“நான் சுயம்பு. எனக்கென எந்த மரபும் ஆசிரியரும் இல்லை”
இந்த வாசகத்தை அவர் பெருமிதமாகச் சொன்னாரா அல்லது இயல்பாகச் சொன்னாரா என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனாலும் இது பெருமிதம்கொள்ளத்தக்க ஒன்று அல்ல; உதிரிகளிடமிருந்து வெளிப்படும் இயல்பான ஒரு சொல்தான். ஒருவனுக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்று கூறுவது அவனை இழிவுபடுத்தும் வசைச் சொல்லாகும்.
மரபு என்பது தொடர்ந்து வரக்கூடியது. காலம் கடந்து நீடிக்கக்கூடியது. காலம் கடந்து நீடிக்கும் தன்மை கொண்டது மட்டுமே மரபாக மாறும். மரபின் தொடர்ச்சியாக வரக்கூடியவர்களே நீடிக்கிறார்கள். மரபு நீடிப்பதற்கான நியாயத்தையும் வலுவையும் அவர்களுக்கு அளிக்கிறது. உதிரிகள் காணாமல் போய்விடுகிறார்கள். உதிரிகளால் மரபை விட்டுச் செல்ல முடியாது. மரபை உடைப்பதற்கு அவர்கள் முன்வைக்கும் காரணிகள் அவர்களையும் இல்லாமாலாக்கி விடுகிறது.
பெரும் பணி நிகழ்த்தியவர்கள் வலுவான ஆசிரியர்களைக் கொண்டிருப்பது தற்செயலானது அல்ல. அவர்கள் தங்களின் ஆசிரியர்களிடமிருந்து போதுமான பலத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். மரபை உடைப்பதோ ஆசிரியர்களை அவமதிப்பதோ அவர்களின் பெயர்களை வெளிப்படுத்தாமல் மறைப்பதோ கர்வம் கொண்ட சிறுமதியாளர்களின் செயல்பாடுகள். சிறிய மனிதர்களால் பெரும் பணிகளை நிகழ்த்த முடியாது.
மரபை உடைத்தல் என்பது வேறு. மரபை தாண்டிச் செல்லுதல் என்பது வேறு. மரபை தாண்டிச் செல்லுதல் நிகழ வேண்டிய ஒன்று. அதுதான் தேக்க நிலையிலிருந்து மரபைப் பாதுகாக்கிறது. தேக்க நிலையை அடையும் மரபு உதிரிகளால் உடைக்கப்பட்டு விடலாம். புதிய சிந்தனைகளை உள்வாங்கும் மரபு புதிய பலம்பெற்று மேலும் வலுவடையும்.
