இஸ்லாம் மட்டுமே ஒரே வழி

You are currently viewing இஸ்லாம் மட்டுமே ஒரே வழி

தக்வா உடையவர்களுக்காக காத்திருக்கும் நிலையான இன்பங்களும் அவர்களின் பண்புகளும் தெளிவுபடுத்தப்பட்ட பிறகு அதன் அடித்தளமான தவ்ஹீதும் அந்த தவ்ஹீதை இஸ்லாம் மட்டுமே உள்ளடக்கி இருக்கிறது என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. அத்தியாயத்தின் ஆரம்பத்தில் இடம்பெற்ற அதே பாணியைத்தான் இந்த வசனமும் கொண்டிருக்கிறது. ஆனாலும் இந்த வசனம் அல்லாஹ்வின் சாட்சியத்தையும் அவன் நீதியை நிலைநிறுத்தக்கூடியவன் என்பதையும் கூடுதலாக உள்ளடக்கி உள்ளது.     

شَهِدَ اللَّهُ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا هُوَ وَالْمَلَائِكَةُ وَأُولُو الْعِلْمِ قَائِمًا بِالْقِسْطِ لَا إِلَهَ إِلَّا هُوَ الْعَزِيزُ الْحَكِيمُ            

3:18. “அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை; அவன் நீதியை நிலைநிறுத்தக்கூடியவன்” என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவ்வாறே வானவர்களும் அறிஞர்களும் சாட்சி கூறுகிறார்கள். அவனைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான்.”

எல்லாவற்றையும் படைத்த, எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அல்லாஹ் அளிக்கும் சாட்சியம் இது. அவன் நமக்கு அளிக்கும் செய்திதான் அவனது சாட்சியமாகும். அவன் இந்தக் குர்ஆனின் வழியாக நமக்கு இந்த சாட்சியத்தை முன்வைக்கிறான். இந்த விசயத்தில் அவனது சாட்சியத்தைவிட வலுவான சாட்சி வேறு என்ன இருக்க முடியும்? அவனது அறிவு எல்லாவற்றையும் தழுவியது. அவனது ஆற்றல் எல்லாவற்றையும் மிகைத்தது. அவன் அறிவதுபோன்று யாரும் அறிய முடியாது. அவனுடைய ஆற்றலை யாரும் மிகைக்க முடியாது. அவனே படைப்பாளன். அவனைத் தவிர அத்தனையும் அவனுடைய படைப்புகளே. அவன் கூறுவது மட்டுமே உண்மை.

அவனது சாட்சியம் என்பதற்கு வேறொரு பொருளையும் குர்ஆன் விரிவுரையாளர்கள் முன்வைக்கிறார்கள். அவன் படைத்துள்ள பிரபஞ்சமும் அதிலுள்ள ஒவ்வொன்றும் அவன் ஒருவனே இங்குள்ள எல்லாவற்றையும் படைத்துப் பராமரித்துக் கொண்டிருக்கிறான் என்பதை மௌன மொழியில் அறிவித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் அது. மனிதனுக்குள்ளும் தவ்ஹீதுக்கான சான்றுகள் இருக்கின்றன. அவனுடைய உள்ளம் தவ்ஹீதைக் கொண்டே அமைதியடைகிறது. அவனுடைய உள்ளம் இயல்பிலேயே தவ்ஹீதை அறிந்துகொள்கிறது. அது தவ்ஹீதுக்கு மாறானதை விசித்திரமான ஒன்றாக, மூட நம்பிக்கையாகக் காண்கிறது.

அடுத்தது வானவர்களின் சாட்சியம். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கட்டளையின்படி இந்தப் பிரபஞ்சத்தை நிர்வகிக்கிறார்கள். அவனுடைய தூதர்களுக்கு அவனுடைய செய்தியை கொண்டு சேர்க்கிறார்கள். அறிவீனர்கள் வானவர்களை அவனுக்கு இணையானவர்களாக, அவனுடைய பெண்மக்களாக, அவனிடம் பரிந்து பேசுபவர்களாக ஆக்கியிருந்தார்கள். ஆகவே இங்கு அவர்களின் சாட்சியம் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.

