான, எந்த சந்தேகத்திற்கும் இடமற்ற அடிப்படையான விசயங்கள் அனைத்தையும் குர்ஆன் தெளிவுபடுத்தி இருக்கிறது. நாம் சிந்திப்பதற்கான களத்தையும் அது தெளிவுபடுத்தி இருக்கிறது. நமக்குத் தேவையான, நம்மால் அறிந்துகொள்ள முடியுமான விசயங்களை விட்டுவிட்டு நமக்குத் தேவையற்ற, நம்மால் அறிந்துகொள்ள முடியாத விசயங்களுக்குப் பின்னால் ஓடுவது உள்ளத்தில் கோளாறு இருக்கிறது என்பதற்கான அடையாளமாகும்.
ஈசாவைக் குறித்து அவன் அல்லாஹ்வின் தூதரும் அவனுடைய அடிமையும் ஆவார் என்பது முந்தைய வேதங்களிலும் குர்ஆனிலும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அவர்கள் தெளிவான இந்த வார்த்தைகளை விட்டுவிட்டு “அவர் அவனுடைய வார்த்தையும் அவனுடைய ரூஹும் ஆவார்” என்ற வாசகத்தைப் பிடித்துக் கொண்டார்கள். அவர் அவனுடைய வார்த்தை, அவனுடைய ரூஹ் என்ற சொல்லாடல்கள் நம்மால் புரிந்துகொள்ள முடியாதவை. அவற்றுக்குப் பின்னால் செல்லாமல் அவற்றை அப்படியே நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. கிருஸ்தவர்கள் அவற்றுக்குப் பின்னால் சென்றார்கள். அவற்றுக்கு அவர்கள் விரும்பும் வேறு விளக்கம் அளித்தார்கள். அவர் குறித்த வந்துள்ள தெளிவான, உறுதியான, எந்த சந்தேகத்திற்கும் இடமற்ற வாசகங்களை விட்டுவிட்டார்கள். ஆகவே அவர்கள் வழிதவறிச் சென்றார்கள். இதுதான் அவர்கள் வழிதவறிச் சென்ற புள்ளி. இதுதான் நம் அதிகம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய இடம்.
அறிவுமுதிர்ச்சி கொண்டவர்கள் தேவையற்ற விசயங்களில் தலையிட மாட்டார்கள். தங்களால் புரிந்துகொள்ள முடியாத விசயங்களுக்குப் பின்னால் ஓடி தங்களின் ஆற்றலை வீணடிக்க மாட்டார்கள். அவை குறித்து அல்லாஹ் கூறியவற்றை உறுதியாக நம்புவார்கள். அவர்கள் தங்களுடைய அறிவின், ஆற்றலின் எல்லையை உணர்ந்திருப்பார்கள். அவர்கள் வழிதவறிச் சென்றுவிடக்கூடாது என்ற விழிப்பும் அச்சமும் கொண்டிருப்பார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்களிடமிருந்து பின்வரும் பிரார்த்தனை வெளிப்பட்டுக் கொண்டேயிருக்கும்: “எங்கள் இறைவனே! நீ எங்களை நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் உள்ளங்களைத் தடுமாறச் செய்துவிடாதே. எங்களுக்கு உன்னிடமிருந்து அருளை வழங்குவாயாக. நிச்சயமாக நீயே பெரும் கொடையாளியாவாய். எங்கள் இறைவனே! நீ மனிதர்கள் அனைவரையும் ஒருநாள் ஒன்றுதிரட்டுபவனாக இருக்கின்றாய். அந்நாள் வருவதில் எந்த சந்தேகமும் இல்லை. நிச்சயமாக அல்லாஹ் வாக்குறுதிக்கு மாறாகச் செயல்பட மாட்டான்.”
