மனிதர்கள் ஏன் அலட்சியமாக இருக்கிறார்கள்? அல்லாஹ்வைப் பற்றிய பிழையான கண்ணோட்டத்திலிருந்தே அவர்களின் அலட்சியம் உருவாகிறது. அவர்கள் அல்லாஹ்வை மனிதர்களைப் போன்ற பண்புகளைக் கொண்ட போலியான கடவுள்களைப் போன்றவன்தான் என்று எண்ணிக் கொள்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வைக் குறித்து சரியான முறையில் அறிந்து கொண்டால் அவனுடைய கட்டளைகளை தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்த தயங்க மாட்டார்கள். அவர்களிடமிருந்து நன்றிகெட்டத்தனம் வெளிப்படாது.
ஆயத்துல் குர்ஸீ என்றழைக்கப்படும் இந்த வசனம் அல்லாஹ்வின் பண்புகளை உள்ளபடியே தெளிவுபடுத்துகிறது. அல்லாஹ்வை அறிமுகப்படுத்தும், அவனுடைய மகத்துவத்தை மனித உள்ளத்தில் பதிய வைக்கும் மகத்தான வசனம் இது.
اللهُ لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ لَهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ مَنْ ذَا الَّذِي يَشْفَعُ عِنْدَهُ إِلَّا بِإِذْنِهِ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ
2:255. “அல்லாஹ், அவனைத்தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் நித்திய ஜீவன்; அனைத்தையும் நிலைநிறுத்துபவன். சிறு தூக்கமோ உறக்கமோ அவனைப் பீடிக்காது. வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் அவனுக்கே உரியன. அவனது அனுமதியின்றி அவனிடம் யார்தான் பரிந்துரை செய்ய முடியும்? அவர்களுக்கு முன்னால் இருப்பவற்றையும் பின்னால் இருப்பவற்றையும் அவன் அறிவான். அவன் நாடினாலன்றி அவனது அறிவிலிருந்து யாரும் எதையும் அறிந்துகொள்ள முடியாது. அவனது அதிகாரம் வானங்களையும் பூமியையும் தழுவி இருக்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வடையச் செய்வதில்லை. அவனே மிக உயர்ந்தவனாகவும் மகத்துவமிக்கவனாகவும் இருக்கின்றான்.”
பத்து தனித்தனியான வாசகங்களைக் கொண்டிருக்கும் இந்த வசனத்தின் கட்டமைப்பும் ஒவ்வொரு வாசகமும் அடுத்த வாசகத்தோடு கொண்டிருக்கும் இணைப்பும் அற்புதமானது. ஒவ்வொரு வாசகமும் அல்லாஹ்வை கச்சிதமான முறையில் அறிமுகப்படுத்துகிறது.
அவன்தான் அல்லாஹ். அவனே வணக்கத்திற்குரிய ஒரே இறைவன். மனிதர்கள் அவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனுக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவனிடம் மட்டுமே தங்களின் பிரார்த்தனைகளை முன்வைக்க வேண்டும். இக்கட்டான சூழல்களில் அவனிடம் மட்டுமே அடைக்கலம் தேட வேண்டும். அவனிடம் மட்டுமே அவர்கள் நம்பிக்கை வைக்க வேண்டும். இந்த வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள ‘இலாஹ்’ என்ற வார்த்தை இந்தப் பொருள்கள் அனைத்தையும் உள்ளடக்கி விடுகிறது. இலாஹ் என்ற வார்த்தையிலிருந்தே அல்லாஹ் என்ற வார்த்தையும் உருவாகி இருக்கிறது. அது செறிவான பொருளை உள்ளடக்கிய அவனுடைய தனித்துவமான பெயர்களில் ஒன்றாகும். அல்லாஹ் அவனுக்கு மட்டுமே உரித்தான பெயர்.
அவன் உயிருள்ளவன். அவனுடைய வாழ்க்கை தொடக்கமோ முடிவோ அற்றது. அது மரணமோ தூக்கமோ களைப்போ இன்னபிற பலவீனங்களோ அற்றது. படைப்பினங்களின் வாழ்க்கையைப் போன்றது அல்ல அவனது வாழ்க்கை. அது முழுமையான, யாருடனும் ஒப்பிட முடியாத நிரந்தரமான வாழ்க்கை. அவனே நிரந்தரமானவன். அவனைத் தவிர அனைத்தும் அழியக்கூடியவையே.
அவனைக் கொண்டே அனைத்தும் நிலைபெறுகின்றன. அவன் யாருடைய தேவையும் அற்றவன். படைப்புகள் அனைத்தும் அவன் பக்கம் தேவையுடையவையாக இருக்கின்றன. அவனே படைப்புகள் அனைத்தையும் படைத்த படைப்பாளன். அவனே படைப்புகளை பராமரித்துக் கொண்டும் பாதுகாத்துக் கொண்டும் இருக்கிறான். படைப்புகள் ஒரு நொடிகூட அவனுடைய பராமரிப்பிலிருந்தும் பாதுகாப்பிலிருந்தும் கட்டுப்பாட்டிலிருந்தும் விலகியிருக்க முடியாது.
சொக்கி விழ வைக்கக்கூடிய சிறு தூக்கமோ ஆழமான பெரும் தூக்கமோ அவனைப் பீடிக்காது. தூக்கம் மனிதப் பலவீனங்களில் ஒன்று. களைப்படையக்கூடிய மனிதனுக்கு தூக்கம் அவசியம். அவன் அவனை மீறி தூங்கி விடுகிறான். தூக்கம் அவனுக்கான இளைப்பாறல். தூங்கிய பிறகு அவன் புத்துணர்ச்சியோடு மீண்டும் எழுகிறான். இந்த உலகிலுள்ள அனைத்தையும் பராமரித்துக் கொண்டும் பாதுகாத்துக் கொண்டும் இருக்கும் அல்லாஹ்வுக்கு சிறு தூக்கமோ பெரும் தூக்கமோ தேவையில்லை. தூங்குபவன் இறைவனாக இருக்க முடியாது.
வானங்களிலும் பூமியிலும் உள்ளவை அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் உள்ளன. அனைத்தும் அவனுடைய படைப்புகள்தாம். அவற்றில் அவனுடைய கட்டுப்பாட்டை மீறி எதுவும் இல்லை. அனைத்தும் அவன் அமைத்த விதிகளுக்குக் கட்டுப்பட்டே இயங்குகின்றன. அவனைத் தவிர யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை.
அனைத்தும் அவனுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது எனில் அவனைத் தவிர யாருக்கும் எந்த அதிகாரமும் இல்லை எனில் அவனுடைய முன்னால் யார் பரிந்து பேச முடியும்? அவனுடைய அனுமதியின்றி அவனிடம் யார்தான் பேச முடியும்? இந்த வாசகம் இணைவைப்பாளர்களின் பொய்யான நம்பிக்கைகள் அனைத்தையும் தகர்த்து விடுகிறது. அவர்கள் ஏற்படுத்திய பொய்யான தெய்வங்களுக்கு அதிகாரம் இருக்கிறது என்றும் அவை அவர்களுக்காக அல்லாஹ்விடம் பரிந்து பேசும் என்றும் அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் இணைவைப்புக் கொள்கைக்குப் பின்னால் இருக்கும் காரணம் இதுதான். அவன் யாருக்கு அனுமதி அளிக்கிறானோ அவர்தான் அவனிடம் பேச முடியும். அவன் யாருக்காக அனுமதி அளிக்கிறான்னோ அவருக்காக மட்டுமே அவர் பேச முடியும். அவர் சரியானதை மட்டுமே அவனிடம் பேச முடியும். இந்த வாசகம் இணைவைப்பின் வாசலை முழுமையாக அடைத்து விடுகிறது.
அவனுடைய அறிவு முழுமையானது. அவன் அவர்களைக் குறித்து, வானங்களிலும் பூமியிலும் உள்ள படைப்புகள் அனைத்தையும் குறித்து முழுமையாக அறிவான். அவர்களின் இறந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் என அனைத்தையும் அவன் அறிவான். அவனுடைய அறிவு அனைத்தையும் வியாபித்துள்ளது. அவனுக்குத் தெரியாமல் வானங்களிலோ பூமியிலோ எதுவும் இல்லை. வெளிப்படையானவற்றையும் மறைவானவற்றையும் அவன் அறிவான். மனிதர்களின் அறிவு எல்லைக்குட்பட்டது. அவர்களால் மறைவானவற்றை அறிந்துகொள்ள முடியாது. அவன் அவர்களுக்கு எதை இலகுபடுத்தி இருக்கின்றானோ, எதை கற்றுக் கொடுத்திருக்கின்றானோ அவற்றைத் தவிர அவர்களால் எதையும் அறிந்துகொள்ள முடியாது. அவன் மனிதர்கள் எவற்றை எல்லாம் அறிந்துகொள்ள வேண்டும் என்று நாடுகிறானோ அவற்றை மட்டுமே அவர்களால் அறிந்துகொள்ள முடியும். மனிதர்களின் அறிவு முழுக்க முழுக்க அவனுடைய நாட்டத்திற்கு உட்பட்டது.
அவனுடைய அதிகாரம் வானங்களையும் பூமியையும் தழுவி நிற்கின்றது. அவனுடைய அதிகாரத்திற்கு உட்படாத எந்தப் பகுதியும் எந்தப் படைப்பும் அவற்றில் இல்லை. அவன் தனக்கு இணையாக யாரையும் ஏற்படுத்தவில்லை. அவன் மனிதர்கள் ஏற்படுத்துவதைப் போன்று அதிகாரப் பகிர்வுகள் செய்து எந்தப் பகுதியையும் நிர்வகிக்கவில்லை. அவற்றைப் பராமரிப்பதனால், பாதுகாப்பதனால் அவனுக்கு எந்தக் களைப்பும் ஏற்படுவதும் இல்லை. களைப்படைவது மனிதப் பலவீனம். எல்லைகளை அமைத்துக் கொண்டு நிர்வகிப்பது மனிதப் பலவீனம். அவன் மிக உயர்ந்தவன். நம்முடைய குறைபாடுடைய அளவீடுகளைக் கொண்டு அவனை மதிப்பிட முடியாது. அவனைக் குறித்து அவன் என்ன கூறியிருக்கின்றானோ அதுவே சரியானது. அவன் மகத்துவம் மிக்கவன். உயர்வும் கண்ணியமும் அவனுக்கு மட்டுமே உரியவை.
لَا إِكْرَاهَ فِي الدِّينِ قَدْ تَبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ فَمَنْ يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِنْ بِاللهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انْفِصَامَ لَهَا وَاللهُ سَمِيعٌ عَلِيمٌ اللهُ وَلِيُّ الَّذِينَ آمَنُوا يُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَالَّذِينَ كَفَرُوا أَوْلِيَاؤُهُمُ الطَّاغُوتُ يُخْرِجُونَهُمْ مِنَ النُّورِ إِلَى الظُّلُمَاتِ أُولَئِكَ أَصْحَابُ النَّارِ هُمْ فِيهَا خَالِدُونَ.
2:256,257 “மார்க்கத்தில் எவ்வித நிர்ப்பந்தமும் இல்லை. தவறான வழியிலிருந்து நேர்வழி தெளிவாகிவிட்டது. ஆகவே யார் தாகூத்தை நிராகரித்து அல்லாஹ்வை நம்புகிறாரோ அவர் அறுபடாத உறுதியான கயிற்றைப் பற்றிக் கொண்டவர் ஆவார். அல்லாஹ் செவியேற்பவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அல்லாஹ்வே நம்பிக்கையாளர்களின் பொறுப்பாளனாக இருக்கின்றான். அவன் அவர்களை இருள்களிலிருந்து வெளியேற்றி ஒளியின் பக்கம் கொண்டு வருகிறான். நிராகரிப்பாளர்களுக்கு ஷைத்தான்களே பொறுப்பாளர்களாவர். அவர்கள் இவர்களை ஒளியிலிருந்து வெளியேற்றி இருள்களின் பக்கம் கொண்டு செல்கிறார்கள். அவர்கள்தாம் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.”
தாகூத் என்ற வார்த்தை வரம்பு மீறுபவனைக் குறிக்கும். அது அல்லாஹ்வுக்கு கட்டுப்படாத, அவன் விதித்த வரம்புகளை மீறக்கூடிய, அவனுடைய அடியார்களை அவனுக்குக் கட்டுப்பட விடாமல் வழிகெடுக்கக்கூடிய ஒவ்வொருவரையும் குறிக்கும். அது அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் அத்தனையையும் குறிக்கும்.
மார்க்கம் தெளிவாகி விட்டது. அல்லாஹ்வின் பக்கம் செல்லக்கூடிய சரியான பாதை எது, அவனைவிட்டு திருப்பக்கூடிய தவறான பாதைகள் எவை என்பவை இந்த தூதுத்துவத்தின்மூலம், இந்தக் குர்ஆனின்மூலம் சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவுபடுத்தப்பட்டு விட்டன. இந்த மார்க்கம் மனமுவந்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது. அது உள்ளங்களை பண்படுத்தக்கூடியது. அது உள்ளங்களில் ஆதிக்கம் செலுத்தக்கூடியது. அது வலுக்கட்டாயமாக திணிக்கப்படக்கூடியது அல்ல. வலுக்கட்டாயமாக திணிக்கப்படும் எந்தவொன்றும் உள்ளங்களில் ஆதிக்கம் செலுத்த முடியாது.
இந்த மார்க்கமே அல்லாஹ்வை அடைவதற்கான, அவனுடைய திருப்தியைப் பெறுவதற்கான ஒரே வழி. யார் இந்த உலகிலும் மறுவுலகிலும் வெற்றியை விரும்புகிறார்களோ அவர்களுக்கு இந்த மார்க்கத்தைத் தவிர வேறு மார்க்கம் இல்லை. யார் மற்ற அனைத்து வழிகளையும் நிராகரித்து அல்லாஹ்வின் பக்கம் செல்லும் இந்த வழியை பற்றிக் கொள்கிறார்களோ அவர்கள் என்றும் அறுபடாத உறுதியான கயிற்றைப் பற்றிக் கொண்டார்கள். இந்த உலகில் அவனைத் தவிர வேறு எங்கும் அடைக்கலம் இல்லை. அவன் பக்கம் திரும்பியவர்கள் நிச்சயம் அடைக்கலம் பெற்றுக் கொள்வார்கள். அவர்கள் ஒருபோதும் கைவிடப்பட மாட்டார்கள்.
ஷைத்தான்கள் நாலா புறமும் வலைவீசி காத்திருக்கிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் செல்ல விடாமல் மனிதர்களை திசை திருப்புகிறார்கள். அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட விடாமல், அவனுடைய மார்க்கத்தைப் பின்பற்ற விடாமல் தடுக்கும் ஒவ்வொருவரும் தாகூத்துகள்தாம். அவர்கள் அடையாளம் காணப்பட்டு முற்றிலுமாக நிராகரிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களை நிராகரித்து அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் திரும்பியவர்களே எல்லாவிதமான வழிகேடுகளிலிருந்தும் ஆபத்துகளிலிருந்தும் தப்பியவர்கள். அவன் அடியார்களின் பேச்சுகளை செவியேற்பவனாகவும் அவர்களைக் குறித்து நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.
அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் பாதுகாவலனாக இருக்கின்றான். அவன் அவர்களை வழிகெட விட்டுவிடுவதில்லை. இந்த உலகில் அல்லாஹ்வின் மார்க்கம் தவிர்த்து மனிதர்கள் தங்களுக்காக உருவாக்கிக் கொண்ட கொள்கைகள், இசங்கள், மதங்கள் அனைத்தும் இருள்கள்தாம். அவை ஒன்றன் மீது ஒன்றாக படிந்து காரிருளாக இருக்கின்றன. அவற்றைக் கொண்டு மனிதர்களால் நேர்வழியடைய முடியாது. விழியிழந்தவர்கள் எப்படி வழிகாட்டிகளாக இருக்க முடியும்? இருள்கள் மனிதர்களை மேலும் மேலும் காரிருளுக்குள் தள்ளி விடுகின்றன. அல்லாஹ் நம்பிக்கையாளர்களைப் பாதுகாக்கிறான். அவன் அவர்களை இருள்களிலிருந்து விடுவித்து தன் மார்க்கம் என்னும் ஒளியைக் கொண்டு வழிகாட்டுகிறான். அவர்கள் அந்த ஒளியைக் கொண்டு அவன் பக்கம் செல்லக்கூடிய நேரான வழியை அறிந்து கொள்கிறார்கள். அவன் அவர்களுக்குப் பொறுப்பாளன். அவனே அவர்களின் பாதுகாவலன்.
நிராகரிப்பாளர்களுக்கு தாகூத்துகளே, ஷைத்தான்களே தோழர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்த நிராகரிப்பாளர்களை நேரான வழியின் பக்கம் செல்ல விடாமல் தடுக்கிறார்கள். அவர்கள் இஸ்லாம் என்னும் வெளிச்சத்தை அடைந்துவிட முடியாத வகையில் மேலும் மேலும் இருள்களுக்குள் ஓட்டிச் செல்லப்படுகிறார்கள். ஓர் இருளிலிருந்து விடுபட்டு இன்னொரு இருளில் அவர்கள் சிக்கிக் கொள்கிறார்கள். பாதை எது, பயணம் எது, இலக்கு என்ன என எதுவும் அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களே நரகவாசிகள். அந்த நரகத்தில் அவர்கள் நிரந்தரமாக வீழ்ந்து கிடப்பார்கள்.
