அடுத்து யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் அவர்களின் தூதர்கள்மூலம் அல்லாஹ் பெற்ற வாக்குறுதி நினைவூட்டப்படுகிறது. இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரும்போது அவர்களை உண்மைப்படுத்த வேண்டும், அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று யூதர்களிடமும் கிருஸ்தவர்களிடமும் உறுதிமொழி பெறப்பட்டிருந்தது. இந்த உறுதிமொழி குறித்து தவ்ராத்திலும் இன்ஜீலிலும் குறிப்புகள் காணப்படுகின்றன. ஆனால் அந்த தூதர் தங்கள் இனத்திலிருந்து வரவில்லை என்ற காரணத்திற்காக அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். உண்மைப்படுத்தி உதவி செய்ய வேண்டியவர்கள் நிராகரித்து மற்ற மக்களை தடுக்கக்கூடியவர்களாக மாறினார்கள். அடுத்து வரக்கூடிய வசனங்களில் அவர்களே பேசப்படுகிறார்கள்.
وَإِذْ أَخَذَ اللهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنَ الشَّاهِدِينَ فَمَنْ تَوَلَّى بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ أَفَغَيْرَ دِينِ اللهِ يَبْغُونَ وَلَهُ أَسْلَمَ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ طَوْعًا وَكَرْهًا وَإِلَيْهِ يُرْجَعُونَ
3:81-83. “அல்லாஹ் தூதர்கள் தொடர்பாக உங்களிடம் பெற்ற வாக்குறுதியை நினைவுகூருங்கள்: “நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் வழங்கிய பிறகு உங்களிடமுள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடிய தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவருக்கு உதவிபுரிய வேண்டும். இதை நீங்கள் ஒப்புக் கொண்டீர்களா? இதன்மீது என் வாக்குறுதியை ஏற்றுக் கொண்டீர்களா?” என்று அவன் கேட்டான். “நாங்கள் ஒப்புக் கொண்டோம்” என்று அவர்கள் கூறினார்கள். “நீங்கள் சாட்சியாக இருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கின்றேன்” என்று அவன் கூறினான். இதற்குப் பிறகும் புறக்கணிப்பவர்கள்தாம் அவனுக்குக் கட்டுப்படாதவர்கள். அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறொன்றையா விரும்புகிறார்கள்? வானங்களிலும் பூமியிலும் உள்ளவை யாவும் விரும்பியோ விரும்பாமலோ அவனுக்கே கட்டுப்படுகின்றன. அனைத்தும் அவன் பக்கமே திரும்பக் கொண்டு வரப்படும்.”
இது இஸ்ரவேல் சமூகத்தாரிடம் அல்லாஹ் பெற்ற வாக்குறுதி. ஒவ்வொரு சமூகத்தாரிடமும் அவர்களின் தூதர்கள் வழியாக இப்படியான வாக்குறுதி பெறப்பட்டிருக்கிறது. இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் யூதர்களும் கிருஸ்தவர்களும் அல்லாஹ் அவர்களிடம் பெற்ற வாக்குறுதியைக் கொண்டு நினைவூட்டப்படுகிறார்கள். அவர்கள் இறுதி நபியை எதிர்பார்ப்பவர்களாக இருந்தார்கள். அவரைக் குறித்த முன்னறிவிப்புகள் அவர்களின் வேதத்தில் தெளிவாக இடம்பெற்றிருந்தன. அந்த தூதர் வந்த பிறகு, அவர்தாம் தாங்கள் எதிர்பார்க்கும் உண்மையான தூதர் என்பதை அறிந்துகொண்ட பிறகு அவர்கள் அவரை ஏற்றுக்கொள்ள மறுத்தார்கள். அதற்கான சாக்குப்போக்குகளை முன்வைத்தார்கள். அந்த தூதர் அவர்களிடம் உள்ளவற்றை உண்மைப்படுத்தக்கூடியவர். அவரது வருகை அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்க வேண்டும். அவர்கள் யாரைக் குறித்து மக்களிடம் கூறிக் கொண்டு இருந்தார்களோ அவரது வருகை அல்லாஹ்வின் மீதான அவர்களின் நம்பிக்கையை இன்னும் உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். அவனிடம் அவர்கள் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் நேரம் என்று அவர்கள் மனநிறைவோடு இருந்திருக்க வேண்டும். ஆனால் நிகழ்ந்தது அதற்கு மாறான ஒன்று. அவரை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பதற்கான சாக்குப்போக்குகளை அவர்கள் அடுக்கினார்கள். அவரை நோக்கி வந்த மற்ற மக்களிடமும் சந்தேகங்களை ஏற்படுத்தினார்கள். உண்மையில் அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தையோ அவனுக்குக் கட்டுப்படுதலையோ விரும்பவில்லை. அவர்களிடம் இருந்தது அப்பட்டமான இனவாதம். கர்வமும் பொறாமையும் அவர்களை வழிகெடுத்து விட்டன. அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கும் பாவிகள். தங்கள் பிள்ளைகளை அறிந்துகொள்வதைப் போல இந்த தூதரை அறிந்துகொண்டவர்கள் அதற்குப் பிறகும் ஏற்றுக்கொள்ளவில்லையெனில் அவர்கள் பாவிகள் அன்றி வேறு யார்? அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை விரும்பியிருந்தால் இந்த தூதரை ஏற்றுக்கொண்டு அவரை வலுப்படுத்தி இருப்பார்கள்.
இந்தப் பாதையில் பணி செய்யும் அழைப்பாளர்களை உண்மைப்படுத்துவதும் அவர்களை வலுப்படுத்துவதும் நம்முடைய பொறுப்பு. ஓர் அழைப்பாளன் இன்னொரு அழைப்பாளனை உண்மைப்படுத்த வேண்டும். தன்னால் இயன்றவரை சக அழைப்பாளனுக்கு உதவி செய்ய வேண்டும். இது அல்லாஹ்வின் பாதை. இந்தப் பணி அவனுடைய பணி. இந்தப் பாதையும் இந்தப் பணியுமே அழைப்பாளர்களை ஒன்றிணைக்க வேண்டும். உலகியல் ஆதாயங்களின் அடிப்படையில் ஒன்றிணைபவர்கள் இஸ்லாத்தின் அழைப்பாளர்களாக இருக்க முடியாது. அல்லாஹ்வின் பாதையில் செயல்படும் அழைப்பாளனை அவன் அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறான் என்பதை அறிந்துகொண்டே அவனை ஏற்றுக்கொள்ள மறுப்பதும் அவனுக்குத் தடைகளை ஏற்படுத்துவதும் பிடிவாதம்கொண்ட யூத மனநிலை. இது மிகவும் ஆபத்தான மனநிலை.
“அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தைத் தவிர வேறொன்றையா விரும்புகிறார்கள்?” அவர்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்றுக்கொள்ள விரும்பவில்லையெனில் வேறு எதை விரும்புகிறார்கள்? அவர்களிடம் இருப்பது அப்பட்டமான இனவாதம். அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட மறுக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அவர்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டே தீர வேண்டும். இந்த மார்க்கத்தை மனமுவந்து ஏற்றுக்கொள்வதன்மூலம் மனிதர்கள் விரும்பி அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்படுகிறார்கள். இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் வெறுத்தாலும் அவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டுதான் இருக்கிறார்கள். இங்கு அவனுடைய கட்டளையை மீறி யாரும் எதுவும் செய்துவிட முடியாது. வானங்களிலும் பூமியிலும் ஒவ்வொன்றும் விரும்பியோ விரும்பாமலோ அவனுடைய கட்டளையின்படியே செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. மனிதர்களுக்கு குறிப்பிட்ட அளவுதான் சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களின் சுதந்திரம் வரம்புக்கு உட்பட்டது. ஒன்றை ஏற்கவும் நிராகரிக்கவும் அவர்களுக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களின் விதியை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்களின் வாழ்க்கையை, இந்த உலகியல் செயல்படும் நியதிகளை அவர்கள் தீர்மானிக்க முடியாது. அவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள். அவர்கள் அவன் பக்கமே திரும்பிச் செல்ல வேண்டும். அப்போது இங்கு கொடுக்கப்பட்ட வரம்புக்குட்பட்ட சுதந்திரத்தை அவர்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்பது குறித்து விசாரிக்கப்படுவார்கள்.
மனிதர்கள் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தோடு, விதிகளோடு ஒத்திசைந்து செல்ல வேண்டும் எனில், அவர்கள் தங்களின் இயல்புக்கு உகந்த ஒரு வாழ்க்கையை வாழ வேண்டும் எனில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த வழிகாட்டலை ஏற்று அதன்படி வாழ வேண்டும். அதுதான் இங்கு நிம்மதியான, அமைதியான வாழ்க்கையைப் பெறுவதற்கான ஒரே வழி. அதுதான் இவ்வுலகிலும் மறுவுலகிலும் வெற்றி பெறுவதற்கான ஒரே வழி. அதுதான் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்கான ஒரே வழி. இந்த வழியைப் புறக்கணிப்பவர்கள் தங்களுக்குத் தாங்களே தீங்கினை ஏற்படுத்திக் கொள்வார்கள். இந்த வழியைப் புறக்கணிப்பவர்கள் பிறழ்வின் பாதையில் தறிகெட்டு அழிவார்கள்.
அவர்கள் எப்படி வேண்டுமனாலும் இருக்கட்டும். நீங்கள் உங்களின் ஈமானை அறிவித்து விடுங்கள். உங்களின் உள்ளத்தில் எவ்வித இனவாதத்தின் சுவடும் இல்லை என்பதையும் நீங்கள் அல்லாஹ்வின் மார்க்கத்தையே விரும்புகிறீர்கள் என்பதையும் அறிவித்து விடுங்கள்.
قُلْ آمَنَّا بِاللهِ وَمَا أُنْزِلَ عَلَيْنَا وَمَا أُنْزِلَ عَلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَالنَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
3:84-85. “நீர் கூறும்: “நாங்கள் அல்லாஹ்வின் மீதும் எங்களுக்கு அருளப்பட்டதன் மீதும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் யஅகூபின் வழித்தோன்றல்கள் ஆகியோருக்கு அருளப்பட்டதன் மீதும் மூசா, ஈசா மற்றும் ஏனைய தூதர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து அருளப்பட்டதன் மீதும் நம்பிக்கைகொண்டுள்ளோம். அவர்களுக்கு மத்தியில் நாங்கள் எவ்வித பாகுபாடும் நாங்கள் காட்ட மாட்டோம். நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டவர்களாக – முஸ்லிம்களாக – இருக்கின்றோம்.” யார் இஸ்லாத்தை விடுத்து வேறொரு மார்க்கத்தை விரும்புகிறாரோ அது அவரிடமிருந்து ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்தவர்களுடன் இருப்பார்.”
நாங்கள் எங்களுக்கு அருளப்பட்ட வேதத்தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் மற்றும் அவரின் வழித்தோன்றல்கள் ஆகியோருக்கு அருளப்பட்ட வேதங்களையும் மூசாவுக்கும் ஈசாவுக்கும் அருளப்பட்ட வேதங்களையும் நம்புகிறோம். நாங்கள் எங்களுக்கு அனுப்பப்பட்ட தூதரையும் உங்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்களையும் இன்னும் வெவ்வேறு சமூகத்தினருக்கு அனுப்பப்பட்ட தூதர்களையும் நம்புகிறோம். நாங்கள் அவர்களுக்கு மத்தியில் எந்த பாகுபாடும் காட்ட மாட்டோம். அனைவரும் அல்லாஹ்விடமிருந்து வந்த தூதர்கள்தாம். அவர்கள் அனைவரும் இஸ்லாம் என்ற ஒரே மார்க்கத்தையே கொண்டு வந்தார்கள். நாங்கள் அவன்மீதே நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அவனுடைய மார்க்கத்தையே பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அதுதான் அவனிடத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம். அது ஒன்றுதான் அவனுடைய திருப்தியைப் பெறுவதற்கான ஒரே வழி. அந்த வழியைப் புறக்கணித்துவிட்டு வேறு எந்த வழியில் சென்றாலும் அவனுடைய திருப்தியைப் பெற முடியாது. அது இவ்வுலகிலும் மறுவுலகிலும் நஷ்டத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.
மனிதர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்று வெற்றியடைவதற்கு முஹம்மது நபியவர்களின் வழியாக வழங்கப்பட்ட இந்த மார்க்கம் மட்டுமே ஒரே வழி. வேறு எந்த மார்க்கத்தைக் கொண்டும் அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற முடியும். அவன் பக்கம் செல்வதற்கு பல்வேறு வழிகள் இல்லை. இஸ்லாம் என்ற ஒரு வழியே இருக்கிறது. அவன் பக்கம் செல்வதற்கு பல்வேறு வழிகள் இருக்கின்றன என்று கூறுபவர்கள் அப்பட்டமாக அவன் மீதே இட்டுக்கட்டுகிறார்கள். எவ்வித சந்தேகத்திற்கும் இடமின்றி அவர்கள் வழிகேடர்கள். அவர்கள் முஸ்லிம்கள் பெயர்களைச் சுமந்திருந்தாலும் அவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
كَيْفَ يَهْدِي اللهُ قَوْمًا كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُوا أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءَهُمُ الْبَيِّنَاتُ وَاللهُ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ أُولَئِكَ جَزَاؤُهُمْ أَنَّ عَلَيْهِمْ لَعْنَةَ اللهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ خَالِدِينَ فِيهَا لَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْظَرُونَ إِلَّا الَّذِينَ تَابُوا مِنْ بَعْدِ ذَلِكَ وَأَصْلَحُوا فَإِنَّ اللهَ غَفُورٌ رَحِيمٌ
3:86-89. “நம்பிக்கைகொண்ட பிறகு நிராகரித்துவிட்ட மக்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழிகாட்டுவான்? அவர்கள் இந்த தூதர் உண்மையாளர் என்று சாட்சியம் அளித்திருந்தார்கள். அவர்களிடம் தெளிவான சான்றுகள் வந்திருந்தன. அல்லாஹ் அநியாயக்கார மக்களுக்கு நேர்வழிகாட்டுவதில்லை. அல்லாஹ்வும் வானவர்களும் மனிதர்கள் அனைவரும் இடுகின்ற சாபம்தான் அவர்களுக்கான தண்டனையாகும். அதிலேயே அவர்கள் என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள். அவர்களின் வேதனை குறைக்கப்படாது. அவர்களுக்கு அவகாசமும் அளிக்கப்படாது. ஆயினும் யார் அதற்குப் பிறகு பாவமன்னிப்புக் கோரி தங்களைத் சீர்படுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர. அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.”
அந்த வேதக்காரர்கள் தங்களிடம் வந்திருந்த சான்றுகளைக் கொண்டு, தங்கள் வேதங்களில் இருந்த முன்னறிவிப்புகளைக் கொண்டு இஸ்லாம்தான் அல்லாஹ்வின் மார்க்கம் என்பதையும் இந்த தூதர் உண்மையானவர் என்பதையும் அறிந்து கொண்டார்கள். அவர்கள் இந்த மார்க்கத்தை ஏற்றவர்களாக இறுதித் தூதரை எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதற்கு அவர்களே சாட்சியம் கூறிக் கொண்டும் இருந்தார்கள். இத்தனை விசயங்களுக்குப் பிறகும் அவர்கள் நிராகரித்தார்கள். அவர்கள் நேர்வழியை அதுதான் நேர்வழி என்று தெளிவாக அறிந்துகொண்ட பிறகு கர்வத்தினாலும் பொறாமையினாலும் அவர் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர் இல்லை என்பதனாலும் அதிலிருந்து பின்வாங்கினார்கள். அவர்கள் அறிந்துகொண்ட உண்மையை நிராகரித்தார்கள். இதன்மூலம் அவர்கள் பெரும் அநியாயக்காரர்களாகி விட்டார்கள். இப்படிப்பட்ட அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் எப்படி நேர்வழிகாட்டுவான்? அவன் காட்டிய நேரான வழியில் செல்லாமல் வேறு வழியில் செல்பவர்கள் அநியாக்காரர்களாவர். அவர்கள் தங்களுக்குத் தாங்களே அழிவைத் தேடிக் கொள்கிறார்கள்.
தங்களுக்கு வழங்கப்பட்ட அற்புதமான வாய்ப்பை தொலைத்து விட்டதனால் அவர்கள் அல்லாஹ்வின் அருளைவிட்டு தூரமாகி விட்டார்கள். அவனுடைய கோபத்திற்கும் சாபத்திற்கும் ஆளாகி விட்டார்கள். அவனுடைய வானவர்களும் அவர்களைச் சபிக்கிறார்கள். முதலாமவர்களாக, முன்மாதிரிகளாக மாற வேண்டிய அவர்கள் நிராகரிப்பாளர்களாக, மக்களை இந்தப் பாதையைவிட்டு தடுப்பவர்களாக மாறியதனால் மனிதர்கள் அனைவரின் சாபத்திற்கும் உள்ளாகி விட்டார்கள். அவர்கள் அந்த தண்டனையில் நிரந்தரமாக நீடித்திருப்பார்கள். அவர்களின் வேதனை குறைக்கப்படாது. அவர்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படாது. இதற்குப் பிறகு அவர்களுக்கு எந்த அவகாசமும் வழங்கப்படாது.
அவர்களுக்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. அவர்களுக்கான வாசல் இன்னும் அடைக்கப்படவில்லை. அவர்கள் தங்களின் பாவங்களை உணர்ந்து மன்னிப்புக் கோரினால், தங்களின் நடத்தையைச் சீர்படுத்திக் கொண்டால், மறைத்த உண்மைகளை வெளிப்படுத்தி இந்த மார்க்கத்தை ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் தங்களின் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னித்து விடுவான். ஏனெனில் அவன் பெரும் மன்னிப்பாளன், தொடர் கிருபையாளன்.
அல்லாஹ்வின் மன்னிப்பை பெற வேண்டும் எனில் வெறுமனே மன்னிப்புக் கேட்பது மட்டும் போதுமானது அல்ல, அவர்கள் தங்களின் தவறுகளை சீர்படுத்திக் கொள்ள வேண்டும், தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளை அவர்கள் சரிசெய்ய வேண்டும்.
யாருக்கு மன்னிப்பு இல்லை? யாருடைய பாவமன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது?
إِنَّ الَّذِينَ كَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُوا كُفْرًا لَنْ تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُولَئِكَ هُمُ الضَّالُّونَ إِنَّ الَّذِينَ كَفَرُوا وَمَاتُوا وَهُمْ كُفَّارٌ فَلَنْ يُقْبَلَ مِنْ أَحَدِهِمْ مِلْءُ الْأَرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُولَئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُمْ مِنْ نَاصِرِينَ
3:90,91. “நம்பிக்கைகொண்டபின் நிராகரித்து அந்த நிராகரிப்பிலேயே ஆழ்ந்து விடுபவர்களின் பாவமன்னிப்புக் கோரிக்கை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அவர்கள்தாம் வழிகெட்டவர்கள். நிராகரித்து அந்நிலையிலேயே மரணித்தும் விட்டவர்கள் பூமி நிரம்ப தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அவர்களுக்கு வதைக்கும் வேதனையுண்டு. அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.”
அவர்கள் நம்பிக்கை கொண்டார்கள். இதுதான் அல்லாஹ்விடமிருந்து வந்துள்ள மார்க்கம் என்பதை அறிந்துகொண்ட பிறகு நிராகரித்தார்கள். அவர்கள் அறியாமையினால் நிராகரிக்கவில்லை. பொறாமையினால், கர்வத்தினால் நிராகரித்தார்கள். பிறகு அந்த நிராகரிப்பில் பிடிவாதமாக நிலைத்திருந்தார்கள். இஸ்லாத்திற்கு எதிரான சூழ்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டும் அதனை மூர்க்கமாக எதிர்த்துக் கொண்டும் இருந்தார்கள். மரண வேளை நெருங்கும்போது பயத்தினால் பாவ மன்னிப்புக் கோருகிறார்கள். அவர்களின் பாவ மன்னிப்புக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. ஏனெனில் அவர்கள் தங்களை சீர்படுத்திக் கொள்ளவில்லை. அவர்களிடமிருந்து உண்மையான பாவ மன்னிப்புக் கோரிக்கையும் வெளிப்படவில்லை. அது வெறுமனே பயத்தின் வெளிப்பாடு. அது இறுதி நேரத்தில் வேறு வழியில்லாமல் அவர்களிடமிருந்து வெளிப்படுவது.
தாங்கள் என்னதான் பாவம் செய்தாலும் மன்னிக்கப்பட்டு விடுவோம் என்று வேதக்காரர்கள் எண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்தப் பிழையான கண்ணோட்டம் அவர்கள் நிராகரிப்பில் நீடிக்கச் செய்தது. இந்த வசனம் அவர்களின் பிழையான கண்ணோட்டத்திற்கே மறுப்பு வழங்குகிறது. அல்லாஹ் எங்களை மன்னித்து விடுவான் என்ற எண்ணத்தில் பாவங்களில் ஈடுபடுபவர்கள் ஒரு கட்டத்தில் அந்தப் பாவங்களால் சுற்றி வளைக்கப்பட்டு விடுவார்கள். அவர்கள் நேர்வழியின் பக்கம் திரும்ப முடியாத அளவு வெகுதூரம் விலகிச் சென்று விடுவார்கள். அவர்கள் வழிகெட்டவர்கள். அவர்களிடமிருந்து வெளிப்படும் பாவமன்னிப்புக் கோரிக்கைகூட பெயரளவிலானதாக, வேறு வழியில்லாமல் செய்யப்பட்டதாகவே இருக்கும். அதற்கு அல்லாஹ்விடத்தில் எந்த மதிப்பும் இல்லை.
யார் நிராகரித்து அதே நிலையிலேயே மரணித்தும் விடுகிறார்களோ அவர்களிடமிருந்து எந்த ஈட்டுத் தொகையும் பெறப்பட மாட்டாது. அவர்கள் என்னதான் கொடுத்தாலும், இந்த பூமி நிரம்ப தங்கத்தைக் கொடுத்தாலும் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து தப்ப முடியாது. அவர்களுக்கு உதவி செய்பவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
