யூதர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாததற்கான காரணம் இறுதித் தூதர் முஹம்மது நபியவர்கள் தங்கள் இனத்திலிருந்து வரவில்லை என்பதுதான். நுபுவ்வத் எனப்படும் தூதுத்துவம் தங்கள் இனத்தாருக்கு மட்டுமே உரியது என்று அவர்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். அந்த அடிப்படையில்தான் அவர்கள் தங்களைக் குறித்து ‘இறைவனால் தேர்வு செய்யப்பட்டவர்கள்’ என்று வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். தங்களை நரக நெருப்பு தீண்டாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டிருந்ததும் இதனடிப்படையில்தான். உண்மையில் மனித சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் அவர்கள் அந்தப் பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றவில்லை. அதைக் கொண்டு பெருமையடித்தார்கள். மற்ற சமூகங்களை இழிவாகக் கருதினார்கள். அவர்களிடமிருந்து அந்தப் பொறுப்பு பறிக்கப்பட்டு முஸ்லிம்களின் வசம் ஒப்படைக்கப்படுகிறது. அடுத்து வரக்கூடிய வசனங்கள் இதையே தெளிவுபடுத்துகின்றன. பிரார்த்தனையின் வடிவில் வெளிப்படுத்தப்படும் இந்தச் செய்தி முஸ்லிம்களுக்கான பல்வேறு பாடங்களை, எச்சரிக்கைகளை உள்ளடக்கி இருக்கிறது.
قُلِ اللهُمَّ مَالِكَ الْمُلْكِ تُؤْتِي الْمُلْكَ مَنْ تَشَاءُ وَتَنْزِعُ الْمُلْكَ مِمَّنْ تَشَاءُ وَتُعِزُّ مَنْ تَشَاءُ وَتُذِلُّ مَنْ تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ تُولِجُ اللَّيْلَ فِي النَّهَارِ وَتُولِجُ النَّهَارَ فِي اللَّيْلِ وَتُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَتُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ
3:26,27. “நீர் கூறும்: “அல்லாஹ்வே! ஆட்சியதிகாரத்தின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகின்றாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறிக்கின்றாய். நீ நாடியோரைக் கண்ணியப்படுத்துகின்றாய். நீ நாடியோரை இழிவுபடுத்துகின்றாய். நன்மைகள் அனைத்தும் உன் கைவசமே உள்ளன. நீ எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். நீ இரவைப் பகலில் புகுத்துகின்றாய். பகலை இரவில் புகுத்துகின்றாய். நீ உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகின்றாய். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துகின்றாய். நீ நாடுவோருக்குக் கணக்கின்றி வழங்குகின்றாய்.”
சிறிய அளவிலான அதிகாரம் முதற்கொண்டு எல்லா வகையான அதிகாரங்களும் அவன் கைவசமே உள்ளன. நுபுவ்வத் மிகப் பெரிய அதிகாரம். அவன் நாடியவர்களுக்கு அதனை வழங்குகிறான். யாரும் எந்த அதிகாரத்திற்கும் சொந்தம் கொண்டாட முடியாது. அதிகாரம் பொறுப்புகளை உள்ளடக்கி இருக்கிறது. அது பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கானது. அது தனிப்பட்ட நலன்களை நிறைவேற்றுவதற்கானதோ சமூகப் பெருமைக்கானதோ அல்ல.