அடுத்தது அறிஞர்களின் சாட்சியம். உண்மையைத் தேடக்கூடிய ஒவ்வொரு அறிஞரும் இங்கு அல்லாஹ் ஒருவனை படைத்துப் பராமரிக்கும் இறைவன் என்பதையும் அவன் நீதியுடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான் என்பதையும் அவனிடமிருந்து எந்த அநீதியும் வெளிப்படுவதில்லை என்பதையும் அறிந்து கொள்கிறார்கள். அவர்கள் அதற்கு சாட்சியும் கூறுகிறார்கள். அறிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவரும் பகலின் வெளிச்சத்தைப் போல தெளிவான இந்த உண்மையை அறிந்து கொள்ளலாம். இது தொடர்பாக மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறும் கருத்து கவனிக்கத்தக்கது. அவன் கூறுகிறார்: “இங்கு அறிவு என்பது இறைத்தூதர்களின் வழியாக மனித சமூகத்திற்குக் கிடைத்த அறிவையே குறிக்கிறது. இங்கு அறிஞர்கள் என்பவர்கள் இறைத்தூதர்களின் போதனைகளைக் கொண்டு மனிதர்களை அல்லாஹ்வின் பக்கம் அழைக்கும், சமூகத்தில் மறுமலர்ச்சி ஏற்படுத்தும் அழைப்பாளர்களை, அறிஞர்களையே குறிக்கும். அவர்கள் இந்த மார்க்கத்தில் புகுந்துவிட்ட எல்லாவிதமான இடைச்செருகல்களையும் அகற்றுகிறார்கள். அடுத்து வரக்கூடிய வசனம் இவர்களைக் குறித்தே ‘நீதியைக் கொண்டு ஏவக்கூடியவர்கள்’ என்று குறிப்பிடுகிறது.” 

இங்கு சாட்சியத்தில் இடம்பெற்றுள்ள ‘அவன் நீதியை நிலைநிறுத்தக்கூடியவன்’ என்ற வாசகம் கவனிக்கத்தக்கது. இந்தப் பிரபஞ்சத்தின் ஒவ்வொரு இயக்கத்திலும் நீதியே செயல்படுகிறது. இங்கு அவன் அமைத்த விதிகள் கச்சிதமாக செயல்படுகின்றன. இங்கு எந்த வகையான அநீதியும் தற்செயலும் இல்லை. அவன் பிரபஞ்சத்தில் நீதியை அமைத்ததுபோன்றே மனித வாழ்க்கையிலும் நீதியை அமைத்துள்ளான். மனித வாழ்க்கையில் அவன் அமைத்த நியதிகள் கச்சிதமாகச் செயல்படுகின்றன. மனித வாழ்க்கையில் நீதியை நிலைநிறுத்தும்பொருட்டே அவன் இஸ்லாம் என்ற வழிகாட்டலை தூதர்களின் வழியாக வழங்கியுள்ளான்.

இங்கு அவன் அமைத்த நீதியை, சமநிலையை யாரும் சிதைக்க முடியாது. அவன் பேராற்றல்மிக்கவன். அவன் அவகாசம் வழங்குகிறான். அது அவனுடைய ஞானத்தின், மதிநுட்பத்தின் வெளிப்பாடு. யாருக்கு அவகாசம் வழங்க வேண்டும்? எந்த அளவு வழங்க வேண்டும் என்பதை அவன் மட்டுமே அறிவான்.        

إِنَّ الدِّينَ عِنْدَ اللهِ الْإِسْلَامُ وَمَا اخْتَلَفَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ إِلَّا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَمَنْ يَكْفُرْ بِآيَاتِ اللهِ فَإِنَّ اللهَ سَرِيعُ الْحِسَابِ فَإِنْ حَاجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِيَ لِلَّهِ وَمَنِ اتَّبَعَنِ وَقُلْ لِلَّذِينَ أُوتُوا الْكِتَابَ وَالْأُمِّيِّينَ أَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْكَ الْبَلَاغُ وَاللهُ بَصِيرٌ بِالْعِبَادِ

3:19,20. “அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம் மட்டுமேயாகும். வேதம் வழங்கப்பட்டவர்கள் தெளிவான அறிவு வந்த பின்னரும் தங்களிடையேயுள்ள பொறாமையினால்தான் முரண்பட்டார்கள். அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்கள் அறிந்துகொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் விரைவானவன். தூதரே! அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் நீர் கூறிவிடும்: “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து விட்டோம்.” வேதம் வழங்கப்பட்டவர்களிடமும் உம்மீகளிடமும், “நீங்களும் இவ்வாறு கீழ்ப்படிகின்றீர்களா?” என்று கேளும். அவர்கள் கீழ்ப்படிந்துவிட்டால் நேர்வழியடைந்துவிட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் எடுத்துரைப்பதே உம் மீதுள்ள பொறுப்பாகும். அல்லாஹ் தன் அடியார்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.”

இங்கு இஸ்லாம் என்பது தூதர்கள் வழியாக அல்லாஹ் மனித சமூகத்திற்கு வழங்கிய முழுமையான, தூய வழிகாட்டலையே குறிக்கிறது. மனிதர்கள் அதில் தங்களின் கருத்துகளை, பிழையான நம்பிக்கைகளை இணைத்து அதனை களங்கப்படுத்தி விடுகிறார்கள். அல்லாஹ் தொடர்ந்து தூதர்களை அனுப்பி அந்த இடைச்செருகல்களை நீக்கிக் கொண்டேயிருந்தான். அதன் இறுதியான, தூய்மையான, அசலான வடிவம் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்டதேயாகும். இந்த வசனத்தில் ‘தெளிவான அறிவு’ என்ற வார்த்தை வஹியின் வழியாக வழங்கப்பட்ட வழிகாட்டல்களையே குறிக்கிறது.

அல்லாஹ் நீதியை நிலைநிறுத்தக்கூடியவன் என்பதன் வெளிப்பாடுதான், மனித சமூகத்திற்கு அவன் வழங்கியுள்ள இஸ்லாம் என்ற முழுமையான இந்த வழிகாட்டல். அவன் மனிதர்களைப் படைத்து எவ்வித வழிகாட்டலும் இன்றி அப்படியே விட்டுவிடவில்லை. அவன் தந்துள்ள வழிகாட்டலைக் கொண்டே அவனுடைய திருப்தியைப் பெற முடியும். அவனை அடைவதற்கு பல்வேறு பாதைகள் இல்லை. அவனை அடைவதற்கு அவன் அருளிய இஸ்லாம் என்ற பாதை மட்டுமே இருக்கிறது. இதுதான் அவனை அடைவதற்கான நேரான ஒரே பாதை. மற்றவை அனைத்தும் அவனைவிட்டு மனிதர்களைத் தடுக்கும் தவறான பாதைகள். எங்களுக்கு எங்களிடம் இருக்கும் வேதம் போதுமானது, எங்களுக்கு எங்களிடம் இருக்கும் வழிகாட்டல் போதுமானது என்று கூறிக் கொண்டிருக்கும் யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் அவர்களைப் போன்ற அனைவருக்கும் இந்த வசனம் தெளிவான பதிலை உள்ளடக்கி இருக்கிறது.

வேதம் வழங்கப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் ஏன் முரண்பட்டார்கள்? அவர்கள் அறியாமையினால் முரண்பட்டார்களா? இல்லை, அல்லாஹ்விடமிருந்து அவர்களுக்குத் தேவையான தெளிவான அறிவு வந்த பின்னரே அவர்கள் முரண்பட்டார்கள். அறியாமையினால், போதிய தெளிவு கிடைக்காததனால் அவர்கள் முரண்படவில்லை. அவர்களுக்கு மத்தியில் இருந்த பொறாமையும், காழ்ப்பும்தான் அவர்கள் முரண்பட்டதற்கான அசலான காரணங்கள். அவர்கள் வேதத்தின் வசனங்களுக்கேற்ப தங்களை மாற்றிக் கொள்ளவில்லை. தங்கள் விருப்பங்களுக்கேற்ப வேத வசனங்களை திரித்தார்கள். யார் பொறாமையினால், கர்வத்தினால் இன்ன பிற காரணங்களினால் அல்லாஹ்வின் சான்றுகளை, அவனுடைய வசனங்களை அறிந்து கொண்டே நிராகரிக்கிறார்களோ அவர்கள் எச்சரிக்கையாக இருக்கட்டும், அல்லாஹ் கணக்கு தீர்ப்பதில் விரைவானவன். எந்தச் சமயத்திலும் அவர்கள் அவனுடைய தண்டனை எதிர்பார்த்திருக்கட்டும். அவர்கள் தங்கள் நிராகரிப்புக்கான தண்டனை நிச்சயம் பெற்றே தீருவார்கள்.

