மார்க்கத்தைப் பின்பற்றுவதும் பின்பற்றுவதுபோன்று காட்டிக் கொள்வதும்

You are currently viewing மார்க்கத்தைப் பின்பற்றுவதும் பின்பற்றுவதுபோன்று காட்டிக் கொள்வதும்

மார்க்கத்தைப் பின்பற்றுதல் வேறு, மார்க்கத்தைப் பின்பற்றுவதாக காட்டிக் கொள்வது வேறு. யூதர்களிடமும் இருந்தது பிந்தையது. மார்க்கத்தின் அசலான அம்சங்களை விட்டுவிட்டு தங்களுக்குப் பிடித்தமான, இலகுவான சில சடங்குகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டு தங்களை மார்க்கப் பற்றுள்ளவர்களாக அவர்கள் காட்டிக் கொண்டார்கள். மனதின் கஞ்சத்தனத்தனத்திலிருந்து விடுபடுவதற்கோ, மனதின் தீய இச்சைகளை மார்க்கத்தைக் கொண்டு கட்டுப்படுத்துவற்கோ அவர்கள் எந்த முயற்சியும் செய்யவில்லை. தாங்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டேயிருந்தார்கள். ஆனால் அவனுடைய திருப்தியைப் பெற்றுத் தரும் எந்தச் செயல்பாட்டிலும் அவர்கள் ஈடுபடவில்லை. இங்கு அல்லாஹ் அவர்களுக்கும் அவர்களின் வழியாக நம்பிக்கையாளர்களுக்கும் மகத்தான உண்மையைத் தெளிவுபடுத்துகிறான். நாம் அதிகம் நேசிப்பதை அவனுடைய பாதையில் செலவு செய்யாதவரை அவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாக முடியாது.    

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ وَمَا تُنْفِقُوا مِنْ شَيْءٍ فَإِنَّ اللهَ بِهِ عَلِيمٌ

3:92. “நீங்கள் விரும்பக்கூடிய பொருட்களை செலவு செய்யும்வரை நீங்கள் அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றியவர்களாக முடியாது. நீங்கள் எந்தப் பொருளைச் செலவு செய்தாலும் அல்லாஹ் அதனை நன்கறிந்தவனாக இருக்கின்றான்.”

இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்வது என்பது நாம் அதனடிப்படையில் செயல்படுவோம் என்று அல்லாஹ்வுக்கு அளிக்கும் வாக்குறுதியாகும். இந்த மார்க்கத்தின் கட்டளைகளை நிறைவேற்றுவது நாம் அவனுக்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதாகும். இந்த விசயத்தில் யூதர்கள் அலட்சியமாக இருந்தார்கள். மார்க்கத்தின் முதன்மையான கட்டளைகளை கண்டுகொள்ளாமல் தேவையற்ற சடங்குகளில், முக்கியத்துவமற்ற அற்ப விசயங்களில் அதிகம் கவனம் செலுத்தினார்கள். அவற்றை மார்க்கமாக ஆக்கினார்கள். அவற்றைப் பின்பற்றுவதை மார்க்கப் பற்றின் அடையாளமாக ஆக்கினார்கள். தேவையற்ற விசயங்களில் மூழ்குபவர்கள் தேவையான விசயங்களை விட்டுவிடுவார்கள்.

இப்ராஹீம் அல்லாஹ்வுக்கு நெருக்கமான நண்பராக ஆனார். அவர் அடைந்தது உயர்நிலை. அது அல்லாஹ்வுக்காக எதையும் இழக்க, எதையும் செலவு செய்ய தயாராக இருந்ததனால் அவன் அவருக்குக் கொடுத்த பரிசு. நாம் நேசிப்பதை அவனுடைய பாதையில் இழக்க, செலவு செய்ய முன்வராத வரை நாம் நன்மையின் உயர்நிலையை அடைய முடியாது. வெறும் சடங்குகளைக் கொண்டு நன்மையின் சாதாரண நிலையைக் கூட நம்மால் அடைய முடியாது. யூதர்களிடம் இருந்தது வெறும் வாதங்கள்தாம், செயல்பாடுகள் அல்ல. இது அவர்களுக்கு மட்டுமல்ல இந்த மனநிலை கொண்ட அனைவருக்கும் உரிய அறிவுரை இது. அவனுடைய பாதையில் நாம் எதைச் செலவு செய்தாலும் அது ஒருபோதும் வீணாகி விடாது. அல்லாஹ் அதைக் குறித்து நன்கறிந்தவன்.

كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِبَنِي إِسْرَائِيلَ إِلَّا مَا حَرَّمَ إِسْرَائِيلُ عَلَى نَفْسِهِ مِنْ قَبْلِ أَنْ تُنَزَّلَ التَّوْرَاةُ قُلْ فَأْتُوا بِالتَّوْرَاةِ فَاتْلُوهَا إِنْ كُنْتُمْ صَادِقِينَ فَمَنِ افْتَرَى عَلَى اللهِ الْكَذِبَ مِنْ بَعْدِ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الظَّالِمُونَ قُلْ صَدَقَ اللهُ فَاتَّبِعُوا مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ فِيهِ آيَاتٌ بَيِّنَاتٌ مَقَامُ إِبْرَاهِيمَ وَمَنْ دَخَلَهُ كَانَ آمِنًا وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ         

3:93-97. “தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் இஸ்ராயீல் தமக்குத்தாமே தடை செய்துகொண்டவற்றைத் தவிர, உணவுகள் அனைத்தும் இஸ்ராயீலின் மக்களுக்கு அனுமதிக்கப்பட்ட்டவையாகவே இருந்தன. நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாயின் தவ்ராத்தைக் கொண்டு வந்து வாசித்துக்  காட்டுங்கள். இதன் பின்னரும் அல்லாஹ்வின் மீது பொய்யுரைப்பவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.” நீர் கூறும்: “அல்லாஹ் உண்மையே கூறினான். ஆகவே முழுமையாக அவன் பக்கம் சாய்ந்த இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுங்கள். அவர் இணைவைப்பவராக இருக்கவில்லை. நிச்சயமாக மனிதர்களுக்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் மக்காவில்தான் உள்ளது. அது அருள்வளம் கொண்டதாகவும், உலகத்தார் அனைவருக்கும் வழிகாட்டல் மையமாகவும் உள்ளது. அங்கு தெளிவான சான்றுகள் இருக்கின்றன. இப்ராஹீம் வசித்த இடம் உள்ளது. அங்கு நுழைந்து விட்டவர் பாதுகாப்பு பெற்றவராவார். மனிதர்களில் அந்த இல்லத்திற்கு சென்றுவர சக்தி பெற்றவர் அல்லாஹ்வுக்காக அங்கு ஹஜ்பயணம் செய்வது கடமையாகும். யாரேனும் இதனை நிராகரித்தால் (அவர் அறிந்துகொள்ளட்டும்) அல்லாஹ் உலகத்தார் அனைவரைவிட்டு தேவையற்றவனாக இருக்கின்றான்.”

இந்த வசனங்களில் யூதர்கள் முன்வைத்த இரண்டு ஆட்சேபனைகளுக்குப் பதிலளிக்கப்படுகிறது. ஒன்று: நீங்கள் இப்ராஹீமீன் மார்க்கத்தைப் பின்பற்றுவதாக கூறிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவரது மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டவை உங்களின் மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டவையாக இருக்கின்றனவே? உண்மையில் நாங்கள்தான் இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றுகிறோம். நீங்கள் அல்ல என்று யூதர்கள் முஸ்லிம்களைப் பார்த்து கூறிவந்தார்கள். இரண்டு: முதன் முதலாக கட்டப்பட்ட ஆலயம் பைத்துல் மக்தஸ்தான். அதுதான் இப்ராஹீம் கட்டிய முதல் ஆலயம். அதுதான் இறைத்தூதர்கள் முன்னோக்கிய கிப்லா. அதுதான் நாம் முன்னோக்க வேண்டிய கிப்லா. நீங்கள் ஏன் அதை விட்டுவிட்டு கஅபாவை முன்னோக்கிக் கொண்டிருக்கிறீர்கள்?. இந்த ஆட்சேபனைகளின் வழி அவர்கள் முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பங்களை உருவாக்க நாடினார்கள்.

உண்மையில் இஸ்ராயீலின் சமூகத்தாருக்கு எல்லா உணவுகளும் அனுமதிக்கப்பட்டவையாகவே இருந்தன. அல்லாஹ் இந்த பூமியிலுள்ள அனைத்தையும் மனிதர்களுக்காகவே படைத்திருக்கிறான். அவற்றில் அவர்களுக்குத் தீங்கு தரக்கூடிய சிலவற்றை மட்டுமே தடை செய்திருக்கிறான். ஆனால் இஸ்ராயீலின் சமூகத்தாரின் விசயத்தில் கூடுதலாக சில விசயங்களும் சேர்ந்து கொண்டன. ஒன்று, இஸ்ராயீல் என்றழைக்கப்பட்ட யஅகூபு நபி (அலை) அவர்கள் தனிப்பட்ட சில காரணங்களினால் தமக்குத் தாமே சில விசயங்களை தடை செய்து கொண்டார். அந்த சமூகத்தார் அவற்றை தங்களின் மீதும் தடை செய்து கொண்டார்கள். தனிப்பட்ட சில காரணங்களினால் அவர் உண்ணாமல் விலக்கி வைத்த உணவுகளை தங்கள் சமூகத்தாருக்கு தடைசெய்யப்பட்டவையாக அவர்கள் ஆக்கி விட்டார்கள். இது தவ்ராத் அருளப்படுவதற்கு முன்பே நிகழ்ந்துவிட்ட ஒன்று. இன்னொன்று, அவர்கள் செய்த பாவங்களின் காரணமாக தூய்மையான சில உணவுகளும் அவர்களுக்குத் தடை செய்யப்பட்டன. இது இப்ராஹீமின் மார்க்கத்தில் இல்லாத, யூதர்களுக்கு தண்டனையாக வழங்கப்பட்ட ஒன்று. இறுதியாக வரக்கூடிய தூதரே இந்த தளைகளிலிருந்து அவர்களை விடுவிப்பார் என்ற முன்னறிவிப்பும் அவர்களின் வேதத்தில் காணப்படுகிறது. இன்னொன்று, யூத மதகுருமார்களும், அறிஞர்களும் தங்களின் விருப்பங்களுக்கேற்ப சில உணவுகளை தடை செய்து கொண்டார்கள். இப்படியாக இப்ராஹீமின் மார்க்கத்தில் இல்லாத தடைகள் இவர்களின் மார்க்கத்தில் புகுந்து விட்டன.

இது தொடர்பாக அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான். உண்மையை அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த தெளிவு போதுமானது. இதற்குப் பிறகும் யார் அல்லாஹ்வின் பெயரால் பொய்யுரைக்கிறார்களோ, அவன் மீது இட்டுக்கட்டி கூறுகிறார்களோ அவர்கள்தாம் அநியாயக்காரர்கள்.

அல்லாஹ் கூறியதுதான் உண்மை. எல்லாவற்றையும் விட்டு விலகி ஒரு மனப்பட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பிய இப்ராஹீமின் மார்க்கத்தை பின்பற்றுங்கள். அதுதான் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கொண்டு வந்த மார்க்கம். உங்களிடம் இணைவைப்புக் கொள்கைகள் ஊடுருவி விட்டன. இப்ராஹீம் அல்லாஹ்வுக்கு இணை ஏற்படுத்துபவராக இருந்ததில்லை.

இப்ராஹீம் நபி தம்முடைய மகன் இஸ்மாயீலுடன் இணைந்து அல்லாஹ்வுக்காக முதன் முதலாக கட்டிய ஆலயம் மக்காவில்தான் உள்ளது. அவர் வசித்த, தம் சந்ததியை வசிக்கச் செய்த அந்த நிலம் அருள்வளம்மிக்கதும் நேர்வழியின் மையமும் ஆகும். அவர் அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்க எந்த புற்பூண்டும் இல்லாத அந்தப் பாலைவனத்தில் தம் சந்ததியை வசிக்கச் செய்தார். அந்த பூமிக்காக, அங்கு வாழும் மக்களுக்காக அவர் பிரார்த்தனை செய்தார். அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். அந்த பூமியை அருள்வளம்மிக்கதாக, எல்லா வளங்களையும் தன் பக்கம் ஈர்க்கக்கூடியதாக ஆக்கினான். அந்த மக்களிலிருந்தே இறுதித் தூதரை ஏற்படுத்தினான். அந்த பூமியை நேர்வழியின் மையமாக அவன் ஆக்கினான்.

அதுதான் தேர்ந்தெடுக்கப்பட்ட பூமி என்பதற்கான தெளிவான சான்றுகள் இருக்கின்றன. அதில்தான் இப்ராஹீம் வசித்த இடம் இருக்கின்றது. அந்த பூமியை அவன் அமைதியளிக்கும் பூமியாக ஆக்கியிருக்கிறான். அங்கு நுழைந்தவர் பாதுகாப்புப் பெற்றவர் ஆவார். அந்த பூமியை நோக்கி பயணம் செய்வதை மனிதர்கள் அனைவரின் மீதும் அவன் கடமையாக்கி இருக்கிறான்.

யூதர்கள் பைத்துல் மக்தஸே இந்த பூமியில் இப்ராஹீம் நபியால் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்றும் அதுதான் இறைத்தூதர்கள் அனைவரும் முன்னோக்கிய கிப்லா என்றும் கூறி வந்தார்கள். மக்காவில் அமைந்துள்ள கஅபாதான் இப்ராஹீம் நபியால் கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இது தொடர்பாக தவ்ராத்தில் வந்துள்ள வசனங்களை, வார்த்தைகளை திரித்து அவற்றை தங்களின் இந்த நிலைப்பாட்டுக்கு ஆதாரமாக பயன்படுத்தி வந்தார்கள். இந்த வசனம் அவர்களின் திரிபை அம்பலப்படுத்தி உண்மையை தெளிவுபடுத்துகிறது.

அவர்கள் ஏன் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள்? இறுதித் தூதர் அங்கிருந்துதான் வருவார் என்று அவர்களின் வேதத்தில் முன்னறிவிப்பு காணப்படுகிறது. மக்காவில்தான் இப்ராஹீம் முதல் ஆலயத்தை கட்டினார் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் அறபுக்களிலிருந்து இறுதித் தூதர் வருவார் என்பதை அவர்களே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகவேதான் அது தொடர்பான அனைத்தையும் திரித்தார்கள். கஅபாவை முன்னோக்குவதும் அதை நோக்கி பயணம் செய்து அங்கு வழிபாடுகளில் ஈடுபடுவதும் அவர்களின் மீதும் கடமையாக்கப்பட்டிருந்தது. இனவெறியும் பொறாமையும் அவர்களின் அறிவை மழுங்கடித்தது. அறிந்து கொண்டே அவர்கள் உண்மையை மறைத்தார்கள். உண்மையைப் பொய்யுடன் கலந்தார்கள்.

மக்கா என்னும் புனித பூமியை நோக்கி பயணம் செய்து அங்கு நிறைவேற்ற வேண்டிய ஹஜ்ஜின் கடமைகளை நிறைவேற்றுவது சக்தியுள்ள மனிதர்கள் அனைவரின் மீதும் கட்டாயமாகும். இந்தக் கடமையை புறக்கணிப்பவர்கள் யூத, கிருஸ்தவர்களைப் போன்றவர்கள் ஆகிவிடுவார்கள். அவர்கள் புறக்கணிப்பதால் அல்லாஹ்வுக்கு எந்த இழப்பும் இல்லை. அவன் தேவைகள் அற்றவன். அவர்கள் இந்தக் கடமையை புறக்கணிப்பதன்மூலம் தங்களுக்குத் தாங்களே இழப்பை ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இந்த உண்மையைத் தெளிவுபடுத்திய பிறகு அல்லாஹ் வேதக்காரர்களை நோக்கி இரு கேள்விகளை முன்வைக்கிறான். அவை கடும் எச்சரிக்கையை உள்ளடக்கியுள்ள கேள்விகள்.          

قُلْ يَاأَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللهِ وَاللهُ شَهِيدٌ عَلَى مَا تَعْمَلُونَ قُلْ يَاأَهْلَ الْكِتَابِ لِمَ تَصُدُّونَ عَنْ سَبِيلِ اللهِ مَنْ آمَنَ تَبْغُونَهَا عِوَجًا وَأَنْتُمْ شُهَدَاءُ وَمَا اللهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

3:98-99. நீர் கூறும்: “வேதக்காரர்களே! நீங்கள் அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கிறீர்கள்? நீங்கள் செய்வதையெல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான்”. நீர் கூறும்: “வேதக்காரர்களே! ஏன் நம்பிக்கையாளர்களை அல்லாஹ்வின் பாதையை விட்டுத் தடுக்கிறீர்கள்? நீங்கள் சாட்சியாளர்களாக இருந்துகொண்டே ஏன் கோணலை விரும்புகிறீர்கள்? அல்லாஹ் உங்கள் செயல்களைக் கவனிக்காமல் இல்லை.”

இப்ராஹீமின் மார்க்கம், முதல் ஆலயம், இறுதித் தூதர் ஆகியவை தொடர்பான தெளிவான சான்றுகளை அறிந்திருக்கும் நீங்கள் பிறகு ஏன் அவற்றை நிராகரிக்கிறீர்கள்? உங்களின் செயல்பாடுகள் அனைத்தையும் அவன் கண்காணித்துக் கொண்டிருக்கிறான். அவற்றின் காரணமாக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள். நேர்வழியின் பாதையில் அழைப்பாளர்களாக இருக்க வேண்டிய நீங்கள் ஏன் அதற்கு மாறாக அந்த வழியை விட்டு மனிதர்களைத் தடுப்பவர்களாக மாறிவீட்டீர்கள்? ஏன் முஸ்லிம்களுக்கு மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்துகிறீர்கள்? ஏன் கோணலை, வழிகேட்டை விரும்புகிறீர்கள்? உங்களின் எந்தச் செயலையும் அவன் கவனிக்காமல் இல்லை. நிச்சயம் அதற்கான விளைவை நீங்கள் பெறுவீர்கள்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply