கோணலான மனமும் பிழையான கண்ணோட்டமும்

You are currently viewing கோணலான மனமும் பிழையான கண்ணோட்டமும்

அடுத்து வேதக்காரர்களின் இன்னொரு வழிகேடும் அதற்குப் பின்னால் இருக்கும் பிழையான கண்ணோட்டமும் எடுத்துரைக்கப்படுகிறது. அதற்கு முன்னால் அவர்களிலும் தங்கள் வேதத்தின்படி நியாயமாக நடந்து கொள்ளக்கூடியவர்களும் இருக்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. அவர்களில் தவறான செயல்களில் ஈடுபடுபவர்கள் அவர்களில் ஒரு தரப்பினர்தான் என்பதும் தெளிவுபடுத்தப்படுகிறது. 

وَمِنْ أَهْلِ الْكِتَابِ مَنْ إِنْ تَأْمَنْهُ بِقِنْطَارٍ يُؤَدِّهِ إِلَيْكَ وَمِنْهُمْ مَنْ إِنْ تَأْمَنْهُ بِدِينَارٍ لَا يُؤَدِّهِ إِلَيْكَ إِلَّا مَا دُمْتَ عَلَيْهِ قَائِمًا ذَلِكَ بِأَنَّهُمْ قَالُوا لَيْسَ عَلَيْنَا فِي الْأُمِّيِّينَ سَبِيلٌ وَيَقُولُونَ عَلَى اللهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ بَلَى مَنْ أَوْفَى بِعَهْدِهِ وَاتَّقَى فَإِنَّ اللهَ يُحِبُّ الْمُتَّقِينَ إِنَّ الَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ اللهِ وَأَيْمَانِهِمْ ثَمَنًا قَلِيلًا أُولَئِكَ لَا خَلَاقَ لَهُمْ فِي الْآخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ اللهُ وَلَا يَنْظُرُ إِلَيْهِمْ يَوْمَ الْقِيَامَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

3:75-77. “வேதக்காரர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் ஒரு செல்வக் குவியலையே நம்பி ஒப்படைத்தாலும் அதனை அவர்கள் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். அவர்களில் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் நீங்கள் அற்பத் தொகையை நம்பி ஒப்படைத்தால்கூட அதற்காக நீங்கள் விடாப்படியாக நின்றாலொழிய அதனை அவர்கள் திருப்பித் தர மாட்டார்கள். இதற்குக் காரணம் ‘வேதக்காரர்கள் அல்லாதோர் விசயத்தில் நாங்கள் குற்றம்சாட்டப்பட மாட்டோம்’ என்று அவர்கள் கூறிவந்ததேயாகும். அவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின்மீது பொய்யுரைக்கிறார்கள். மாறாக யார் தம் வாக்குறுதியை நிறைவேற்றி தக்வாவுடன் நடந்து கொள்கிறாரோ நிச்சயமாக அல்லாஹ் அத்தகைய இறையச்சமுடையோரை நேசிக்கின்றான். அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தங்களையும் தங்கள் சத்தியங்களையும் அற்ப ஆதாயத்திற்கு விற்று விடுபவர்களுக்கு மறுமையின் நன்மையில் எவ்விதப் பங்கும் இல்லை. மறுமைநாளில் அல்லாஹ் அவர்களுடன் பேசவும் மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையும் உண்டு.”

சமூகத்திலுள்ள ஒரு தரப்பினர் செய்யும் தவறுக்கு ஒட்டுமொத்தமாக அந்த சமூகத்தையே பழிக்க முடியாது. திருக்குர்ஆன் அவர்களில் ஒரு தரப்பினர் தங்கள் வேதத்தின்படி நியாயமாக நடந்து கொள்கிறார்கள் என்பதைக் கூறிவிட்டே மார்க்கத்தின் பெயரால் மோசடி செய்யும் இன்னொரு தரப்பினரைக் குறித்துப் பேசுகிறது. முதல் தரப்பினர், விரும்பத் தகுந்தவர்கள். அவர்களை நம்பி செல்வக் குவியலையே ஒப்படைத்தாலும் அவர்கள் மோசடி செய்ய மாட்டார்கள். நியாயமான முறையில் அவர்கள் அதனை திரும்ப ஒப்படைத்து விடுவார்கள். அவர்களின் கொடுக்கல், வாங்கல் நியாயத்தின் அடிப்படையில் இருக்கும். இன்னொரு தரப்பினர் இருக்கிறார்கள். அவர்களிடம் அற்பத் தொகையை ஒப்படைத்தால்கூட அதனை அவ்வளவு எளிதாக திருப்பி வாங்க முடியாது. அவர்களின் கொடுக்கல், வாங்கல் நியாயமாக இருக்காது. இதற்குக் காரணம் என்ன? அவர்கள் கொண்டிருக்கும் கண்ணோட்டம்தான்.

யூதர்கள் மட்டுமே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். ஆகவே இந்த வேத வழிகாட்டல் அவர்களுக்கு மட்டுமே உரியது. அவர்கள் மட்டுமே நியாயமாக நடந்துகொள்ளத் தகுதியானவர்கள். அவர்களைத் தவிர மற்றவர்களின் விசயத்தில் நியாயமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை. மற்றவர்களின் விசயத்தில் தவ்ராத்தின் போதனைகளை கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை. மற்றவர்களின் விசயத்தில் அவர்கள் எப்படி நடந்து கொண்டாலும் அவர்கள் அல்லாஹ்விடம் குற்றம்பிடிக்கப்பட மாட்டார்கள். தவ்ராத்திற்கு விளக்கமாக எழுதப்பட்ட தல்மூதிலும் இத்தகைய கருத்துகள் காணப்படுகின்றன. அவர்களின் மோசமான செயல்பாடுகளுக்கும் சதித் திட்டங்களுக்கும் உண்மையை மறைத்தலுக்கும் பின்னால் இந்தக் கண்ணோட்டமே இருக்கிறது. அவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்கிறார்கள். அவனுடைய வழிகாட்டல் இத்தகையே மட்டமான போதனைகளைவிட்டும் தூய்மையானது. கோணலான மனமே இத்தகைய சாக்குப்போக்குகளை உருவாக்கிவிட்டு மோசமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.  

யார் தம்முடைய வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுகிறார்களோ, யார் நியாயமாக நடந்து கொள்கிறார்களோ, யார் அல்லாஹ்வின் வழிகாட்டலுக்கேற்ப அனைவருடனும் தக்வாவுடன் நடந்து கொள்கிறார்களோ அவர்களையே அல்லாஹ் நேசிக்கிறான். அல்லாஹ்வின் வழிகாட்டல் மனிதர்கள் அனைவருக்கும் உரியது. அது குறிப்பிட்ட இனத்தாருக்கு மட்டும் உரியது அல்ல. மனிதர்கள் அனைவருடனும் நல்ல முறையில் நடந்து கொள்ளுமாறே அவன் கட்டளையிட்டுள்ளான். ஆனால் அந்த யூதர்கள் தங்களின் அநியாயத்திற்கு அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

முஸ்லிம் சமூகத்திலும் ஒரு தரப்பினரிடத்தில் இத்தகைய போக்கு இருப்பதை காண முடிகிறது. அவர்கள் முஸ்லிம் அல்லாதவர்களுடன் நியாயமாக நடந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை, அவர்களை ஏமாற்றலாம், அவர்களின் செல்வங்களை கொள்கையடிக்கலாம் என்றெல்லாம் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இது உண்மையில் ஆபத்தான போக்கு, யூதர்களிடம் இருந்த அதே மோசமான மனநிலை. இஸ்லாம் இத்தகைய அநியாயத்தைவிட்டு தூரமானது.

அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதி என்பது இந்த மார்க்கமாகும். இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதன்மூலம் இந்த மார்க்கத்தின் ஒவ்வொரு கட்டளையையும் கடைப்பிடிப்பேன் என்று நம்பிக்கையாளன் வாக்குறுதியளிக்கிறான். சத்தியம் என்பது அவன் சக மனிதனுக்கு அளிக்கும் வாக்குறுதி. அவனிடம் ஏற்படுத்தும் நம்பகத்தன்மை.

யூதர்கள் அற்ப ஆதாயங்களுக்கு ஆசைப்பட்டு அல்லாஹ்வுக்கு அளித்த வாக்குறுதியையும் சக மனிதர்களுக்கு அளித்த வாக்குறுதியையும் மீறினார்கள். இங்கு அவர்களும் அவர்களைப் போன்றவர்களும் பழித்துரைக்கப்படுகிறார்கள். மறுமையின் நன்மையை விற்றுவிட்டு பெறப்படும் இந்த உலகத்தின் எந்த நன்மையும் – அது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் – அது அற்ப ஆதாயம்தான். மறுமையில் அவர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான். அவர்களை கருணைப் பார்வை கொண்டு பார்க்க மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக அவர்கள் துன்புறுத்தும் வேதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வாக்குறுதியை மீறுவது, அநியாயமாக நடந்து கொள்வது ஒரு மனிதன் செய்யும் மற்ற பாவங்களைப் போன்றது அல்ல. அது சக மனிதர்களுக்கு அவன் செய்யும் தீங்கு. அதன்மூலம் சமூகத்தின் நம்பகத்தன்மையை கெடுக்கிறான். ஆகவேதான் இந்தச் செயல்பாடு இங்கு கடும் வெறுப்புக்குரிய ஒன்றாக காட்டப்படுகிறது.    

وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللهِ وَيَقُولُونَ عَلَى اللهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ

3:78.  “அவர்களில் இப்படியும் சிலர் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவது வேதத்தில் உள்ளதென நீங்கள் எண்ண வேண்டும் என்பதற்காக தங்கள் நாவுகளை சுழற்றுகிறார்கள். உண்மையில் அவர்கள் கூறுவது வேதத்திலுள்ளவையல்ல. இது அல்லாஹ்விடமிருந்து வந்துள்ளது என்று அவர்கள் கூறுகிறார்கள். உண்மையில் அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்கிறார்கள்.”

அவர்கள் வேதத்தின் வசனங்களை திரித்து தாங்கள் விரும்பும் வேறு விளக்கங்களை அளிக்கிறார்கள். அவர்கள் வேதத்தின் கருத்துகளை எடுத்துரைக்கவில்லை. மாறாக வேதத்தின் பெயரால் அவர்கள் சொல்ல விரும்பும் கருத்துகளையே எடுத்துரைக்கிறார்கள். அவர்கள் அறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது பொய்யுரைக்கிறார்கள்.    

யூத, கிருஸ்தவ மதகுருமார்களிடம் காணப்பட்ட போக்கு இது. நபியவர்களைக் குறித்து தங்கள் வேதங்களில் வந்துள்ள முன்னறிவிப்புகளுக்கு வேறு விளக்கங்கள் அளித்தார்கள். வேத வார்த்தைகளுக்கு தாங்கள் விரும்பும் விளக்கத்தை அளித்தார்கள். அவற்றைத் திரித்து தங்களின் பிழையான கண்ணோட்டங்களுக்கு ஆதாரங்களாக முன்வைத்தார்கள். பொதுவாக மதகுருமார்களிடம் காணப்படும் மோசமான போக்கு இது. அவர்கள் பொதுமக்களை ஏமாற்றுகிறார்கள். அந்த மக்களின் ஆன்மிக உணர்வை, அச்சத்தை, அறியாமையைப் பயன்படுத்தி தங்களின் நோக்கங்களை, விருப்பங்களை அவர்கள் நிறைவேற்றிக் கொள்கிறார்கள்.

கிருஸ்தவ அறிஞர்கள் ஈசாவைக் குறித்து முன்வைக்கும் வாதங்களும் இந்த வகையைச் சேர்ந்தவைதாம். தங்களின் வேதத்தில் அவரைக் குறித்து வந்துள்ள மூட்டமான வார்த்தைகளை அந்த வாதங்களுக்கு ஆதாரமாக அவர்கள் முன்வைக்கிறார்கள்.

مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللهِ وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُونَ وَلَا يَأْمُرَكُمْ أَنْ تَتَّخِذُوا الْمَلَائِكَةَ وَالنَّبِيِّينَ أَرْبَابًا أَيَأْمُرُكُمْ بِالْكُفْرِ بَعْدَ إِذْ أَنْتُمْ مُسْلِمُونَ

3:79,80. “ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேதத்தையும் ஞானத்தையும் தூதுத்துவத்தையும் வழங்கியிருக்க அவர் மக்களிடம், “நீங்கள் அல்லாஹ்வை விடுத்து எனக்கு அடிமைகளாகிவிடுங்கள்” என்று கூறுவது உகந்தது இல்லை. மாறாக நீங்கள் வேதத்தை மற்றவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதனாலும் நீங்கள் அதனைக் கற்பதாலும் இறைவனுக்குக் கட்டுப்படுபவர்களாகிவிடுங்கள் என்றே அவர் கூறுவார். நீங்கள் வானவர்களையும் தூதர்களையும் இறைவனாக்கிக் கொள்ளுங்கள் என்றும் அவர் உங்களிடம் கூற மாட்டார். நீங்கள் இறைவனுக்கு முழுமையாகக் கீழ்ப்படிந்தபிறகு நிராகரிக்கும்படி அவர் உங்களைத் தூண்டுவாரா என்ன?”  

இந்த வசனம் கிருஸ்தவர்களை நோக்கிப் பேசுகிறது. அவர்கள் ஈசாவை இறைவனாக்கி வணங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு புறம் தீர்க்கதரிசி என்றும் இன்னொரு புறம் இறைவனின் மகன் என்றும் மற்றொரு புறம் இறைவன் என்றும் முன்னுக்குப் பின் முரணாக கூறிக் கொண்டிருந்தார்கள். இன்றும் அப்படித்தான் கூறிக் கொண்டிருக்கிறார்கள். திருக்குர்ஆன் அவர்களை நோக்கி, அவர்களைப் போன்றவர்களை நோக்கி இந்த எளிய கேள்வியை முன்வைக்கிறது: அல்லாஹ்வின் புறத்திலிருந்து வேதமும் ஞானமும் கொடுக்கப்பட்டு தூதராக அனுப்பப்பட்டவர் நீங்கள் அல்லாஹ்வை விட்டுவிட்டு எனக்கு அடிமைகளாக மாறிவிடுங்கள், அவனை விட்டுவிட்டு என்னை வழிபடுங்கள் என்று எப்படி கூறுவார்? அப்படி கூறுவதற்கு சாத்தியம் இருக்கிறதா? அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட தூதர், நீங்கள் அல்லாஹ்வை வழிபடுங்கள், அவனுக்கு அடிமைகளாக மாறிவிடுங்கள் என்றே கூறுவார். அப்படித்தான் தூதர்கள் அனைவரும் கூறினார்கள். அவனுடைய வேதத்தை நீங்கள் கற்பதனாலும் அதனை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதனாலும் ரப்பானீயீன்களாக மாறிவிடுங்கள் என்றே அவர் கூறுவார். ரப்பானீ என்றால் இறைவனை வழிபடுபவர், அவனை நெருங்கிச் செல்பவர், அவனைச் சார்ந்து வாழ்பவர், அவனுக்கு மட்டுமே கட்டுப்படுபவர், வேதம் கற்று அதன்படி செயல்படுகின்ற அறிஞர் என்றெல்லாம் பொருள். வானவர்களையோ தூதர்களையோ கடவுள்களாக ஆக்கும்படி அவர் ஒருபோதும் கட்டளையிட மாட்டார். உங்களை அல்லாஹ்வுக்கு மட்டுமே கட்டுப்படும் முஸ்லிம்களாக ஆக்கிய பிறகு எப்படி அவர் அவனை நிராகரிக்கும்படி கட்டளையிடுவார்? நீங்கள் சிந்திக்க மாட்டீர்களா? அவருடைய வார்த்தைகளை எப்படி அவருக்கு எதிராக பயன்படுத்துகிறீர்கள்? எந்த நோக்கத்திற்காக அவர் வந்தாரோ அதற்கு எதிராகச் செயல்படுவதற்கு எப்படி அவரை நீங்கள் ஆதாரமாக ஆக்குகிறீர்கள்? இது தெளிவான இட்டுக்கட்டல், அவர் மீதான அவதூறு என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியவில்லையா? மதகுருமார்களுக்கு இறைவனின் அதிகாரத்தை வழங்கிய யூதர்களுக்கும் இந்த வசனம் பொருந்தும். நல்லடியார்களுக்கு இறைவனின் தன்மைகளை அளித்து அவர்களிடம் பிரார்த்திப்பவர்களுக்கும், அவர்களை வணங்குபவர்களுக்கும் இந்த வசனம் பொருந்தும்.

இந்த வசனம் அல்லாஹ்வின் நெருக்கத்தைப் பெறுவதற்கான, ரப்பானிய அறிஞர்களாக மாறுவதற்கான வழிமுறையை நமக்குச் சொல்லித் தருகிறது. அல்லாஹ்வின் வேதத்தை கற்பதும் கற்றுக் கொடுப்பதும்தான் அந்த வழிமுறை. அதுதான் அல்லாஹ்வின் நெருக்கத்தை, அவனுடைய நேசத்தைப் பெறுவதற்கான வழிமுறை. அது ஒன்றே நம்மைப் பாதுகாக்கும் பாதுகாப்புக் கவசம். அதுதான் நாம் அவனைப் பற்றிக் கொள்வதற்கான ஒரே வழி.           

Shah Umari

எழுத்தாளர், ஆசிரியர், இஸ்லாமிய வாழ்வியல் ஆலோசகர்.

Leave a Reply