ஒருவருக்கு அதிகாரம் கொடுக்கப்படுவதும் இன்னொருவரிடமிருந்து அதிகாரம் பறிக்கப்படுவதும் தற்செயலான நிகழ்வுகள் அல்ல. இந்தப் பிரபஞ்சத்தில் செயல்படும் மாறாத நியதிகளைப்போல மனித வாழ்க்கையிலும் மாறாத நியதிகள் செயல்படுகின்றன. அல்லாஹ்வின் நாட்டமே அவற்றுக்குப் பின்னால் இருக்கின்றது. அவன் தான் நாடியவர்களை கண்ணியப்படுத்துகிறான். தான் நாடியவர்களை இழிவுபடுத்துகிறான். அவனுடைய திருப்தியை நாடி செயல்படக்கூடியவர்களை அவன் கண்ணியப்படுத்துகிறான். இச்சைகளுக்கு அடிமையாகி பாவங்களில் மூழ்கி தங்களின் அசலான நோக்கத்தை தொலைத்தவர்களை அவன் இழிவுபடுத்துகிறான். முஸ்லிம்கள் இஸ்லாத்தைக் கொண்டே கண்ணியப்படுத்தப்படுவார்கள். அவர்கள் இஸ்லாத்தை கைவிட்டு ஒரு சமூகமாக எஞ்சும்போது இழிவுபடுத்தப்படுவார்கள். யூதர்களுக்கு எது நிகழ்ந்ததோ அது அவர்களைப்போல செயல்படக்கூடிய அனைவருக்கும் நிகழக்கூடியது. மனித வாழ்க்கையில் அல்லாஹ் ஏற்படுத்திய நியதிகள் அனைவருக்கும் பொதுவானவை. தலைமைத்துவ பொறுப்பை சரியான முறையில் நிறைவேற்றுபவர்கள் கண்ணியப்படுத்தப்படுவார்கள். அந்தப் பொறுப்பை தவறாகப் பயன்படுத்துபவர்கள் இழிவுபடுத்தப்படுவார்கள்.
அல்லாஹ்தான் இரவைப் பகலில் புகுத்துகிறான். பகல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இரவு வெளிப்படுகிறது. அவனே பகலை இரவில் புகுத்துகிறான். பகல் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இரவு வெளிப்படுகிறது. அவனே இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றை வெளிப்படுத்துகிறான். இங்கு வெளிப்படும் வாழ்க்கை அற்புதமானது. அவனே உயிருள்ளவற்றிலிருந்து இறந்தவற்றை வெளிப்படுத்துகிறான். வாழ்க்கையும் மரணமும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டேயிருக்கின்றன. அவற்றின் இயல்புகள் மனிதனால் புரிந்துகொள்ள முடியாதவை. இந்தப் பிரபஞ்சத்தில் ஒவ்வொரு நொடியும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்தச் செயல்பாடுகள் படைப்பாளனின் பேராற்றலை, அவனுடைய நாட்டத்தை உணர்த்திக் கொண்டேயிருக்கின்றன. இப்படித்தான் அவன் ஒரு சமூகத்திற்கு ஆட்சியதிகாரம் வழங்குவதும் ஒரு சமூகத்தாரிடமிருந்து ஆட்சியதிகாரத்தை பறிப்பதும் நிகழ்கிறது. ஒவ்வொன்றும் மிக இலகுவாக, மிக இயல்பாக நிகழ்ந்து விடுகிறது. அவன் யாருக்கு கொடுக்க நாடுகிறானோ அவர்களுக்கு கணக்கின்றி கொடுக்கிறான்.
لَا يَتَّخِذِ الْمُؤْمِنُونَ الْكَافِرِينَ أَوْلِيَاءَ مِنْ دُونِ الْمُؤْمِنِينَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللهِ فِي شَيْءٍ إِلَّا أَنْ تَتَّقُوا مِنْهُمْ تُقَاةً
وَيُحَذِّرُكُمُ اللهُ نَفْسَهُ وَإِلَى اللهِ الْمَصِيرُ قُلْ إِنْ تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ أَوْ تُبْدُوهُ يَعْلَمْهُ اللهُ وَيَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللهُ نَفْسَهُ وَاللهُ رَءُوفٌ بِالْعِبَاد
3:28-30. “நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையாளர்களைத் தவிர்த்து நிராகரிப்பாளர்களை நேசர்களாக்கிக் கொள்ள வேண்டாம். அவ்வாறு நேசம் கொள்பவருக்கு அல்லாஹ்வுடன் எந்தத் தொடர்பும் இல்லை. ஆயினும் அவர்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அவன் பக்கமே திரும்ப வேண்டும். நீர் கூறும்: “உங்கள் நெஞ்சங்களில் உள்ளவற்றை நீங்கள் மறைத்தாலும் அல்லது வெளிப்படுத்தினாலும் அல்லாஹ் அவற்றை நன்கறிவான். வானங்களிலும் பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான். அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவன். ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நன்மைகளையும் தீமைகளையும் தன் கண்ணெதிரில் காணும் நாளில் தனக்கும் தீய செயலுக்கும் இடையில் மிக தூரமான இடைவெளி இருக்கக்கூடாதா என்று விரும்புவான். அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கிறான். அவன் தன் அடியார்களின் மீது மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான்.”
இது யூதர்களிடம் நேசக்கரம் நீட்டிக் கொண்டிருந்த பலவீனமான முஸ்லிம்களுக்கு இடப்பட்ட கட்டளை. இங்கு நிராகரிப்பாளர்கள் என்பது அவர்களையே குறிக்கிறது. தங்களின் வியாபார நலன்கள், இன்னபிற நலன்கள் ஆகிய காரணங்களை முன்வைத்து முஸ்லிம்களில் சிலர் அவர்களுடன் நட்பு கொண்டிருந்தார்கள். அப்போது யூதர்கள் உலகியல்ரீதியாக பலமானவர்களாகவே இருந்தார்கள். முஸ்லிம்கள் இன்னும் முழு அளவில் பலம் பெற்றவர்களாக மாறியிருக்கவில்லை.
ஒட்டுமொத்த அதிகாரமும் அல்லாஹ்வின் கையில் இருக்கிறது, அவன் தான் நாடியவர்களுக்கு கணக்கில்லாமல் வழங்குகிறான் எனில் நீங்கள் ஏன் மற்றவர்களிடம் அவற்றைத் தேட வேண்டும்? அல்லாஹ் இந்த வேதத்தின் வழியாக உங்களுக்குக் கற்றுக்கொடுத்த விதிகளைக் கடைப்பிடியுங்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை சிறந்த முறையில் நிறைவேற்றுங்கள். அவன் உங்களுக்கு அதிகாரம் வழங்குவான். அவன் உங்களைக் கண்ணியப்படுத்துவான்.
இங்கு ‘அவ்லியா’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அது வலீ என்ற வார்த்தையின் பன்மைச்சொல்லாகும். அது பாதுகாவலர், நேசர், உதவியாளர், ஆபத்து நேரத்தில் கைகொடுப்பவர் ஆகிய பொருள்களை உள்ளடக்கி இருக்கிறது. நாம் யாருடன் நெருங்கிய நட்பு கொண்டிருக்கிறோமோ அவர்கள் நம் வாழ்க்கையில் பெரிய அளவில் தாக்கம் செலுத்துகிறார்கள். அதனால் நாம் அவர்களுக்கு ஏற்றவாறு மாறுவதும் அவர்கள் நமக்கு ஏற்றவாறு மாறுவதும் இயல்பான ஒன்றுதான். இருவரில் வலுவானவர் மற்றொருவர் மீது கூடுதல் தாக்கங்களை செலுத்துகிறார். ஆகவே நம்பிக்கையாளர்கள் நம்பிக்கையாளர்களை விடுத்து மற்றவர்களை நெருங்கிய நண்பர்களாக, நேசர்களாக, பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக்கூடாது. நம்பிக்கையாளர்கள் மற்றவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வது வேறு. அவர்களை நெருங்கிய நண்பர்களாக ஆக்கிக் கொள்வது வேறு. நெருங்கிய நண்பர்களாக, உதவியாளர்களாக ஆக்கிக் கொள்வதுதான் இங்கு தடைசெய்யப்பட்டுள்ளதே தவிர ஒட்டுமொத்தமாக அவர்களுடன் எந்த வகையான தொடர்பும் கொள்ளக்கூடாது என்பது அல்ல.
அவர்கள் பலமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் தீங்கிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்காக அவர்களுடன் நேசக்கரம் நீட்டுவதுபோன்று நீங்கள் காட்டிக் கொள்ளலாம். ஆனால் உளமாற நீங்கள் அவர்களை நேசிக்கக் கூடாது. அல்லாஹ் தன்னுடைய தண்டனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கிறான். அவன் உள்ளங்களில் உள்ளவற்றை அறியக்கூடியவன். நீங்கள் வெளிப்படுத்தினாலும் மறைத்தாலும் அவன் அறியக்கூடியவன். அவனுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. அவன் பக்கமே நீங்கள் திரும்ப வேண்டும், உங்களின் ஒவ்வொரு செயல்பாட்டுக்கும் நீங்கள் பதில் சொல்லியாக வேண்டும் என்பதை கவனத்தில் வையுங்கள். அந்த நாளில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்த நன்மைகளையும் தீமைகளையும் தன் கண்முன்னால் காண்பான். அப்போது தனக்கும் தன் தீய செயலுக்கும் மத்தியில் மிக நீண்ட தூரம் இருக்கக்கூடாதா என்று அவன் ஏங்குவான். அல்லாஹ் தன் தண்டனையைக் கொண்டு உங்களை எச்சரிக்கை செய்கிறான். நீங்கள் பாவங்களில் மூழ்கி அந்த நாளில் வருத்தப்படக்கூடியவர்களாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவே அவன் உங்களை அச்சுறுத்துகிறான். இது அவன் உங்கள் மீது கொண்டிருக்கும் பரிவின், இரக்கத்தின் வெளிப்பாடு. அவன் அடியார்களின் மீது மிகுந்த பரிவுடையவனாக இருக்கின்றான்.
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللهُ غَفُورٌ رَحِيمٌ قُلْ أَطِيعُوا اللهَ وَالرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّ اللهَ لَا يُحِبُّ الْكَافِرِينَ
3:31,32. “நீர் கூறும்: “நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அவன் பெரும் மன்னிப்பாளனாகவும் தொடர் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.” நீர் கூறும்: “அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.”
நாங்கள் அல்லாஹ்வை நேசிக்கிறோம், ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறிய யூதர்களுக்கும் கிருஸ்தவர்களுக்கும் அவர்களைப் போன்றவர்களுக்கும் அல்லாஹ் பதிலளிக்கிறான். நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பது உண்மையானால் அவனுடைய கட்டளைகளைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவனை நேசிப்பது உண்மையானால் அவனுடைய தூதரைப் பின்பற்றுங்கள். நீங்கள் அவனை நேசிப்பது உண்மையானால் அந்த தூதர் வழியாக அவன் உங்களுக்குத் தந்த இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் இந்த தூதரை ஏற்றுக்கொள்ள மறுத்தால், எங்களின் முன்னோரிடமிருந்து எங்களுக்கு வந்ததே எங்களுக்குப் போதுமானது என்று நீங்கள் கூறினால் நாங்கள் அல்லாஹ்வை நேசிக்கிறோம் என்று உங்களின் கூற்று பொய்யானது. நீங்கள் உங்களின் பிடிவாதத்தில் நிலைத்திருக்கிறீர்கள். நீங்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி உங்களின் மன இச்சைகளையே பின்பற்றுகிறீர்கள். அல்லாஹ்வை நேசிப்பது என்பது அவனிடமிருந்து வந்துள்ள அனைத்தையும் பின்பற்றுவதாகும்.
இந்த தூதரைப் பின்பற்றுவதன் வழியாகவே நீங்கள் அல்லாஹ்வின் நேசத்தைப் பெற முடியும். இந்த தூதரைப் பின்பற்றுவதன் வழியாகவே நீங்கள் அவனுடைய மன்னிப்பைப் பெற முடியும். உண்மையில் அவன் பெரும் மன்னிப்பாளன்; தொடர் கிருபையாளன்.
அல்லாஹ்வுக்கும் தூதருக்கும் கட்டுப்படுங்கள். அதுதான் இஸ்லாம். அதுதான் அவனுடைய திருப்தியை அடைவதற்கான வழி. நீங்கள் இந்த கட்டளையை ஏற்றுக்கொள்ள மறுத்தால் நீங்கள் நிராகரிப்பாளர்களாவீர்கள். அல்லாஹ் நிராகரிப்பாளர்களை நேசிப்பதில்லை.
