மதுவும் சூதாட்டமும்

You are currently viewing மதுவும் சூதாட்டமும்

உயிரையும் பொருளையும் அர்ப்பணித்தல், செலவு செய்வது தொடர்பான இந்தப் பின்னணியில் மதுவும் சூதாட்டமும் குறித்த கேள்வி இடம்பெறுவது கவனிக்கத்தக்கது. மௌலானா அமீன் அஹ்ஸன் இஸ்லாஹி கூறுகிறார்: “இன்று மதுவும் சூதாட்டமும் முழுக்க முழுக்க தீமையின் கூறுகளையே கொண்டிருப்பதுபோல அன்றைய அறபுக் கலாச்சாரத்தில் அவை முழுக்க முழுக்க தீமையின் கூறுகளை மட்டுமே கொண்டிருக்கவில்லை. சில பயன்களும் அவற்றோடு கலந்திருந்தன. பஞ்சம், பட்டினி ஏற்படும் சமயங்களில் அறபுக்களில் செல்வந்தர்கள் மது குடித்து விட்டு சூதாட்டம் ஆடுவார்கள். அதில் ஜெயிப்பவர்கள் அடைந்த இலாபத்தை ஏழைகளுக்கு வழங்கி விடுவார்கள். இது போன்ற சூதாட்ட சபைகளில் கலந்து கொள்ளாத செல்வந்தர்கள் கஞ்சர்களாக அறியப்பட்டார்கள். இது நம்முடைய காலகட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதற்காக கலை நிகழ்ச்சிகள், இசை, நடன நிகழ்ச்சிகள் நடத்தி பணம் சேகரிப்பதைப் போன்ற ஒரு வடிவமாக இருந்தது.”         

يَسْأَلُونَكَ عَنِ الْخَمْرِ وَالْمَيْسِرِ قُلْ فِيهِمَا إِثْمٌ كَبِيرٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَإِثْمُهُمَا أَكْبَرُ مِنْ نَفْعِهِمَا وَيَسْأَلُونَكَ مَاذَا يُنْفِقُونَ قُلِ الْعَفْوَ كَذَلِكَ يُبَيِّنُ اللهُ لَكُمُ الْآيَاتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ وَإِنْ تُخَالِطُوهُمْ فَإِخْوَانُكُمْ وَاللهُ يَعْلَمُ الْمُفْسِدَ مِنَ الْمُصْلِحِ وَلَوْ شَاءَ اللهُ لَأَعْنَتَكُمْ إِنَّ اللهَ عَزِيزٌ حَكِيمٌ

2:219,220. “மதுவையும் சூதாட்டத்தையும் குறித்து அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவ்விரண்டிலும் பெரும் பாவம் உள்ளது. மக்களுக்குச் சில பயன்களும் இருக்கின்றன. அவற்றால் ஏற்படும் பயனைவிட அவற்றின் பாவம்தான் அதிகம்.” தாங்கள் என்ன செலவு செய்ய வேண்டும்? என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “உங்கள் தேவை போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்.” இவ்வாறு இம்மையின், மறுமையின் விசயங்களைக் குறித்து நீங்கள் சிந்திக்கும்பொருட்டு அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அவர்கள் அநாதைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவர்களுக்கு நன்மையளிக்கக்கூடிய செயல்களைச் செய்வதே சிறந்ததாகும். நீங்கள் அவர்களை உங்களுடன் சேர்த்துக் கொண்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களாவர். சீர்திருத்தம் செய்பவரையும் குழப்பம் செய்பவரையும் அல்லாஹ் அறிவான். அவன் நாடியிருந்தால் உங்களைச் சிரமத்திற்குள்ளாக்கியிருப்பான். அல்லாஹ் பேராற்றல் கொண்டவனாகவும் ஞானம் மிக்கவனாகவும் இருக்கின்றான்.”  

மதுவும் சூதாட்டமும் மனிதனின் அறிவை மழுங்கடிக்கின்றன. அறிவு மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான அருட்கொடை. அதைக் கொண்டே மனிதன் தனித்துவமடைகிறான். எந்தக் காரணம் கொண்டு அது மழுங்கடிக்கப்படக்கூடாது. மனித அறிவை மழுங்கடிக்கும் ஒவ்வொன்றும் தடை செய்யப்பட வேண்டியவை ஆகும். அறிவு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் அவனிடமிருந்து வெளிப்படும் நற்செயல்கள்கூட பொருட்படுத்தத்தக்கவை அல்ல. மது குடித்து விட்டு போதையில் கொடை வள்ளலாக மாறி அவன் தன் செல்வங்களை மற்றவர்களுக்கு வாரி வழங்கலாம். அவை சிறிய அளவிலான பயன்கள்தாம். ஆனால் அதனால் ஏற்படும் தீங்குகள் ஏராளமானவை. அவற்றோடு ஒப்பிடும்போது அந்த பயன்கள் பொருட்படுத்தக்கவை அல்ல.

சூதாட்டமும் அப்படித்தான். மனித அறிவை மழுங்கடித்து விடுகிறது. இந்த வழியில் சம்பாதிப்பது இலகுவானது என்ற மாயையில் மனிதனை விழ வைத்து விடுகிறது. அவனது மூளையை கடுமையான பரபரப்பில், பதற்றத்தில் ஆழ்த்துகிறது. சூதாடிகள் இயல்பு வாழ்க்கையை தொலைத்து விடுவார்கள். சூதாட்டத்தில் தோற்றாலும் இழப்புதான். வென்றாலும் இழப்புதான். தோல்வியைவிட வெற்றி மறைமுகமான, கடுமையான இழப்புகளை கொண்டிருக்கும். மனம் தேவையற்ற பதற்றத்திற்கும் பரபரப்பிற்கும் ஆளாகி இயல்பு நிலையைத் தொலைத்து விடும். சூதாட்ட மனநிலை என்பது ஆபத்தானது. சூதாட்ட மனநிலையை உருவாக்கும் ஒவ்வொன்றிலிருந்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

பயனளித்து பயனடைதலே வியாபாரத்தில் அடிப்படை. பொருளை விற்ற நீங்களும் இலாபமடைவீர்கள். பொருளை வாங்கிய அவரும் திருப்தியடைவார். அதற்கு மாறாக மற்றவர்களின் இழப்பில் நீங்கள் இலாபமடைந்தால் அது சூதாட்டமாக மாறி விடும் அபாயம் இருக்கிறது. நீங்கள் பெறக்கூடிய இலாபத்தில் அவரது இழப்பும் வலியும் கோபமும் கலந்திருக்கிறது என்றால் உங்களின் வியாபாரம் சரியானதுதானா என்பதை பலமுறை நீங்கள் யோசிக்க வேண்டியிருக்கிறது. அல்லாஹ்வின் பாதையில் நாம் செய்யும் செலவுகள் சரியான வழியில் சம்பாதித்தவையாக இருக்க வேண்டும்.

“தாங்கள் என்ன செலவு செய்ய வேண்டும்? என்று அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “உங்கள் தேவை போக மீதமுள்ளதை செலவு செய்யுங்கள்”

இந்தக் கேள்வி முந்தைய வசனத்திலும் இடம்பெற்றது. இந்த வசனத்திலும் இடம்பெறுகிறது. ஒரே கேள்விதான். ஆனால் வேறு வேறு பதில்கள். உங்களின் தேவை போக எஞ்சியுள்ளதை அல்லாஹ்வின் பாதையில் அவனுடைய மார்க்கத்தை மேலோங்கச் செய்யும் பொருட்டு செலவு செய்யுங்கள். இந்தச் செலவு ஸகாத், தர்மம் தவிர்த்து இந்த மார்க்கத்தை மேலோங்கச் செய்யும்பொருட்டு, இந்த சமூகத்தை பலப்படுத்தும்பொருட்டு செய்யப்படும் செலவு ஆகும். இந்த மார்க்கத்தின் மீது பெரும் பற்று கொண்டவர்கள் தங்களின் செலவுகள் போக மீதமுள்ள அனைத்தையும் இதற்காகவே செலவு செய்ய வேண்டும் என்று எண்ணுவார்கள். உண்மையில் இது அவர்கள் செய்யும் இலாபகரமான வியாபாரம். செலவு செய்பவர்களிடம்தான் செல்வம் வந்து குவியும். இதன்மூலம் அவர்கள் இவ்வுலகிலும் மறுவுலகிலும் இலாபமடையக்கூடியவர்களாக இருப்பார்கள்.

நீங்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் தன் கட்டளைகளை உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். எந்தவொன்றும் இவ்வுலக நன்மைகளையும் மறுவுலக நன்மைகளையும் ஒருசேர கவனத்தில் கொண்டே அணுகப்பட வேண்டும். மனிதர்கள் ஒன்று இவ்வுலக நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு உலகியல்வாதிகளாக மாறிவிடுகிறார்கள் இல்லையெனில் மறுவுலக நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு இவ்வுலகின் அனுமதிக்கப்பட்ட இன்பங்களைக்கூட விட்டுவிடுகிறார்கள். அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கிய சட்டங்கள் இவ்வுலக நன்மைகளையும் மறுவுலக நன்மைகளையும் ஒருசேர கவனத்தில் கொண்டவை. சிந்திப்பவர்கள் சான்றுகளைக் கண்டு கொள்வார்கள்.

215ஆவது வசனத்தில் ஒரு மனிதன் தனது தாய்தந்தை, நெருங்கிய உறவினர் ஆகியோருக்கு அடுத்தபடியாக அநாதைகளுக்காக செலவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த வசனம் அவர்களிடம் இருக்கும் செல்வங்களை நல்ல முறையில் பயன்படுத்துவது தொடர்பாகப் பேகிறது. அநாதைகளின் செல்வங்களை உண்பவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் நிரப்பிக் கொள்கிறார்கள் என்ற வசனம் நம்பிக்கையாளர்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தி விட்டது. ஆகவே அவர்கள் அநாதைகளின் செல்வங்களை எந்த வகையிலும் பயன்படுத்தாமல் முற்றிலுமாக விலகி இருக்கத் தொடங்கினார்கள். அவர்களின் செல்வங்கள் அப்படியே விடப்பட்டால் அவை வீணாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அவற்றைப் பாதுகாப்பதும் பெருக்குவதும் அவசியம். அவற்றை உங்களின் செல்வங்களுடன் சேர்த்து அவற்றையும் நீங்கள் பெருக்கலாம். இந்த நோக்கத்துடன் அவற்றைப் பயன்படுத்துவது சிறந்ததுதான் என்று கூறப்படுகிறது. அல்லாஹ் உள்ளங்களை அறியக்கூடியவன். அவற்றை நல்ல நோக்கத்திற்காக பயன்படுத்துவர்களையும் தீய நோக்கத்திற்காகப் பயன்படுத்துபவர்களையும் அவன் அறிவான். அல்லாஹ் கொடுத்த இந்த அனுமதியை தவறாகப் பயன்படுத்தி விடாதீர்கள். அவன் நாடியிருந்தால் இவ்வாறுகூட அனுமதி அளிக்காமல் உங்களை சிரமத்தில் ஆழ்த்தியிருப்பான். அவன் உங்களுக்கு இலகுவை ஏற்படுத்தி இருக்கிறான்.

“நீங்கள் அவர்களை உங்களுடன் சேர்த்துக் கொண்டால் அவர்கள் உங்கள் சகோதரர்களாவர்”

திருமண உறவின் மூலமாக நீங்கள் அவர்களை உங்களுடன் சேர்த்துக் கொண்டால் அதாவது அநாதைகளின் தாய்மார்களை மணமுடிப்பதன் மூலமாக நீங்கள் அவர்களை உங்களுடன் சேர்த்துக் கொண்டால் அவர்கள் உங்களின் சகோதரர்களாவர். ஆனால் அந்தப் பெண்கள் இணைவைப்பவர்களாக இருந்தால் அவர்களை நீங்கள் மணமுடிக்கக்கூடாது.    

وَلَا تَنْكِحُوا الْمُشْرِكَاتِ حَتَّى يُؤْمِنَّ وَلَأَمَةٌ مُؤْمِنَةٌ خَيْرٌ مِنْ مُشْرِكَةٍ وَلَوْ أَعْجَبَتْكُمْ وَلَا تُنْكِحُوا الْمُشْرِكِينَ حَتَّى يُؤْمِنُوا وَلَعَبْدٌ مُؤْمِنٌ خَيْرٌ مِنْ مُشْرِكٍ وَلَوْ أَعْجَبَكُمْ أُولَئِكَ يَدْعُونَ إِلَى النَّارِ وَاللهُ يَدْعُو إِلَى الْجَنَّةِ وَالْمَغْفِرَةِ بِإِذْنِهِ وَيُبَيِّنُ آيَاتِهِ لِلنَّاسِ لَعَلَّهُمْ يَتَذَكَّرُونَ

2:221. “இணைவைக்கும் பெண்களை அவர்கள் நம்பிக்கைகொள்ளும்வரை நீங்கள் மணமுடிக்காதீர்கள். இணைவைக்கும் பெண் உங்கள் மனம்கவர்ந்தவளாக இருந்தாலும் நம்பிக்கைகொண்ட அடிமைப் பெண் அவளைவிடச் சிறந்தவளாவாள். இணைவைக்கும் ஆண்கள் நம்பிக்கைகொள்ளும்வரை அவர்களுக்கு உங்கள் பெண்களை மணமுடித்துக் கொடுக்க வேண்டாம். அவன் உங்களுக்குப் பிடித்தமானவனாக இருந்தாலும் நம்பிக்கைகொண்ட அடிமையாக உள்ள ஆண் அவனைவிடச் சிறந்தவராவார். அவர்கள் நரகத்தின் பக்கம் அழைக்கிறார்கள். அல்லாஹ் தன் கட்டளையால் உங்களை சுவனத்தின் பக்கமும் மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் அறிவுரை பெறும்பொருட்டு அவன் தன் கட்டளைகளைத் தெளிவுபடுத்துகிறான்.”

திருமணம் என்பது இரு மனங்களின் இணைவு ஆகும். அது வெறுமனே உடல்களின் இணைவு அல்ல. இரு மனங்களும் ஒத்திசைவான கண்ணோட்டங்களைக் கொண்டிருக்க வேண்டும். திருமண உறவு என்பது ஒருவர் மற்றவர் மீது ஆழமான தாக்கங்களை செலுத்தும் நெருக்கமான உறவு.

ஒரு நம்பிக்கையாளன் இணைவைக்கும் பெண்ணை மணமுடிக்கக்கூடாது. அவள் அழகும் சிறப்பும் வசீகரமும் கொண்டிருந்தாலும் அவன் அவள் மீதான காதலில் விழுந்து விட்டாலும் அவள் நம்பிக்கை கொள்ளும்வரை அவளை மணமுடிக்கக்கூடாது. அவளைவிட அல்லாஹ்வின் மீது நம்பிக்கைகொண்ட அடிமைப்பெண் சிறந்தவள் ஆவாள். அதேபோன்று ஒரு நம்பிக்கையாளன் தன் பொறுப்பில் உள்ள பெண்களை இணைவைக்கும் ஆண்களுக்கு மணமுடித்துக் கொடுக்கக் கூடாது. அவர்கள் உயர்குடியில் உள்ளவர்களாக, பெரும் பதவியில் இருப்பவர்களாக, ஆளுமைத்திறன் கொண்டவர்களாக இருந்தாலும் சரியே. அவர்களைவிட நம்பிக்கை கொண்ட, அடிமைகளாக இருக்கும் ஆண்கள் சிறந்தவர்கள் ஆவர். இங்கு ஈமான்தான் முதன்மையானது. அதற்குப் பிறகுதான் மற்றவை. ஈமான் அன்றி மற்றவை எதுவும் செல்லுபடியாகாது. ஈமானே அனைத்திற்கும் அழகையும் மதிப்பையும் அளிக்கிறது.

கணவன், மனைவி உறவு புதியதொரு குடும்பத்தை உருவாக்கும் நெருக்கமான உறவு. ஒத்திசைவான, அடிப்படையான கண்ணோட்டங்கள் இன்றி அந்த உறவு சீராக நிலைபெற முடியாது. இணைவைப்பாளர்கள் எந்த அடித்தளமும் அற்றவர்கள். தங்களின் ஆன்மீக உணர்வுகளை மூட நம்பிக்கைகளில் செலவிடுபவர்கள். மரபு வழியாகவும் சூழலின் பாதிப்பினாலும் அவர்கள் பின்பற்றும் சில பழக்கவழக்கங்களைத் தவிர வாழ்வொழுங்கு என்று எதுவும் அவர்களிடம் இருக்காது.     

அவர்கள் தங்களின் செயல்பாடுகளின் வழியாக நம்மை நரகத்தின் பக்கம் அழைக்கிறார்கள். அவர்களுடன் நெருங்கிய உறவில் இருப்பவர்கள் அவர்களைப் போன்று ஆகிவிடலாம். மனிதர்கள் தங்களின் செயல்பாடுகள் வழியாக தொடர்ந்து அழைப்பு விடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். செயல்வழி அழைப்பு வீரியமானது. மனம் பலவீனமாக இருக்கும் சமயத்தில் சொல்லப்படும் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் ஆபத்து இருக்கிறது.           

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply