கிருஸ்தவர்களுக்கு எதிரான உறுதியான ஆதாரம் நிலைநிறுத்தப்பட்டு அதனை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் முபாஹலாவின் பக்கம் அழைக்கப்பட்டு அவர்களுடனான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த பிறகு யூதர்கள், கிருஸ்தவர்கள் இரு சாராரும் வேதக்காரர்கள் என்ற பொதுவான பெயரால் அழைக்கப்பட்டு உரையாடப்படுகிறார்கள். அவர்கள் வேதத்தை கற்பதாலும் கற்பிப்பதாலும் அதன் போதனைகளில் இன்னும் மீதமிருக்கின்ற தவ்ஹீதின் பக்கம் அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். பிறகு அவர்கள் முன்வைக்கும் வாதங்கள் எந்த அளவு பலவீனமானவை என்பது எடுத்துரைக்கப்பட்டு அவற்றுக்குப் பின்னால் இருக்கும் அவர்களின் நோக்கங்கள் அம்பலப்படுத்தப்படுகின்றன.
قُلْ يَاأَهْلَ الْكِتَابِ تَعَالَوْا إِلَى كَلِمَةٍ سَوَاءٍ بَيْنَنَا وَبَيْنَكُمْ أَلَّا نَعْبُدَ إِلَّا اللهَ وَلَا نُشْرِكَ بِهِ شَيْئًا وَلَا يَتَّخِذَ بَعْضُنَا بَعْضًا أَرْبَابًا مِنْ دُونِ اللهِ فَإِنْ تَوَلَّوْا فَقُولُوا اشْهَدُوا بِأَنَّا مُسْلِمُونَ
3:64. நீர் கூறும்: “வேதக்காரர்களே! எங்களுக்கும் உங்களுக்கும் இடையிலுள்ள ஒரு பொதுவான விசயமான ‘அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டோம். அவனுக்கு இணையாக எதையும் ஆக்க மாட்டோம். நம்மில் எவரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாக்கக் கூடாது’ என்பதன் பக்கம் வாருங்கள். அவர்கள் புறக்கணித்தால் ‘நாங்கள் கீழ்ப்படிந்தவர்கள்’ என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள் என்று கூறிவிடுங்கள்.
முஸ்லிம்களின் வழியாக வேதக்காரர்களுக்குக் கொடுக்கப்படும் மென்மையான அழைப்பு. அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் மத்தியில் இருக்கும் பொதுவான விசயத்தை முன்னிறுத்தி இந்த அழைப்பு கொடுக்கப்படுகிறது. இறைத்தூதர்கள் அனைவரும் தவ்ஹீதையே கொண்டு வந்தார்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் தவ்ஹீதை விட்டு விலகிச் சென்றது அவர்களின் வேதங்கள் அவ்வாறு கூறுகின்றன என்பதனால் அல்ல. அது அவர்களே உருவாக்கிக் கொண்டது. அது அவர்களின் மார்க்கங்களில் புகுந்துவிட்ட பித்அத். எங்களின் வேதம் தவ்ஹீதுக்கு எதிரானது என்று அவர்களில் யாரும் கூற முடியாது. எங்களின் வேதம் தவ்ஹீதையே போதிக்கிறது என்று அவர்களும் ஒத்துக் கொள்கிறார்கள். அந்த வேதங்களில் புகுந்துவிட்ட இடைச்செருகல்கள் அனைத்திற்குப் பின்னரும் இன்றளவும் அவற்றில் தவ்ஹீதுக்கான சான்றுகள் காணப்படுகின்றன. மறுக்க முடியாத அழைப்பு இது. அல்லாஹ்வின் வழிகாட்டலை பின்பற்ற விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த அழைப்பை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை.
“நம்மில் யாரும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் இறைவனாக்கிக் கொள்ளக்கூடாது.” யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் புகுந்துவிட்ட ஒரு வழிகேட்டை இந்த வாசகம் சுட்டிக் காட்டுகிறது. அவர்கள் தங்களின் குருமார்களுக்கு, துறவிகளுக்கு, அறிஞர்களுக்கு இறைவனின் அதிகாரத்தை கொடுத்து வைத்திருந்தார்கள். அவர்கள் அவர்களுக்கு சட்டமியற்றும் உரிமையை, ஒன்றை ஹலால் என்றும் ஹராம் என்றும் நிர்ணயிக்கும் உரிமையை கொடுத்து வைத்திருந்தார்கள். இது அவர்களை கடவுள்களாக ஆக்குவதற்குச் சமம். இது அல்லாஹ்வுக்கு மட்டுமேயான உரிமை. யார் இந்த உரிமையை தங்களின் குருமார்களுக்கோ, அறிஞர்களுக்கோ, தலைவர்களுக்கோ கொடுக்கிறார்களோ அவர்கள் அவர்களை கடவுள்களாக ஆக்கி விட்டார்கள்.
இதுதான் உங்களுக்கும் எங்களுக்கும் மத்தியில் இருக்கின்ற பொதுவான விசயம். இந்த விசயத்தை நீங்கள் மறந்து விட்டீர்கள். இதுதான் இறைமார்க்கத்தின் அடிப்படை. இதன் மீதுதான் மற்ற விசயங்கள் நிலைபெறுகின்றன. இந்த அடிப்படையில்தான் நீங்களும் நாங்களும் ஒன்றிணைய முடியும். நீங்கள் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அது உங்களின் விருப்பம். அதனால் ஏற்படப்போகும் விளைவுகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. நாங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றுபவர்கள். அவனுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டவர்கள். இதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள். எங்களின் பொறுப்பு தெளிவுபடுத்துவதும் எடுத்துரைப்பதும் அழைப்பு விடுப்பதும்தான்.
يَاأَهْلَ الْكِتَابِ لِمَ تُحَاجُّونَ فِي إِبْرَاهِيمَ وَمَا أُنْزِلَتِ التَّوْرَاةُ وَالْإِنْجِيلُ إِلَّا مِنْ بَعْدِهِ أَفَلَا تَعْقِلُونَ هَا أَنْتُمْ هَؤُلَاءِ حَاجَجْتُمْ فِيمَا لَكُمْ بِهِ عِلْمٌ فَلِمَ تُحَاجُّونَ فِيمَا لَيْسَ لَكُمْ بِهِ عِلْمٌ وَاللهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ مَا كَانَ إِبْرَاهِيمُ يَهُودِيًّا وَلَا نَصْرَانِيًّا وَلَكِنْ كَانَ حَنِيفًا مُسْلِمًا وَمَا كَانَ مِنَ الْمُشْرِكِينَ إِنَّ أَوْلَى النَّاسِ بِإِبْرَاهِيمَ لَلَّذِينَ اتَّبَعُوهُ وَهَذَا النَّبِيُّ وَالَّذِينَ آمَنُوا وَاللهُ وَلِيُّ الْمُؤْمِنِينَ
3:65-68. “வேதக்காரர்களே! நீங்கள் இப்ராஹீமைக் குறித்து ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அவருக்குப் பிறகுதானே தவ்ராத்தும் இன்ஜீலும் அருளப்பட்டன. நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா? நீங்கள் அறிந்த விசயத்தில் தர்க்கம் செய்துகொண்டிருந்தீர்கள். நீங்கள் அறியாத விசயத்தைப் பற்றி ஏன் தர்க்கம் செய்கிறீர்கள்? அல்லாஹ்வே அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். இப்ராஹீம் யூதராகவோ கிருஸ்தவராகவோ இருந்ததில்லை. மாறாக அவர் இறைவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தவராக இருந்தார். அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராக இருந்ததில்லை. மனிதர்களில் இப்ராஹீமுக்கு மிகவும் நெருங்கியவர்கள் அவரைப் பின்பற்றுபவர்களும் இந்தத் தூதரும் இவர் மீது நம்பிக்கை கொண்டவர்களுமே ஆவார்கள். அல்லாஹ் நம்பிக்கையாளர்களின் தோழனாக இருக்கின்றான்.”
யூதர்கள், கிருஸ்தவர்கள், மக்காவின் இணைவைப்பாளர்கள் ஆகிய மூவரும் இப்ராஹீம் நபியை சொந்தக் கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். இப்ராஹீம் ஒரு யூதர் என்று யூதர்களும் அவர் ஒரு கிருஸ்தவர் என்று கிருஸ்தவர்களும் கூறிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் வாதங்கள் எந்த அளவு பலவீனமானவை என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். யூதர்களுக்கு வழங்கப்பட்ட தவ்ராத்தும் கிருஸ்தவர்களுக்கு வழங்கப்பட்ட இன்ஜீலும் அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே அருளப்பட்டன. யூதமும் கிருஸ்தவமும் அவர் மறைந்து பல நூற்றாண்டுகளுக்குப் பிறகே உருவாகின. பிறகு எப்படி அவர் யூதராக அல்லது கிருஸ்தவராக இருக்க முடியும்? உங்களின் வாதங்கள் எந்த ஆதாரமும் அற்றவை. நீங்கள் புரிந்துகொள்ள மாட்டீர்களா?
மூசாவைக் குறித்தோ ஈசாவைக் குறித்தோ உங்களிடம் இருக்கும் கொஞ்சநஞ்ச அறிவைக் கொண்டு நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள். அதுகூட புரிந்துகொள்ளக்கூடியதுதான். யாரைக் குறித்து உங்களுக்கு எந்த அறிவும் இல்லையோ அவரைக் குறித்து இவ்வளவு உறுதியான தகவல்களை எங்கிருந்து பெறுகிறீர்கள்? உண்மையில் உங்களுக்கு எதுவும் தெரியாது. இந்த மார்க்கத்தின் மீதும் இந்த தூதரின் மீதும் நீங்கள் கொண்டிருக்கும் வெறுப்பே இப்படியான பலவீனமான வாதங்களை முன்வைக்கத் தூண்டுகிறது.
இப்ராஹீம் யூதராகவோ கிருஸ்தவராகவோ இருக்கவில்லை. அவர் தவறான, இணைவைப்பான கொள்கைகள் அனைத்தையும் விட்டு விலகிய, அல்லாஹ்வுக்கு மட்டுமே முழுமையாகக் கட்டுப்பட்ட முஸ்லிமாக இருந்தார். அவர் தூய தவ்ஹீதில் நிலைத்திருந்தார். அவர் எந்தச் சமயத்திலும இணைவைப்பாளராக இருக்கவில்லை. யூதர்களிடத்திலும் கிருஸ்தவர்களிடத்திலும் இணைவைப்புக் கொள்கைகள் ஊடுருவி விட்டன.
உண்மையில் இப்ராஹீமுக்கு யார் சொந்தம் கொண்டாட முடியும்? யார் அவரைப் பின்பற்றினார்களோ அவர்களும் இந்த தூதரும் இந்த தூதரைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும்தான் அவரை சொந்தம் கொண்டாட முடியும். அவர்கள்தாம் அவருக்கு நெருக்கமானவர்கள். இறைத்தூதர் இப்ராஹீமை அவர் பிறந்த குலத்தின் அடிப்படையிலோ அவர் வாழ்ந்த நிலத்தின் அடிப்படையிலோ சொந்தம் கொண்டாட முடியாது. அவர் எந்த கொள்கையில் நிலைத்திருந்தாரோ, எந்த கொள்கையின் பக்கம் அழைத்தாரோ அந்தக் கொள்கையைப் பின்பற்றுபவர்களோ அவரை சொந்தம் கொண்டாட முடியும். தம் வாழ்நாளெல்லாம் எந்த இணைவைப்புக் கொள்கைக்கு எதிராக அவர் போராடினார்களோ அந்த இணைவைப்புக் கொள்கையை கொண்டிருப்பவர்கள் அவரை சொந்தம் கொண்டாடுவதற்கு எந்த தகுதியும் அற்றவர்கள் ஆவர், அவர்கள் அவருடைய வழித்தோன்றல்களாக இருந்தாலும் சரியே.
ஏன் அவர்கள் தொடர்ந்து தேவையற்ற வாதங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? ஏன் அவர்கள் நம்பிக்கையாளர்களுக்கு மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்? அவர்களின் நோக்கம்தான் என்ன? அவர்கள் உங்களின் விசயத்தில் என்னதான் விரும்புகிறார்கள்? அவர்கள் உங்களை வழிகெடுக்க விரும்புகிறார்கள். நீங்கள் நேர்வழியில் செல்வதையும் அதில் நிலைத்திருப்பதையும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர்களைப் போல நீங்களும் வழிகெட்டுவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
وَدَّتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يُضِلُّونَكُمْ وَمَا يُضِلُّونَ إِلَّا أَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُونَ يَاأَهْلَ الْكِتَابِ لِمَ تَكْفُرُونَ بِآيَاتِ اللهِ وَأَنْتُمْ تَشْهَدُونَ يَاأَهْلَ الْكِتَابِ لِمَ تَلْبِسُونَ الْحَقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُونَ الْحَقَّ وَأَنْتُمْ تَعْلَمُونَ وَقَالَتْ طَائِفَةٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمِنُوا بِالَّذِي أُنْزِلَ عَلَى الَّذِينَ آمَنُوا وَجْهَ النَّهَارِ وَاكْفُرُوا آخِرَهُ لَعَلَّهُمْ يَرْجِعُونَ وَلَا تُؤْمِنُوا إِلَّا لِمَنْ تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ الْهُدَى هُدَى اللهِ أَنْ يُؤْتَى أَحَدٌ مِثْلَ مَا أُوتِيتُمْ أَوْ يُحَاجُّوكُمْ عِنْدَ رَبِّكُمْ قُلْ إِنَّ الْفَضْلَ بِيَدِ اللهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللهُ وَاسِعٌ عَلِيمٌ يَخْتَصُّ بِرَحْمَتِهِ مَنْ يَشَاءُ وَاللهُ ذُو الْفَضْلِ الْعَظِيمِ
3:69-74. “வேதக்காரர்களில் ஒரு பிரிவினர் உங்களை வழிகெடுத்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே வழிகேட்டில் ஆழ்த்திக் கொள்கிறார்கள். ஆயினும் அவர்கள் உணர்ந்துகொள்வதில்லை. வேதக்காரர்களே! நீங்கள் சாட்சியாளர்களாக இருந்துகொண்டே அல்லாஹ்வின் சான்றுகளை ஏன் நிராகரிக்கிறீர்கள்? வேதக்காரர்களே! நீங்கள் ஏன் உண்மையைப் பொய்யுடன் கலக்கிறீர்கள்? அறிந்துகொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள்? வேதக்காரர்களில் ஒருபிரிவினர், “நம்பிக்கையாளர்களுக்கு அருளப்பட்டதன் மீது காலையில் நம்பிக்கைகொண்டு மாலையில் நிராகரித்துவிடுங்கள். இதனால் அவர்கள் தங்களின் நம்பிக்கையைவிட்டு திரும்பிவிடக்கூடும். உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றுபவர்களைத் தவிர வேறு யாரையும் நீங்கள் நம்பாதீர்கள்” என்று கூறுகிறார்கள். நீர் கூறும்: “அல்லாஹ் காட்டியதே நேரான வழியாகும்.” “உங்களுக்குக் கொடுக்கப்பட்டதைப்போல மற்றவர்களுக்கும் ஏன் கொடுக்கப்பட்டது? அல்லது உங்கள் இறைவனிடம் உங்களுக்கு எதிராக அவர்கள் வாதாடுவார்களே!” என்று அவர்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள். நீர் கூறும்: “சிறப்புகள் அனைத்தும் அல்லாஹ்விடமே உள்ளது. தான் நாடியோருக்கு அதனை அவன் வழங்குகிறான். அல்லாஹ் தாராளமானவனாகவும் நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான். அவன் தான் நாடுவோரை தன் அருளுக்கு உரியவர்களாக்குகிறான். அல்லாஹ் மாபெரும் அருளாளன் ஆவான்.”
அல்லாஹ் இங்கு முஸ்லிம் சமூகத்தைப் பார்த்து எச்சரிக்கிறான். அவர்கள் உங்களுடன் எவ்வித இணக்கத்தையும் விரும்பவில்லை. அவர்கள் உங்களை குழப்பத்தில் ஆழ்த்தி வழிகெடுக்க விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் வழிகெடுக்கும் இந்த முயற்சிகள் அவர்கள் இஸ்லாத்தைவிட்டு இன்னும் தூரமாக்கிக் கொண்டே செல்லும். அவர்கள் உணராமலேயே தங்களைத் தாங்களே வழிகேட்டில் ஆழ்த்திக் கொள்கிறார்கள். உங்களுக்குத் தீங்கிழைக்க எண்ணி தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொள்கிறார்கள். பொறாமை அவர்களின் கண்களை குருடாக்கி விட்டன. அது அவர்களை அறிவை மழுங்கடித்து விட்டது.
பிறகு அல்லாஹ் வேதக்காரர்களை நோக்கி கேள்வி எழுப்புகிறான். உங்கள் வேதங்களில் முஹம்மது (ஸல்) அவர்கள் உண்மையான தூதர் என்பதற்கான சான்றுகள் இருக்கின்றனவே, இந்தக் குர்ஆனைக் குறித்த முன்னறிவிப்புகளும் இருக்கின்றனவே. நீங்களே அதற்கு சாட்சியாளர்களாக இருக்கின்றீர்கள்! பிறகு ஏன் நீங்கள் நிராகரிக்கின்றீர்கள்? நீங்கள் முந்திக் கொண்டு இஸ்லாத்தை ஏற்றிருக்க வேண்டும். மற்ற மக்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு நீங்கள் காரணமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நீங்களோ அதற்கு மாறாக நம்பிக்கையாளர்களை வழிகெடுக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறீர்கள்! உண்மையைப் பொய்யுடன் கலந்து அதனை சிக்கலான ஒன்றாக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள், அறிந்துகொண்டே உண்மையை மறைக்கின்றீர்கள். சாட்சியாளர்களாக இருக்க வேண்டிய நீங்கள் அதற்கு மாறாக அறிந்துகொண்டே உண்மையை மறைத்துக் கொண்டும் உண்மையை பொய்யுடன் கலந்து குழப்பிக் கொண்டும் இருக்கின்றீர்கள்.
யூதர்கள் முஸ்லிம்களிடம் சந்தேகங்களை ஏற்படுத்த கடைப்பிடித்த நயவஞ்சத்தனமான நடத்தை ஒன்றை அடுத்த வசனம் அம்பலப்படுத்துகிறது. காலையில் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். மாலையில் இஸ்லாத்திலிருந்து வெளியேறி விடுங்கள். உங்களின் இந்த செயல்பாட்டைப் பார்த்து பொதுமக்களும் இஸ்லாத்தைவிட்டு வெளியேறி விடக்கூடும்.
யூதர்கள் பெரும்பாலும் நேருக்கு நேர் மோதுவதில்லை. நயவஞ்சத்தனமான நடத்தைகளின் வழியாக, சதித்திட்டங்களின் வழியாக தங்கள் எதிரிகளை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் கிருஸ்தவர்களுடன் நடந்து கொண்டார்கள். யூத மதத்தை விட்டுவிட்டு கிருஸ்தவத்தை ஏற்றுக் கொண்ட பவுல் இதற்கு ஒரு சான்று. பின்னாட்களில் கிருஸ்தவத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றங்கள் இந்தப் பவுல் வழியாகவே நிகழ்ந்தது. கிருஸ்தவர்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த பவுல் திடீரென கிருஸ்தவத்தை ஏற்றுக் கொண்டு அதன் முகமாகவே மாறிவிட்டார். இப்போது கிருஸ்வத்தில் இருக்கின்ற பல பிழையான கொள்கைகள் இந்தப் பவுல் வழியாக புகுத்தப்பட்டவைதாம்.
இது பொதுமக்களுக்கு மத்தியில் குழப்பத்தை, சந்தேகத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யூத குருமார்கள் உருவாக்கிய சதிவலை. பலவீனமான மனிதர்கள் இந்த சதிவலையில் சிக்கிக் கொள்கிறார்கள். இன்றளவும் இதுபோன்ற சதிவலைகள் யூதர்களால் விரிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. அவற்றின் வடிவங்கள் வேறுபட்டுள்ளன. ஆனால் அவற்றுக்குப் பின்னால் மனிதர்களை வழிகெடுக்க வேண்டும் என்ற அவர்களின் அசலான நோக்கமே இருக்கிறது. அறிஞர்கள், ஆய்வாளர்கள், அறிவியலாளர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், ஊடகவிலயலாளர்கள், விமர்சகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு போர்வைகளில் அவர்கள் ஒளிந்து கிடக்கிறார்கள். இஸ்லாத்தின் மீது வெறுப்பை ஏற்படுத்தும் விசயங்களை அவர்கள் பரப்பிக் கொண்டேயிருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நிகழ்வையும் இஸ்லாமிய வெறுப்புக்கான கச்சாப் பொருளாக பயன்படுத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அன்று ஆரம்பித்த இந்த முயற்சி இன்று வீரியமான அளவில் நடந்து கொண்டிருக்கிறது.
இந்தச் சூழல் பாமர மக்களை குழப்பத்தில் ஆழ்த்தும், பெயரளவிலான முஸ்லிம்களை கடும் நெருக்கடியிலும் பதற்றத்திலும் ஆழ்த்தும் ஆபத்தான சூழல்தான். நாம் இந்த முயற்சிகளுக்குப் பின்னால் இருக்கும் நோக்கத்தை அறிந்துகொள்ள வேண்டும். நாம் இஸ்லாத்தில் நீடிக்கவும் அதன் சார்பாக நின்று வாதிடவும் வேண்டுமெனில் இந்தக் குர்ஆனின் பக்கம் திரும்ப வேண்டும். இதனை ஆழ்ந்து கற்பதன் வழியாகவே இது அல்லாஹ்வின் மார்க்கம் என்பதையும் இது மனித சமூகத்திற்கு வழங்கப்பட்ட மகத்தான அருட்கொடை என்பதையும் நாம் உணர்ந்துகொள்ள முடியும். அதன் வழியாகவே அவர்களின் சதிவலைகளில் சிக்காமல் நாம் நம்மையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்கள்? பொறாமைதான். தங்களுக்கு வழங்கப்பட்டதுபோன்று யாருக்கும் வழங்கப்படக்கூடாது என்று அவர்கள் எண்ணுகிறார்கள். அவர்கள் அல்லாஹ்வின் அருள் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று கருதுகிறார்கள். தங்கள் இனத்திலிருந்து மட்டுமே இறைத்தூதர்கள் அனுப்பப்ட்டிருக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர்களிடம் இருப்பது அப்பட்டமான இனவெறி. மனிதர்களில் தாங்களே உயர்ந்தவர்கள் என்றும் மற்றவர்களுக்கு தங்களுக்குப் பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் கருதுகிறார்கள். தாங்கள் வழிகெட்டாலும் பரவாயில்லை, மற்றவர்கள் யாரும் நேர்வழியில் சென்றுவிடக்கூடாது என்று அவர்கள் கருதுகிறார்கள்.
அல்லாஹ் காட்டிய வழிதான் நேரான வழி. அதுதான் மனித சமூகத்திற்கு உகந்த வழி. அது குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு மட்டும் உரியது அல்ல. அது குறிப்பிட்ட ஓர் இனத்திடம் மட்டுமே இருப்பது அல்ல. உங்களின் இனவெறி அல்லாஹ்வின் வழிகாட்டலை புறக்கணிக்கச் செய்து விட்டது. நீங்கள் உங்கள் இறைவனைப் பற்றி என்ன எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள்? அவன் நீங்கள் வெளிப்படுத்துவதையும் மறைப்பதையும் நன்கறிவான். நீங்கள் அவர்களிடம் வெளிப்படுத்தாமல் மறைத்து விட்டால் உங்கள் இறைவனிடம் தப்பி விடலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? இறைவனைக் குறித்து நீங்கள் கொண்டிருக்கும் எண்ணம் எவ்வளவு மோசமானது!
சிறப்புகள் அனைத்தும் அவன் கைவசமே உள்ளன. அவன் தான் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பது அவனுடைய விருப்பம். அவனுடைய விருப்பத்தில் யாரும் தலையிட முடியாது. அவனுடைய விருப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் வழிகெட்டு வெகுதூரம் சென்று விடுவார்கள். அவர்கள் தங்களைத் தாங்களே நொந்து கொள்ளட்டும். அல்லாஹ் தாராளமானவன். யாருக்கு எதை கொடுக்க வேண்டும் என்பதை நன்கறிந்தவன். அவன் தான் நாடியவர்களை தன் அருளுக்கு உரியவர்களாக்குகிறான். அவன் பேரளுளானன். பெரும் கிருபையாளன்.