தூதரே! இந்த உண்மையை அறிந்துகொண்ட பின்னரும் அவர்கள் உங்களிடம் தர்க்கம் செய்தால் நீங்கள் அவர்களுடன் தர்க்கம் செய்யாதீர்கள். அவர்களிடம் தெளிவாகக் கூறிவிடுங்கள்: “நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்து விட்டோம். நீங்களும் அவ்வாறு கீழ்ப்படியுங்கள். அவ்வாறு நீங்கள் கீழ்ப்படிந்தால் நீங்கள் நேரான வழியை அடைந்து விட்டீர்கள்.” இந்த மார்க்கம் குறிப்பிட்ட இனத்தாருக்கு, குறிப்பிட்ட சமூகத்தாருக்கு மட்டும் உரிய மார்க்கம் அல்ல. அது அனைவருக்கும் உரியது. யார் அல்லாஹ்வுக்கு முழுமையாகக் கட்டுப்படுகிறார்களோ, அவன் அளித்த மார்க்கமான இஸ்லாத்தில் நுழைந்து விடுகிறார்களோ அவர்கள் அவன் பக்கம் செல்லக்கூடிய நேரான வழியை அடைந்தவர்கள் ஆவர்.

உங்களின் பணி என்ன? தெளிவான முறையில் எடுத்துரைப்பதே உங்களின் பணி. அவர்கள் ஏற்றுக் கொண்டால் அவர்களுக்குத்தான் நல்லது. அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அதனால் அவர்களுக்குத்தான் இழப்பு. அதனால் உங்களுக்கு எந்த இழப்பும் இல்லை. அல்லாஹ் அடியார்களின் செயல்பாடுகளை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.     

إِنَّ الَّذِينَ يَكْفُرُونَ بِآيَاتِ اللهِ وَيَقْتُلُونَ النَّبِيِّينَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ الَّذِينَ يَأْمُرُونَ بِالْقِسْطِ مِنَ النَّاسِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ أُولَئِكَ الَّذِينَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ

3:21,22. “யார் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்து தூதர்களை அநியாயமாகக் கொலை செய்கிறார்களோ, நீதியின் பக்கம் அழைக்கின்றவர்களையும் கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு வதைக்கும் வேதனையுண்டு என்னும் நற்செய்தியைக் கூறிவிடுவீராக. அவர்களின் செயல்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வீணாகிவிட்டன. அவர்களுக்கு உதவிபுரிவோர் யாருமில்லை.”

இந்த வசனம் யூதர்களையும் அவர்களைப் போன்றவர்களையும் விளித்து உரையாடுகிறது. பொறாமையாலும் கர்வத்தினாலும் வழிநடத்தப்படுகின்ற மனிதர்களின் செயல்பாடுகள் இவை. அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரிக்கிறார்கள். அந்த சான்றுகளை முன்வைக்கும் இறைத்தூதர்களை கொலை செய்கிறார்கள். அந்த தூதர்களின் வழிநின்று சீர்திருத்தம் செய்யும் அழைப்பாளர்களையும் அவர்கள் கொலை செய்கிறார்கள். யூதர்களை இறைத்தூதர்களைக் கொன்றவர்களையும் அவர்களின் வழிநின்று மக்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்தவர்களையும் கொன்றவர்கள். யூத வரலாறு இதற்குச் சான்று. நபியவர்களையும் அவர்கள் கொலை செய்ய முயன்றார்கள். ஒரு மனிதரை அநியாயமாகக் கொலை செய்வது பெரும் குற்றம். அதுவும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களைக் கொலை செய்வது மிகப் பெரிய குற்றம். அப்படிப்பட்டவர்கள் மனிதகுல விரோதிகள். அவர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் வேதனைமிக்க தண்டனை காத்திருக்கிறது.

நற்செயல்கள் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருக்கும் செயல்பாடுகள்கூட அவர்களுக்கு எந்தப் பயனையும் அளிக்காது. அவற்றைக் கொண்டு அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள். நற்செயல்கள் அவர்களின் உள்ளத்தை தூய்மைப்படுத்தியிருக்க வேண்டும். அப்படிப்பட்டவைதான் அவர்களுக்குப் பயனளிக்கும். ஆனால் அவர்கள் பெரும் பாவங்களைக் கொண்டு தங்களை களங்கப்படுத்திக் கொண்டார்கள். அவை அவர்களின் உள்ளங்களை நாசப்படுத்தி விட்டன. அவர்கள் அல்லாஹ்வின் சான்றுகளை நிராகரித்து விட்டு அற்பமான செயல்களைக் கொண்டு திருப்தியடைந்து கொண்டார்கள். வேர்களை அறுத்து எறிந்து விட்டு கிளைகளுக்கு நீருற்றினால் அவர்களுக்கு ஏதேனும் நன்மை விளையுமா என்ன? இந்த மார்க்கத்தின் அடித்தளங்களை தகர்த்து விட்டு அதனுடைய சில சடங்குகளை பற்றிக் கொண்டிருப்பவர்கள் கவனம் செலுத்த வேண்டிய விசயம் இது. அவர்களின் செயல்பாடு கிட்டத்தட்ட யூதர்களின் செயல்பாடுகளைப் போன்றவைதாம். 

أَلَمْ تَرَ إِلَى الَّذِينَ أُوتُوا نَصِيبًا مِنَ الْكِتَابِ يُدْعَوْنَ إِلَى كِتَابِ اللهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ ثُمَّ يَتَوَلَّى فَرِيقٌ مِنْهُمْ   وَهُمْ مُعْرِضُونَ ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَنْ تَمَسَّنَا النَّارُ إِلَّا أَيَّامًا مَعْدُودَاتٍ وَغَرَّهُمْ فِي دِينِهِمْ مَا كَانُوا يَفْتَرُونَ فَكَيْفَ إِذَا جَمَعْنَاهُمْ لِيَوْمٍ لَا رَيْبَ فِيهِ وَوُفِّيَتْ كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ 

 3:23-25. “வேதத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டோரை நீர் பார்க்கவில்லையா? அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பிறகு அவர்களில் ஒரு பிரிவினர் புறக்கணித்தவர்களாக விலகிச் செல்கிறார்கள். இதற்குக் காரணம், “குறிப்பிட்ட சில நாட்களைத் தவிர நரக நெருப்பு எங்களைத் தீண்டாது” என்று அவர்கள் கூறி வந்ததேயாகும். அவர்கள் புனைந்து கொண்டிருந்தவை அவர்களின் மார்க்க விவகாரத்தில் அவர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட்டன. சந்தேகமின்றி நிச்சயமாக வரக்கூடிய ஒருநாளில் நாம் அவர்களை ஒன்றுசேர்க்கும்போது அவர்களின் நிலை என்னவாகும்? அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் செயலுக்கான கூலி முழுமையாக வழங்கப்படும். அவர்களுக்கு எந்த அநீதியும் இழைக்கப்பட மாட்டாது.”

இந்த வசனங்களும் யூதர்களைக் குறித்தே பேசுகின்றன. அவர்கள் வேதத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டவர்கள். யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் இருந்தவை வேதத்தின் ஒரு பகுதிதான். முழுமையான வேதம் முஹம்மது நபியவர்கள் வழியாக மனித சமூகத்திற்கு வழங்கப்பட்டதேயாகும். வேதத்தின் ஒரு பகுதி வழங்கப்பட்டவர்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் அதன் வழியாக, அதில் கூறப்பட்டுள்ள முன்னறிவிப்புகள் வழியாக முழுமையான, இறுதியான வேதத்தை அறிந்து கொள்ள வேண்டும். அவர்கள்தாம் இந்த வேதத்தை உண்மைப்படுத்துபவர்களில் முதலாமவர்களாக இருக்க வேண்டும். மற்ற மக்களைவைட இந்த வேதத்தை அறிந்துகொள்வது அவர்களுக்கு மிக எளிதானது. ஆனால் அவர்களின் செயல்பாடு இந்த எதிர்பார்ப்புக்கு மாற்றமாக இருக்கின்றது. அவர்களுடைய வாழ்க்கையில் விவகாரங்களை சரிசெய்வதற்காக, அவர்களுக்கு மத்தியில் ஏற்படும் பிரச்சனைகளை தீர்ப்பதற்காக அல்லாஹ்வுடைய வேதத்தின் பக்கம் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அந்த அழைப்பை செவியுற்று அது குறித்து யோசித்த பிறகு அதனைப் புறக்கணிக்கிறார்கள். அவர்களில் ஒரு பிரிவினர்தான் இந்தப் புறக்கணிப்பில் ஈடுபடுகிறார்கள். ஆனால் அவர்கள் அந்தக் கூட்டத்தின் பிரதிநிதிகளாக இருக்கிறார்கள். அவர்கள் அந்தக் கூட்டத்தில் தாக்கம் செலுத்தக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அந்த நிராகரிப்பு அந்த சமூகத்தின் மனநிலையாக மாறிவிடுகிறது. உண்மையில் அவர்களின் இந்த புறக்கணிப்பு ஆச்சரியமானது.

அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? அவர்களின் இந்தப் புறக்கணிப்புக்குப் பின்னால் இருக்கும் உண்மையான காரணம் என்ன? நரக நெருப்பு எங்களைத் தீண்டாது. அப்படியே தீண்டினாலும் சில நாட்கள் மட்டுமே எங்களைத் தீண்டும் என்ற அவர்களின் நம்பிக்கை. நாங்கள் அல்லாஹ்வுக்குப் பிடித்தமானவர்கள், அவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள், எங்களுக்காக மட்டுமே சுவனம் படைக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் புனைந்து உருவாக்கியவற்றை அவர்களே நம்பிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் புனைந்து உருவாக்கியவை அவர்களை ஏமாற்றி விட்டன. நாங்கள் என்ன செய்தாலும் மன்னிக்கப்படுவோம் என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருப்பதனால்தான் பாவங்களில் மூழ்கிக் கிடக்கிறார்கள். அல்லாஹ்வின் வேதத்தைப் புறக்கணிக்கிறார்கள்.

அவர்களின் இந்த எண்ணம் முழுக்க முழுக்க தவறானது. அவர்கள் உருவாக்கிய பொய்யை அவர்களே நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் அநியாயக்காரன் அல்ல. அவன் மனிதர்கள் மீது சிறிதளவுகூட அநியாயம் இழைக்க மாட்டான். ஒவ்வொருவரும் அவர்கள் செய்த செயல்களுக்கேற்ப நியாயமாக கூலி வழங்கப்படுவார்கள். யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது.

சந்தேகமின்றி உறுதியாக வரக்கூடிய அந்த நாளில் பொய்யான இந்த நம்பிக்கையில் ஊறித்திளைத்துக் கொண்டிருக்கும் அவர்களின் நிலைமை என்னவாகும்? அவர்களுக்கு எந்த சலுகையும் காட்டப்பட மாட்டாது. அவர்கள் தங்கள் பாவங்களுக்கான தண்டனையை முழுமையாகப் பெறுவார்கள். அந்த நாள் நிலைபெறுவதில் எந்த சந்தேகமும் இல்லை. அது மனிதர்கள் அனைவரும் ஒன்றுதிரப்படும் நாள். அது ஒவ்வொருவரும் தங்களுக்கான கூலியை முழுமையாகப் பெறக்கூடிய நாள்.    

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply