ஈசா நபி தொடர்பான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி

You are currently viewing ஈசா நபி தொடர்பான விவாதத்திற்கு முற்றுப்புள்ளி

அல்லாஹ்வின் கட்டளைப்படி ஈசா நபி இவ்வளவு அற்புதங்கள் நிகழ்த்திய பிறகும் தம்முடைய தூதுத்துவ நோக்கங்களை தெள்ளத் தெளிவான மொழியில் முன்வைத்த பிறகும் இஸ்ரவேல் சமூகத்திலுள்ள அறிஞர்களும் தலைவர்களும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து நிராகரிப்பும் எதிர்ப்பும் சூழ்ச்சியும் வெளிப்படுவதை அவர் உணர்ந்தார். அவர்களை விட்டுவிட்டு அந்த சமூகத்திலுள்ள எளிய மனிதர்களை நோக்கி அவர் கவனம் செலுத்தத் தொடங்கினார்.        

فَلَمَّا أَحَسَّ عِيسَى مِنْهُمُ الْكُفْرَ قَالَ مَنْ أَنْصَارِي إِلَى اللهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللهِ آمَنَّا بِاللهِ وَاشْهَدْ بِأَنَّا مُسْلِمُونَ رَبَّنَا آمَنَّا بِمَا أَنْزَلْتَ وَاتَّبَعْنَا الرَّسُولَ فَاكْتُبْنَا مَعَ الشَّاهِدِينَ

3:52,53. “ஈசா அந்த மக்களிடம் நிராகரிப்பை உணர்ந்தபோது “அல்லாஹ்வின் பாதையில் எனக்கு உதவிசெய்பவர்கள் யார்?” என்று கேட்டார். ஹவாரியூன்கள் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்வின் உதவியாளர்களாக இருக்கின்றோம். நாங்கள் அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்டுள்ளோம். நாங்கள் கீழ்ப்படிந்தவர்களாக இருக்கின்றோம் என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள். எங்கள் இறைவனே! நீ அருளியதன் மீது நம்பிக்கை கொண்டு தூதரையும் பின்பற்றினோம். ஆகவே சாட்சி அளிப்போருடன் எங்களையும் நீ சேர்த்து எழுதுவாயாக.”

இஸ்ரவேல் சமூகத்திலுள்ள அறிஞர்கள் ஈசாவை ‘அவர் அல்லாஹ்வின் தூதர்’ என்று அடையாளம் கண்டுகொண்ட பிறகும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அவர் அவர்களிடம் நிராகரிப்பை உணர்ந்தார். ஆகவே அவர்களை விட்டுவிட்டு எளிய மனிதர்களின் பக்கம் அவர் திரும்பினார். இறைத்தூதர்கள் தங்களின் அழைப்பை முதலில் சமூகத்தின் தலைவர்களை, அறிஞர்களை நோக்கியே முன்வைப்பார்கள். பிறகுதான் அவர்கள் எளிய மனிதர்களின் பக்கம் திரும்புவார்கள்.   ஏனெனில் அவர்கள் சமூகத்தின் மீது பெரிய அளவில் தாக்கம் செலுத்துபவர்கள். எளிய மக்கள் அவர்களையே தங்களின் வழிகாட்டிகளாகக் கருதுகிறார்கள். ஈசாவும் அப்படித்தான் செய்தார். ஆனால் அவர்களிடம் நிராகரிப்பை உணர்ந்த பிறகு நேரடியாக எளிய மனிதர்களை நோக்கித் திரும்பினார். இந்த அழைப்பின் பாதையில் அவர் உதவியாளர்களை வேண்டி நின்றார். ஹவாரியூன்கள் அவரது அழைப்புக்குப் பதிலளித்தார்கள். அவருடைய உதவியாளர்களாக மாறினார்கள்.

ஹவாரியூன் என்ற வார்த்தை அன்சாரி என்ற வார்த்தையைப் போன்றதாகும். ஹவாரியூன் என்ற வார்த்தைக்கு உதவியாளர்கள் என்று மொழிபெயர்க்கலாம். அன்சாரி என்ற வார்த்தையைப் போன்று ஹவாரியூன் என்ற வார்த்தையும் அடையாளப் பெயராக ஆகிவிட்டதனால் அந்த வார்த்தையை அப்படியே பயன்படுத்துவதே சிறந்ததாகும். நபியவர்களின் அழைப்பை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றவர்கள் மதீனாவின் அன்சாரிகள். இந்த மார்க்கத்திற்காக தங்களின் உயிரையும் பொருளையும் அர்ப்பணிக்கத் துணிந்தவர்கள். அப்படி ஈசா நபியின் அழைப்பை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சென்றவர்கள் ஹவாரியீன்கள். அவர்கள் அவரது நெருக்கமான சீடர்களாவர்.

அவர்கள் கூறினார்கள்: “நாங்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் உதவியாளர்கள். நாங்கள் அவன் மீது முழுமையாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். நாங்கள் அவனுக்குக் கட்டுப்பட்டவர்கள் – முஸ்லிம்கள் – என்பதற்கு நீங்களே சாட்சியாக இருங்கள்.” அதன் பிறகு “எங்கள் இறைவனே! நீ அருளிய வேதத்தை நாங்கள் ஏற்றுக்கொண்டோம். உன் தூதரை நாங்கள் பின்பற்றுகின்றோம். இந்த மார்க்கத்திற்காக சாட்சி அளிப்பவர்களுடன் எங்களையும் சேர்த்து விடுவாயாக” என்றும் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இந்த மார்க்கத்திற்காக சாட்சி கூறுவது என்பது இந்த மார்க்கத்தை உள்ளபடியே எடுத்துரைப்பதாகும். அது இந்த மார்க்கத்தின் கருத்துகளை மறைத்தல் என்ற சொல்லாடலுக்கு எதிர்ப்பதமாகும். யூதர்கள் தங்களுக்கு அருளப்பட்ட வேதத்தின் போதனைகளை மறைத்தார்கள், திரித்தார்கள். உண்மையை அறிந்து கொண்டே அதனை மறைத்தார்கள். இந்த மார்க்கத்தின் உண்மைகளை மறைப்பது பெரும் குற்றமாகும். தாங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கும் உலகியல் ஆதாயங்கள் பறிபோய்விடுமோ என்ற அச்சமும் தங்களைவிட மற்றவர்கள் சிறப்புப் பெற்று விடுவார்களோ என்ற பொறாமையும் மார்க்கத்தின் உண்மையை மறைத்தல் என்னும் பெரும் பாவத்தில் அவர்களை ஆழ்த்தி விட்டன.          

وَمَكَرُوا وَمَكَرَ اللهُ وَاللهُ خَيْرُ الْمَاكِرِينَ إِذْ قَالَ اللهُ يَاعِيسَى إِنِّي مُتَوَفِّيكَ وَرَافِعُكَ إِلَيَّ وَمُطَهِّرُكَ مِنَ الَّذِينَ كَفَرُوا وَجَاعِلُ الَّذِينَ اتَّبَعُوكَ فَوْقَ الَّذِينَ كَفَرُوا إِلَى يَوْمِ الْقِيَامَةِ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأَحْكُمُ بَيْنَكُمْ فِيمَا كُنْتُمْ فِيهِ تَخْتَلِفُونَ فَأَمَّا الَّذِينَ كَفَرُوا فَأُعَذِّبُهُمْ عَذَابًا شَدِيدًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ وَأَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَيُوَفِّيهِمْ أُجُورَهُمْ وَاللهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ ذَلِكَ نَتْلُوهُ عَليْكَ مِنَ الْآيَاتِ وَالذِّكْرِ الْحَكِيمِ

3:54-58. அவர்கள் மறைமுகமாகத் திட்டம் தீட்டினார்கள். அல்லாஹ்வும் மறைமுகமாகத் திட்டம் தீட்டினான். திட்டம் தீட்டுவதில் அல்லாஹ்வே மிகச் சிறந்தவன். அல்லாஹ் கூறினான்: “ஈசாவே! நான் உம்மைக் கைப்பற்றுபவனாகவும் என் பக்கம் உயர்த்துபவனாகவும் நிராகரிப்பாளர்களைவிட்டு உம்மைத் தூய்மைப்படுத்துபவனாகவும் உம்மைப் பின்பற்றுவோரை நிராகரிப்பாளர்களைவிட மறுமைநாள்வரை மேலோங்கச் செய்பவனாகவும் இருக்கின்றேன். பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்ப வேண்டும். அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்தவற்றில் நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன். நிராகரிப்பாளர்களுக்கு இவ்வுலகிலும் மறுவுலகிலும் கடுமையான தண்டனை அளிப்பேன். அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். நம்பிக்கைகொண்டு நற்செயல்கள் புரிந்தவர்களுக்கு அவர்களின் கூலியை அவன் முழுமையாக வழங்கிடுவான். அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிக்க மாட்டான். இவை நாம் எடுத்துரைக்கும் வசனங்களும் ஞானம்நிறைந்த அறிவுரைகளுமாகும்.”

ஈசாவின் அழைப்பை நிராகரித்த யூத அறிஞர்கள், தலைவர்கள் அவருக்கு எதிராக சதித் திட்டங்கள் தீட்டினார்கள். அவரை சமூகத்திற்கு, வழிவழியாக வரக்கூடிய மரபுக்கு, முன்னோர்களின் வழிமுறைக்கு ஆபத்தானவராகக் காட்ட தங்களின் ஆட்களை அனுப்பி அவரிடம் சிக்கலான, தேவையற்ற கேள்விகளை கேட்டார்கள். அவர் விவேகமான பதில்களைக் கொண்டு அந்த கேள்விகளை எதிர்கொண்டார். அவர் மீது அவதூறுகளை சுமத்தினார்கள். அப்போது இருந்த ரோமப் பேரரசுவிடம் அவர் ரோம அரசுக்கு எதிராக மக்களைத் திரட்டுகிறார், தம்மை யூதர்களின் அரசர் என்று கூறிக் கொள்கிறார் என்றெல்லாம் போட்டுக் கொடுத்தார்கள். இவ்வாறாக அவர்கள் தங்களால் இயன்ற அத்தனை வழிகளிலும் அவருக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்து கொண்டிருந்தார்கள். அல்லாஹ் அவர்களின் சூழ்ச்சிகள் அனைத்தையும் முறியடித்தான். இறுதியாக அவர்கள் அவரைக் கொலை செய்ய நாடியபோது அல்லாஹ் அவரைத் தன் பக்கம் திரும்ப அழைத்துக் கொண்டான். அவர்கள் வேறு யாரையோ கொன்று விட்டு அவரைக் கொன்றதாக எண்ணிக் கொண்டார்கள். அவர்கள் குழப்பத்திற்கு உள்ளாகி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டார்கள்.  

இந்த வசனத்தில் அல்லாஹ் இந்த நற்செய்தியைத்தான் எடுத்துரைக்கிறான். நான் உம்மைக் கைப்பற்றிக் கொள்வேன். என் பக்கம் உம்மை உயர்த்திக் கொள்வேன். நிராகரிப்பாளர்களின் சூழ்ச்சிகளிலிருந்து நான் உம்மைத் தூய்மைப்படுத்துவேன். உம்மைப் பின்பற்றுபவர்களை நிராகரிப்பாளர்களைவிட மறுமைநாள்வரை மேலோங்கச் செய்வேன். பிறகு நீங்கள் அனைவரும் என் பக்கமே திரும்பிவர வேண்டும். அப்போது நீங்கள் முரண்பட்டுக் கொண்டிருந்த விவகாரங்களில் உங்களுக்கு மத்தியில் தீர்ப்பளிப்பேன்.

இந்த வசனத்தில் நிராகரிப்பாளர்கள் என்ற வார்த்தை ஈசாவை நிராகரித்த யூதர்களையே குறிக்கிறது. ஈசாவைப் பின்பற்றுபவர்கள் அவர்களைவிட மேலோங்கியவர்களாகவே இருப்பார்கள். இது வழிதவறிய கிருஸ்தவர்களைக் குறிக்காது. உண்மையில் ஈசாவைப் பின்பற்றியவர்களையே குறிக்கும். முஹம்மது நபியவர்களின் தூதுத்துவத்திற்குப் பிறகு இது முஸ்லிம்களையே குறிக்கும். ஈசாவைப் பின்பற்றுவது என்பது அவர் கொண்டு வந்த இஸ்லாம் என்னும் மார்க்கத்தைப் பின்பற்றுவதுதான். இறைத்தூதர்கள் அனைவரும் இஸ்லாம் என்னும் மார்க்கத்தையே கொண்டு வந்தார்கள். இந்த வசனங்களில் இடம்பெற்றுள்ள ஈசா நபியின் நெருக்கமான சீடர்களின் பிரார்த்தனையும் இந்தக் கருத்தையே வலியுறுத்துகிறது. மேலோங்கி இருப்பார்கள் என்றால் எந்த வகையில்? அது ஆட்சயதிகாரத்தை மட்டும் குறிக்கக்கூடியதா? இல்லை, அது ஆட்சியதிகாரத்தையும் குறிக்கலாம். ஆனால் மேலோங்குதல் என்பது மனதளவில், அறிவுத்தளத்தில், ஆதாரத்தின், தெளிவின் அடிப்படையில், ஆன்மீக ரீதியாக மேலோங்குதலையே முதன்மையாகக் குறிக்கிறது.

ஈசா நபியை நிராகரித்த யூதர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தண்டிக்கப்படுவார்கள். நபியின் அழைப்பை நிராகரித்தவர்கள் அமைதியான, நிம்மதியான ஒரு வாழ்க்கையை வாழ முடியாது. நபியின் அழைப்புக்குப் பதிலளித்து அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு அவன் காட்டிய வழியில் நற்செயல்களில் ஈடுபடுபவர்கள் தங்களுக்கான முழுமையான கூலியை, நன்மையைப் பெறுவார்கள். ஈசாவைக் குறித்து பேசக்கூடிய இந்த வசனங்கள் ஞானம்நிரம்பிய அறிவுரைகளை உள்ளடக்கியவையாகும். அவை வெறுமனே அவரது வரலாற்றைப் பேசக்கூடியவை அல்ல.

கிருஸ்தவர்களுக்கான விளக்கம் தன் இறுதி நிலையை அடைகிறது. போதுமான தெளிவு வழங்கப்பட்டு விட்டது. சிக்கலாக்கி வைத்திருந்த அவர்களின் விவகாரம் தெளிந்த நீரோடைபோன்று தெளிவடைந்துவிட்டது. புரிந்துகொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்த விளக்கம் போதுமானது. இயல்பு நிலையில் நீடிக்கும் உள்ளம் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளும்.   

إِنَّ مَثَلَ عِيسَى عِنْدَ اللهِ كَمَثَلِ آدَمَ خَلَقَهُ مِنْ تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُنْ فَيَكُونُ الْحَقُّ مِنْ رَبِّكَ فَلَا تَكُنْ مِنَ الْمُمْتَرِينَ فَمَنْ حَاجَّكَ فِيهِ مِنْ بَعْدِ مَا جَاءَكَ مِنَ الْعِلْمِ فَقُلْ تَعَالَوْا نَدْعُ أَبْنَاءَنَا وَأَبْنَاءَكُمْ وَنِسَاءَنَا وَنِسَاءَكُمْ وَأَنْفُسَنَا وَأَنْفُسَكُمْ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلْ لَعْنَةَ اللهِ عَلَى الْكَاذِبِينَ إِنَّ هَذَا لَهُوَ الْقَصَصُ الْحَقُّ وَمَا مِنْ إِلَهٍ إِلَّا اللهُ وَإِنَّ اللهَ لَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللهَ عَلِيمٌ بِالْمُفْسِدِينَ

3:59-64. “அல்லாஹ்விடத்தில் ஈசாவின் உதாரணம் ஆதமைப் போன்றதாகும். அல்லாஹ் அவரை மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் ஆகுக என்று கூறினான். அவர் ஆகிவிட்டார். இது உம் இறைவனிடமிருந்து வந்துள்ள சத்தியமாகும். ஆகவே நீர் சந்தேகம் கொள்வோரில் ஒருவராகி விடாதீர். இதுகுறித்து தெளிவான அறிவு வந்த பின்னரும் யாரேனும் இவ்விசயத்தில் உம்மிடம் தர்க்கம் செய்தால் அவர்களிடம் நீர் கூறிவிடும்: “வாருங்கள், எங்கள் மகன்களையும் உங்கள் மகன்களையும் எங்கள் பெண்களையும் உங்கள் பெண்களையும் அழைத்து இன்னும் எங்களையும் உங்களையும் சேர்த்து “பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்” என்று நாம் ஒன்றுசேர்ந்து பிரார்த்தனை செய்வோம். நிச்சயமாக இதுதான் உண்மையான சம்பவமாகும். அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய வேறு இறைவன் இல்லை. அவன் யாவற்றையும் மிகைத்தவனாகவும் ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான். அவர்கள் புறக்கணித்தால்… அல்லாஹ் குழப்பவாதிகளை நன்கறிந்தவன்.

அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டு ஈசா தந்தையின்றி படைக்கப்பட்டது அவர் இறைத்தன்மை கொண்டவர் என்பதற்கோ அவர் இறைவனின் மகன் என்பதற்கோ ஆதாரமாகாது. ஆதம் தாய், தந்தை இருவரும் இன்றி படைக்கப்பட்டவர். அல்லாஹ் ஆதமை மண்ணிலிருந்து படைத்தான். ஈசாவின் பிறப்பு ஆச்சரியமானது என்றால் ஆதமின் பிறப்பு அதைவிட ஆச்சரியமானது. அவன் ‘ஆகு’ என்று கட்டளையிட்டான். அவர் ஆகிவிட்டார்.

இந்த உதாரணம் கிருஸ்தவர்களின் வாதங்கள் அனைத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது. எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி உண்மையை தெளிவுபடுத்தி விடுகிறது. பொய்யை நிலைநிறுத்துவதற்கு ஆயிரம் வாதங்கள் தேவைப்படுகின்றன. உண்மை வந்துவிட்டால் அவை இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடுகின்றன. இதுதான் உங்கள் இறைவனிமிருந்து வந்துள்ள உண்மை. ஆகவே நீங்கள் சந்தேகம் கொள்பவர்களாக ஆகிவிடாதீர்கள். அவர்களின் வாதங்கள் உங்களை எந்த வகையிலும் பாதித்துவிட வேண்டாம்.

இந்த தெளிவான உண்மை உங்களிடம் வந்த பிறகும் யாரேனும் உங்களிடம் இது தொடர்பாக தர்க்கம் செய்தால் அவர்களை முபாஹலாவுக்கு அழையுங்கள். முபாஹலா என்றால் இரு தரப்பினரும் ஒன்றுசேர்ந்து பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் என்று பிரார்த்தனை செய்வதாகும். அவ்வாறு பிரார்த்தனை செய்யும்போது இரு தரப்பினரும் தங்களின் குடும்பத்தாரை அழைத்து வந்திருக்க வேண்டும்.

இஸ்லாம் தேவையற்ற விவாதங்களை விரும்புவதில்லை. உண்மையைப் புரிந்துகொள்ள அழகிய முறையில் விவாதம் செய்யலாம். ஆனால் அது முடிவிலியாக சென்று கொண்டேயிருக்கக் கூடாது. அது ஒருவிதமான தர்க்கப் போராக ஆகிவிடக்கூடாது. எந்தப் பயனும் அற்ற மலட்டு விவாதங்கள் குழப்பத்தையே அதிகரிக்கின்றன. அவை உண்மையைப் புரிந்து கொள்ளும் பாதையில் பெரும் தடைக்கற்களாகும்.

அன்றைய நஜ்ரான் தேசத்து கிருஸ்தவர்கள் இந்த முபாஹலா அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. பயந்து பின்வாங்கி விட்டார்கள். தெளிவான ஆதாரம் இருந்தும் வீம்புடன் தங்களின் ஈகோவை நிலைநிறுத்தும்பொருட்டு விவாதம் செய்ய வருபவர்களுடன் நாம் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை இதுதான். சத்தியத்தை தெளிவுபடுத்த வேண்டியது நம்முடைய பொறுப்பு. தெளிவான ஆதாரங்களை நாம் முன்வைத்த பிறகும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனில் நாம் அவர்களைவிட்டு விலகிவிட வேண்டும். நாம் அவர்களுடன் கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறை இதுதான்: “நீங்கள் விரும்பும் பாதையில் நீங்கள் செல்லுங்கள். சத்தியத்தின் பாதையில் நாங்கள் செல்வோம். உங்கள் செயலின் விளைவை நீங்கள் அனுபவிப்பீர்கள். எங்கள் செயலின் விளைவை நாங்கள் அனுபவிப்போம். உங்களுடன் நாங்கள் தேவையற்ற விவாதங்களில் ஈடுபட மாட்டோம்.”   

ஈசா தொடர்பான உண்மையான விசயம் இதுதான். அல்லாஹ் எந்த இணையும் துணையும் அற்றவன். அவன் மட்டுமே வணக்கத்திற்குத் தகுதியான இறைவன். அவன் பேராற்றல் கொண்டவன். அவனை யாரும் மிகைக்க முடியாது. அவனிடமிருந்து வெளிப்படும் ஒவ்வொரு செயலும் ஞானமும் நோக்கம் நிரம்பியவை. அவனிடமிருந்து வீணான எந்தவொன்றும் வெளிப்படாது. அவர்கள் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவில்லைஎனில் அவர்கள்தாம் குழப்பவாதிகள். அவர்கள் தங்களின் இந்த நிலைப்பாட்டின் வழியாக மக்களுக்கு மத்தியல் குழப்பம் செய்கிறார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து நன்கறிந்தவன்.

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply